பேராசிரியர் ஆர். சம்பகலட்சுமி மறைந்து விட்டார் என்கிற செய்தியை நண்பர் சு. அருண்பிரசாத் கடந்த திங்கள் கிழமை (29.01.2024) அன்று முற்பகலில் தெரிவித்தார். கேட்டவுடன் வருத்தமாக இருந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையில் நெருக்கமான பழக்கம் எதுவுமில்லை. ஆயினும் புலமை உலகிற்கு அவருடைய மறைவு ஏற்படுத்தியுள்ள இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதால் வருத்தம் அடைந்தேன். இரண்டொரு முறை நேரில் பார்த்துள்ளேன். அவருடன் உரையாடியதில்லை. ஆயினும் அவர் பிறருடன் உரையாடும் போது கூர்மையாகவும் கவனமாகவும் கேட்டு, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்துள்ளேன். தமிழ்நாட்டுச் சமூக - சமய வரலாறு குறித்த ஆர்வமுடைய மாணவன் என்ற வகையில், அவர் எழுத்துகளை ஓரளவு வாசித்துள்ளேன்.

பேராசிரியர் ஆர். சம்பகலட்சுமி 92 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார். அவருடைய பெருவாழ்வு கொண்டாடுவதற்குரியது. அவருடைய புகழ் தென்னிந்திய, குறிப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வில் என்றும் நிலைத்து நிற்கும். இப்படிப்பட்ட பேராசிரியர் மறைந்த பிறகு, பெரிய அளவில் அஞ்சலி செய்திகள், குறிப்புகள் வெளியாகவில்லை என்பது வியப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கை குறித்த குறிப்புகள்கூட நூல் ஆசிரியர் குறிப்பு என்கிற அளவில்தான் கிடைத்தன.

prof r shenbalakshmiஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் ஆர். சம்பகலட்சுமி. இவருடன் பிறந்தவர்கள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் ஆர். ஜெயலட்சுமி; நாணயவியல் ஆய்வாளர் ஆர். வனஜா (இந்தச் செய்திகளை இணையத்தில் ந. கணேசன் பகிர்ந்திருந்தார்). அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். அங்கே 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்டைய வரலாறு - தொல்லியல் துறையில் விரிவுரையாளராக 1961 முதல் 1972 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தில் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார். பல்வேறு முக்கியமான வரலாற்று ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்குபெற்று, கட்டுரைகள் வாசித்துள்ளார். தலைமையேற்று நடத்தியுள்ளார். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து தலைசிறந்த வரலாற்று ஆய்வுநூல்களைத் தாய்மொழிகளில் வெளியிடும் திட்டத்தில் தமிழ் வெளியீட்டு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். அந்தத் திட்டத்தில்தான் டி.டி. கோசம்பி (பண்டைய இந்தியா அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு), ஆர்.எஸ். சர்மா (இந்திய நிலமானிய முறை : சுமார் கி.பி. 300-1200; பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் - சில தோற்றங்கள்), சுவீர ஜெய்ஸ்வால் (வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் : வைணவம் கி. பி. 300 லிருந்து கி. பி. 500 வரை), இபின் ஹஸன் (முகலாயப் பேரரசின் மைய அமைப்பு : 1657 வரையில் அது நடைமுறையில் செயல்பட்ட விதம்), ஸய்யத் நூருல் ஹஸன் (முகலாய இந்தியாவில் நில உடைமை உறவுகளைப் பற்றிய அபிப்பிராயங்கள்) முதலான தலைசிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்களுடைய எழுத்துகள் தமிழில் வெளிவந்தன. இவர்களுடைய எழுத்துகள் தமிழில் வரலாற்று அறிவியல் நோக்கை உருவாக்குவதிலும், சமூக வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்வதிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தின என்பது வெளிப்படை. ஆயினும் பேராசிரியர் சம்பகலட்சுமி அவர்களுடைய எழுத்துகள் மிகமிக காலம் தாழ்ந்தே தமிழில் வந்தன.

சண்பகலட்சுமி தமிழ் ஆய்வுலகத்தையும் - ஆங்கில ஆய்வுலகத்தையும் நன்கு அறிந்தவராக இருந்தார். அவர் எந்த அளவுக்குத் தமிழில் வெளியான சீரிய வரலாற்று ஆய்வு நூல்களைக் கவனித்தார் என்பதை, ரோஜா முத்தையா நூலகத்திற்கு அவர் வழங்கியுள்ள நூல் சேகரிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதினார். அவர் வரலாற்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட காலத்தில், மார்க்சிய வரலாற்று ஆய்வு முறையியல் கல்வித்துறை முறையியலாக ஏற்பு பெற்றுவிட்டது. அம்முறையியலில் பயிற்சிபெற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், கல்விப்புல வரலாற்று ஆய்வுகளில் முக்கியமானவர்களாகத் திகழ்ந்தனர். பேராசிரியர் சம்பகலட்சுமி எவ்வாறு மார்க்சிய ஆய்வுமுறையில் ஈர்க்கப்பட்டு, பயிற்சி பெற்றார் எனத் தெரியவில்லை. ஆனால் இன்று கிடைக்கக் கூடிய அவருடைய எழுத்துகள், மார்க்சிய சமூக வரலாற்று ஆய்வு முறையில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் புலமையையும் காட்டுகின்றன. மார்க்சிய சமூக வரலாற்று ஆய்வு முறையியலைத் தமிழ்நாட்டுச் சமூக வரலாற்று ஆய்வுகளுக்குச் செம்மையாகப் பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் பண்டைய - இடைக்கால நகரமயம் குறித்த ஆர்.சம்பகலட்சுமி அவர்களுடைய ஆய்வுகள் மிக ஆழ்ந்த வாதவிவாதங்களைக் கோருகின்றன. தமிழகத்து நகர உருவாக்கம் பற்றிக் கோட்டுப்பாட்டுவகையில் மிக விரிவாக, ஆழமாக ஆராய்ந்தவர். இவர் தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்க கால நகர உருவாக்கம் (கி.மு.3நூ.-கி.பி.3நூ.), முன்னிடைக்கால நகர உருவாக்கம் (கி.பி.6நூ.-கி.பி.13) என நகர உருவாக்கத்தின் காலகட்டங்களை வகைப்படுத்துகிறார். மேலும் அவர் முதல்நிலை நகர உருவாக்கம், இரண்டாம்நிலை நகர உருவாக்கம் எனவும் நகர உருவாக்கத்தின் இயல்பின்படியும் வகைப்படுத்துகிறார்.

‘முதல்நிலை நகர உருவாக்கம்’ என்பது மிக நீண்ட காலமாக நடைபெறும் உள்ளார்ந்த சமூக மாற்றங்களால் அரசு, சமயம் முதலான பண்பாட்டு நிறுவனங்களுடன் உருப்பெறும் நகர உருவாக்கம் ஆகும். இந்த முதல்நிலை நகர உருவாக்கத்தின் செல்வாக்கால் விளையும் நகர உருவாக்கமே ‘இரண்டாம்நிலை நகர உருவாக்கம்’ ஆகும். வரலாற்றுத் தொடக்க காலத் தமிழகத்தில் நடைபெற்ற நகர உருவாக்கம் கங்கைச் சமவெளியுடனும் ஆந்திராவுடனும் தரைவழி வணிகத்தாலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளுடனான கடல்வழி வணிகத்தாலும் உருவான ‘இரண்டாம்நிலை நகர உருவாக்கம்’ எனக் கருதுகின்றார். இந்நகர உருவாக்கம் தமிழகத்தில் உள்ளார்ந்து நடைபெற்ற மாற்றங்களால் அல்லாமல், கிரேக்க வணிகம் ஏற்படுத்திய ‘வியப்பூட்டும் வகையிலான மாற்ற’த்தால் ஏற்பட்ட ‘நகர்புறப் புரட்சி’ எனக் கூறுகின்றார்.

தக்காணத்தில் ஏற்பட்ட நகர உருவாக்கமும் ‘இரண்டாம்நிலை நகர உருவாக்கம்’ என்றாலும், அதற்கும் பண்டைய தமிழகத்து ‘இரண்டாம்நிலை’ உருவாக்கத்திற்கும் வேறுபாடு காண்கிறார். “எவ்வாறாயினும், தக்காணத்து சாதவாகனர்களைப் போன்றல்லாமல், இந்த [பண்டைய தமிழகத்து] இரண்டாம்தர நகர உருவாக்கத்தின் வளர்ச்சி, ‘இரண்டாம்நிலை அரசு உருவாக்க’த்தோடு கொஞ்சம்கூட தொடர்புடையதாகத் தெரியவில்லை; இப்பகுதி தக்காணம், ஆந்திரப் பகுதிகளைவிடக் குறைந்த அளவே மௌரியப் பேரரசின் அரசியல் பண்பாட்டுச் செல்வாக்குக்கு ஆட்பட்டது. வேறுவிதமாகச் சொன்னால், அயல் தாக்கத்தால் உருவான நகரத் தோற்றத்தில், அத்துடன் தொடர்புடைய அரசியல்போக்கு தொழிற்படவில்லை; அடிப்படையான உருமாற்றம் எதுவும் நிகழவில்லை. பண்டைய தமிழ்ச் சமூகம், அதனுடைய இனக்குழுப் பண்புகளிலிருந்து விடுபட்டு, முழுநிறைவான அரசு அமைப்பு சார்ந்த சமூகமாக மலரவில்லை” என்பது ஆர்.சம்பகலட்சுமியின் கூற்று(2010:16). மேலும் நகரமயம் குறித்த ஆய்வுகளில் கி.பி. 4ம் நூற்றாண்டு வாக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் - சீனாவுடன் ஏற்பட்ட வணிகத் தொடர்பால் காஞ்சி நகரம் எழுச்சியுறுவதை மிக முக்கியமான அம்சமாக எடுத்துக்காட்டுகின்றார். இது இந்திய வரலாற்றில் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் நகரமய வீழ்ச்சி என்பதற்கு மாறான போக்கு ஆகும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

நகரமயத்துடன் தொடர்புடைய வணிகம், சமயம், கருத்துநிலை, மரபுத்தொடர்ச்சி குறித்தும் ஆழ்ந்த வாதவிவாதங்களைக் கோரும் ஆய்வுகளைச் செய்துள்ளார். எவ்வாறாயினும், மார்க்சிய சமூக வரலாற்று ஆய்வு முறையியலைப் பேராசிரியர் ஆர். சம்பலட்சுமி பயன்படுத்திய போதிலும், தேசியவாத வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொண்ட பல நோக்குகளையும் ஆய்வு முடிவுகளையும் கேள்விக்குட்படுத்தாமல், தொடர்ந்து இறுகப் பற்றி இருந்தார். அதன் விளைவே மேற்கூறிய தமிழ்நாட்டுப் பழம் வரலாற்று உருவாக்கத்தை “இரண்டம்நிலை”­யினதாகக் கருதிய கோட்பாட்டுச் சிந்திப்பு ஆகும். மேலும் வேளிர்கள் பற்றிய தொன்மக் கதையை வரலாற்று உண்மைத் தரவாகத் தேசியவாத வரலாற்று ஆசிரியர்கள் பாவித்ததுபோலவே, இவரும் பாவித்தார். இதனால் அவருடைய சமூக வரலாற்று ஆய்வுகள் எந்த விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவை ஆகமாட்டா. தமிழ்நாட்டு அவைதிக - பக்தி மரபுகள், இடைக்கால நகர உருவாக்கங்கள் ஆகியவை குறித்த தலைசிறந்த, முக்கியத்துவமிக்க, ஆழ்ந்து கற்கவேண்டிய ஆய்வுகளை விட்டுச்சென்றுள்ளார்.

எங்களுடைய பேராசிரியர் இரா. சீனிவாசன் அவர்கள், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நல்கையுடன் மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையில் நடத்திய “மணிமேகலையில் சமயமும் மெய்­யியலும்” என்கிற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார் பேராசிரியர் ஆர். சம்பகலட்சுமி. அந்த உரை மிக முக்கியமானது. மணிமேகலையின் தத்துவ வாதம் சௌத்திராந்திக பௌத்த பிரிவைச் சாந்தது, பௌத்தத் தருக்கம் தமிழ்நாட்டில் உருவானது என்கிற கிருஷ்ணசாமி அய்யங்காரின் ஆய்வுமுடிவை நன்றாக வலியுறுத்திக் காட்டினார். அதன் சமூக வரலாற்றுப் பின்புல அமைவை, காஞ்சி நகர - அறிவுப் பண்பாட்டு உருவாக்கத்துடன் இணைத்து தெளிவுபடுத்தினார்.

தமிழ்நாடு சமூக வரலாறு குறித்த சீரிய ஆய்வுகளையும் உரையாடல்களையும் மேற்கொள்வது பேராசிரியர் ஆர். சம்பகலட்சுமி அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். அவருடைய எழுத்துகள் அனைத்தும் முறையாகத் தொகுத்துப் பதிப்பிக்கப்படுவதும், தமிழாக்கம் செய்யப்படுவதும் அவசியமான பணிகள் ஆகும்.

பேராசிரியர் ஆர். சம்பகலட்சுமி அவர்களின் நூல்கள்:

• 1981 Vaishnava Iconography. Orient Longman.
• 1996 Trade, ideology, and urbanization: South India 300 BC to AD 1300. Oxford University Press.
• 2001 The Hindu Temple, Roli, Delhi.
• 2011 Religion, Tradition, and Ideology: Pre-colonial South India. Oxford University Press.

- க.காமராசன்

Pin It