தமிழகத்தின் தலைசிறந்த ஆராய்ச்சிப் பேரறி ஞராக விளங்கிய மயிலை. சீனி. வேங்கடசாமியின் அனைத்து நூல்களையும் கட்டுரைகளையும் தொகுத்து 5811 பக்கங்களில் 20 தொகுதிகளாகப் பேராசிரியர் வீ. அரசு தொகுத்தளித்துள்ளார். இத்தொகுதிகளைத் தமிழ்மண் பதிப்பகம் அழகிய முறையில் வெளிக்கொணர்ந்து உள்ளது. மயிலை. சீனியின் நூல்களையும், கட்டுரைகளையும் முன்னர் வெளிவந்ததுபோல் அப்படியே வெளியீடாமல், பொருளுக்கும் உள்ளடக்கத்திற்கும் ஏற்றமுறையில் பகுத்துத்தொகுத்து வெளியிட்டிருப்பது அரிய முயற்சியாகும். ஏற்கனவே, பேராசிரியர் வீ. அரசு, மயிலை.சீனியைக் குறித்து ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை சாகித்ய அகாதெமிக்காக எழுதி வெளியிட்டுள்ள அனுபவத்தால், இதுகாறும் பலர் அறியாத கட்டுரைகளை எல்லாம் தேடித் தேடித் தொகுத்துத் தந்துள்ளார். மயிலை சீனியின் சொந்த வெளியீடுகளில் வெளிவராது, வெவ்வேறு வெளியீடு களில் வெளிவந்த கட்டுரைகளையும் இத் தொகுதி களில் சேர்த்திருப்பது சிறப்பிற்குரியது. இதனால், அவரது எழுத்துகள் அனைத்தையும் ஒருசேரப் படிக்கும் வாய்ப்பும், அவ்வெழுத்துகளைச் சரியாக மதிப்பீடு செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளன. மொத்த இருபது தொகுதிகளைப் பொருண்மைக் கேற்பப் பத்துத் தலைப்புகளில் பகுத்துத் தந்து உள்ளார். அவற்றைக் கீழே காணலாம்.

v arasu seeni venkatasamyI.பண்டைத் தமிழக வரலாறு

1. சேரர்- சோழர்- பாண்டியர் -பக் - 763

2. கொங்கு, பாண்டியர் - பல்லவர் இலங்கை வரலாறு -பக் - 512

3. களப்பிரர் - துளுநாடு -பக் - 253

II. பண்டைத் தமிழகம்

1. வணிகம் - நகரங்கள் - பண்பாடு -பக் 269

2. ஆவணம்- பிராமி எழுத்துகள்-நடுகற்கள் - பக் 200

III. பண்டைத் தமிழ் நூல்கள்

1. கால ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி -பக் - 448

IV. தமிழகச் சமயங்கள்

1. சமணம் - பக் 238

2. பௌத்தம் - பக் 263

3. கௌதம புத்தரின் வாழ்க்கை - பக் 176

V. தமிழில் சமயம்

1. பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் - பக் 240

2. புத்தர் ஜாதகக் கதைகள் - பக் 174

VI. தமிழகக் கலை வரலாறு

1. சிற்பம் - கோயில் - பக் 334

2. இசை- ஓவியம்- அணிகலன்கள் - பக் 269

VII. தமிழக ஆவணங்கள்

1. சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் - பக் 311

2. மறைந்துபோன தமிழ்நூல்கள் - பக் 334

VIII. தமிழ் இலக்கிய வரலாறு

1. கிறித்தவமும் தமிழும் - பக்- 142

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு - பக் 332

IX. தமிழியல் ஆய்வு

1. சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு - பக் 224

X. பதிப்பு - மொழிபெயர்ப்பு

1. நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிற - பக் 248

2. மனோன்மணியம் நாடகம் - பதிப்பு - பக் 381

மேலே குறிப்பிடப்பெற்ற பத்துப் பெருந் தலைப்புகளையும் அத்தலைப்புகளின் கீழே அவற்றை யொட்டிய நூல்களையும் தந்திருப்பதால், பொருளுக் கேற்பப் படிக்க நல்வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சமயத்தைப் பற்றி மயிலை. சீனி, என்ன எழுதி யுள்ளார், பதிப்பு மொழிபெயர்ப்பு ஆகியவற்றுள் என்ன செய்துள்ளார் என்பதைக் காண வேண்டு மாயின், எளிதாக, உடனே காண்பதற்கு அப்பெருந் தலைப்புகள் வழிகாட்டுதலாக உள்ளன; ஆராய்ச்சிப் பேரறிஞர் ச. வையாபுரிபிள்ளை அவர்கள் சங்க இலக்கியத்தைச் சங்கப் புலவர்களின் பெயர் வரிசையில் பகுத்துத் தொகுத்திருப்பார். அப்படித் தொகுத்திருப்பதால், நக்கீரர், கபிலர் போன்றோர் எந்தெந்த இலக்கியங்களில் பாடியுள்ளனர் என் பதையும், எத்தனை பாடல்களைப் பாடியுள்ளனர் என்பதையும் எளிதாக, உடனே பார்ப்பதற்கு அத்தொகுப்பு வழி செய்கிறது. தொகுப்பு முயற்சியில் இந்தப் பகுப்பு முயற்சியை முதன்முதலில் மேற் கொண்டவர் வையாபுரி பிள்ளையே ஆவர். அத் தொகுப்பைப் போன்று பேரா.வீ.அரசுவின் தொகுப்பும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் நன்கு துணை செய்யும்.

மயிலை சீனி, பன்முக ஆளுமை கொண்டவர்; அவர் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், தத்துவம், பண்பாடு, கலை, சிற்பம், இசை, ஓவியம், கல்வெட்டு, சாசனம், பதிப்பு, மொழிபெயர்ப்பு, செப்பேடுகள், சொல்லாய்வு எனும் பல தளங் களில் செயல்பட்டவர்; இவ்வாறு பல தளங்களில் இயங்கிய இவரைப் போன்று இயங்கிய வேறொரு வரைக் காண்பது அரிதினும் அரிதாகும். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பலர் சேர்ந்து செய்ய வேண்டியவற்றை அவர் தொடக்கப் பள்ளி ஆசிரிய ராக இருந்துகொண்டு ஒருவராகச் சாதித்தது தான் அவரது பெரும் சாதனையாகும். இத்தனை அருஞ் செயல்களையும் ஆரவாரமின்றி அமைதியாக அவர் நிறைவேற்றியது சிறப்புக்குரியது; இதில் அவர் “தமக்கு உவமை இல்லாதான்” என்றே கூறவேண்டும். அவரது ஒவ்வொரு நூலும் நீண்ட கால முயற்சியிலும் நேரிய ஆராய்ச்சிலும் வெளி வந்ததாகும். குறிப்பாக, அவரது சமணமும் தமிழும் என்ற நூல் 1954-இல் வெளிவந்தது; அந்நூல் அவரது பதினெட்டு ஆண்டுக்காலத் தொடர்ச்சியில் வெளிவந்ததாகும்; எழுதுவதற்கு மட்டும் நான் காண்டுகள் ஆகியுள்ளன. அந்நூலை எழுதியவுடன் வெளிக்கொணராததால், எழுதப்பட்ட தாள்கள் கரையான்களால் சிதிலமாக்கப்பட்டுள்ளன; பல தாள்கள் தொடர்ச்சி இல்லாமல் இருந்ததால் மீண்டும் ஆய்ந்து செப்பம் செய்து வெளியிட பல ஆண்டுகள் ஆகியுள்ளன; “வாழ்க்கைப் போருக் கிடையே பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுக்காலத்தைப் பயன்படுத்தி எழுதப் பட்டதாகும்” என்று அவர் குறிப்பிட்டிருப்பதைக் கண்டால் அவரது கடும் முயற்சியை ஒருவாறு உணரலாம்.

அவர் எழுதிய “மறைந்துபோன தமிழ் நூல்கள்” எனும் நூல் இத்தொகுப்பில் தமிழக ஆவணங்கள் எனுந் தலைப்பில் இடம்பெற்று உள்ளது. அந்நூல் மிக அரிய நூல்; தமிழிலக்கிய நெடுவரலாற்றில் பற்பல அரிய நூல்கள் நமக்குக் கிடைக்காமல் மறைந்துபோயுள்ளன. அந்நூல் களை யாப்பருங்கல விருத்தி உரையிலும் யாப் பருங்கலக்காரிகை உரையாசிரியர்களின் குறிப்பு களிலும், சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் உரையிலும் குறிப்பிடப் பட்டுள்ளன; அந்நூல்கள் எல்லாம் ஆராய்ந்து 333 நூல்களை மறைந்துபோன நூல்களாகக் குறிப் பிட்டுள்ளார். அவற்றில் அகப்பொருள், புறப் பொருள் பற்றிய இலக்கிய நூல்கள் 87, காவியம் மற்றும் சில வடிவங்களிலுள்ள நூல் 96, இசைத் தமிழ் நூல்கள் 13, நாடகத்தமிழ் நூல்கள் 22, இலக்கண நூல்கள் 107 என்று குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்நூல்களையெல்லாம் குறிப்பிட்டு, அவற்றின் ஆசிரியர்களையும் அந்நூல்களைப் பற்றிய குறிப்புகளையும் வரைந்துள்ளார். இந்நூல்களையெல்லாம் தமிழர் நினைவுகளிலிருந்தும், ஆராய்ச்சியிலிருந்தும் விடுபடாவண்ணம் அவர் ஆவணப்படுத்தியிருப்பது அரிய சாதனையாகும்.

இதனைப் போன்றே தமிழர்களிடத்தில் பழங் காலந் தொட்டுப் புழக்கத்தில் இருந்துவந்த சிற்பம், ஓவியம், கோயில், இசை, பண்மரபு, அழகுக் கலைகள் ஆகியன குறித்த அரிய செய்திகளையும், விளக்கங்களையும் தமிழகக் கலை வரலாறு எனுந் தொகுதியில் பரக்கப் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுகளையும் அவர் சிந்தாமல், சிதறாமல் முதன் முதலில் ஆவணப்படுத்தி உள்ளார். இதுவும் நிறை வான தொகுதியாகும். மயிலை.சீனி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அவரது ஆவண முயற்சியேயாகும். அவரே ஒரு சிறந்த ஆவண மாவார். மயிலையாரின் தலையாய முதன்மை யான பணியே ஆவண முயற்சிதான். இந்த ஆவண முயற்சியைச் சரியாக உணர்ந்தவராகப் பேரா. வீ.அரசு இருப்பதால்தான் நூல் தொகுப்புத் தலைப்புகளில் தமிழக ஆவணங்கள் என்று ஒரு பிரிவைச் சரியாக அமைத்துள்ளார். இப்படி அமைத்திருப்பது பேரா. வீ. அரசுவின் ஆய்வுத் திறத்தைக் காட்டுவதாகும். மற்றவர் தொகுத் திருந்தால் இப்பிரிவை அமைத்திருப்பார்களென உறுதியாகக் கூறமுடியாது.

மயிலை. சீனியாரின் ஆராய்ச்சித்திறம் எத் தன்மைத்து என்பதை அறிய சிலவற்றை நோக்குவது ஏற்றது. பேராசிரியர் ச. வையாபுரிபிள்ளை தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்மொழி மற்றும் தமிழிலக்கிய வரலாறு எனும் நூலில் கி.பி. 470-இல் வச்சிரநந்தியால் தோற்றுவிக்கப் பெற்ற திரமிள சங்கத்தில் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருக் கலாம் என்றும், சின்னமனூர் செப்பேட்டில் தலை யாலங்கானத்துப் போர்வென்ற பாண்டிய நெடுஞ் செழியனுக்குப் பின்னர் வந்த ஒரு பாண்டியன் மதுரையில் நிறுவிய சங்கம், வச்சிரநந்தி நிறுவிய சங்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்றும் எழுதியுள்ளார். இவற்றைத் தக்க ஆதாரங்களோடு மயிலையார் மறுக்கிறார். வச்சிரநந்தி உருவாக்கிய சங்கம் எப்படித் தோன்றியது என்பதை ஆய்ந்து காட்டுகிறார். சமணர்களின் ஆதிகாலச் சங்கம் மூல சங்கம் என்றும், சமணர்களின் எண்ணிக்கை கூடவே நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று உட்பிரிவாகப் பிரிந்தன என்றும், பிறகு நந்திகணத்தில் நந்திசங்கமென்றும், திரமிள சங்கமென்றும் பிரிந்ததாகவும், இந்தத் திரமிள சங்கம், சமண சமயத்தையும், அதன் கருத்துகளையும் பரப்பவே தோற்றுவிக்கப்பட்ட தென்றும், இதில் தொல்காப்பியம் இயற்றப்பட்ட தென்றும், திரமிளசங்கம்தான் தமிழ்ச்சங்கமென்று கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம் முடிவுக்கு ஆதரவாக, பி.டி. சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாற்றில் அதாவது 1927-இல் வெளிவந்த நூலில் தமிழ்ச் சங்கம் வேறு, திரமிள சங்கம் வேறு என்று குறிப்பிட்டிருப்பதையும், திரமிள சங்கம், சமண மதத்தை புதியவர்களுக்குக் கற்பிக்கத் தோற்றுவித்த சங்கமென்றும் எழுதியிருப்பதையும், 1956-இல் நூல் எழுதிய வையாபுரிபிள்ளை எப்படி இதனைக் காணாமல் போனார்? என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளார். மற்றும் சின்னமனூர் செப் பேட்டில் “மஹா பாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்” என்று குறிப்புத் தெளிவாக இருக்க அந்த மதுரைச் சங்கத்தைச் சமணத்தைப் பரப்பும் திரமிள சங்கத்தோடு இணைத்துப் பேசுவது திரித்துக் கூறும் ஆராய்ச்சியாகும் என்கிறார். இதற்கு மேலும் சில ஆதாரங்களைக் காட்டி மயிலையார் மறுத்துள்ளார். மேலும் தொல்காப்பியத்தில் ஓரை என்னும் சொல் உள்ள தால், இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து கி.பி.

5-ஆம் நூற்றாண்டில் வடமொழிக்குப் பின்னர் தமிழில் வந்ததால் தொல்காப்பியம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்று பேராசிரியர் சிவராசப்பிள்ளை தம் நூலில் குறிப் பிட்டுள்ளார். இதே கருத்தை வையாபுரி பிள்ளையும் குறிப்பிட்டிருப்பதால் இவற்றை மயிலையார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

கிரேக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் பழங் காலத்திலிருந்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டுவரை கடல் வாணிபம் நடந்துள்ளது. இதனைச் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே காணலாம். ஆனால் அந்த வாணிபம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பின் நின்றுவிட்டதற்குப் பல ஆதாரங்கள் இருக்க, வாணிபம் நின்று இரு நூற்றாண்டுக்குப்பின் ஓரை எனுஞ்சொல் கிரேக்கத்திலிருந்து கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வடமொழிக்கு வந்ததென்றும் அடுத்துத் தமிழுக்கு வந்ததென்றும் கூறுவது தவறாகும் என்கிறார் மயிலையார். மற்றும் எல்லாச் சொல்லும் வடமொழியிலிருந்துதான் வந்துள்ளன என்பதைப் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளதை மயிலையார் ஆதாரங்களோடு கடிந்துரைக்கிறார். ஓரை எனுஞ்சொல்லைப் பயன் படுத்தியவர்கள் திராவிடர்களென்றும், அவர்கள் பண்டைக்காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியிலும், சுமேரியாவில் வாழ்ந்தவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும், ஆதலால் அப்போது அந்தச் சொல் திராவிடத்திலிருந்து சுமேரிய மொழிக்கும், கிரேக்க மொழிக்கும் சென்றிருக்கலாமென்றும் மற்றொரு வகையில் தமிழர்கள், கிரேக்கர்களுக்கு முன்பாகச் சுமேரியர்களோடு கடல் வாணிபம் கொண்டபோது தமிழிலிருந்து சுமேரிய மொழிக் கோ, சுமேரிய மொழியிலிருந்து தமிழுக்கோ வந்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். மற்றும் ஓரை என்னும் சொல் ராசியைக் குறிக்கும் சொல் லென்று கூறும் மரபு பிற்காலத்தது என்றும், ஓரை என்பது ஒருவகையான விளையாட்டைக் குறிக்கும் என்பதையும் அச்சொல்லைக் கொண்டு தொல் காப்பியத்தின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவது தவறானது என்பதை நாவலர் பாரதியார் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில் (ஆங்கிலம்) தெளிவுறுத்தி யிருப்பதை மயிலையார் எடுத்துக்காட்டி விளக்கி தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் அதாவது கிமு. 8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்.

மற்றும், சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதையில் பங்களர் என்ற சொல் வருகிறது. அந்தச் சொல் வங்காள மக்களைக் குறிப்பதால் சிலப்பதிகாரம் மிகப் பிற்காலத்து நூலென்று வரலாற்றுப் பேரா சிரியர் நீலகண்டசாஸ்திரி ஓர் ஆங்கிலக் கட்டுரையில் எழுதியிருந்தார்; இதனைப் பின்பற்றி மற்றொரு பேராசிரியரான வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் என்பவரும் சிலப்பதிகாரம் எனும் ஆங்கில நூலில் பங்களர் என்பது பங்காள நாட்டுமக்களைக் குறிப்ப தாகும் என்றார். இதனையேற்றுப் பேராசிரியர் ச. வையாபுரிபிள்ளையும் இலக்கிய மணிமாலை எனும் நூலில் பங்களர் என்றசொல் வங்காளரைக் குறிப்பதாகும் என்றும், இதனால் சிலப்பதிகாரம் 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்று குறிப் பிட்டுள்ளார். பங்களர் எனும் சொல்லை நன்கு ஆராயாமல் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இவற்றை மயிலையார் ஆதாரங்களோடு மறுத் துள்ளார். சேரன் செங்குட்டுவன் வென்ற நாடு களை அமைச்சனான வில்லவன்கோதை குறிப்பிடும் போது,

“கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்

பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்

வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன்

கடலை வேட்டமென் கட்புலம் பிரியாது”

- காட்சிக்காதை 156 - 159

இதிலுள்ள பங்களர் எனும் சொல் வங்காளரைக் குறிக்காமல், தமிழ் நாட்டின் வட எல்லையில் வாழ்ந்த தமிழரின் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகும் என்கிறார் மயிலையார். தென்னிந்தியச் சாசனங்கள் எனும் நூலிலின் எட்டாவது தொகுதியில்,

“சயங்கொண்ட சோழமண்டலத்து

பங்களநாட்டு வடக்கில்” S 11 - Vol VIII - 7

சயங்கொண்ட சோழ

மண்டலத்துப் பங்களநாட்டு S 11 - Vol VIII – 11

பங்களநாட்டுக் காட்டுத்

தும்பூர் நந்திகம்பீசுரம் S 11 - Vol VIII - 9

பங்களநாட்டு வடக்கில்

வன்முகை நாட்டு

உய்யக்கொண்டான்

சோழபுரம் S 11 - Vol VIII - 8

இவற்றை நோக்கினால், சமயங்கொண்ட சோழ மண்டலம், தொண்டை மண்டலம், அருவாநாடு என்னும் பெயருடைய நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் என்பதை உணரலாம். இதற்கு வடக்கில் இருப்பதுதான் பங்களநாடு; இந்நாடு முகை நாடு, வன்முகை நாடு எனும் இரு பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழ்ந்தவர் தமிழரே; சேர சோழ பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர்களை சேரநாட்டு மக்கள், சோழ நாட்டு மக்கள், பாண்டிய நாட்டு மக்கள் என்று அழைப்பதைப் போல், பங்கள நாட்டுத் தமிழர்களைப் பங்களர் என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். இதனையறியாது; தமிழ்ப் பெருநூல்களின் காலத்தை மிகப் பிற்காலமாகக் குறிப்பிட வேண்டுமென்ற உந்துதலால் இவர்கள் அனைவரும் பங்களரை வங்காளத்தினராகக் குறிப் பிட்டுள்ளனர். வரலாற்றுப்பேராசிரியர்கள் சாசனத்தைப் படித்திருக்க வேண்டும். இவர்கள் எப்படிப் படிக்காது போயினர்? என்று மயிலை யார் வினா எழுப்பித் தம் கருத்தை நிலைநாட்டி சிலப்பதிகாரம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும் என்கிறார். இவ்வாறு பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்களின் பல்வேறு முடிவு களை ஆணித்தரமாக மறுத்து உண்மையை நிலை நாட்டியிருப்பது அவரது ஆய்வுத் திறனையும் நேர்மையையும் புலப்படுத்துவதாகும். குறிப்பாக வையாபுரி பிள்ளையின் பல்வேறு முடிவுகளை அவர் மறுத்திருப்பது சிந்தனைக்கு விருந்தாக அமைபவை.

இங்கு வையாபுரி பிள்ளையைப் பற்றி பெ.நா. அப்புசாமி கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது. பெ.ந.சு, வையாபுரிப்பிள்ளையோடு பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவர். அவரோடு பலகாலம் பழகியவர். பெ.ந.சு எழுபதுகளில் அடிக்கடி அவ்வை நடராசன் இல்லத்திற்கு வந்து உரையாடி இரவு நேரங்களில் அங்கேயே தங்கிச் செல்வார். அப் போது தமிழிலக்கியத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது வையாபுரிபிள்ளையைப் பற்றி ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். நீலகண்ட சாஸ்திரியும், இன்னும் சில செல்வாக்கு கொண்ட சிலரும் தமிழிலக்கியங்களைக் குறித்துத் தவறான செய்திகளைப் பரப்ப வையாபுரிப்பிள்ளையைத் தூண்டி அதில் வெற்றியும் பெற்றனர் என்றார். வையாபுரிபிள்ளையைக் காட்டிலும் பெ.ந.சு. சற்று மூத்தவர், உறுதியான நாத்திகர்; அறிவியல் அறிஞர்; ஒரு சான்றோர். அவர் கூறியதையும், வையாபுரியின் சில முடிவுகளையும் (ஒரு காலகட்டத்தில்) ஒப்பு நோக்கினால் ஒருவாறு உண்மையை உணரலாம். ஆய்வு என்பதால் இந்த உண்மையைக் கூறவேண்டு வதாயிற்று.

வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலோர் சேர சோழ பாண்டியர் வரலாற்றைத்தான் மிக விரிவாக எழுதினார்கள்; கொங்கு நாட்டு வரலாற்றையும் பலர் எழுதியுள்ளனர் என்றாலும், கொங்கு நாட்டைக் குறித்து அரிய தகவல்களோடும் புதிய செய்திகளோடும் எழுதியவர் மயிலையாரே ஆவர். அவரது நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக உள்ளது. இந்நூலில் பல அரிய செய்திகள் உள்ளன. அதில் இரு சிறுசெய்தியை நோக்கினால் அதுவே நமக்கு ஒரு நிறைவைத் தரும். கொங்கு நாட்டின் வடக்கிலிருந்த புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் இருந்ததாக யவன வரலாற்றாசிரியரான பிளைனி எழுதியிருப்பதாகவும், கொங்கு நாட்டிலுள்ள படியூர், வாணியம்பாடி ஆகிய ஊர்களில் அக்கற்கள் கிடைத்ததாகவும், அதனை அரிசில்கிழாரும் குறிப் பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இந் நீலகற்களை யவன நாட்டினர் அக்வா மெரினா ((Aqua Marina) என்று அழைத்ததாகக் கூறுகிறார். யவனர் கொங்கு நாட்டிற்கே வந்து வாங்கிச் சென்றுள்ளதாகவும், பொள்ளாச்சி, வெள்ளலூர், கரூர் முதலிய ஊர்களில் பல பானைகளில் ரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது அதற்கான சான்றுகளாக உள்ளனவென்று குறிப்பிட்டுள்ளார். சேரநாட்டின் துறைமுகமான முசிறியிலுள்ள

ஒரு பகுதியைப் பந்தர் என்று அழைத்துள்ளனர். பந்தர் என்ற சொல் அரபு சொல்லாகும். அந்தப் பகுதியில் அரேபியர் தங்கி வாழ்ந்ததால் அப் பெயர் பெற்றுள்ளது. பந்தர் எனும் சொல்லுக்கு, அங்காடி, துறைமுகம், பண்டக சாலை என்று பொருள்; சென்னை மாநகரின் பாரிமுனையில் பந்தர் தெரு ஒன்று உள்ளது. அத் தெருவில் ஒரு காலத்தில் முஸ்லீம்கள் அந்நியநாட்டுப் பொருள் களை விற்றதை நினைவு கூர்கிறார். பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்தில் அரேபியர்கள் முசிறித் துறை முகத்தின் அருகிலிருந்த பந்தர் எனும் இடத்தில் பொருள் விற்றதை எடுத்துக்காட்டுகிறார்.

மறைந்த மறைக்கப்பட்ட பல செய்திகளை எடுத்துக் கூறுவதை வாடிக்கையாகக் கொண்ட மயிலையார், பண்டைய இலக்கியங்களில் குறிப் பிடப்படாததையும் எடுத்துக்காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாகக் கொங்குச் சேரர்களாகிய ஆதன் சேரல் இரும்பொறை அவனுடைய மகனான பெருங்கடுங்கோ, இவனுடைய மகனான இளங் கடுங்கோ ஆகியோரைப் பற்றிய குறிப்புப் பதிற்றுப் பத்திலோ வேறு சங்க இலக்கியத்திலோ காண முடியவில்லை என்றும், அவற்றை புகழியூர் குகைச் சாசனத்தில் காணமுடிந்தது என்று புதுச்செய்தி யையும் அவர் கண்டெடுத்துக் கூறியுள்ளார். இவ்வாறு பற்பல அரிய செய்திகளை எடுத்துக் காட்டி, திகைப்பிலும் மலைப்பிலும் ஆழ்த்துபவர் தான் நம் மயிலையார். அவருடைய ஆளுமையைப் பலவாறு பகுத்துக் கூறலாம். அவற்றுள் முக்கிய மானவற்றைக் கீழ்வருமாறு நோக்கலாம்.

* பண்டைய வரலாறுகளைத் தோண்டி யெடுத்துக் காட்டியவர்.

* மறைந்த / மறைக்கப்பட்ட செய்திகளைச் சுட்டிக்காட்டியவர்.

* சரியான கால ஆராய்ச்சியைச் சான்று களோடு நிறுவியவர்

* சிற்பம், கோயில், இசை, நடனம், பண் பாடு, வரலாறு, சமயம் - நூல்கள், கலைகள் போன்றவை குறித்துப் புதுச் செய்திகளைக் கண்டெடுத்து தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்தவர்.

* தமிழியல் ஆய்வில் புதையலைக் காட்டி யவர்.

* ஓயாத உழைப்புக்கும் சாயாத ஆய்வுக்கும் பேர் போனவர்.

* ஆய்வுலகில் வழிகாட்டி மரமாகவும், கலங்கரை விளக்காகவும் விளங்கியவர்.

இத்தகு அருமை வாய்ந்தவரின் நூல்களை 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப் பகம் நம் பெரும் பாராட்டுக்குரியது. நூற்றொகுதி களை நல்ல தாளில், அழகிய அச்சில், கலைப் பெட்டகமாக வெளியிட்டுள்ளது. தமிழ் ஆய்வுக்கும் பெருமைக்கும் அப்பதிப்பகம் ஒரு செல்வத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.

கவனிக்கப்பட வேண்டியன

- தொகுதி - 6 - பக் - 24இல் உள்ள கடைசி பேரா இருமுறை வந்துள்ளது. அதாவது 25-ஆம் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.

- தொகுதி-2 பக் 33-இல் நன்றாமலை எனுங் குறிப்பு மீண்டும் 38-ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

- தொகுதி- 15 - மறைந்துபோன தமிழ் நூல்கள் 1959-ஆண்டில் வெளிவந்த போது பேராசிரியர் மு.வ. அணிந்துரை அளித்திருந்தார். இத் தொகுதியில் அந்த அணிந்துரை இல்லை. சேர்ப்பது நன்று.

- தொகுதி 7, 8 இரு தொகுதிகளும் தமிழகச் சமயங்கள் எனுந் தலைப்பில் முறையே சமணம் குறித்தும், பௌத்தம் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. தமிழகச் சமயங்கள் என்று குறிப்பிடும்போது தமிழகத்தில் தோன்றிய சமயங்கள் எனும் பொருளும் தொனிக்கிறது; அச்சமயங்கள் வடபுலத்தில் தோன்றித் தமிழகம் வந்தவை; அவற்றிற்கு வேறு தலைப்புகள் தந்திருக்கலாம்.

- எழுத்துப் பிழைகள் உள்ளன. மிக விரைந்து அச்சிட்டதால் அக்குறை ஏற்பட்டிருக்கலாம். மறுபதிப்பில் அவற்றைச் சரி செய்வது சிறந்தது.

இந்நூற்றொகுதியை அரிதின் முயன்று தொகுத்த பேரா. வீ. அரசு பெரிதும் பாராட்டத்தக்கவர். ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதியைப் பற்றிய முன்னுரையும், ஆசிரியரைப் பற்றிய நீண்ட குறிப்பும், சிறப்பாக உள்ளன; வாசகர்களுக்கு ஒரு புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்தி வாசிக்கத் தூண்டுகின்றன; நண்பர் வீ. அரசு ஏற்கனவே, வ.உ.சி.யின் எழுத்துகளையும், ப. ஜீவானந்தத்தின் எழுத்துகளையும், புதுமைப்பித்தனின் எழுத்து களையும் பற்பல தொகுதிகளாக அளித்துள்ளார்.

அண்மையில் சுயக்கியான சங்கத்தினர் தத்துவ விவேசினியில் எழுதிய கட்டுரைகளையும், கூhiமேநச என்ற ஆங்கில இதழில் 1878- 1888 வரை வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து ஆறு பெருந்தொகுதிகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். வ.உ.சி முதல் மயிலையார் வரை வெளிவந்திருக்கும் தொகுதிகள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த அரிய தொகுப்பு களாகும். தொகுப்பு முயற்சியில் ஈடுபடும் பெரும் பாலோர் ஆராய்ச்சி வன்மை வாய்ந்தவர் என்று கூற முடியாது. மேற்கண்ட தொகுப்புகள் ஆராய்ச்சி வன்மை வாய்ந்தவரால் தொகுக்கப்பட்டுள்ளதால் அத்தொகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. சாதனை நாயகராக விளங்கிய மயிலையாரின் அனைத்து எழுத்துகளையும், சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஒருவர் தொகுத்திருப்பது பெருமைக்குரியதுதானே; தமிழகம், நண்பர் வீ. அரசுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இத் தொகுதிகளைப் பற்றி ஒருநாள் கருத்தரங்கை அமைத்து அத்தொகுதிகளைப் பெரும் முயற்சியில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்த்திரு, கோ. இளவழகன் பெரிதும் பாராட்டத் தக்கவர்.

“கடனென்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய்- ஒரு
கடல் கொண்ட புகழ்கொண்டு கமழ்வாய்”

- பாரதிதாசனார்

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
தமிழியல் ஆய்வு (சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு)

பதிப்பு: வீ.அரசு

வெளியீடு: இளங்கணி பதிப்பகம்
பி 11, குல்மொகர் அடுக்ககம்,
35/15 பி, தெற்கு போக்கு சாலை,
தியாகராய நகர், சென்னை - 600 017
விலை: ரூ.210/-

Pin It