மரபுவழிக் கல்வியறிவின் தாக்கத்தின் கீழிருக்கும் பலருக்கு இயற்கையாகவே மனிதர் சமயப் பற்று உள்ளவர் என்று தோன்றுகிறது. நமது பள்ளி களின் கற்பித்தலில் தவிர்க்கவியலாத ஒன்றாய் இருக்கும் விவிலியம் மனிதகுலம் தொடக்கக் காலத்திலிருந்தே கடவுளை வழிபட்டு வருகின்றது என்று சித்திரிக்கின்றது. வன்மையாகக் கடவுள் மறுக்கப்படுதலும், அதே வேளையில் கடவுள் போற்றப்படுதலும் எல்லாம் வல்ல கருணைமிக்க படைப்பாளர் ஒருவர் இருக்கின்றார் என்று மெய்ப்பிக்கப்படுகிறது என்பது சமயக் கவியின் அடித்தளம்.

பின்னோக்கிப் பார்த்தோமானால் நாம் இயற்கை யாகவே சமயப்பற்றுக் கொண்டவர்கள் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. நமக்குக் கற்பிக்கப் படுவதால்தான் நாம் சமயச் செயற் பாட்டில் நம்பிக்கை கொள்கிறோம். தேவால யங்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தின் மூலம் பள்ளிக் கல்வியில் சமயக் கல்வியைத் திணித்துள்ளன; சமய நம்பிக்கை ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு வளர்ச்சிநிலையில் உள்ள மக்களுக்கும் சமயம் மூடநம்பிக்கைகளைக் கற்பிக்கிறது. திருத்தொண்டர்களின் திருமுகங்கள் “கடவுள் எல்லாம் வல்ல தந்தை” என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. இத் தொடரில் உள்ள “தந்தை” என்ற சொல் நமக்கு அறிவார்ந்ததாகப்படுகின்றது; ஆனால் பழங்குடி களுக்கு அச்சொல் அறிவார்ந்ததாகப் படவில்லை. காரணம் அவர்களுக்குத் தந்தைவழி முறைமையுடன் அறிமுகம் ஏதுமில்லை. இக்காலத்திலும் தந்தைவழி முறைமையுடன் அறிமுகம் ஏதுமற்ற பழங்குடிகள் இருக்கின்றனர் என்பது உண்மை.

எல்லாக் காலத்திலும் மனிதர் சமூக விலங் காகவே இருக்கின்றனர். கடுமையான காலநிலை, கொடிய விலங்குகள் ஆகியவற்றை எதிர்த்து வாழ் வதற்கான போராட்டத்தில் ‘சமூக விலங்காக’ இல்லாவிட்டால் அவர்களால் பிழைத்திருக்கவே இயலாது. தொல், அநாகரிக, நாகரிகச் சமூகங்கள் இடையேயான வேறுபாடு, வளர்ச்சி ஆகியவற்றிற் கான அடிப்படை அச்சமூகங்களின் உற்பத்திக் கருவிகளும் சமூக உறவுகளும் ஆகும். மனிதர் களிடமிருந்து நவீனத் தொழில்துறையின் நீராவி ஆற்றலையும், மின்சாரத்தையும் நீக்கிவிட்டால், தொடக்க கால முதலாளியத்தின் சுடுபடைக் கலங்கள், கடலோடியின் திசைகாட்டும் கருவி, அச்சுமுறை ஆகியவற்றை நீக்கிவிட்டால், பண்டை நாகரிகத்தில் உருவான எழுதும் கலையை நீக்கிவிட்டால், வரலாற்றிற்கு முந்தைய அநாகரிகக் காலத்தில் சாதிக்கப்பட்ட மேய்ச்சல், உழவு, உலோகத் தொழிற்கலை ஆகியவற்றையும்கூட நீக்கிவிட்டால் அவர்கள் தொடக்க நிலைக்கே சென்றுவிடுவார்.

தொன்மைக்கால உற்பத்திக் கருவிகளுடன் தாம் தொன்மைக்காலப் பொருளாதார ஒழுங்கமைவு தோன்றியது. அத்துடன் தொன்மைக்காலக் கருத்து நிலையும் தோன்றியது. இவ்விசயம் தொன்மைக்காலத்தவர்கள் முட்டாள்கள் என்று பொருள் தருவதில்லை. ஆஸ்ரேலியப் பழங்குடிகள் மண்பாண்டக் கலையும் உழவையும் அறியாதவர்கள். ஆனால் ‘பூமராங்’ என்ற வேட்டையாடப் பயன்படும் வளரித்தடியை உருவாக்குவதற்குப் போதுமான அளவு அறிவாளிகள். தொன்மைக் கால மெலனேசியர்கள் உலோக வேலைகள் உள்ளிட்ட சிலவற்றை அறியாதவர்கள். ஆனால் மண்பாண்டக் கலை, படகு கட்டுதல், மீன்பிடித்தல், தோட்ட வேளாண்மை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்தப் பழங்குடிகள் எவற்றைச் செய்தார்களோ, அவை பற்றிய அறிதலில் போதுமான அளவு பகுத்தறிவுடன்தான் செயற்பட்டார்கள்.

நற்பேற்றின் இயற்கையாற்றலைத் தன்வயப்படுத்து வதிலிருந்து பழங்குடி சமூகத்தின் தனிச்சிறப்புள்ள கருத்துநிலை தொடங்குகிறது. காலநிலை, பயிர்ப் பெருக்கம், விலங்குகள் முதலானவற்றின் செயற் பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்வடிவமாக மந்திரம் முக்கிய இடம்பெற்றது. ஆனால் பழங் குடிகள் மந்திரத்தைக் ‘கட்டுப்படுத்துதல்’ என்ற சொல்லின் உண்மையான சொற்பொருள் அடிப் படையிலான செயல்படாகச் செய்யவில்லை. அவர் களின் உற்பத்திச் செயல்முனைவில் விருப்பச் செயல் பாட்டின் மூலம் தாக்கம் ஏற்படுத்துவது என்ற வகையில் மந்திரத்தின் பொதுவான வடிவம் “ஒத்தியைகின்ற” மந்திரமாக இருந்தது. அவர்கள் இனம் பெருகுவதற்குப் பாடல், நடனம் ஆகிய வற்றினால் நடித்துக் காட்டி கூட்டுவிருப்பமாக்குவர். அவர்கள் மழையையும், இடியையும் உருவாக்குவதற்கு ‘எருது - முழுங்கி’ என்று அழைக்கப்படும் கருவியைச் சுழற்றுகின்றனர்; முரசை முழக்குகின்றனர்; தண்ணீரைப் பொழிகின்றனர்.

இளையர்கள் பழங்குடியின் முழு உறுப் பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ‘இறந்து - பிறத்தல்’ என்றொரு மந்திரச் சடங்கு நிகழ்த்தப் படுகிறது. இவ்வாறு மிகப் பெரும்பாலான தொல் சமூகங்கள் மந்திரத்தை மட்டும் கொண்டிருந்தனர். அவர்களிடம் சமயம் ஏதுமில்லை. “ஆஸ்திரேலி யாவின் பழங்குடிகள்” பலவற்றில் “மந்திரம் மட்டுமே எங்கும் பயல்வில் இருக்கின்றன. இவ்வாறிருக்க உயர்ந்த ஆற்றல் ஒன்றிடம் சரண்புகுதல், வழிப் படுத்துதல் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் சமயம் மிக அண்மைக் காலம்வரை அறியப்பட வில்லை” என்று பிரேசர் கூறுகிறார்.1 பழங்குடி உடைமையாயிருக்கும் உள்ளார்ந்த அறிவுடன் இணைந்த மந்திரம் மரபின் மூலம் வழிவழியாகக் கையளிக்கப்படுகிறது. இரண்டு தகுதிப்பாடுகள் பெற்றவுடன் விடலைகள் இளையர்களாக மறு கின்றனர். அவர்களுக்குச் சடங்கின் விளக்கம் தருக்கம் ஏதுமற்றுச் சொல்லப்படும் தொன்மங்கள் வழியாக அளிக்கப்படுகின்றது. குடியில் உறுப்பின ராகா ஆஸ்திரேலியப் பழங்குடிச் சிறுவர்கள் எருது - முழங்கியைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படு வதில்லை. ஆனால் அதன் ஒலி அணங்கு அல்லது முன்னோர் ஆவியின் குரல் என்று தொன்மம் வழியாகச் சொல்லப்படுகிறது. “மழை பொழி வதற்கும், புதியன துளிர்ப்பதற்கும்” காரணமான இடியை உருவாக்கும் மந்திரத்தைப் பயன்படுத்தக் கற்றறிந்தவர்கள் குடியின் உறுப்பினராக ஏற்கப்படு கின்றனர்.

இரோகுவோய் பழங்குடிகளிடையில் உள்ள ஒரென்டா, சியோப்ஸ் பழங்குடி களிடையில் உள்ள வாகண்டா, ஆல் கோங்வ் பழங்குடிகளிடையில் உள்ள மனிடோவ், மெலனேசியர்கள் இடையிலுள்ள மானா முதலானவை பல அநாகரிகப் பழங் குடிகள் மனிதர், விலங்குகள், செடிகொடிகள், உயிரற்ற புறப்பொருட்கள் ஆகியவை எந்தக் குலத்திற்கும் ஆற்றலை அளிக்கும் சொற்களை நல்குகின்றன என்று ஏற்றனர் என்பதைக் காட்டுகின்றன. ஆற்றல் அளிக்கும் ஆவியைக் குறிப்பிடும் பல சொற்கள் அவர்கள் ஒதுக்கவியலாத அவசியமான ஆளுமைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. இடிச் சுறாவளி, மலை, மரம், பறவை, கொடிய விலங்கு, ஆற்றல் வாய்ந்த மனிதர் ஆகியவற்றின் ஆற்றல்களை அச்சொற்கள் காட்டுகின்றன. “வாகண்டாவைக் கண்டவர் எவருமில்லை” என்று ஓமாகாப் பழங்குடி முதியவர் மானிடவியலாளரிடம் கூறியுள்ளார்.2 தொல்பொதுவுடைமைச் சமூகத்தில் மனிதரும் கடவுளாகக் கருதப்பட்டவையும் மிக அருகருகே தாம் இருந்தன.

தொல்குடிகளின் நடைமுறையாய் இந்த பழங்குடி மந்திரத்திலிருந்து நாகரிகச் சமூகத்தின் சமயம் தோன்றியது என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மந்திரத்தில் இருந்து பண்டை நாகரிகச் சமயங்கள் சில படி நிலைகள் ஊடே வளர்ச்சியடைந்துள்ளன. பழங்குடி மந்திரங்கள் சடங்குகளாய் மட்டுமே இருக்கின்றன; அவை வேண்டுதல்கள் அல்ல. நாகரிகச் சமயங்களில் மனிதருக்கு அப்பாற்பட்ட ஆற்றலிடம் அதாவது கடவுளிடம் வேண்டுவதின் பகுதியாய் சடங்கு மாறுகின்றது. இதுதான் மந்திரத்திற்கும் சமயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. முக்கியமானவற்றைப் புறக்கணித்து விட்டு அடையப்பட்டுள்ள இந்த முடிவின் வாயிலாக மந்திரத்திலிருந்து சமயம் தோன்றிய மிகப்பெரிய படிமலர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு வாய்ப் பேதுமில்லை.

மந்திரத்திலிருந்து சமயம் தோன்றுவது தொல் பொதுவுடைமையிலிருந்து வர்க்கச் சமூகம் தோன்று வதுடன் தொடர்புகொண்டுள்ளது. மிகப் பெரும் பாலான தொல்குடிகளில் ஆட்சியாளர் என்ற தனியான வர்க்கம் ஏதுமில்லை. அச்சமூகங்களின் அலுவல்கள் மூத்தவர்களால் ஒழுங்கு செய்யப்படு கின்றது. ஒரு மூத்தவர் இறந்துவிட்டால், அடுத்த வயதான மூத்தவர் வருவார். ஆனால் உற்பத்திக் கருவியின் சில வளர்ச்சிகளுடன் இந்தச் சமூகங் களில், குறிப்பாக மெலனேசியப் பழங்குடிகளின் உபரிஉணவு உற்பத்தியில் ஈடுபடாத பூசாரிகளிடம் சென்றடைந்தது. அவர்களுக்கு இந்த நல்வாய்ப்பு பலியிடுதல் வழியாகக் கிடைக்கத் தொடங்கியது. விரும்பியதை அடைந்த பிறகும் ‘மானா’விற்கும் இயற்கை ஆற்றலைக் குறிக்கும் (மெலனேசியப் பழங்குடிக் கடவுள்) ஒரு பங்கை ஒதுக்கினர். இதைத்தான் “சமூகப் படிமலர்ச்சியில் மிகப் பழைய தொழில்திறனாளர்களாகவும், கலைத் திறனாளர்களாகவும் பூசாரிகள் அல்லது மருத்து வர்கள் (நோய்தீர்ப்போர்) விளங்கினார்கள்” என்று எடுத்துரைத்துள்ளார் பிரேசர்.3 “எந்தவொரு பெரிய பூசாரியைச் சுற்றியும் அவனுடைய வேட்டைகள் அல்லது கொலைகள், கைப்பற்றல்கள், வெற்றிகள், காதல் விளையாட்டுகள் பற்றிய கதைப் புனைதல்கள் ஒளிவட்டமாய் எழுந்தன” என்று மலினேவ்ஸ்கி கூறுகிறார்.4 இயற்கை மீதான ஆற்றலுக்காகப் பழங்குடிகள் அவனுக்குக் கடன்பட்டனர்; அல்லது நல்வாய்ப்பின் தொடர்ச்சியால் அவன் இயற்கை ஆற்றலாகவே பழங்குடிகளுக்குத் தெரிந்தான்.

பூசாரியின் ஆற்றல் பற்றிய பொய்மை குலக் குறி முறையுடன் இணைந்த பழக்கவழக்கங்கள் மூலம்தான் வலிமை பெறுகின்றது. ஒவ்வொரு குலமும் தம் இனப்பெருக்கத்திற்கு - இதற்கு அதனுடைய குலக்குறியும் பெருக வேண்டும் - தமக்குரிய மரபார்ந்த மந்திரத்தைப் பயன்படுத்து கிறது. அதனால் அக்குலத்தினுடைய குலக்குறி உண்பவற்றிலிருந்த விலக்கப்படுகின்றது. இவ்வாறு பிற குலங்களின் குலக்குறி விலக்கப்படுவதில்லை. ஒரு குலக்குறியிலிருந்து தாம் தோன்றியதாக ஒரு குலம் சொல்லிக் கொள்கிறது. அதன் குலக்குறி மீதான விலக்குதலை மீறினால் தொடர்ந்து கொடிய விளைவுகள் ஏற்படும் என்று உறுதியாக நம்பப் படுகிறது. குலக்குறி என்பதற்கும் குலம் என்பதற்கும் அமெரிக்கத் தொல்குடிகள் ‘ஊடயn’ என்ற ஒரே சொல்லைத்தான் பயன்படுத்துகின்றனர். பூசாரி குலக்குறி விலங்கைப் போன்று வேடமிட்டு சடங்கு களை ஆற்றும் பழக்கவழக்கம் குலத்தையும் மீறி அவன் குலக்குறியுடன் உணர்வளவில் தொடர்பு கொண்டுள்ளான் என்று குலத்தினரை நம்பச் செய்தது.

பூசாரிகளும், மருத்துவர்களும் முதன்முதலாகக் கடவுள் என்று கருதப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பண்டைய சமூகங்களில் குருமார்நிலையும், அரசநிலையும், தலைமைக் கடவுளும் ஒன்றாகவே இருந்தன. பழங்கால மனிதன், “கடவுள், வல்லமையான சூனியக்காரன் ஆகியோர் இடையில் துல்லியமான தகுதிநிலை வேறுபாடு” ஒன்றையும் காணவில்லை என்று பிரேசர் கருதுகிறார். இந்தப் பொருளில் தான் “அநாகரிக மக்களிடம் எல்லா வகைக் கடவுள்களும் இல்லை” என்று கூறினார்.5 பரம் பொருளைப் பற்றி ஆராயும் குருமார், அரசன், கடவுள் ஆகியோரைப் பின்னோக்கிப் பார்த்தால் மிகப் பழங்காலத்தில் பழங்குடி நலத்திற்கான பூசாரியும் அவனுடைய ‘மானா’வும் மட்டுமே இருப்பார்கள்.

முதிராநிலை வர்க்கம் சமூகத்தில் ஆட்சி செய்தல் ஆபத்தான சூதாட்டமாக இருக்கின்றது. எப்போதும் பூசாரியின் நல்வாய்ப்பு தொடரு வதில்லை. அவனுக்குத் தோல்விகள் தடைகளை எழுப்பின. சில தோல்விகள் வெற்றிகளால் சரி கட்டப்பட்டிருக்கலாம்; வேறு சில எதிரிப் பூசாரிகள் அல்லது சூனியக்காரிகளின் செயல்கள் என விளக்கப் பட்டிருக்கலாம். ஆனால் விரைவாகவோ, காலம் தாழ்ந்தோ பெரும்பாலும் நிகழும் கெடுவாய்ப்பு களால் பூசாரிகளின் உரிமைகள் முடிவுக்கு வந்தன. இந்நிலையை அடைந்த நாள் பூசாரியின் கெட்ட நாள். அவன் அவமதிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவான் அல்லது தற்கொலைக்குத் தள்ளப்படுவான். சண்டையிட்டுத் தோற்கடிக்கப் படுதல், கொல்லப்படுதல், அரியணை பறிக்கப் படுதல் என்று எப்போதும் அவன் நிலை எதிர்ப்புக் குள்ளாகியது. “எவனொருவன் கொலை செய் கிறானோ, தற்கொலை செய்ய வைக்கிறானோ அவன்தான் குருமார் ஆவன்” என்பது வழிபாட்டிடம் பற்றி இலத்தீனில் புகழ்பெற்ற பழமொழி. அரசனைக் கொல்கிறவனுக்கே அரசன் நன்றிகடன்பட்டவன் என்பது வங்காளியில் சாதாரண வழக்கு மொழி.

வோண்மையில் தொல்தொழில்நுட்பம் முக்கிய இடம்பெற்று மிகவும் போற்றப்பட்டது. வேளாண்மை வளர்ச்சியுடன் கூடவே பூசாரிகளின் மதிப்பும் பெருகியது. அதே வேளை வெற்றிப் புகழும், தோல்வி அவமதிப்பும்கூடப் பெருகின. இக்காலத்தில் தந்தைவழி முறைமையின் இயல்பு நன்கு அறியப் பட்டதே. வேளாண் வளர்ச்சிக்கு (அதாவது வேளாண் நில விரிவாக்கத்திற்கு) பழக்கப்பட்ட விலங்குகள் தேவைப்பட்டன. பண்ணை விலங்குகளின் தேவை யானது தந்தைவழி முறை மடமையைப் பிழைத் திருக்க உதவியது. இப்போது ‘வளம்பெருக்கும் அரசன்’ ஆன தலைமைப் பூசாரியின் ஆண்மை ஒத்திசைவாகுகிற மந்திரக் கோட்பாட்டின் படி நிலவளத்தைப் பெருக்குவதற்குத் துணை செய்வதாக நம்பப்பட்டது. ஆனால் தோல்வியடைந்த வளம்பெருக்கும் அரசன் ஆற்றல்கள் எதற்கும் பயன்படாது. தோல்வியடைவதைவிட எத்தோப்பியா மக்களிடமும், இந்த நவீன காலத்திலும்கூட நைல், கங்கோ பகுதி மலைகளில் வாழும் பழங்குடிகளிடையேயும் நிகழ்வது போன்று அவன் கொல்லப்படுவது அல்லது தற்கொலை செய்துகொள்வது நற்பயன் விளைவிக்கும். அதாவது அவன் இறந்த பின்னால் அவன் ஆற்றல் நிலத்திற்குச் செல்வது உறுதி என்று நம்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலும் தென்னிந்தியாவின் சில பகுதி களிலும் இந்த நவீன காலத்திலும்கூட குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் வளம்பெருக்கும் அரசன் கொல்லப்படுதல் பழக்கவழக்கமாக ஆட்சி பெற்றுள்ளது. எகிப்தில் ஒசிரிஸ், செமிடிக்கில் தாமுஸ், கிரேக்கத்தில் டையோன்சிஸ், வட பகுதியில் ஓடின் முதலான கடவுள்களைப் பற்றி வெகுமக்கள் மரபில் குறிப்பிட்ட காலப் பகுதியில் அம்மக்களுக்காகக் கடவுள்கள் இறந்து, பின்பு மீண்டும் பிறக்கின்றனர் என்று சொல்லப்படு கின்றது.

வர்க்கச் சமூக எழுகையுடன் தலைவர்களின் நடத்தைகள் நெறிபிறழத் தொடங்கின. மேய்ச்சலும் பிந்தைய வேளாண்மையும் உருவாக்கிய உபரி உணவு தொல்குடி அமைப்பை அகற்றியது. அடி மைகள் தோன்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது (அடிமைகளை “மனித மந்தைகள்” என்று எங்கெல்ஸ் எடுத்துரைத்துள்ளார்)6. பின்பு தலைவர்கள் சொத்துகளை உடைமையாக்கிக் கொள்ளுதல் எளிதாக நடந்தேறியது. பணக்காரர்களாகவும், அதிகார ஆற்றல் உடையவர்களாகவும் தலைவர்கள் மாறினார்கள். இருப்பினும் அவர்கள் தோல்வி யடைதலையும் எதிர்பார்த்தனர். அவ்வாறு தோல்வி யடைந்தால் முதலில் இறந்து, பின்பு மீண்டும் குலமக்களிடையில் வாழ முடியும் என்றும் நம்பினர். ஒரு தலைவன் வீழ்ச்சியடையும் நேரம் அவன் இறக்கும் காலம் என்று நமக்குத் தெளிவா கின்றது. இதற்குப் பின்தங்கிய சமூகங்களிலிருந்து நமக்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன.

கி.மு.300-இல் எத்தியோப்பியாவின் அரசனாக இருந்த கிரேக்கக் கல்வி பெற்ற டையாடோருஸ் பழக்கவழக்கத்தின்படி மதகுருவை தற்கொலை செய்துகொள்ளுமாறு பணித்தான். போர்ச்சுகீசிய வரலாற்று அறிஞரை மேற்கோள் காட்டி பிரேசர் பின்வரும் செய்தியைக் கூறுகிறார். கப்பிர் அரசன் மதகுருவின் முன்பல்லை உடைத்து அவமதித்து தற்கொலை செய்து கொள்ளுமாறு ஆணையிட்டான். அவனுக்குப் பின்வந்த வெற்றியாளர்களும் அவனுடைய முன் மாதிரியைப் பின்பற்றினர். பொதுவாகத் தலைவன் தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதற்குத் தன் மகன் (மகன்தான் சிறந்த பலிப்பொருள்) அல்லது அடிமை அல்லது அறியப்படாத யாரோ ஒருவனைப் பலியிட்டான்.

உண்மையாகவே இம்மனிதப் பலியிடல் முதல் நாகரிகங்களின் தொடக்க காலத்தில் நடந்தது. முதல் நகர்ப்புறப் புரட்சிக்குப் பின்னர், அதாவது பெருந்தொகையான மக்கள் கி.மு.3000த்திலிருந்து எகிப்து, மெசோபோடமிய நகரங்களில் வாழத் தொடங்கிய பின்னர் தோன்றிய நாகரிகங்கள் மத்திய கிழக்கு நாகரிகங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. வெற்றி பெற்ற முடியரசு மரபு களால் நகரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு தான், சிந்தனைத் திறனற்றவர்களாய் இருந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இந்த மூடநம்பிக்கை மிகுந்த செயல் நடைபெற்றது. ‘தெய்வீக அரசன்’ என்னும் கட்டுக்கதையைக் காப்பாற்றுவதற்கு, சில நாள் அரசனாக நடத்தப்பட்டு ஒருவன் பலியிடப் பட்டான். பண்டைய எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய தங்கள் முன்னோரின் பழக்கத்தைப் பின்தொடர்ந்த பரோக்கள் ‘வளம்பெருக்கும் ஆவி’ ஆன ஒசிரிஸாக ஒருவரை நடத்தி பலியிட்டனர். ஒசிரிஸாகக் கருதி பலியிடப்பட்ட அவன் அங்கு ஒசிரிஸாகவே போற்றப்படுவதையும் பரோக்கள் தடை செய்யவில்லை.

ஆண்டுக்கொரு முறை பாபிலோனில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதி அரச உடைகள் அணிவிக்கப்பட்டு, அரசனாகவே நடத்தப்பட்டு, ஐந்து நாட்கள் அரசனுடைய காமக் கிழத்தியருடன் மகிழ்ந்திருக்கவிட்டு பின்பு துன் புறுத்தப்பட்டுக் கொல்லப்படுவர். முன்பெல்லாம் மெக்ஸிக்கோவில் ஸ்பானிய போர்க்கைதி ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனை ஓராண்டிற்குக் கடவுளாக அலங்கரித்து, வழிபட்டு, விருந்தளித்து, அவன் மூலம் அருள்பெற்ற குழந்தைகள் பெற்றுக் கொண்டு, நோய்களைத் தீர்த்துக்கொண்டு பின்பு வசந்த காலத் திருவிழாவில் கொல்லப்பட்டு உண்ணப் படுவான். வர்க்கச் சமூகம் வளர்ச்சியடைந்ததின் வாயிலாகச் சிறப்புரிமைகளைப் பெற்ற பிறகு, அதற்காகப் பலிபீடத்திற்குக் கழுத்தை நீட்ட வேண்டிய அல்லது நீட்டச் செய்ய வேண்டிய தலைமைப் பூசாரியின் பொறுப்புகள் ஏதுமற்று உயர்ந்த ஆற்றல் உடையவனாகச் சிறப்புரிமைகளை அரசன் அனுபவித்தான்.

கடவுளுக்கும் அவருடைய தற்காலிகப் பிரதி நிதிக்கும் உள்ள வேறுபாட்டைப் பழங்குடி நலத்தின் பொருட்டு நீக்குவதற்காகவே தலைமைப் பூசாரியையும் பிற்காலத்தில் தலைமைப் பூசாரிக்கான பதிலாளையும் கொல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஆற்றல் வாய்ந்த ஒரு பூசாரி தேவைப்படும் நேரத்தில் மழையைப் பொழியச் செய்து, உணவு உற்பத்தியைப் பெருக்க முடிந்தால் அவன் எல்லோரையும்விட வலிமை யானவன் என்று ஏற்கப்படும். அதே வேளையில் தோல்வியடைந்தால் பூசாரித் தலை துண்டிக்கப்பட்டு வலிமையற்றவன் என்பதும் மெய்ப்பிக்கப்படும். நேற்று வெற்றி பெற்று, இன்று தோற்கும் பூசாரி மழைக்கும், உணவுப் பெருக்கத்திற்கும் உரிமை யுடையவன் இல்லை. மிக முற்பட்ட வீரயுகத்தில் பழங்குடி மூதாதைகளான மிகச் சிறந்த பூசாரிகள் யாவரும் வியக்கும் வண்ணம் மந்திரம் செய்தனர். அவர்கள் முன்னிருந்த வெற்றியாளர்களிடமிருந்து ஆற்றலைப் பெற்றனர். அவர்கள் வெற்றிபெறும் போது மூத்தோர் ஆவி அவர்களிடமிருக்கின்றது; தோற்றுவிடும்போது மூத்தோர் ஆவி பிறிதொரு வனிடம் சென்றுவிட்டது என்று பொருள். இந்த இடத்தில் குறைந்தபட்சம் மனிதர் அல்லது தோற்றால் செத்துப்போகும் தலைமைப் பூசாரி அல்லது பூசாரியாகக் கருதப்பட்ட மனிதர் ஆகியோரிட மிருந்த ஒரு பகுதி ஆற்றல்தான் கடவுள் என்று நாம் அறிந்துகொள்கிறோம்.

ஓர் எடுத்துக்காட்டு, என்றும் அழிவில்லாத நிரந்தரமான எகிப்திய தேபன் மலைக் கடவுள் அமுன் கொம்புள்ள ஆட்டுக்கடாத் தலை கொண்ட மனிதனாகத் தீட்டப்பட்டுள்ளார். ஐயமின்றி தேபர்களின் தலைமைப் பூசாரிகள் ஆட்டுக்கிடா வேடமிட்டு தேபர்களின் மந்தைப் பெருக்கத்திற்குச் சடங்கு நடத்தியிருப்பார்கள். லுக்சரில் உள்ள கல்வெட்டில், பரோவுக்காக அரசியுடன் கூடி கருவுண்டாக்கும் அமுனின் உரிமையை பதினெட்டாம் தேபன் பரோ (சுமார் கி.பி.1550-1380) ஏற்றுக் கொண்டிருந்தான். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு கடவுளின் மகன் என்ற நன்றி பாராட்டுதலோடு எகிப்திய அரசுரிமைக்கான அலெக்ஸாண்டருடைய உரிமைக் கோரிக்கை அமுனின் குறி சொல்லலால் உறுதிசெய்யப் பட்டது. இந்த நவீன காலத்திலும்கூட இதே வழியில் நைல் நதி மலைகளில் வாழ்ந்த சில்லுக் பழங்குடியினர் தங்கள் அரசனின் நலத்தையும், வலிமையையும் பொருத்தே தங்கள் நிலையும் இருக்கும் என்று நம்பியும் அவர்களின் தலைவர்கள் நயாகங்களின் (முன்னோர்களின்) மறுபிறப்பு என்றும், தெய்வீக அம்சம் என்றும் ஏற்கின்றனர்.

மரபுக்குட்பட்டு அரசன் இறந்துபோன பிறகு அரசனின் தெய்வீக வழித்தோன்றல்களாக மகனையோ அல்லது நெருங்கிய உறவினரையோ ஏற்கின்றனர். இதே போல் நைல் பகுதி பழங்குடிகள் தங்கள் தலைவர்களுக்குள் மூதாதையர்களின் ஆவி வழி வழியாகத் தொடர்கிறது என்று நம்புகின்றனர். சுருக்கமாகக் கூறினால், கடவுள் தனியான தலைமைப் பூசாரியின் ஒரு பகுதியாகவும், குலத்தின் மறு உருவமாகவும், வரவிருக்கும் மிகச் சிறந்த தலைமைப் பூசாரியின் கருத்துருவாகவும், அநாகரிக அல்லது நுழைய நாகரிகச் சமூகத்தில் ஆட்சியாளராகவும் இருந்தார்.

அநாகரிகத்திலிருந்து நாகரிகம் தோற்றம் பெற்ற காலத்தில சமயம் முரண்பாட்டுக் கூறுகளின் கலவையாக இருந்தது. முதலாவதாக, சமயம் பழங் குடிப் பூசாரிகளின் நாகரிக எதிர்உருவமான குரு மார்கள் அல்லது அரசக் குருமார்கள் குலத்தின் முன்னேற்றத்திற்கும் உணவு உற்பத்திக்குமாக இயற்கை ஒழுங்கில் மேலாண்மை செய்வதற்குப் பழங்குடிகளின் சடங்கைக் கைப்பற்றிக் கொண்டதின் வெளிப்பாடாக இருந்தது. இரண்டாவதாக, சடங்கோடு தொடர்புடைய தொன்மங்களின் உருவமைப்பாக இருந்தது.

குருமார்களின் உண்மையான நம்பிக்கைகளின் தவிர்க்கவியலாத வெளிப்பாடாக இல்லாமல், வேறுபட்ட உள்ளூர் கடவுள்மரபுகளின் பரஸ்பர உறவுகள் ஒருங்கிணைப்பாக எகிப்திய இறையியல் விரிவாக்கம் பெற்றது. இதன் உண்மையான பொருள், எகிப்து ஒருங்கிணைக்கப்பட்டபோது குருமார்கள் வேறுபகுதி கடவுள்களை ஒவ்வொரு உள்ளூர்க் கடவுளின் பண்புக்கூறுகளோடு இணங் குவித்தனர் என்பதாகும். பதினெட்டாவது அரச மரபில் திபேஸ் எகிப்து தலைநகரான பிறகு, அதன் அமுன் கடவுள் ரே, ஹருஸ் ஆகிய கடவுள்களோடு கலந்து முதன்மைக் கடவுள் ஆனது. எகிப்திய உழவனின் கடவுள்களைப் பிற கடவுள்களோடு உறவுபடுத்திக் குருமார்கள் உருவாக்கிய மரபுப் பட்டியல் ஒரு பொருட்டே அன்று. அவர்கள் நீண்ட கால மரபுடைய சடங்கு வாயிலாகச் சூரியனையும், நைல் வெள்ளப் பெருக்கையும், விளைச்சலையும் கட்டுப்படுத்தி உற்பத்திப் பெருக்கை கைப்பற்றிக் கொண்டபோது எகிப்திய உழவன் தன் கிராமத்தில் உழைத்துஉழைத்து மடிந்து போனான்.

முதலில் எகிப்திலும், பின்பு பாபிலோனியாவிலும் நகர அரசினால் நாட்டின் ஒருங்கிணைப்பு நடந்து முடிந்தபோது, கோயிலின் ஆணையால் வேறுபட்ட நகரக் கடவுள்களின் ஒழுங்குபடுத்தலும் குருமார்கள் மூலம் முன் னெடுக்கப்பட்டது. சுமார் கி.பி. 2000-இல் பாபிலோன் தலைநகரமான பிறகு, அதன் கடவுள் மர்டுக்குடன் பிற கடவுள்களின் தொன்மங்களும் சடங்குகளும் இணைத்துக்கொள்ளப்பட்டது. மர்டுக் ஒளிக் கடவுளான பெல் - மர்டுக்காக மாறி கடல் பூதம் தியமெட்டை வென்று அதனுடைய துண்டிக்கப் பட்ட உடல் உறுப்புகளிலிருந்து சொர்க்கத்தையும் பூமியையும் உருவாக்கி, தாவரங்களையும், விலங்கு களையும், மனிதரையும் படைத்தார். இந்தப் படைப்புத் தொன்மம் மிகப் பல நூல்களில் நமக்குக் கிடைக்கிறது.

பழைய மரபுக்கதைகளில் பாபிலோனியர்களின் மர்டுக் மட்டுமல்ல, இயா, (பாரசீக வளைகுடாவில் கடல் அலைகள் உட்புகுந் திருந்த காலத்தில்) இரிடுவின் கடவுள் ஆகியோரும் படைப்பாளராக இருந்தனர். இத்தொன்மங்கள் முதலாவதாகத் தொடக்கத்தில் பாபிலோனியாவில் குடியேறியவர்கள் யூப்ரடீஸ், டைக்ரடீஸ் ஆகிய வற்றின் சதுப்புநிலங்களைப் பண்படுத்தியதை நினைவுபடுத்துகிறது. இரண்டாவதாக, நீர்ப் பாசனத்திற்காகப் பகைவர்களுடன் போராடி இரத்தம் சிந்தியதின் எதிரொலிப்பான கதையாகவும் இருப்பது நமக்குத் தெரியவருகின்றது. மிக அதிக மான பழைய நாகரிகங்களில், குறிப்பாகப் பாபி லோனியாவின் பரந்த ஆற்றிடைச் சமவெளியில் ஆற்றுப்பாசனத்திற்காக இரத்தம் சிந்துதல் நிலை யான மிகப்பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து சென்றது. படைப்பு, இரத்தம் சிந்துதல் பற்றிய பாபிலோனியர் பழங்கதைகளின் தழுவல்கள் யூதர்களின் தொடக்க நூலில் (ஆதி ஆகமத்தில்) இருக்கின்றன.

கடவுள்கள் மண்ணுலகிலிருந்து விண் உலகிற்குச் சென்றுவிடுதல், விண்ணுலகம் கடவுளின் நிலையான வாழிடமாதல், கடவுள்கள் மனிதப் பண்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு மீஇயல்பு பெற்றவர்களாதல் ஆகியன பழைய சமயத்தின் குறிப்பிடத்தக்க எதிர்கால வளர்ச்சி மாற்றங்கள் ஆகும். தொன்மைக்காலக் கடவுள் பூமியில் மழையைப் பொழியவைத்தல், பழங்களின் விளைச்சலைப் பெருக்குதல், விளைநிலத்தை விரிவாக்குதல், கடலில் மீன்களை அகப்படச் செய்தல் ஆகிய செயல்பாடு களைச் சிறப்பாக மேற்கொண்ட மிகப்பெரிய, மிகச் சிறந்த பூசாரியாகத்தான் இருந்தார் என்று பார்த்தோம்.

பூசாரிகளின் கல்லறைகளிலிருந்து அவர்களின் இறப்பு, இறப்புச்சடங்குகள்பற்றி அறிகின்றோம். அவற்றிலிருந்து அவர்கள் தெய்வீகமானவர்களாகக் கருதப்படவில்லை என்று அறியமுடிகிறது. இயற் கையில் பிறப்பு, இறப்புச் சுழற்சியும் ஆண்டுதோறு மான பருவநிலை சுழற்சியும் நீண்ட கால ஆண்டுக் கணக்கிடுதலை மனிதருடைய வாழ்க்கைத் தேவை யாக்கியது. நாகரிக எழுகைக்குப் பிறகு துல்லிய மான காலக்கணக்கிடுதல் முறை அத்தியாவசிய மான தேவை ஆகிவிட்டது. காலக்கணக்கிடுதலுக்கு முதலில் நிலவின் இயக்கம் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. ஆண்டு முழுவதும் சூரியன் இயக்கத்தை விட நிலவின் இயக்கத்தை எளிதாகக் காணமுடியும். இவ்வாறு நாகரிக விடியலின் போது பொருளாதார வாழ்வில் நிலவு முக்கிய பங்காற்றியதால் நிலவுசார்ந்த நம்பிக்கைகள், கடவுள்கள் உருவாக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

பழங்காலத்தில் நாகரிகத் தொடக்கத்தின்போது நிலவோடு சேர்த்து அறியப்பட்ட எகிப்து தோத் கடவுள் தோற்றத்துடன் நிலவுசார் காலக்கணக்கிடுதல் நெருக்கமாய்த் தொடர்பு கொண்டிருந்தது. தோத் கடவுள் உலகைப் படைத்தவர் என்று கதை சொல்லப்பட்டது. நாட்காட்டியும் எழுதும் கலையும் கண்டுபிடிக்கப்பட்டதற்கு நிலவுக்குக் கடன்படுகிறோம். பாபிலோனிய நிலவுக் கடவுளான சின் அறிவின் கடவுள் என்று அழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் மிகுதியான ஓய்வுநேரம் குருமார்களுக்குக் கிடைத்ததால் சூரியனின் அசைவியக்கத்தைக் கவனித்து சூரிய ஆண்டுக் கணக்கை ஏறத்தாழத் துல்லியமாகக் கணக்கிட்டனர். அதற்குப் பிறகு நிலவுக் கடவுளின் முதன்மையைச் சூரியக் கடவுள் எடுத்துக் கொண்டது. அத்துடன் சமய உலகிலும் பழைய கடவுள்கள் சூரிய நம்பிக்கையில் இணைக்கப் பட்டு சூரியக் கடவுள் முதன்மைக் கடவுளாக மதிக்கப்பட்டது. இதன் விளைவுதான் எகிப்தில் தோத் கடவுள் கணக்காளராக மதிப்பிறக்கப்பட்டு, ரே-ஹருஸ் உயர்கடவுளாக மாற்றமடைந்தது ஆகும்.

இயற்கை மீதான குறிப்பிடத்தக்க மேலாண்மை பெறுவதற்குத் தேவையான சூரியனைச் சார்ந்த பருவநிலைமாற்றங்களைக் கண்டறிதல் நாகரிகம் நன்கு விரிவாக்கம் பெற்ற காலத்திலும் முழுமை யடையவில்லை. இருப்பினும், மரபார்ந்த மந்திரச் சடங்குகள் சமயம் சார்ந்து நிகழ்த்தப்பட்டதின் மூலம் அடையப்பட்ட கூட்டறிவு அதிகாரத்திற்கும், வரிவருவாய்க்கும் ஆதரமாய் இருந்தது. பண்டைக் காலச் சமயம் “அநேகமாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இடைவெளியில் வேறுபட்ட காலச் சிந்தனைகளின் இட்டுவைப்பான”7 (இத்துடன் நாம் வேறுபட்ட உற்பத்தித் தொழில்நுட்பங் களையும், சமூக உறவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்) மந்திரம், குலக்குறிமுறை, மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு, அறிவுநுட்பமுள்ள ஆனால் முன்னுக்குப்பின் முரணான தொன்மங்கள் ஆகியவற்றின் முரண்பாட்டுக் கலவையாக இருந்தது. மடிந்துபோகும் மனிதத்தன்மை வாய்ந்த பூசாரி, அவனுடைய பழங்குடிக்காக மழையைப் பொழிய வைத்தல், உணவைப் பெருக்குதல், குலத்தைப் பெருக்குவதற்காக அவன் குலக்குறி போன்று பாசாங்கு செய்தல், பழமரபு முன்னோர்களின் பயனுடைய கலைகள், மந்திரம் ஆகியவற்றின் வழித்தோன்றல் பூசாரி என்ற கற்பிதத்தை ஏற்றல், இவையெல்லாம் சேர்ந்து உருவாக்கிய இறுதிவிளைபொருளான கடவுள் ஆகிய செயல்திறனுள்ள மந்திரத்தின் முரண் கருத்தாக்கங்களோடு சமயம் இரண்டறக் கலந்தது.

உழைக்கும் வெகுமக்களின் நம்பிக்கை, ஆளும் வர்க்கத்தின் கருத்துநிலை ஆகியவற்றிடையேயான முரண்பாடுகள் விரிவடைதலின் துணையோடு சமயத்தின் வளர்ச்சி முன்சென்றது. அமுன், பிதா, ஆபிஸ், ஒசிரிஸ் ஆகிய கடவுள்கள் முழுவாழ்வின் ஆதரமான, (அவர்களுடைய காலத்தில்) அறிவு நுட்பமாகச் சூரியனோடு அடையாளப்படுத்தப் பட்ட தனி முழுமுதல் இருப்பின் வெளிப்பாட்டுப் பண்புக்கூறுகளின் எச்சங்களென எகிப்திய குரு மார்களே முதலில் பதிவு செய்தார்கள். அக்காலத்தில் பாரோ அகாமன்னான் (கி.மு. 1375 - 1388) திடீரென குருமார்களை ஒருபக்கமாக ஒதுக்கித்தள்ளி விடு வதற்கு முயன்றும், எல்லா வழிபாடுகளை ஒடுக்கியும் எளிமையாக சூரியனுடைய ஒளியையும், ஆற்றலையும் போற்றும் வழிபாட்டை நிறுவினான். இச்செயல் பாட்டின் மூலம் “மனிதர்களிடையே மன உளைச்சலை” ஏற்படுத்திப் பொதுமக்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் வலுவிழக்கச் செய்தான். வரலாற்று ஏடுகளில் குருமார்கள் அவனை வசைமாறி பொழிந்துள்ளனர். அவனுடன் அவனுடைய புரட்சியும் அழிவுற்றது.

குறிப்புகள்

1.     Frazer, Golden Bough, abridged edition, ch.IV.

2.     Alice Fletcher, cited by Jane Harrison, Themis, ch.III.

3.     Golden Bough, abriged edition, ch.VII. This may be true even of some palaeolithic societies. Gordon Childe cites the case of artist - magicians among Magdalenian cave dwellers. What Happened in History, chap.II.

4.     Malinowski, Magic, Science and Religion, V, 4.

5.     Golden Bough, abridged edition, ch.VII.Cf . Thomson : “The more advanced forms of worship develop in response to the rise of a ruling class -- hereditary magicians, priests, chiefs and kings... The idea of godhead spring from the reality of kingship; but in the human consciousness, split as it now is by the cleavage in society, this relations is inverted. The King’s power appears to be derived from God, and his authority is accepted as being the will of God.” Aeschylus and Athens, chap.I.

6.     Engels, The Origin of the Family, Private Property and the State, Chap.II.

7.     L.R. Farnell, Encyclopaedia Britannica, articals zeus.

அர்ச்பால்ட் ராபர்ட்சன்

தமிழில் : துரை.திருநாவுக்கரசு

Pin It