எங்கு மனது அச்சமின்றி இருக்கிறதோ
எங்கு தலை நிமிர்ந்திருக்கிறதோ
எங்கு அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
எங்கு உலகம் குறுகிய குடும்பச் சுவர்களால்
கண்ட துண்டமாக உடைபடாதிருக்கிறதோ
எங்கு சொற்கள் உண்மையின்
ஆழத்திலிருந்து வருகின்றனவோ
எங்கு சோர்வற்ற முயற்சி தனது கரங்களை
பூரணத்துவத்தை நோக்கி நீட்டுகிறதோ
எங்கு பழக்கம் என்ற வறண்ட பாலையில்
அறிவு என்னும் தெள்ளிய நீரூற்று
வழி தவறி விடவில்லையோ
எங்கு மனம் என்றென்றும் விரிவடைந்து
வரும் சிந்தனையாலும் செயலாலும்
முன்னால் வழி நடத்தப்படுகிறதோ
அந்த சுதந்திர சுவர்க்கத்தில் எந்தாய்
நாடு கண் விழிக்கவே.

 

கடவுள் எங்கு இருக்கிறார்?

ஜப மாலை உருட்டுவதை விட்டுவிடு!
மந்திரமும் தந்திரமும் ஆடலும் பாடலும்
அவனைக் காட்டமாட்டா!
தாளிட்ட அடைபட்ட கோயிலின் இருளடைந்த
மூலையில் யாரைப் பூசிக்கிறாய்?
கண்களைத் திறந்து, உன் கடவுள்
உன் முன்னிலையில் இல்லையென அறிந்துகொள்.
கடினமான தரையில் ஏர் கட்டி உழுவாரிடமும்
சாலை அமைக்கச் சரளைக் கல் உடைப்பாரிடமும்
அவன் இருக்கிறான். அவர்களுடன்
அவன் மழையில் நனைகிறான்.
வெயிலில் உலர்கிறான்
அவன் ஆடையில் தூசி படிந்திருக்கிறது.
உன் காஷாயத்தைக் களைந்தெறி
அவனைப் போலவே நீயும் புழுதியில் இறங்கி வா.

(கீதாஞ்சலி – 11)

Pin It