நீரியியல் துறை வல்லுநரும், இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களுள் ஒருவரும், அறிவியல் சிந்தனையாளரும், சிறந்த நிர்வாகியும், சிறந்த ஆராய்ச்சியாளரும், தமிழறிஞரும் கவிஞருமான வா.செ. குழந்தைசாமி அவர்கள் கடந்த 10. 12. 16 அன்று காலை 5-30 மணிக்கு இயற்கை எய்தியது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தமிழ்நாடு ஓர் அரிய ஆளுமையை இழந்துவிட்டது; ஓயாத சிந்தனை, மக்கள் நல நாட்டம், நாட்டு முன்னேற்றம் ஆகியவற்றில் விழித்திருந்த கண்கள் மூடிக் கொண்டன; சலியாது எழுதிக் கொண்டிருந்த விரல்கள் விடைபெற்றுக் கொண்டன; இப்படி யொரு ஆளுமை இனி எப்போது நமக்கு வாய்க்குமோ! காலத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றவரைக் காலவிதி விழுங்கிவிட்டது. “இன்னாது அம்ம இவ்வுலகம்” என்றே ஆறுதல் பெற வேண்டியுள்ளது.

va se kuzhanthaisamyவா.செ.கு, பல ஆளுமைகளைப் பெற்றவர் என்பதைப் பலர் அறிவர்; ஆனால் அவரது தனிப் பண்புகளை நேர்மையை, அஞ்சாமையை, கொள்கை யுறுதியைச் சிலரே அறிவர்; இளைய சமுதாயம் அவற்றை நன்கு அறிவது தவிர்க்க முடியாததாகும். காலம் தவறாமையைக் கடைபிடிப்பதில் அவர் ஒப்பில்லாதவர்; தான் பேசும் கூட்டமென்றாலும், கேட்கும் கூட்டமென்றாலும் தொடங்கும் நேரத்திற்குப் பத்து நிமிடத்திற்கு முன்பாகவே வந்துவிடுவார்; அவர் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவு மிருந்த 25 ஆண்டுகளில் ஒருநாள்கூட காலம் கடந்து சென்றதும், விடுப்பு எடுத்ததும் கிடையா தாம்! துணைவேந்தராக இருந்தபோதும் அப்படித் தான்; இவற்றை அவர், தாமெழுதிய தன்வரலாற்று நூலில் குறித்துள்ளார். அவர் ஆராய்ச்சி மாண வராக இருந்தபோதும் அதே நிலைதான். அவரது அறிவுக்கூர்மையும் வியக்கத்தக்கது; நீரியியல் ஆராய்ச்சித் துறையில் தலைசிறந்த வல்லுநராக விளங்கிய அமெரிக்காவின் வெண்டேசௌ (சீனர்) என்ற ஆசிரியர் கடந்த 25 ஆண்டுகளில் வா.செ. குழந்தைசாமியைப் போன்ற ஓர் ஆய்வு மாணவரைக் கண்டதில்லை என்று கூறியுள்ளார். இதனைப்போன்றே மற்றொன்றும் இங்கு நினைவு கூரத்தக்கது. கரக்பூர் ஐ.ஐ.டி நிறுவனம், பொன் விழாவை முன்னிட்டு, அதுவரைப் பயின்ற 35,000 மாணவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்துச் சிறப்புச் செய்ய எண்ணியபோது, வா.செ.கு. வையும், டாக்டர் பிரவீன் சௌத்ரியையும் அறிவித்தது. பின்னர் சிறப்புச் செய்தது. பிரவீன் சௌத்ரி பின்னாளில் அமெரிக்காவின் ரொனால்டு ரீகனின் ஆலோசனைக் குழுவின் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரிடமிருந்த நேர்மை மிக வியக்கத்தக்கது. தன் மகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது அவர் மஞ்சள் காமாலை நோயில் பாதிக்கப்பட்டு வருகைப் பதிவு (Attendence) குறைந்ததால், தேர்வு எழுதமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. தனிவகுப்பு நடத்தித் தேர்வு எழுத வைக்கப் பல்கலைக்கழகம் விரும்பிய போதும், அதனை வா.செ.கு. மறுத்து, மேலும் ஓராண்டுப் படித்துத் தேர்வு எழுதட்டும் என்று கூறிவிட்டார். அவருடைய மகன் பின்னர் ஓராண்டுக் கூடுதலாகப் படித்துதான் பட்டம் பெற்றார். இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்திற்கு (IGNOU) வா.செ.கு. துணைவேந்தராக அமர்வதற்கு முன்பே அவருடைய மனைவி அங்கு ஆங்கிலமொழி விரிவுரையாளராக இருந்தார். ஒருமுறை அங்குத் துணைப் பேராசிரியருக்கு நேர்காணல் நிகழ்ந்தபோது, தம் மனைவியை நேர்காணலுக்கு அழைக்க மறுத்துவிட்டார். துணை வேந்தர் பதவியைக் கொண்டு தம் மனைவிக்குப் பதவி வழங்கி விட்டார் என்ற தவறான கணிப்பு ஏற்பட்டு விடக்கூடாதென்பதற்கே அதனைச் செய்துள்ளார். வா.செ.கு. துணைவேந்தராக இருந்த வரை அவருடைய துணைவியார் பேராசிரியராக உயரவில்லை. வா.செ.கு. அப்பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே அவர் பேராசிரியரானார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தலித் மாண வர்கள் சரியாக வகுப்புக்கு வராததால், அவர் களுக்குக் கிடைக்க வேண்டிய உதவித் தொகையை (Scholarship) நிறுத்திவிட்டார். விதிப்படி 75ரூ அளவுக்கு வருகைப்பதிவு இருந்தால்தான் உதவித் தொகை வழங்கப்படும். அரசியல் பொருட்டு அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி உதவித் தொகை வழங்கப் பரிந்துரை அளித்தும் வா.செ.கு. மறுத்துவிட்டார். இதனைப் போன்றே தில்லியிலுள்ள IGNOU-வில் வேலையிழந்த விரிவுரை யாளர்களுக்கு இரக்கத்தின் அடிப்படையில் பணி வாய்ப்பை அளிக்க நீதிமன்றம் பரிந்துரைத்தும், அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நேரில் பரிந்துரைத்தும் அவற்றை மறுத்துள்ளார். பின்னர் பல நிலைகளில் ஆய்ந்து சில சட்டத் திருத்தம் செய்தே அவர்களைப் பணியில் அமர்த்தினார். அவரது வரலாற்றில், இவை போன்ற பல நிகழ்வுகள் உள்ளன; அவர் நேர்மையில் சற்று இரக்கமற்றவரே என்பதே உண்மை. காந்தியச் செம்மல் பொள்ளாச்சி மகாலிங்கம் இவரைக் கடுமையான, பத்தியம் மிக்க நேர்மையாளர் என்றே கூறுவார்.

மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, ஆட்சி மன்றக்குழு, சிலருக்கு கௌரவ முனைவர் பட்டம் அளிக்க முடிவெடுத்தது. அப் போது தமிழக அரசு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப் பரிந்துரைத்தது. பின்னர், சற்று வேகமும் காட்டி யுள்ளது. சிலம்புச் செல்வர் மீது வா.செ.கு. மிகுந்த மதிப்பு கொண்டவர். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் நீண்ட கட்டுரையையும் எழுதியுள்ளார்.

அவரோடு நெருங்கி உரையாடியவர்களுக்குத் தெரியும். அவர் ம.பொ.சி. மீது கொண்ட மதிப்பு, ம.பொ.சி.யின் பேராற்றலை அவர் நன்குணர்ந்து மதிப்புக் கொண் டிருந்தபோதும், அவரது சிந்தனை நோக்கில் அரசின் பரிந்துரைக்கு எதிராக பெரியசாமி தூரனுக்கு அவ்வாண்டில் டாக்டர் பட்டம் வழங்கினார், இப்படி கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்தான் அவர். பரிந்துரை யார் கேட்டாலும் மறுத்து விடுவார்; ஆனால், தகுதி இருக்குமாயின் ஓடோடி உதவி செய்வார்; தகுதி, திறமை ஆகிய வற்றைப் போற்ற வேண்டுமென்றும், அவற்றிற்கான இடத்தைத் தேடியளிக்க வேண்டுமென்பார்.

நேர்மையாக உண்மையாக, நிர்வாகத் திறமை யோடு, மிகுந்த ஆற்றலோடு செயல்பட்டதால் தான் ஒன்பது பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளன. அவர் ஐழுசூடீரு- விலிருந்து ஓய்வுபெற்றபோது அப்போதைய ஆளுநர் அலெக்ஸாண்டர் அவரைப் பாராட்டி ஆளுநர் மாளிகையில் விருந்தளித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஆளுநர் இப்படி விருந்தளித்தது அதற்கு முன்பும் நடந்ததில்லை. பின்னரும் நடந்ததில்லை. இது அவருக்கே கிடைத்த தனிப் பெருமை. இது போன்ற பெருமையால்தான் பிற்காலத்தில் அவருக்கு இங்கிலாந்தின் இந்தியத் தூதரக அறிவியல் ஆலோசகர் பதவியும், அமெரிக்காவில் இந்தியத் தூதர் பதவியும் வகிக்கும் வாய்ப்பு வந்துள்ளன. அவரது தனிப்பட்ட காரணத்தால் அவர் அவற்றை ஏற்காது விட்டு விட்டார்.

அவரது தன்வரலாற்று நூலான ‘ஆடு மாடு மேய்ப்பது முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை’ எனும் நூல் வெளிவந்திராவிட்டால் மேற் குறித்த அரிய செய்திகள் எல்லாம் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும். நான் மாதத் திற்குக் குறைந்தது இருமுறை சந்தித்துப் பேசுவேன். அப்போது அவர் தன்வரலாற்றைப் பழைய டைரியில் எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் எதனை எழுதினாலும் நம்மைப் போன்று தனித் தாளில் எழுதாமல் எப்போதும் பழைய டைரியிலே எழுதுவதையே விருப்பமாகக் கொண்டிருந்தார். அவர் அதுகாறும் எழுதியவற்றைப் பல டைரி களாகவோ நோட்டுப் புத்தகங்களாகவோ வைத் திருந்தார்.

அரிய செய்திகள் கொண்ட ஓர் அரிய நூல் அது. அந்நூல் விரைவில் வெளிவருவதற்கு நானொரு பெருங்காரணமாக இருந்தேன் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே! அவர் இப்போது எவ்வளவு உயர்ந்திருந்தாலும், பழையவற்றை உள்ளதை உள்ளபடி எழுதுவதில் அவர் தயங்கிய தில்லை. தன் வரலாற்று நூலுக்கு எத்தனையோ தலைப்புகள் இருக்க, “ஆடு மாடுகள் மேய்ப்பது முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை” எனத் தலைப்பிட்டு எழுதியதில் எந்தப் போலித்தனமும் அவரிடம் இல்லையென்பதை உணரலாம். இது அவரது வெளிப்படைத் தன்மையை எளிமையை நன்கு அடையாளம் காட்டுகிறது எனலாம்.

அவரிடம் தலைமுறை இடைவெளியைச் (Generation Gap) சிறிதும் காண முடியாது. வயதில், படிப்பில், அனுபவத்தில் குறைந்தவர்கள் என்பதால், அவர்களிடமிருந்து வரும் கருத்துக்களைத் தடுக்க மாட்டார். அவரொரு அறிவியல் அறிஞராக இருந்ததால் அவருக்கு அந்நிலை வாய்த்தது போலும்! எவரிடமிருந்தும் சீரிய சிந்தனை வெளிப் படலாம் என்பது அவர் முடிபு. முக்கிய நிகழ்வு களில், அவர் நண்பர்களை அழைத்து விவாதிப் பார். கலந்துரையாடுவார். தான் உறுதியாகக் கொண்ட முடிபைக் கூடச் சில நேரங்களில் உற்ற நண்பர்களிடம் விவாதிப்பார். எனினும் தான் கொண்ட முடிபு, சரியென்றால் அதனை எந் நிலையிலும் மாற்றிக் கொள்ளமாட்டார். அதில் அவர் மிக உறுதியானவர். அவரது விமர்சனம் அல்லது முடிபு அமைதியாக வெளிவரும்; ஆனால் கறாராக இருக்கும்; உறுதியாக இருக்கும். அவர் தான் வா.செ.கு. அதேபோன்று அவர் எழுத்து மீது விமர்சனம் வைத்தால் அதனை வரவேற்பார்; ஆயாசப்படமாட்டார். வயதைக் கொண்டோ படிப்பைக் கொண்டோ தடுக்கமாட்டார். முதலில் எந்தக் கருத்தும் வெளிவர அனுமதிப்பார். இது மிக முக்கியமானது.

தானெழுதிய தன்வரலாற்று நூலுக்கு முன், ‘மானுட யாத்திரை’ எனும் காப்பியத்தை எழுதி யுள்ளார். அதில் உலகிலுள்ள மதங்களைப் பற்றியும், தத்துவங்களைக் குறித்தும் சுருக்கமாக எழுதியுள்ளார். தத்துவங்களைப் பற்றிச் சரியாக அறிந்துகொள்ள ஆங்கிலத்தில் பற்பல நூல் களைப் புதிதாகப் படித்தார்.

எனினும் அவற்றைக் குறித்துத் (இந்தியத் தத்துவம் மற்றும் மார்க்சியம்) தமிழிலும் படிக்க விரும்பி என்னிடம் நூல்களைக் கேட்டார். நானும் பல நூல்களைத் தந்தேன். குறிப்பாக, அவற்றுள் நா.வானமாமலை எழுதிய ‘இயங்கியல் பொருள்முதல்வாதம்’ எனும் நூல் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. மானுட யாத்திரை நூலை எழுதி முடித்த பின்னர் என்னிடம் பெற்ற நூல்களில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைக் கொடுத்து விட்டார். அவர் வைத்துக் கொண்ட நூல் வானமாமலையின் நூலேயாகும். அந்நூலை வெகுவாகப் பாராட்டி விட்டு “வீரமணி இதனை நான் வைத்துக் கொள் கிறேன்; நீங்கள் வேறு நூலை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். அந்நூல் அவரை அவ்வளவு கவர்ந்திருந்தது.

கருவூரில் 19. 06. 2016-அன்று நடந்த விழாவில் இறுதியில் அவர் உரையாற்றும்போது, தமது வயதையும், இயலாமையையும் எண்ணி “நான் கருவூர்க்கு வருவது இதுவே கடைசிமுறை; இனி வரமாட்டேன்; என்னை அழைக்க விரும்பாதீர்கள்” என்றார். தனது வயோதிகத்தை எண்ணி அவர் கூறியது, அவரது வாழ்வின் இறுதிக்கு இறுதியாக அமைந்துவிட்டது. “கடவுள் எனும் பெருமான் யானாக வேண்டும்” என்று பாடினார். அதற் கேற்ப ஓரளவு பல்லாற்றல் பெற்ற பெருமகனாகத் தான் அவர் விளங்கினார்.

அவரது இழப்பு அளவு கடந்த இழப்பு தான் எனினும் என்ன? அவரே ஓரிடத்தில்,

“புண்பட்ட போது புலம்பல் இல்லை - மனம்

போனதை எண்ணி வருந்துதல் இல்லை”

என்று பாடியிருப்பதைக் கொண்டு நாம் ஆறுதல் கொள்வதே ஏற்றது. ஆறுதல் கொண்டால் மட்டும் போதுமா? அது அவர்க்குச் செய்யும் நன்றி ஆகாது. அப்படியெனில் சரியான நன்றிதான் எது?

“வரும் பொருள் காணல் வேண்டும்

வையத்தை வானைக் கையில்

தரும்பொருள் தெளிதல் வேண்டும்”

எனும் கொள்கையை ஏந்தி, நாம் உழைப்பதே, அதன் வழிப் புத்துலகைப் படைப்பதே நாம் அவர்க்குக் காட்டும் நன்றியாகும்.

Pin It