‘ஆடுமாடுகள் மட்டுமல்ல, பன்றிகள் கூட வீதியில் வரலாம், ஆனால் தாழ்ந்த சாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தெருவில் வரக் கூடாது’ என்ற இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும் வரியைத் தொடக்கமாகக் கொண்டு வரையப் பட்ட பதிப்புரையைத் தாங்கி வெளிவந்திருக்கும் நூல்தான் ‘புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்’ என்ற சிறுஆய்வு நூல். இந்நூல் எட்டு சிறந்த ஆய்வுக்கட்டுரைகளைத் தாங்கி நின்று, தமிழ்மொழியை உணர்ந்த வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், சமூகம், மானிடவியல், நாட்டுப் புறவியல், தொல்லியல் ஆகிய துறைசார்ந்த ஆய் வாளர்களைத் தன்னிடம் இன்பம் துய்க்க வருமாறு அழைக்கின்றது. எட்டுக் கட்டுரைகளில் முதல் கட்டுரையின் பெயரைத் தாங்கி நிற்கிறது இந்நூல்.

புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம் என்னும் முதல் கட்டுரை, புலைப்பேடி என்றால் என்ன? அவ்வழக்கம் எங்ஙனம் தோன்றியது? அது எந்த மன்னனால் ஒழிக்கப்பட்டது? போன்ற பல தகவல்களைப் பற்றிப் பேசுகிறது. அறிஞர்கள் சிலரின் கருத்துகளைச் சான்றுகளாகக் காட்டி கட்டுரையை வடித்திருக்கும் நூலாசிரியர், கல் வெட்டு ஒன்றையும் அதனுள் புகுத்திக் கட்டுரையைப் பட்டை தீட்டியுள்ளார்.

புலைப்பேடி என்றால் என்ன என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், இந்நூலின் பதிப்புரையின் முதல் வரிக்குரிய நிகழ்ச்சியைத் தலைகீழாகத் தூக்கி யடிக்கும் காட்சியாக அமைவதே அது. காரணம், தாழ்த்தப்பட்டவர்கள் தெருக்குள்ளாகவே வரக் கூடாது என்று இருந்த ஒரு நாட்டில், அவர்கள் இரவு நேரங்களில் தெருவுக்குள் வரலாம்; உயர்ந்த சாதிப் பெண்களைக் கண்டால் அவர்களைத் தமக்குரியவர்களாக்கிக் கொள்ளலாம் என்ற ஒரு சட்டம். இந்தச் சட்டத்தால் பெண்களைப் பெற்ற மேல் சாதிக்காரர்கள் அக்காலகட்டங்களில் புலையனுக்கும் பறையனுக்கும் மண்ணானுக்கும் அஞ்சிப்போய், வயிறு கலங்கி இரத்தக்கொதிப்புடன் இருந்துள்ளனர். புலையனும் பறையனும் மண்ணானும் தம் பெண் மக்களைத் தூக்கிச் சென்று விடுவார்களோ என்று பயந்து பயந்து தம் மகள்களை வீட்டுக்குள்ளாகவே அடைத்து வைத்துக் காவல் காத்ததனால் புலப்பேடி, பறப்பேடி, மண்ணாப்பேடி என்ற கால வழக்கம் ஏற்பட்டது (பேடி என்றால் அச்சம்). ஆனால் எந்தப் புலையனும் மேல்சாதிக்காரன் பெண்களைத் தூக்கிச் செல்லவில்லை. அப்படித் தூக்கிச் சென்றிருந்தால் அவனோ அவன் குடும்பமோ, அவன் சாதியினரோ அதன் பின்னர் அங்கு வாழ்ந்திருக்க முடியாது. அது தான் நாடறிந்த நடைமுறை.

இந்தப் பழக்கத்தை ஒருவகையில் பார்த்தால் மேல்சாதிக்காரனின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்த மேல்சாதிக்காரன் இப்படி யொரு பழக்கத்தை அனுமதித்திருப்பானா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. அப்படியொரு பழக்கம் சட்டத்தில் இருந்ததே ஒழிய, அது வழக்கத்தில் இல்லை. அது பழக்கமாகியிருந்திருந்தால் புலையன், பறையன், மண்ணான் என்ற சாதிகள் மண்ணோடு மண்ணாகி, இப்போது திருவிதாங்கோடு சென்சஸ் ரிக்கார்டில் அப்பெயர்கள் இருந்திருக்கவே முடியாது. மன்னர் காலத்திலேயே அச்சாதிகள் அழிந்து ஒழிக்கப் பட்டிருக்கும். இதுதான் யதார்த்தமான உண்மை. இதற்குச் சான்றுகளோடு விடையளிக்கிறது செந்தீ நடராசனின் இக்கட்டுரை.

சீதேவி, மூதேவி என்று அறியப்படும் இரு பெண் தெய்வங்களில் அக்காளான மூதேவி, வீடுகளில் ஒரு பெண்ணைத் திட்டும்போதுதான் நம் நினைவுக்கு வருவாள். அப்படியொரு தெய்வம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அத்தெய்வம் இருந் துள்ளது, அதிலும் திருவிதாங்கோட்டில் இருந் துள்ளது என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக் கிறார் செந்தீ நடராசன். திருவிதாங்கோட்டில் அவரால் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்தெய்வச் சிலையை, மூதேவியின் சிலை என்று நிறுவியுள்ள அவரது திறம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கல்வெட்டு ஆய்வாளர் என்று அறியப்படும் திரு செந்தீ அவர்கள், சிற்பக்கலை அறிஞருமாக விளங்கு கிறார் என்பதை இக்கட்டுரை நிரூபித்து வெளிப் படுத்துகிறது.

pulipadi_450கல்வெட்டு மற்றும் சிற்பக்கலை வல்லுநரான திரு செந்தீ, எப்போது வானவியல் அறிஞரானார்? அதற்கு விடை பகர்கிறது மூன்றாம் கட்டுரை. இந்தக் கட்டுரைக்குக் கருத்து சொல்வதானால் அக்கருத்து இது: தமிழக மக்களைக் கயிறாகத் திரித்து கூரப டிக றயச போட்டி நடத்தும் தமிழக அரசியல் கட்சிக்காரர்கள் படிக்கவேண்டிய ஒரு சிறந்த கட்டுரை இது. வட்டத்தில் எந்தப் புள்ளியும் தொடக்கப் புள்ளி ஆகலாம்...! கட்டுரையின் ஆணி வேரின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது இத்தலைப்பு. இக்கட்டுரையோடு தொடர்புபடுத்தி இந்நூலில் அமைந்துள்ள அவரது ‘நோன்புகள் விரதங்கள் சடங்குகள்’ என்னும் கட்டுரையையும் பார்க்கலாம். விரதம் மேற்கொள்வோர் அறிந்திருக்க வேண்டிய செய்திகளை இக்கட்டுரையில் காணலாம். இவ்விரு சிறந்த கட்டுரைகளுக்கும் வலுசேர்க்கும் விதமான சிறந்த கருத்துகள் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் ‘மாகஸ்நான புராண அம்மானை’யின் முன்னுரையில் காணப்படுகின்றன. அவற்றையும் ஆய்வாளர்கள் ஒப்பு நோக்கலாம்.

‘கண்ணகி வழிபாடும் பவுத்தமும்’, ‘சமண பவுத்த சமயப் பாதிப்பும் குடியும் குடிசார்ந்த எண்ணங்களும்’ என்னும் இரு கட்டுரைகளும் இந்நூலில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்டுரைகளாக அமைகின்றன. இக்கட்டுரைகள் ஆசிரியருக்கிருக்கும் சமண, பௌத்த மதங்கள் குறித்த ஆராய்ச்சியின் ஈடுபாட்டை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. இலக் கியங்கள், காப்பியங்கள், பிறமொழித் தோத்திரங்கள், நாட்டுப்புற வழக்காறுகள் முதலியவற்றை ஒப்பிட்டு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை இக்கட்டுரைகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நூலுக்கு முத்தாய்ப்பாக விளங்கும் மற்றொரு கட்டுரை ‘இராசராசன் உள்ளெரி கொளுவிய உதகை எது?’ என்பதாகும். ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை இது.

‘தென்னரும் மாளுவரும் சிங்களரும் தேற்றுதகை

மன்னருந் தோற்க மலைநாடு’ - என்பது விக்கிரம சோழனுலா (68). இவ்வடியில் வரும் ‘உதகை மன்னர்’ என்பதற்கு விளக்கம் தரும் உரையாசிரியர், ‘குட நாட்டு அரசர்’ என்று கூறுகிறார்.

‘எறிப்பகலொன்றி லெச்சுரமும் போயுதகை

தூறித்தன் றூதனை நோக்கினோன்’ - என்பது குலோத்துங்க சோழனுலா (24). இவ்வடியில் வரும் ‘உதகை’ என்பதற்கு விளக்கம் தரும் உரையாசிரியர், ‘குடமலை நாட்டிலுள்ள ஒரு கோட்டை’ என்று கூறுகிறார்.

‘மதகயத்தா லீரொன்பது சுரமு மட்டித்

துதகையைத் தீத்த வுரவோன்’ - என்பது இராசராச சோழனுலா (21). இவ்வடியில் வரும் உதகை என்னும் இடத்திற்கு விளக்கம் தரும் உரையாசிரியர், ‘சேரன் அரணமைந்த நகர்’ என்று குறிப்பிடுகிறார் (மூவருலா, 1957).

திருக்கோவலூர்க் கல்வெட்டில் வரும் உதகை என்பதும் குடநாட்டின் தலைநகர் என்றே அறியப் படுகிறது. ஆனால், ஆய்வாளர்கள், பலர் உதகை என்பதைத் தமிழகத்தில் ஊட்டி என வழங்கும் உதகை என்றும்; கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதயகிரி என வழங்கும் உதகை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இராஜராஜ சோழன் எரித்து அழித்த உதகைக் கோட்டை நமது உதயகிரி கோட்டைதான், ஊட்டி அல்ல! (ஆய்வுக் களஞ்சியம், ஜூன்- 2012) என்று பறையடிக்கிறார் எஸ்.பத்மநாபன். இக்கருத்துகளையெல்லாம் தக்க சான்றுகளால் மறுத்து, இராசராசன் உள்ளெரி கொளுவிய உதகை என்னும் இடம் ஊட்டியும் அல்ல; உதயகிரியும் அல்ல; அவ்விடம் வடகேரளத்தி லுள்ள மகோதயபுரம் என்பதை ஆணித்தரமாக நிறுவி, பறையைக் கிழித்துள்ளார் செந்தீ நடராசன். அக்கட்டுரையில் அவர் பயன்படுத்தியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் மாற்றுக்கருத்துக்கு இட மின்றி ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே அமைந் துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் இறுதியாக அமைந்துள்ள ‘கல் வெட்டுகளில் நெய்தல்’ என்னும் கட்டுரை, செந்தீ நடராசன் அவர்களை ஒரு தலைசிறந்த கல்வெட்டு ஆய்வாளர் என்பதை நிரூபித்துக் காட்டுகிறது. நெய்தல் நிலத்து மக்களான பரதவர்களைப் பற்றி இவ்வளவு செய்திகளா? என்று மலைக்க வைக்கிறது இக்கட்டுரை. இக்கட்டுரையில் ஆசிரியர் நெய்தல் நிலத்து மக்கள் மத்தியில் உயர உயர உயர்ந்து நிற்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் ‘புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்’ என்னும் இச்சிறு ஆய்வு நூல், மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பார்களே, அதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது. நூலாசிரியர் செந்தீ நடராசனுக்கும் இந்நூலை வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச். பதிப்பகத்தாருக்கும் பாராட்டுகள்!

புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்

செந்தீ நடராசன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.60.00

Pin It