ஆப்பிரிக்காவிலும் இடைக்காலத்திய ஐரோப்பாவிலும் கூறாக்க அரசுகள்

தமிழில் : கி.இரா.சங்கரன்

Aidan W.Southall, A Note on State Organization :Segmentary States in Africa and in Medieval Europe inEarly Medieval Society(ed), Sylvia Thrupp, NewYork, 1980.

Aidan W.Southall 350இந்திய வரலாற்றியலில் (Indian Historiography) பர்டன் ஸ்டய்ன் (Burton Stein) வருகை அரசு (state) பற்றிய ஆய்வினை அர்த்தத்துடன் உந்தியது. அவர் தென்னிந்திய வரலாறு பற்றி இடைக்காலத் தென்னிந்தியாவில் அரசும் வேளாண்முறையும்: ஒரு வரலாற்றியல் விமர்சனம் (The(TheState and the Agrarian Order in Medieval South India: AHistoriographical Critique)  என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டபோது அவராய்வின்மேல் போதுமான கவனம் திரும்பவில்லை. 

ஆனால், அக்கட்டுரையின் அடிப்படையில்  அவர் விரிவாக எழுதி வெளியிட்ட இடைக்காலத் தென்னிந்தியாவில் வேளாண் அரசும் சமூகமும் (Peasant State and Society in Medieval South India, 1980) என்ற நூலிற்கு ஆதாரங்களுடன் கருத்தியல் பூர்வ மாகவும், கல்வெட்டியல் மூலமாகவும் அறிஞர்கள் விமர்சனங்களை வெளியிட்டனர். காரணம், அந்நூலிற்கான கருத்தியலாக மானிடவியலார் அய்டன் டபிள்யூ.சவ்தால் (AidanW.Southall) 1956 இல் வெளியிட்ட ஆளூர் சமூகம் : ஓர் ஆய்வு ஆதிக்கம் தொழிற்படும் முறையின் வகைகள் (Alur Society : A Study in Process and Types of Domination),  என்ற நூலில் வாதிக்கப்பட்ட கூறாக்க அரசுகூறுகளைப் பயன்படுத்தி இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றினை பர்டன் ஸ்டய்ன் அணுகியிருந்தார்.

கூறாக்க அரசின் கூறுகளை தம் நூலில் அய்டன் டபிள்யூ.சவ்தால் (Aidan W.Southall) சுருக்கமாகத் தந்திருந்தார். 1980இல் தாம் வெளியிட்ட அரசு அமைப்பு பற்றிய குறிப்பு: கூறாக்க அரசுகள் (A Note onState Organisation: Segmentary States in Africa andMedieval Europe) என்ற கட்டுரையிலும் அக் கூறுகளை வெளியிட்டார். அக்கட்டுரையின் மொழி பெயர்ப்பே இங்குத் தரப்படுகிறது. கட்டுரையே, ஒரு கருதுகோள் போன்றுள்ளது. இக்கட்டுரையில் அய்டன் டபிள்யூ. சவ்தால் பயன்படுத்திய Feudatory, Count, Earldorman, Flander,Feudatory, Count, Earldorman, Flander,Vassal என்ற சொற்களுக்கு அதிகார தொனியில் வேறுவேறு பொருள்கள் இருப்பினும் அவற்றுக்கு இணையாக தமிழில் குரிசில் என்ற சொல்லினை நிலவுடைமையாளர் / வட்டாரத்தலைவர் என்ற பொருளிலும் ஆண்டை, பண்ணையார் என்ற சொற்களிலும் சுட்டியுள்ளேன்.    ஐரோப்பாவின் இடைக்காலத்து வரலாறு, இங்கிலாந்தின் அரசியல்அமைப்பு வரலாறு போன்ற வரலாற்று நூல்களின் அடிப்படையிலும், துர்கைமின் சமூகத்தில் உழைப்பின் பிரிவு, சமூக-பொருளியல் அமைப்பின் கோட்பாடு என்ற சமூகவியல் நூல்களின் அடிப்படையிலும், ஆப்பிரிக்க அரசியல்முறை, ஒரு கருப்புபைசாண்டியம், புகாண்டா இனத்தின் வழக்கங்கள் என்ற மானிடவியல் நூல்களின் அடிப் படைக் கருத்துகளையும் உட்செரித்து இக்கட்டுரை யினை எழுதியுள்ளார். எனவே, இக்கட்டுரையில் விளக்கப் பட்ட கருத்துகளை இடைக்காலத்திய ஐரோப்பாவின் வரலாற்றுப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.   இவர் பயன்படுத்திய நூல்கள் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளன.

ஒரு சமூகத்தில், (இங்கு இதனை இனக்குழு என்று புரிந்துகொள்ளலாம்) வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்பிலும், உள்கட்டவேறுபாடுகளாலும் அரசு அமைப்புகள் உருவாகியிருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் எழுதுகின்றனர். சிலர், ஆக்கிர மிப்பு பல உடனிகழ்ச்சிகளால் உருவாகலாம் என்று அழுத்திக் கூறினர். ஆனால், இதற்கான இனவியல் சான்றுகள் போதுமானதாக இல்லை. ஆனால், ஆபர்க், க்ளக்மேன் (Oberg, Gluckman,) போன்றோர் சூளூ, பன்யன்கோள் (Zulu,Banyankole) போன்ற ஆப்பிரிக்க இனங்களில் அரசமைப்புகள் உருவா வதற்கு ஆக்கிரமிப்புகளே தொடக்கம் என்றனர்.   நூப் (Nupe) இனத்தினை ஆய்ந்த நாடெல் (Nadel) என்பவரும் இக்கருத்தினைக் கொண்டவர். 

ஆப்பிரிக்காவில் ஆளூர் (Alur) என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் சில கருத்துகளைப் பரிந்துரைக்கிறேன்.   சில சூழல்களில் வெவ்வேறு சமூகக்கட்டமைப்பு களை உடைய இனக்குழுக்கள் ஒன்றிணைந்து பெரும் சமூகக் கூட்டமாகிறபோது அங்கு ஆண்டான், அடிமை என்ற சமூகப்படிநிலை உருவாகிறது.  அப் போது, அங்கு அரசமைப்பு எழுகிறது.  இவ்வியக்கம் புறநிலை ஆக்கிரமிப்பால் மட்டும் நிகழ்வது இல்லை. இதற்கு இரு சூழல்கள் சாதகமாக அமைவன.  ஒன்று: கட்டமைப்பு (structure); இரண்டு பண்பாடு (culture).

முதலாவதாக இரு இனக்குழு சிறு அளவில் அரசியல்ரீதியாக அமைப்பாக உருவாகும்.  சமூக ஒழுங்கு (order) மிகச்சிறிய அளவில் குழுக்களில் திணிக்கப்படும். குழுக்களிடையிலான முரண்பாடுகளால் எழும் வன்முறை இலகுவான சமநிலைப் படுத்தல் மூலம் குறைக்கப்படும்.  சமூகஅமைப்பில் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  அருகிலுள்ள இனக்குழு பரவலான அளவில் தன் அரசியல் அமைப்பினை உருவாக்கும்.  தொடர்ந்து பெரிய அளவில் அரசு அமைப்பினை உருவாக்கும்.   இங்கு, ஓரளவு அமைதியும் சமூக ஒழுங்கும் பாதுகாப்பாக இருக்கும்.  இது வட்டார அளவிலும் எண்ணிக்கை அளவிலும் சிறிதாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.  இரண்டாவதாக, ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தின் ஆளுமைமிக்கத் தலைவர்களுக்கு சிலவற்றை பரிசாகத் தரும். இதனைப் புரிந்துகொள்வதற்கு மாக்ஸ் வெப ர்  (Max Weber) ரிடம் இருந்து (routinization) வழக்கமாக நிகழ்வது என்ற கருத்தினை எடுத்துக் கொள்கிறேன்.   பரம்பரையான ஆளுமைகொண்ட தலைவர்களை இவ்வாய்விற்குப் பொருத்தமாக எடுத்துக்கொள்ளலாம்.  சடங்குநிலைத் தலைவர்கள் (sacral chiefship) பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

ஆனால், இவர்கள் வேபேரியன் (Weberian) கொள்கைகளின் முக்கியத்துவத்தினை உணரவில்லை.  ஆனால், மழைதருவிப்போர் (rainmakers), நீதி மான்கள் (arbitrators), அமைதிப்பேச்சாளர் ((enforces(enforcesof peace), என்ற நிலையில் ஆளூர் சமூகத்லைவர்களை விளிம்புநிலையில் உள்ள சமூகத்தினை வரவேற்றனர்.   இது ஒருபுறம் இருக்க பிறிதொருநிலையில் ஆளூர் இனத்தலைவர்கள் அரசியல்விதிகளை நிர்ணயிப் பவர்களாகவும் மாறிவரும் மரபு சூழலுக்கு ஏற்ப ஆன்மிகப்பணியில் இறங்கினரென்றும் அறியப் பட்டது. இது ஒரு வகைமாதிரியாக (sanctioned pattern)  அமைகிறது. விளிம்புநிலைகளில் இருந்து எழுந்த தலைவர்கள் போதுமான ஆளுமை கொண்டவர்களாக இல்லை. இருந்தபோதும் இத்தலைவரின் நிலை வழமைபோல் அமைந்தது. ஆளூர் தலைவர்கள் தூய ஆளுமைகொண்டவர்களாகவே விளிம்புநிலை குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இவரது ஆளுமை பரம்பரையான ஆளுமைகுணத்தால் (hereditary charisma)  அமைந்தது என்று கருதப் படுகிறது. இருந்தபோதும் இத்தலைவரின்நிலை வழமைபோல் அமைந்தது.

வேபேரியன் (Weberian) கருத்துப்படி அரசன் ஒரு போர்த்தலைவன் என்பதை என்னால் ஏற்க முடிய வில்லை. அரசனுக்கு போர் அதிகாரம் பெறு வதற்கான ஏதுவான வடிவங்களில் ஒன்றாக இருக்கலாம்.  பண்டைய வரலாற்றில் தலைமைத் தொடர்ச்சியே (hereditary) அரசன். அவன் இரட்டைத் தன்மை (dual) கொண்ட தலைவன் என்ற அவரின் கருத்திற்கும் முரண்படுகிறேன்; இன்னொரு நிலையில் போர், வேட்டை, மந்திரவாதி, ஆளுமைத் தலைவன் (charismatic leader), மழைதருவிப்போன், மருத்துவன்.  எனவே, அவன் சமயத்தலைவன், மருத்துவன் இறுதியாக வலியோன் (arbiter). பிறிதொருநிலையில் அரசன் தந்தைவழிக் குடும்பத் தலைவன் (patriarchal head of the family) அல்லது குழந்தை குட்டிகளுக்குத் தலைவன்.

ஆளூர் சமூகத்திலுள்ள லெண்டு (Lendu) என்ற குழுவின் தலைவன் போரினைத்தடுக்கும் அதிகாரம் காரணமாக பெரிதும் மதிக்கப்படுபவன்.  சடங்கு களின் மூலம் மழையினை வருவிக்கவும், தடுக்கவும் ஆன அவனின் திறன் மக்கள்மனத்தில் பெரிதும் நிலைபெற்றுள்ளது.  அதிகாரத்தினை திரட்டி பணிய மறுப்பவர்களை நசுக்குவதன்மூலம் இவன் மதிக்கப் படவில்லை.  இக்குழுத்தலைவனின் ஆளுமை பிற இனக்குழுக்களின் அதிகார அலகுகளை தம் வலைக்குள் கொண்டுவந்திருக்க இயலாது. இதனால், இனக் குழுவில் நிறுவனமயப்பட்ட உறவுகள் உருவானது.  இச்சடங்குநிலை அதிகாரங்கள் இவனை மத்தியஸ்தன் என்ற ஆளுமைக்கு உயர்த்தியது.   இவ்வுறவு மழை தருவித்தல், மத்தியஸ்தம் செய்தல், புகலிடம் அளித்தல் என்பதன் அடிப்படையில் அமைகிறது. தலைவரால் சுழற்சிமுறை வேளாண்உற்பத்தியினை (cycles of production) அறிமுகப்படுத்துவதாலும் அனைவருக்கும் உணவு என்பதாலும் அமையும்.  குழுவிற்குள் முரணுருவாகும்போது படையணி மூலம் சரிசெய்யவும் அங்கு வாய்ப்பு அமைந்தது.  பல குழுக்களுக்கிடையிலான முரண்அரசியல் அதிகாரம் பற்றி குறிப்பான விளக்கங்களை அளிப் பதற்கு வழிவகுத்தது.  இதுபோன்ற அரசியல் அமைப்பில்/கட்டமைப்பில் நுழையும் குழுக்கள் கீழ்நிலை, உயர்நிலை அரசியல் அமைப்புக்கூறுகளை பரிமாறிக்கொண்டன. பல விழுமியங்களை பகிர்ந்தன.    இயற்கை பேரிடர்களில் (பஞ்சம்/பருவகாலம்) பாதிக்கப்பட்ட குழுக்கள் ஒருங்கிணைந்தன.   உள்ளூர்த் தட்பவெப்பம்-நிலக்கிடப்பினை (ecology) தம் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆளுமையான குழுவுடன் (dominant group) இவர்கள் கூட்டணி அமைத்தனர்.

ஆனால், இதுபோன்ற ஆளும்குழு ஆளூர் இனத்தில் அமைந்திருந்தது புதிதன்று.  இதுபோன்று குழுக்களிடையேயான பண்பாட்டுநிலைகள், கட்டமைப்புகள் பரவலாகக் காணப்படுவன.  இது போன்று பலகுழுக்கள் ஒருங்கிணையும்போது ஒரு குழுமட்டும் தலைதூக்கினால் அதனை குழுக் களுக்குள் நிகழ்ந்த உள்வேறுபாடுகள் என்றும் அல்லது வெளியிலிருந்துவந்த ஆக்கிரமிப்பின் விளைவு என்றும் கருதலாம்.

கோட்பாட்டுரீதியாக அரசு, கூறாக்க அமைப்பு இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு இருந்தது கருதத்தக்கது.  இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள அமைப்பினை தனித்து வகைப்படுத்தப்பட வேண்டிய தில்லை. ஆனால், எந்தவகையாக இருந்தாலும் அதற்குப் பொருத்தமான தக்க சான்றுகள் தேவை.   அவற்றிலுள்ள வலு, அமைப்பு, காலத்தொடர்ச்சி முக்கியமாக மதிக்கப்படவேண்டும்.   புறக்கட்டமைப்பு மாறும்நிலையில் இருந்தால் உள்கட்டமைப்பிலுள்ள இயக்கம் மாறும் என்ற அவசியமில்லை.

 இவ்விவாதம் அரசு பற்றிய விளக்கத்தின்மேல் திரும்புகிறது. இது தொடர்பாக நாடெல் (Nadel) என்பவரின் கருத்து தெளிவாக உள்ளது. அரசு பற்றிய இவர் முன்மொழிந்த கூறுகள் சுருக்கமாக: இறையாண்மையுடைய நிலப்பரப்பு, மைய அரசு, சிறப்புநிலை ஆட்சி அலுவலர், அதிகாரம் பெற்ற படையணி (territorial sovereignty, centralised government,

specialised administrative staff, monopoly of the use of legitimate force). மாக்ஸ் வெபர் (Max Weber) இது மாதிரி அரசு ஒன்றினை குறித்துள்ளார்; பிற அறிஞர் களும் வேறு வேறு மாதிரிகளை எழுதியுள்ளனர்.   அரசு பற்றி பொதுவான கருத்தமைவில் சமூக மானிட வியலாரான நாடெல் (Nadel) அரசியல் அறிஞரான லஸ்கி (Luski) இருவருக்கும் குறிப்பிடும்படியான வேற்றுமைகள் இல்லை.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓர்அரசு இயங்குமானால் அங்கு ஓரிரு கூறுகளே அரசியல் கொள்கைகளை பிரதிபலிப்பனவாக இருக்கும் என்று நாடெல் (Nadel) கூறுகிறார்.   இதில் சில கூறுகள் விடுபடும் வாய்ப்பு உள்ளது.  

நாடெல் என்பவரின் கூற்றுப்படி அரசு மாறும் நிலையில் (transistory) உள்ளபோது ஒன்று அல்லது இரு அரசியல் கொள்கைகள் தெளிவாகப் புலப்படும்;  மற்றவை விடுபடும்.   மிக முக்கியமான கூறுகள்கூட விடுபடலாம்.   இங்கு நான் மிகச்சுருக்கமாக இடம், காலம் பொறுத்து கூறாக்க அரசுபற்றி வாதிக்கப் போகிறேன்.  அது மேலே சொல்லப்பட்டது போன்ற கூறுகளை உடையதாக இருக்காது.  

கூறாக்க அரசின் கூறுகளை கீழே தருகிறேன்

1) நிலப்பரப்பியலுக்கான இறையாண்மை உண்டு; ஆனால், வரன்முறை உண்டு. அது மையத்தி லிருந்து விளிம்புநோக்கிச் செல்லச் செல்ல தொடர்ச்சியான பல வட்டாரங்களைக் கொண் டிருக்கும். இறையாண்மை மையத்திலிருந்து விளிம்பு நோக்கி செல்லச் செல்ல அதிகாரம் தேயும். அது, மெல்ல சடங்குநிலை அதிகாரத்தில் முடியும். 

2) மைய அரசு உண்டு. பல விளிம்புநிலை நிலப் பகுதிகளின் (foci) ஆட்சி அலகுகளின் மேல் மைய அரசின் அதிகார ஆளுமை குறையும்.

3) மையத்தில் சிறப்பு ஆட்சிஅலுவலர்கள் (specialised administrative staff) இருந்தனர். ஆனால், இதன் படிநிலையமைப்பு விளிம்பு நிலைப்பகுதிகளில் (foci in peripheral) அடர்த்தியற்று  இருந்தது.

4) ஆட்சியாளர்கள் மட்டுமே கொண்டிருந்த படையணி வரையறைக்குட்பட்ட நிலப் பரப்பியலில் செயற்பட்டது. எல்லா விளிம்பு நிலை அலகுகளிலும் (foci) தனித்தனி படை யணியினர் இருந்தனர். 

5) இடைநிலை (foci) ஆட்சி அலகுகளிடையே வேறுபாடு இருந்தது. தரைத்தளத்திலிருந்து கோபுர உச்சி (pyramidal) போன்று படிநிலை கொண்ட அமைப்பாக அது அமைந்தது. மைய நிலை அதிகார அமைப்பும், விளிம்பு நிலை அதிகார அமைப்பும் ஒரே மாதிரியில் அமைந் திருந்தது. ஆனால், பின்னது வடிவில் சிறிது.  ஒரே மாதிரியான அதிகாரம் ஒவ் வொரு அளவிலும் இயங்கியது. அதிகாரம் கொண்ட ஒவ்வொரு வரும் அடுத்தடுத்து தமக்குக்கீழ் இருப்போர் மேல் அதிகாரம் செலுத்தினர். அவர்களிடையே மோதல்களும் இருந்தன. 

6) விளிம்பிலுள்ள அதிகார மையம் பிறிதொரு மைய அதிகாரத்துடன் கூட்டணி அமைப் பதற்கு வாய்ப்பு அமைகிறது. எனவே, கூறாக்க அரசு நெகிழும் தன்மையுடையது; அடிக்கடி மாறும் தன்மையுடையது. விளிம்புநிலை அதிகார அலகுகள் அரசியல் நிலை எடுப்பதால் அவற்றுக் கிடையே ஒரு சங்கிலி பிணைப்பு உருவாகிறது.

துர்க்கைம் கூறாக்கநிலை என்ற சொல்லை ஒரு சமூகக்குழுவில் கிளை வழிக் குழுக்களைச் சுட்டு வதற்குப் பயன்படுத்துகிறார். அவரின் கூற்றுப்படி இயந்திரத்தனமான ஒருங்கிணைவிற்கு இது உதவும்.  ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மானிடவியல் களஆய்வு பல தளங்களைக் கொண்ட கோபுர அமைப்பு (pyramidal) சமூகக் கட்டமைப்பினையே வெளிப்படுத்தியது.

வரலாற்றுக்காலத்தில் எந்தவொரு நாகரிகச் சமூகமும் கவனமான வரலாற்று ஆய்விற்கு ஆர்வ மேற்படுத்தும். இந்த ஆர்வம்கூட நாகரிகத்தின் தோற்றம் பற்றி அறியவேண்டும் என்ற ஆசையால் விளைவது. இது அரசியல் முறையை அறிந்து கொள்ள இட்டுச்செல்கிறது. அரசியல்முறைதான் எல்லா இடங்களிலும் இயங்கியுள்ளது. வரலாற்றுக் காலத்தில் பெரும் பேரரசுகள் அவற்றின் உச்சகட்ட அதிகாரத்தில் இயங்கியபோது அவை எந்த வகையு மற்ற அரசியல்முறையாக இருந்தது.   சமூகவியலின் பின்னணியில் அரசியல் கட்டமைப்பினை ஆயும் போது குழப்பமான அல்லது சிதைவுறும் கால கட்டங் களில் பெரிதாக ஒன்றும் வழக்கத்திற்கு மாறாக நிகழ வில்லை.  நறுக்கு தெறித்தாற்போல் அலெக்சாண்டரின் பேரரசு, ரோமானிய, பைசாண்டிய பேரரசு, சார்லமாங்கேவின் பேரரசு, இஸ்லாமிய-முகலாய அரசுகள்,கிழக்கு ஐரோப்பிய அரசுகள் அனைத்தும் ஒரு முடிவினைத் தருகின்றன  (empires of the Ancient East, of Alexander in the Near East and of Asoka in India of Rome and Byzantium, of Charlemangne of Islam and Moghuls, and of all the nations of Western Europe). அது ஒன்றே ஒன்றுதான். அது கூறாக்கநிலை அரசு; ஒற்றை அரசு அன்று. 

மேற்சொல்லப்பட்ட இவ்விருவகை அரசமைப் புக்கும் இடையில் உள்ள வேறுபாட்டினை சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு நாட்டின் அரசியல் பிரிவுகள் கூறாக்க அமைப்புகளின் தன்னாட்சியை வரையறை செய்கிறது. ஒரு நாட்டில், அரசியல் பிரிவுகளில் மையத்துடன் இணையாத வட்டார குழுக்கள் கூறாக்க அமைப்புகளின் தன்னாட்சியை வலுப்படுத்தும்.  இதுபோன்ற அரசியல் அமைப்புமுறை சொசி (zozi) இனக்குழு அமைப்பில் கொடுக்கல்-வாங்கல் (bilateral)  என்ற நிலையில் வலிமையாக அமைந்துள்ளது.   இரு வெவ்வேறு இனக்குழுவிற்குள் இது ஒன்றுடன் ஒன்று இணைந்தது. ஆங்லோ-சாக்ஸன் அரசு அண்மைக் காலம் வரையில் கூறாக்க அரசு வகைப் பட்டதாக இருந்தது.   ஆங்லோ-சாக்ஸன் இனக்குழு கொடுக்கல்-வாங்கல் உறவுமுறையினைக் கொண்டது.

ரோமானிய ஆக்கிரமிப்பாளர்கள் ஐரோப் பாவின் வடமேற்கு ஜெர்மனியில் ஆட்சிப்பிரிவுகள் (provinces), பழங்குடிப்பிரிவுகள்  (subdivisions of tribe) தன்னாட்சிமுறையினை நோக்கி நகர்வதனைக் கண்டனர். அப்போது அங்கு அனைவருக்கும் பொதுவான ஆட்சியாளர்கள் இல்லை. ஆனால், பலவட்டாரங்களின் இளவரசர்கள், மாவட்டங்களின் இளவரசர்கள் (princes of different nations and districts)  அந்தந்த மக்களுக்கு நீதி வழங்கினர்; மக்களிடை யிலான சச்சரவுகளைத் தீர்த்தனர். காலம் செல்ல ரோமனிய ஆக்கிரமிப்பு வலுவடைந்தபோது பழங் குடிகள் மகாகூட்டணி ஒன்றினை உருவாக்கினர்.   அதன்மூலம் வலுவான மையப்படுத்தப்பட்ட அரசினை உருவாக்கினர். 

ஆங்லோ-சாக்ஸன் இங்கிலாந்தில் இன்றும்கூட கூறாக்க அரசகூறுகளின் அடிப்படையில் அரசு அமைப்பு இயங்குவதனைக் காணலாம்.  ஆனால், இங்கு அரசியல் சமூக ஒழுங்கு சுயமாக உள்ளது.  மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தில் இல்லை.   இங்குள்ள படையணியினை அரசன் இயக்கும்பாணி ஆளூர் தலைவனின் இயக்கத்தினை ஒத்துள்ளது. 

சண்டைக்குமுன் எதிரியின்முன் சாக்ஸானியர் நீதி கேட்பார். நீதி மறுக்கப்பட்டால் எதிரி ஏழு நாட்கள் முற்றுகையிடப்படுவார்; சரணடைந்துவிட்டால் முப்பது நாட்கள் பாதுகாப்பில் வைக்கப்படுவார்.  இதற்குள் அவரின் உறவினர்களுக்கு செய்தி அனுப்பப் பட்டு தண்டப்பணம் (mulct) கட்டவேண்டும். ஏழு நாட்களுக்குள் அவர் சரணடையாவிட்டால் என்ன நடக்கும். முப்பது நாட்களுக்குள் தண்டப்பணம் கட்டப்படவில்லையெனில் என்ன நடக்கும்.  அது பற்றி செய்தி இல்லை.  இதில் தொக்கி நிற்கும் செய்தி என்னவெனில் தண்டப்பணம் கட்டப்படவில்லை யெனில் எதிரி இரக்கமின்றிக் கொல்லப்படுவார். 

நீதி வேண்டும் இந்நபர் முற்றுகையிடும் அளவிற்கு பலம் பொருந்தியவரிடம் அல்லது ஒரு நிலப்பிரபுவிடம்  உதவி நாடுவார்.  இயலவில்லை யெனில் அரசனின் சமரச முயற்சியினை எதிர் பார்ப்பார்.  இவையெல்லாம் தம் எதிரியுடன் சண்டையிடும்முன் எடுக்கப்படும் முயற்சி. 

ஒரு மனிதன் ஒரு நிலப்பிரபுவுடன் தம் இரத்தவுற வினருடன் இரத்தம் சிந்தாமல் சண்டையிட இயலாது.  தம் மனைவியை, சகோதரியை, தாயை ஒருவன் பாலியல் சீண்டல் செய்தால் அவன்மேல் சட்டபூர்வமாக போர் தொடுக்கலாம். பங்காளிச் சண்டை, கைபலம் (first right)  போன்ற உணர்வுகள் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரின் மனத்தில் இடம் பெற்றுள்ளது.  தவறுகளை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சரிசெய்வது கருத்தியல். ஆனால், தனிப்பட்ட முறையில் சண்டையிட்டுக் கொள்வது சாக்ஸானிய உலகில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.  அரசர் தனக்கான குறுகிய அதிகார வட்டத் திற்குள் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும். 

அரசியல் அதிகாரம், அரசர்கள், சிற்றரசர்கள், பிரபுக்கள், குறுநிலமன்னர்கள், (kings, lords, under kings, earldorman) குரிசில்களிடையே எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என்பதனை ஜாலிடெ (Jollitee)  என்பவர் விளக்கியுள்ளார்.  நீதிமன்றமுறை எவ்வாறு மத்தியிலும், பண்ணை வீட்டாரிடமும், மக்கள் மன்றத்தினையும் சார்ந்திருந்தன என்பதனையும் விளக்கியுள்ளார்.  இவரின் கூற்றுப்படி, அரசனுக்கு என்று நிலவட்டம் இல்லை; ஆனால் மக்கள் கூட்டத்திற்கு உண்டு; வட்டாரங்களுக்கு இடையே தெளிவான எல்லைகள் இல்லை. மத்தியப்பட்ட அதிகாரம் கொண்ட படையணி இல்லை. சமூக ஒழுங்கு (order) உள்ளூர், மற்றும் இரத்த உறவுகளின் அடிப்படையில் அமைந்த கூட்டுமுயற்சியால் மேற்கொள்ளப்படும். இதே போன்றதொரு அரசியல் தன்மைகள் (political specialization) ஆளூர் இனத்தில் வழக்கில் இருந்ததனை இங்குச் சொல்லவேண்டிய தில்லை. 

பதினோராம் நூற்றாண்டின் பிரஞ்சு நிலமானிய அரசியலில்கூட கூறாக்க அரசுநிலையைக் காணலாம்.   காபெடியன் (capetian) அரசர்கள் பேருக்கு இறை யாண்மை கொண்டிருந்தனர். இருந்தாலும், அவர் கேள்வி கேட்கப்படவில்லை.  இவ்வரசியல் முறையில் நிலமானிய தலைவர்கள் அரசர்களுக்குத் தேவையான படையுதவியினை நிறைவேற்றுவர். ஆனால் எதிர்க்கும் அளவு அவர்கள் பலம் கொண்டவர் இல்லை; அவர்களின் வட்டாரத்திலுள்ள நீதி பரிபாலனங்களை செய்வதே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.   ஆனால், அரசர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட முயற்சி எடுக்கமாட்டார். இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பார். நிலமானிய குரிசில்தலைவர்களின் குத்தகைதாரர்களின் (fief) உரிமையினை காப்பார்.  ஆண்டைகள் (counts) அவர்களுக்குள் சண்டையிடு வார்கள். ஒருவரை ஒருவர் நில ஆக்கிரமிப்பு செய்வர். அவர்களை மேலிருந்து கட்டுப்படுத்த இயலாது.  குத்தகைதாரர் இடையில் இதுபோன்று நிகழும். பிரான்சின் பலபகுதிகளிலும் அரசியல் கூறாக்கநிலை மும்முரமாக நிலவியது. 

இடைக்காலத்து ஐரோப்பாவில் நெதர்லாந்து, சீலாந்து போன்ற நாடுகளின் பலம்மிக்க நிலவுடைமை மாநிலங்களின்  (flanders) நிலங்கள் கோட்டை-கொத்தளங்களைப் பராமரிக்கும் படைத்தலைவர் களுக்கு பங்கிட்டுத் தரப்பட்டன. இவர்கள் பரம் பரையாக இவ்வுரிமையினைப் பெற முயன்றனர்.  இந்த நிலவுடைமை மாநிலங்களின் (powerful medieval principality) ,  தலைவர்கள் (counts) பிரான்ஸ், சீலாந்து போன்ற நாடுகளின் அரசர்களுக்கு குரிசில் தலைவர்களாக இருந்தனர். பேரரசர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை இவர்களுக்கு உண்டு.

ஆனால் உண்மையில் இந்த பிலாண்டர்கள் (flanders) முழுமை யான சுதந்திரம் உடையவர்கள். பிரான்சின் சம்பங்கே (champange) பகுதியிலுள்ள குரிசில் தலைவர் களிடையே ஒற்றுமையில்லை என்று சொல்லப் படுவது உண்டு. பர்கண்டி  (Burgundy) பகுதியில் நிலப்பிரபுக்கள் கொள்கையளவில் பெருநிலப்பகுதி களுக்கு தலைவர்கள் என்று அறியப்பட்டிருந்தனர்.    ஆனால், அவர்களின் ஆளுகைக்குள் இருந்த பெரும் நிலப்பரப்பு கைநழுவி (sறீவீஜீ) அவர்களின்கீழ் இயங்கிய ஓரளவு சுதந்திரத்துடன் இயங்கிய சிறு குரிசில் தலைவர்களுக்குச் சென்றன. பர்கண்டி அரசு (Kingdom of Burgandy) பெரும் நிலப்பகுதிகளை தொடர்ச்சி யாக தம் ஆளுகைக்குள் கொண்டிருந்தது.  ஆனால், அவற்றுக்குள் ஒற்றுமை இல்லை.  ஒன்றுக்கொன்று அரசியல் புரிந்துணர்வு இல்லை.  எனவே, அவற்றின் மேலான அரசனின் அதிகாரம் என்பது ஒரு மாயையே  (illussory).

எனவே அக்காலத்தின் நிலமானிய பிரான்சில் ஒருங்கிணைந்த ஓர் ஒற்றை அரசு (unitary state) இருந்தது என்று சொல்வதற்கில்லை.  இறையாண்மை அரசு (sovereign state) என்ற கோட்பாட்டின் அடிப் படையில் பிரஞ்சு அரசினை ஆராய முடியுமா என்பது பொருளற்றது.   அரசியல் கட்டமைப்பு எதிர் எதிர் தன்மைகள் கொண்ட கூறுகளால் உருவாக்கப் பட்ட கோபுரமாகும். மையப்படுத்தப்பட்ட ஒரு வலிமையான அதிகாரத்தால் இக்கோபுர கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று சொல்ல இயலாது. 

கிபி ஏழாம் நூற்றாண்டு வரைக்கும் லம்பார்ட் (Lombard) பகுதியில் நிலவுடைமை நிலவியது.  அரசர்களும், குரிசில் தலைவர்களும் ஒருவருக் கொருவர் மோதிக்கொள்கையில் அங்கு அரசியல் முறை கூறாக்கத்தின் கொள்கையில் இருந்தது என்பது உண்மை. நிலப்பிரபுக்கள் (dukes) பெரும்பாலும் பரம்பரை வாரிசுரிமையின் அடிப்படையில் அதிகாரத்தினைப் பெற்றனர். தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தம் தம் அதிகாரத்தினை செலுத்தினர். அதேபோல் அரசர் தம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தம் அதிகாரத்தினை செலுத்தினார்.   அரசர் நிலப்பிரபுக்களை நியமிக்கும் உரிமை உடையவர். அவர்களை தம் அலுவலராகவும் அமர்த்திக்கொள்வார்.

கூறாக்க அரசமைப்பிலிருந்து ஒற்றைமுறை (unitary type) ஆட்சியமைப்பாக மாறிவரும் கட்டத்தின் சில கூறுகளை நான் கூறவிழைகிறேன். ஆனால் இவ்விரண்டுக்கும் இடையிலான சில கோட்பாட்டுக் கூறுகளையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.  கூறாக்க அரசு, ஓர் அரசு ஒற்றை அரசாக மாறிவரும் சூழலில் உருவானதன்று. ஒற்றை அரசு என்ற கருத்தாக்கம் நவீனகால முயற்சியில் உலக அளவிலான அரசு அமைப்புகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கப் படவேண்டிய ஒன்று.   இதனை தேசியஅரசு என்ற கோட்பாட்டோடு பொருத்தலாம்; முழுமையான இறையாண்மையோடு பொருத்தமுடியாது. 

ஒற்றையரசு என்பது ஒரு கூட்டமைப்பு.  அதில் மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரம் உண்டு.  இதனை ஒரு வரையறைக்கு உட்பட்ட நிலவட்டத் திற்கும் செயல்படுத்துவது  சிறப்பு ஆட்சியலுவலராவர் (specialised staff). கூறாக்க அரசு என்பதும் ஒரு கூட்டமைப்புதான். இதில், அதிகாரத்தினை செயல் படுத்துவோர் கோபுர கட்டமைப்புகளிடையேயான பிணைப்பினால் செயல்படுத்துவர்.  அக்கட்டமைப்பி லுள்ள ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் கூறாக்க அதிகாரங்களிடையேயும் பிணைப்பு இருக்கும்; வெடிப்பும் இருக்கும்.  ஆனால், அவர்களின் ஆட்சி வட்டத்திற்கு வெளியில் இருக்கக்கூடிய பிற குழுக் களை எதிர்க்கும்போது ஒன்றிணைவர். 

கூறாக்க அரசுகள் நெகிழும்தன்மை கொண்ட நொடியும் கட்டமைப்பு. ஆனால், இதேநிலையில் இக்கட்டமைப்பு நீண்டகாலம் இயங்கும். அவை, பிறகு ஒற்றை அரசாக வளரும். மீண்டும் கூறாக்க பூசலுக்கும் திரும்பலாம்.

கூறாக்க அமைப்பிலிருந்து ஒற்றை அமைப்பிற்கு மாறுகையில் இக்கூறுகள் தொழிற்படும். அப்போது, சடங்குநிலை அதிகாரம் தேயும், நிலமானியபூசல் ஒழியும், வரியிடும் முறை, அரச குடும்பத்தின் நிலவுடைமை, அலுவலக விரிவாக்க அமைப்பு என்பன வாரிசுரிமை நிலையிலிருந்து பொதுவான அரசியல் கட்டமைப்பாக மாறும். அதிகாரம் அலுவலர்களுக்கு மாற்றித்தரப்படும்.  ஆனால், அது வரையறைக்கு உட்பட்டதாகவும் தெளிவாகவும் இருக்கும்.  

அரசியல் அதிகாரம் இல்லாத இடத்தில் சடங்கு நிலை மேலாண்மை ஏற்றுக்கொள்ளப்படும்.  கூறாக்க அரசுகள் சடங்குரீதியாக மையப்படுத்தப்பட்டுள்ளது; அரசியல்ரீதியாக அன்று. அரசியல் அதிகாரம் வலிமையாக செயல்படுத்தப்படுகையில் சடங்குமீதான மதிப்பு முக்கியத்துவம் பெறாது. மைய அதிகாரம் அடுத்தடுத்த நிலையிலுள்ள அதிகாரத்தில் உள்ளவர்களோடு இணைந்து நிலமானிய தேவைகளை வரையறுத்தால் மைய அதிகாரம் அரசியல் தளத்தில் அறிந்தேற்பினைப் பெற்றது என்று பொருள். இதுவே ஒற்றைஅரசு எழுவதற்கான முதன்மை/அடிப்படைக் கூறு. 

நிலவுடைமை அதிகாரம் தவறுகளை சரிசெய்யும் சட்டபூர்வ இயக்க மானால் அங்கு மைய அதிகாரம் முடங்கியுள்ளது என்று பொருள். அரசியல் அதிகாரம் அடுத்தகட்ட நிலையிலுள்ள கூறாக்க அமைப்புகளில் இருந்தன என்றும் பொருள்.  கூறாக்க அமைப்புகள் எப்போதுமே தம் அதிகாரத்தின் இரத்த உறவுக் கொள்கை (kinship principles) அடிப்படையில் அமைந்திருக்கும். அது இரத்த உறவுக்கருத்தியலோடு (kinship ideology) தொடர்புடையது.  நிலவுடைமை ஒழிக்கப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட நீதிமன்றங்களை நிறுவும்.    இது கூறாக்கநிலை ஒடுங்கியதனைக் காட்டும்.  தொடர்ந்து இது உள்ளூர் நிலையிலிருந்து நடுவன் நீதிமன்றத்திற்கு (central justice)  இட்டுச்செல்கிறது.

நிலமானியமுறையில் கூட பல அரசுகள் கூறாக்க நிலையில் இருந்தன. அண்மைக்காலம்வரை மைய அதிகாரம் ஒரு சராசரி மனிதனால் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் பொருட்டு தன் திறனை காட்டவேண்டியிருந்தது. இங்கு ஒரு மனிதனின் இரத்த உறவுடனோ மரபுரீதியான ஒரு உள்ளூர் அமைப்புடனோ (traditional local units) தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும்.   நிலமானிய அதிகாரமையங்களிலும் அதிகாரம் இரத்த உறவால் பகிரப்பட்டது. இதுவே, கூறாக்கநிலை எனலாம்.  

வரியிடுதல் மைய அதிகாரத்திற்கு காரணமாகவும், தாக்கமாகவும் அமையும். இது அடுத்தடுத்த கட்டத்திலுள்ள கூறாக்கநிலை அதிகாரத்திலிருப்பவர்கள் பொருளியல் சுதந்திரம், வளமையின் அடிப்படையில் அமைகிறது. இது நிலமானிய அமைப்புகளின் வெற்றியால் மட்டும் அமைவதில்லை.  மைய அதிகாரம் நிலமானியத் தலைவர்களின் உதவி யினைச் சார்ந்து இருப்பதால் அவர்களின் அரசியல் தேவையை இவர்கள் பூர்த்தி செய்வதால் நிலப் பிரபுக்கள் இயல்பாகவே தங்களின் அதிகாரத்தினை வலுப்படுத்தி மையத்தின் அதிகாரத்தலைமையினை கைவிடுவர்.  இச்சேவை பணத்தினை மையப்படுத்தி அமைந்திருந்தால், மையஅதிகாரம் உடனடியாக ஆட்சிஅலுவலர் வழியே பணத்தினை கைப்பற்று வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் கூறாக்க அதிகார மையங்களுக்கு எதிரான அலுவலர்களை இயக்கும்.

கூறாக்கநிலையில் கப்பம் சடங்கு மூலமும் சட்ட சேவை மூலமும் பெறப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தொடர்ந்து வரிகேட்கும் உரிமை இல்லை. இது மாதிரியான கப்பம் தேவையானதைவிட கூடுதலான அதிகாரத்தினை மையத்திலிருப்பவர்களுக்கு வழங்கியது. வரிவாங்குவது கோபுரத்தள அதிகார முறையில் எப்படி ஒன்றன் கீழ் ஒன்றாக தமக்குள் அமைந்துகொள்கிறது என்பதனை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதனை மையஅரசு கட்டுப்படுத்த முடியாது. கூறாக்க அமைப்புகள் வலுவிழக்கும் போது மைய அமைப்பின் பொருளியல்நிலை சீராக அமையும்.  அப்போது, ஒற்றை அரசு எழும்.  இந்த ஒற்றை அரசு மையப்படுதப்பட்ட வரிமுறையினை சார்ந்து இருந்தது. இதில் துணைப்படைதிட்டம் விலக்கப்பட்டது. நீதித்துறை உள்ளூர்த்தளத்தில் இருந்து மையம்வரை தொடர்ந்து பிணைக்கப்பட்டு வளர்ந்தது.

நிலவுடைமை அதிகார மையத்தின் முகமாக உள்ளது. வழக்கமாகவும் வாரிசு அடிப்படையிலும் உள்ள நிலவுடைமை இரத்த உறவு அடிப்படையில் அமைவது.  இது கூறாக்க அரசின் தனித்த கூறு.  அடித்தளத்தில் நிலவுடைமை மாறாதிருந்தாலும்  மேல்நிலையில் புதியவகை நிலவுரிமை குத்தகை (fief) அறிமுகப்படுத்தப்பட்டது.  மைய அதிகாரத்தின் நிலம் தொடர்பான சடங்குநிலை உறவுகள் பொருளியல், அரசியல் உரிமைகளுக்கு விரிவாக்கப்படும்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசின் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு ஆட்சி அலுவலர் களுக்கு பாதுகாப்பும் பட்டமும்  கிடைக்கிறது.  மைய ஆட்சியின் அலுவலர்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு வாய்ப்பு கிட்டுகிறது.  ஆனால், ஆளூர் சமூகத்தில் இது சாத்தியமில்லை.  ஏனெனில், அங்கு நிலத்திற்கான பொருளியல் மதிப்பு இல்லை.  அங்கு நிலம் பெருமளவு உணவுஉற்பத்திக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது; அரசியல், சடங்கு களுக்கும் கூட பயன்படுத்தபட்டது. 

இங்கிலாந்தில் நார்மன்களின் ஆட்சிக்காலத்தில் அரசன் நிலமானிய முறையிலுள்ள நிலவுரிமையினை பிறருக்கும் பிரித்தளிக்கும் உரிமையினைப் பெற்றிருந்தான். நாட்டில் பல்வேறுபகுதியிலும் இருக்கும் குரிசில்களுக்கு (vassal) நிலவுடைமை யினை வழங்கினான்.  இதன் மூலம் கூறாக்க அதிகாரத்தினை மட்டுப்படுத்தினான். சார்லமாங்கே பேரரசு (Charlamangne empire) முழுக்க நிலவுரிமை கொண்டிருந்ததால் பொருளாதார அடித்தளத்தில் தம் அரச கட்டமைப் பிற்கு நன்கு பயன்படுத்தினார்.

இதே போன்று, புகண்டாவில் (Buganda) மரபு முறையில் அரசு பரவலான நிலத்தினை பயன்படுத்தி யதன் மூலம் எப்படிக் கூறாக்க அரசு வாரிசுரிமையின் அடிப்படையில் அமைந்த சுதந்திரமான அதிகார மையங்கள் அரசிற்குள் இணைந்தன என்பதைப் புரிந்துகொள்வதற்கு போதுமான சான்றுகள் உள.   இவ்வொற்றை அரசில் அரசரின் கீழிருந்த தலை வர்கள் அரசரால் மாறி மாறி வெவ்வேறு இடத்திற்கு நியமிக்கப்பட்டனர். 

அரசு மாற்றம் பற்றி மேற்சொல்லப்பட்ட கூறுகள் பொதுவாக சொல்வதானால் வளர்ந்து விரியும் அலுவல் அமைப்பிற்கு (bureaucratic element)  சாதகமான ஒன்று எனலாம். இந்தவகை அலுவலமைப்பு வாரிசுரிமையற்றது. மைய அதிகாரத்தினைக் கூறாக்க வட்டார எல்லைக் குள்ளிருந்து வெளியேற்றுகிறது. இது தெளிவான நீதிபரிபாலனம் மூலமாகவும் ஒற்றை அதிகாரக் கட்டமைப்பு மூலமும் உருவாக்கப்பட்டது.

Works consulted by Aidan W.Southall

1) Cox, H.H. The Growth and Expansion of the Buganda in The Uganda Journal, Vol.14:2.

2) Durkhiem, E.1947. The Division of Labour in Society, tr.by G.Simpson.

3) Gerth and C.Wright Mills, 1947. From Max Weber.

4) Gluckman, M.1951. The Lozi of Barotsland in The Seven Tribes of British Central Africa.

5) Halphen, L.1922. The Cambridge Medieval History, Vol.III.

6) Hodgkin, T.1948. The Political History of England, Vol.I.

7) Nadel, SF.1942. A Black Byzantium.

8) Oberg, K and Maz Gluckman, African Political Systems.

9) Vinogradoff, P.1913. The Cambridge Medieval History, Vol.II.

Pin It