அண்மையில் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.செல்வராஜ் எழுதி யுள்ள ‘தோல்’ நாவலின் கதை, வாசகனிடம் இருவேறு விதமாக நிற்கிறது. ஒன்று வரலாற்றினை அறிந்த வர்கள், ஏனையோர் அறியாதவர்கள். வரலாற்றினை அறியாதவர்களுக்குக் கூடக் கொஞ்சமும் சலிப்பு ஏற் படாத வண்ணம் நாவலினைக் கொண்டு சென்றிருக் கிறார் செல்வராஜ். இதுவும் ஒரு வகையில் வரலாற்று நாவலே.

இந்நாவலில் இருக்கும் கரு பொதுவுடைமை. அதன் மையம் இருக்கிறதே அதுதான் தோல். இந்தத் தோல் என்னும் விஷயம் கூடக் கதையில் இரு வேறு படுகிறது. ஒன்று தோல் தொழிற்சாலை; மற்றொன்று மனிதர்களின் தோல். மையம் என்னும் விஷயத்தினை தான் வாசகன் நாவலின் கடைசி வரை உணர முடியும். அதுதான் கருவினைச் சிறிதும் உடைக்காமல் அனைத்துப் பகுதிகளிலும் தெளிக்கும் விதமாகக் கொண்டு செல்லும் ஒரு வாகனம்.

இந்நாவலில் இரண்டு மையங்கள் இருக் கின்றன. ஒன்று அரசியல், மற்றொன்று வதை. அரசியலுக்குப் பின் வருவோம். முதலில் வதை. இந்த வதை சார்ந்த படைப்புகளில் எனக்குக் கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்பதால் கதை இன்னமும் சூடு பிடித்தது. இந்த வதைக்குள் செல்வதற்கு முன்னோடி யாக எனக்கு இருக்கும் புரிதலில் எதிர் அழகியலைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

இந்த எதிர் அழகியல் கூட என் புரிதலில் இரு வகையாகப் படுகிறது. ஒன்று: புறக்கணிக்கும் விஷயங்களை வர்ணிப்பது; மற்றொன்று: அந்தப் புறக்கணிப்பை எழுதுவதே. இதில் இந்த நாவல் எதைக் கையில் கொண்டிருக்கிறது எனில், இரண்டா வதைத்தான். இந்த இரண்டாவதை சினிமாவைக் கொண்டு தங்களுக்குச் சொல்லவேண்டுமெனில் ‘நான் கடவுள்’ படத்தில் பிச்சைக்காரர்கள் காட்டப் படும் விதம் எனக்கு எதிர் அழகியலாகப் பட்டது.

இந்த எதிர் அழகியல் நாவலில் எங்கு இருக் கிறது எனில் அந்தத் தோல் தொழிற்சாலையில். அங்கு நடக்கும் அல்லது அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் விவரமாக நாவலில் வருகின்றன. அதில் குறிப்பிட்ட ஒரு வேலை சுண்ணாம்புக் குழியில் செய்யும் வேலை போல நாவலில் வருகிறது. மனிதனை உருக்கும் வண்ணம் இதை எழுதியிருக்கிறார்.

இந்த வர்ணனை, எதிர் அழகியல் போன்ற வற்றிற்கு அப்பால் கதை எதை நோக்கிச் செல்கிறது எனில் அஸன் ராவுத்தர் என்பவர் தோல் தொழிற் சாலை நடத்துகிறார். அங்கு வேலை செய்பவர் களை அடிமையாக்குகிறார். அந்த அடிமைத்தனம் எப்படியோ வழக்கறிஞர் சங்கரனிடம் செல்கிறது. அவர் யாரெனில் ஒரு பிராமணன். ஆனால் பகுத் தறிவுவாதி. தன் தொழிலினை விட்டு இவர்களுக்காகப் போராட ஆரம்பிக்கிறார். இந்தப் போராட்டத்தின் நீட்சிதான் “தோல்” நாவல்.

இதில் வரும் அந்த வதை கூட ஆண்பால், பெண் பால் எனத் தனித்தனியாகக் கதையில் நிற்கிறது. ஆண்களுக்கு அவர்கள் செய்யும் வேலையே ஒரு வித வதைதான். மற்றொன்று தவறுகள் செய்தால் விழும் கசையடி. இதைத் தாண்டி ஒரு வதை இருக் கிறது. அது உளவியல் சார்ந்தது. இதனை நேரடி யாக நம்மால் நாவலில் உணர முடியாது. அவர்கள் பேசும் பேச்சில் அவர்களின் உணர்ச்சியினை செல்வ ராஜ் எழுதியிருக்கும் விதத்தில் இந்த வதைக்கான புரிதலை நாம் கொள்ளமுடியும். இந்த உளவியல் வதைக்கான பின்னணி யாதெனில் பெண்களின் வதை. அது முழுக்க முழுக்க பாலியல் சார்ந்தது. அங்கிருக்கும் கிட்டத்தட்ட அனைத்துப் பெண் களும் முதலாளிகளின் வாரிசுகளாலும் மேல் ஜாதி மக்களாலும் அனுபவிக்கும் பாலியல் சித்ரவதைகள். அப்படிச் செய்வோரை செல்வராஜ் கொணர்ந் திருக்கும் விதம் அவ்வளவு மிருகத்தனமாக இருக்கிறது. பருவம் அடைந்த சில நாட்களிலேயே அடையத் துடிப்பது, ஊரே அடித்தாலும் திருந்தாமல் அதே தொழிலாக இருப்பது இது போல் நிறைய கதா பாத்திரங்கள் நாவல் நெடுக வருகின்றன.

கதாபாத்திரங்கள் என்னும் போதுதான் நினை விற்கு வந்தது. இந்நாவல் ஆரம்பிப்பதற்கு முன்னும் முன்னுரைக்குப் பின்னும் அனைத்துக் கதாபாத்திரங் களின் பெயர்களையும் கதாபாத்திரங்களையும் அழகுற வைத்திருக்கிறார்.

அடுத்தது அரசியல். இது நாவலில் மூன்று விதமாக வருகிறது. ஆரம்பத்தில் கீழ் ஜாதி மக்கள் அடிமையாய் இருக்கும் போது ஆதிக்கம் செலுத்து பவர்களின் அரசியல். இந்த அடிமையாக வாழ்ந்த வர்கள் இணைந்து சங்கம் அமைத்து மேட்டுக்குடிக் காரர்களை எதிர்க்கும் போது அங்குத் தொனிக்கப் படும் அரசியல். அடுத்து சுதந்திரம் அடைந்த பின் இவர்களின் சங்கம், கட்சி என்னும் உருவினைப் பெறுகிறது. அந்தக் கட்சிக்கும் இந்திய அரசாங்கத் துக்கும் இடையே நடக்கும் அரசியல். இந்தக் கடைசி ஒன்றுதான் நியூஸ் சேனலைப் பார்ப்பது போல கொஞ்சமும் சலிப்படைய வைக் காமல் வேகமாக நகர்ந்து செல்லும். ஏன் நியூஸ் சேனலைப் போல் இருந்தது என்றால் முழுக்க முழுக்க அரசியல் கட்சிகள். போராட்டம், சிறை எனச் செல்லும். அதே கதையில் இருக்கும் முடிச்சு களும் கதையின் வேகமான ஓட்டமும் நம்மை அந்த இடத்தில் வாசிக்க வைக்கின்றன.

இந்தக்கால மாற்றத்தினை- அஃதாவது, கதையில் நடக்கும் காலம் அதிவேகத்தில் நகர்வது போல் ஒரு பிம்பத்தினை நம்முள் எழுப்புகிறது. அதற்கான காரணம் இந்நாவலில் இருக்கும் கதை மிகவும் அடர்த்தியானது. ஒரு வரியில் சொல்லமுடியாது. அப்படியே சொல்ல வேண்டுமென்றாலும் அது பொதுவுடைமை எனச் சொல்லலாம்; ஆனால் அது சரியாக வராது!

நாவலில் குறையே இல்லையா எனில் எனக்கு ஒரே ஒரு விஷயம் குறையாகப்பட்டது. அரசியல் மூன்றாக இருக்கிறது எனச் சொல்லியிருந்தேன். நாவலின் போக்கில் கதையும் நமக்கு மூன்றாகப் படும். முதலில், அந்தத் தொழிலாளர்களின் வேதனையும் அவர்கள் ஒரு தலைவனுடன் அமைக்கும் சங்கமும் என. இதைத் தொடர்ந்து ஒரு தலித்தின் கொலையும் அதன் புலன் விசாரணையும் எனத் தொடரும். இதற்கடுத்து இந்த சங்கத்தின் தலைவர் களைக் கைது செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுக்கும் முடிவால் நடக்கும் சம்பவங்கள். இப்படி தொடர்பற்றவை போல இருக்கும் கதைகள் சேர்ந்து நாவலாகிறது. ஆனால் சேர்க்கப்படும் இடம் மிகவும் மெலிதாக அறுபடும் நிலையில் இருக்கிறது. இருக்கிறது என்பதை விட எனக்கு அப்படி பட்டது.

ஆரம்பத்தில் அந்தத் தொழிற்சாலையில் நடக்கும் வதைகளினை ஏதோ தினம் நடப்பது போல் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நன்கு அந்தப் பகுதிகளை வாசித்தால் உலகத்திலேயே கொடூரமான மரத்துப் போகும் விஷயத்தினை உணரலாம். வலி என்பது அந்த நேரம் தோன்றும் விஷயம், அது நீடிக்கவும் செய்யலாம். அப்படித் தொடர்ந்து நீடித்தால் அது மரத்துப்போகும். அந்த மரத்தலை அழகுற நாவலில் அந்தப் பக்கங்களில் சொல்லியிருக்கிறார்.

என்னை மிகவும் கவர்ந்த விஷயம் நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி. கதை நடக்கும் காலத்தினை அப்படியே கண்முன் நிறுத்துவது போல் அந்தத் தொழிற்சாலையினை, கூட்டங்கள் நடக்கும் திடலினை, பாலியல் ரீதியான வன்முறைகள் வரும் இடத்தில் பெண்கள் மற்றும் ஆண்களின் மொழி, சின்ன சின்ன கதாபாத்திரங்கள் தங்களின் தாக்கத் தினை மொழியின் மூலம் போகிற போக்கில் அழகுறப் பதித்துவிட்டுச் செல்கிறது.

ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமெனில் தோல் என்னும் பண்டம் உயிர்ப்பித்து தன்னிடமும் தன்னாலும் நடக்கும் சம்பவங்களைச் சொல்வது போல, காண்பிப்பது போல் நாவல் அமைந்திருக் கிறது. இங்கே சொல்லாத விஷயங்கள் இன்னமும் நிறைய நாவலில் அடங்கியிருக்கின்றன. வாசித்து அதன் அனுபவத்தினை உணருங்கள், பகிருங்கள்...

Pin It