எந்த சமூகத்திலும் ஏதாவது பாதிப்பு வருகிறபோது மனிதன் தனக்கு மீறிய ஏதாவது சக்தியை நம்புகிறான். இந்திய சமூகச் சூழலில் மதங்களின் பங்கும் பக்தியின் இடமும் புராணங்களின் அழுத்தங்களும் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றன... எனவே அவற்றில் சடங்குகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சாதாரண மக்கள் தங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற போது அவர்கள் சடங்கு சார்ந்தும் புராணங்கள் சார்ந்தும் தங்களுடைய வழிபாடுகளைக் கைக் கொள்கிறார்கள்.
அந்தவகையில் மந்திரவாதிகளும் இந்திய சமூகத்தில் ஒரு முக்கிய பங்காற்றுவதாக சாதாரண குடிமக்கள் நினைப்பது உண்டு.
அதன் காரணமாக அந்த சடங்கினை கடைபிடித்தல் மற்றும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தங்கள் பிரச்சனையில் இருந்து தப்பித்து விட்டதாக எண்ணிக் கொள்ளுதல் போன்றவை சாதாரண மக்களுக்கு நிகழ்கின்றன.
அந்தவகையில் சடங்குகளின் தொடர்ச்சியாக உள்ள மந்திரவாதமும் போலித்தனமும் பற்றிய ஒரு பகுத்தறிவுப் பார்வையை தே.ஞானசேகரனின் இந்த நூல் முன்வைக்கிறது
மந்திரம் என்பது இன்றைய நடைமுறையில் கண்கட்டி மாயாஜாலம், செய்வினை, பில்லி சூனியம், ஏவல், வசியம் செய்தல் முதலியவற்றை குறிப்பதாகவும் தெய்வம் தொடர்பான சடங்குகளில் பூசாரிகள் உச்சரிக்கின்ற மொழிச் சொற்களையும் விஷம் நீங்க மந்திரிக்கும் மந்திரச் சொற்களையும் சுட்டுவதாக உள்ளது. பழங்கால மக்கள் இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அவற்றைப் போலப் செய்வதின்
வாயிலாக இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினர். இவ்வாறான போலச் செய்தல் அல்லது பாவனை செய்தலை மானுடவியலாளர்கள் மந்திரம் என்று குறிப்பிடுவதாக ஆசிரியர் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மனம் என்பது ஒரு மாயை உண்டாகி அதனால் இயற்கையை உண்மையாகவே கட்டுப்படுத்துவதாக நம்புவது ஆகும் என்ற கருத்தினை இன்னொருபுறம் ஆசிரியர் முன்வைக்கிறார்... இந்த மந்திரங்கள் சார்ந்த சடங்குகளில் பெண்கள் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள்.
பெண்களுக்குத் தேவையான சூழ்நிலை நகர்ப்புறத்தில் இருப்பது போல கிராமங்களில் இல்லை. இதனால் ஒடுக்கப்பட்ட மனநிலை உடைய பெண்கள் பேய் பிடித்த நிலைக்கு ஆளாகிறார்கள். விருப்பமில்லாத திருமண வாழ்க்கை, கூட்டுக் குடும்பச் சூழல் போன்றனவும் பெண்கள் மனநிலையை பாதிப்படையச் செய்வதை காண்கிறோம்.
மணவாழ்வில் மனநிறைவு அடையாதவர்கள் பேய் பிடித்தலுக்கு ஆளாவதும் களத்தில் கண்ட உண்மை என்று பலவிதமான கள ஆய்வு அறிக்கைகள் மூலமாகக் கருத்துக்களை ஆசிரியர் சொல்கிறார், பெண்களுக்கு அதிகமாக பேய் பிடித்தல் நிலை ஏற்படுவதற்குக் காரணம் அவர்கள் மனதில் இருக்கும் நீண்டகால ஏக்கங்களும் நிறைவேறாத ஆசைகளுமே இது உளவியல் அழுத்தம் அல்லது மனநிலை குந்தகம் என்ற வகையில் குடும்ப வாழ்க்கையை பாதிப்பதை விரிவாகச் சொல்லியிருக்கிறார், அதேபோல் ஒருவனுக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த மந்திரவாதிகள் பயன்படுத்தும் உடம்பின் பாகங்கள் துண்டிக்கப்படுதல் போன்றவை எப்படி சாதாரண மக்களை அலைக்கழிக்கின்றன என்ற விவரம் இதில் இருக்கிறது. மந்திரவாதிகள் செய்கின்ற பல கெட்ட மந்திரங்கள் குறித்தும் செயல்படுத்தப்படும் முறை குறித்தும் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது
இவையெல்லாம் மனித மனத்தோடு தொடர்புடைய ஒரு வகை வசியப்படுத்தல் செயலாகும். இந்த உலகில் மனிதனை மனிதன் மட்டுமே ஏதேனும் காரணம் வைத்து ஏமாற்ற முடியும். தீங்கு செய்ய முடியும். மந்திரத்திற்கும் கடவுளுக்கும் பேசுவதற்கும் பேய் பிசாசு இருக்கும் அந்த ஆற்றல் இல்லை.
அவை அவற்றின் வேலையில்லை என்பதை தீர்க்கமான ஒரு பகுத்தறிவுப் பார்வையோடு ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். மனித மனத்துடன் தொடர்புடைய விசித்திரமான போக்குகளை உளவியல் பார்வையில் சொல்லும் இந்த நூல் நியூ செஞ்சரி சிறு நூல் வரிசையில் வெளிவந்துள்ளது.
மந்திரவாதமும், போலித்தனங்களும்..
உளவியல் பார்வை
நியூ செஞ்சரியின் சிறு நூல் வரிசை
முனைவர் தே ஞானசேகரன்
(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ரூபாய் 25 விலை)
- சுப்ரபாரதிமணியன்