மறைந்த பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ.கோமதிநாயகம் எழுதி, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘Thamiravaruni – Conflicts Over Water Resources” (தாமிரவருணி: நீர் ஆதாரங்களுக்கான மோதல்கள்), ‘மண்ணை அளந்தவர்கள்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, திரு.கோமதிநாயகத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான (2012) டிசம்பர் 29-இல், திருச்சியில் நடை பெற்றது.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அய்க்கப் அரங்கில் நடைபெற்ற விழாவில், “தாமிர வருணி- நீராதாரங்களுக்கான மோதல்கள்” என்ற ஆங்கில நூலை வெளியிட்டுப் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, “தேசிய நீர்க் கொள்கை நாட்டை அழித்து விடும்; அதை எதிர்த்து மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும்” என்று குறிப் பிட்டார்.

மேலும் அவர், “அறிவுப் பெட்டக மாக விளங்கும் நூல்கள் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழ.கோமதிநாயகம். மேலும் அவரது குறிப்புகளை, எழுத்துகளை நூல்களாக வெளிக்கொண்டு வர வேண்டும். உலகில் வேறு எங்கும் காண முடியாத தொழில்நுட்பங்கள் தமிழர் களிடம் இருந்திருக்கின்றன. அந்தப் பெருமையை நாம் தொடர்கிறோமா? ஆழம் அறிய முடியாத இடத்திலும் அணை கட்டி, நீரின் போக்கில் அணை களைக் கட்டித் தண்ணீரைத் தடுப்பது என்ற பொறியியல் பார்வையில் கட்டப்பட்டமைக்கு உதாரணங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆண்டுக்கு வெறும் 25 முதல் 30 நாள் பெய்யும் மழையைக் கொண்டு எந்தக் காலத்திலும் எப்படிப் பயிர் செய்ய முடியும் என்ற தொழில்நுட்பமும் இருந்தது.

நீரைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள கலிங்கு, மதகு எனப் பல அமைப்புகளை உருவாக்கி தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்படும்; ஆடியில் தண்ணீர் பெருக்கெடுக்கும் என்ற கட்டமைப்புகள் எல்லாம் இருந்தன. அதைக் காப்பாற்றுகிறோமா? முந்தைய தலைமுறை பயன் படுத்திய பாடங்களைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 39,402 ஏரிகள் இருந்தன. அவற்றில் இப்போது 5 ஆயிரம் ஏரிகளைக் காணவில்லை. மீதமுள்ளவற்றிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. நிலத்தடி நீருக்கு ஆபத்து இருக்கிறது.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு எல்லா வற்றிலும் சிக்கல்கள் இருக்கின்றன. எந்த வில்லங்கமும் இல்லாத தாமிரவருணியில் மணல் கொள்ளை யடிக்கப்படுகிறது. அதைக்கூடப் பாதுகாக்க முடிய வில்லை.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 101 கிமீ தொலைவுக்கு 1.10 லட்சம் பேரை நிற்க வைத்துப் போராட்டம் நடத்தினோம். மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றமும் சொல்லி விட்டது; உச்சநீதிமன்றமும் சொல்லிவிட்டது. ஆனாலும், கர்நாடகம் மறுக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால் பாரத நாடு என்ன ஆகும்? எப்படித் தீர்வுகாணப் போகிறோம்? பழங் காலத்தைப் போல அணையை உடைக்க மண் வெட்டி எடுத்துச் செல்ல முடியுமா?

இந்திய அரசு தன்னுடைய கடமையை நிறை வேற்றத் தவறியிருக்கிறது. கேரளத்தில் அனைவரும் ஒத்த குரலில் பேசுகிறார்கள். கர்நாடகத்திலும் ஒரே குரல் கேட்கிறது. இங்கு மட்டும் பொதுப் பிரச் சினைக்குக்கூட எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசுவதில்லை. ஆட்சிக்கு வந்தவுடன், அது அவர வருக்குச் சொந்தம் என்று இருக்கிறார்கள். இது ஆபத்தான நிலை.

தேசிய நீர்க்கொள்கை நாட்டை அழித்து விடும். தந்திரமாக, பொதுமக்கள், தனியார் பங் கேற்பில் குளம், ஆறுகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தரப்போகிறார்கள். அன்னிய நிறுவனங் களிடம் தண்ணீரை வாங்கவேண்டிய நிலை வந்து விடும். இவற்றை எதிர்த்து மக்கள் இயக்கத்தை உரு வாக்க வேண்டும்” என்றார் நல்லகண்ணு.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பேசும்போது, “நதிநீர்ப் பங்கீட்டில் நீதிமன்றத் தீர்ப்பையும் அண்டை மாநிலங்கள் மதிக்கத் தயாரில்லை . மத்திய அரசும் ஆதரவாக இல்லை. தமிழ்நாடு ஆதரவின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் பெரும் பான்மையான மாவட்டங்கள் வறண்ட பகுதி களாக மாறிவிடும்.

இதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கும்போதே தொலைநோக்குப் பார்வையில் அப்போதைய பிரதமர் நேரு, இரண்டு வழிமுறை களைத் தந்தார். மாநிலங்களிடையே நதிநீர்ப் பிரச் சினை ஏற்படும்போது, நடுவர் மன்றம் அமைத்துத் தீர்வு காண்பது, அப்போதும் நீதி மறுக்கப்பட்டால் நதிநீர் வாரியம் அமைத்துத் தண்ணீரைப் பங்கிடுவது எனச் சட்டம் உருவாக்கினார் நேரு.

இந்தச் சட்டம் ஒரு முறை கூடப் பயன்படுத்தப் படவில்லை. ஏன்? இருக்கும் சட்டத்தைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்கத் தகுதியில்லாதவர்கள் நாற் காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். நதிநீர்ப் பிரச் சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதைத் தீர்க்க சாதி, மதம் போன்ற எல்லைகளைக் கடந்து அனைவரும் போராட முன்வர வேண்டும்” என்றார்.

“மண்ணை அளந்தவர்கள்” என்ற நூலை வெளி யிட்டு எழுத்தாளர் இராசேந்திர சோழன் பேசும் போது “நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை போன்றவற்றால் இழந்து வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் நம்முடைய குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரப் போகிறோம்?” எனக் கேள்வியெழுப் பினார்.

விழாவுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர் வீ.ந. சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பொறியாளர்கள் எஸ்.எம்.ரத்தினவேல், இரா.வெங்கட சாமி ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

தொடக்கத்தில் பத்திரிகையாளர் எம்.பாண்டிய ராஜன் வரவேற்றார். நிறைவில் பாவை பதிப்பக பொதுமேலாளர் தி.ரத்தின சபாபதி நன்றி கூறினார். நூல் வெளியீட்டு விழாவை, பாவை பதிப்பகத்துடன் இலக்கியச் சுற்றம் அமைப்பு ஒருங்கிணைத்தது.

ஏற்கெனவே, முனைவர் பழ.கோமதிநாயகத்தின் முதலாண்டு நினைவு நாளில்,அவருடைய “தமிழகப் பாசன வரலாறு - செம்மைப் பதிப்பு”, “ தமிழகம்... தண்ணீர்.... தாகம் தீருமா?” ஆகிய இரு நூல் களையும், இரண்டாமாண்டு நினைவு நாளில் அவருடைய முனைவர் பட்ட ஆய்வின் தமிழ் வடிவமான “தாமிரவருணி: சமூக - பொருளியல் மாற்றங்கள்” நூலையும் பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Pin It