I

முருகபூபதி நாடகங்கள் கரிசல் பூமி நிலத்திலும், கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்தது. நாடக நிலம் உருவானது. தங்கம்மாள்புரம் தேரி காட்டில் தான் மணல் மகுடியாய் உருவானது. தங்கம்மாள் புரம் சாயல்குடி சாலையில் இராமநாதபுரம் எல்லை ஆரம்பத்தில் பனைக்காடு தேரி செம்மண்ணில் ஒத்திகை நடைபெற்றது. செம்மூதாய், கூந்தல் நகரம் ஒத்திகை செய்யப்பட்டு அங்கு முதல் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

பனங்காட்டில் அந்தோணி, முருகன் இரு பனையேறிகள் கோடாங்கி, முருகேசன், போத்தையா ஆசிரியர் சபாபதியும் நாடக வெளியில் உருவான வர்கள். நாடகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஏதோ ஓர் வித கதாபாத்திரமாய் வாழ்ந்தவர்கள். ஒத்திகையில் ஊரிலிருந்து கூழ்ப்பானைகளை பனைமரம் இடையே ஒற்றையடிப் பாதையில் கொண்டு வந்தனர். ஊரின் மணமும் அன்பும் கூழ்ப்பானையில் தெரிந்தது. இரவில் பேய்களும் கள்குடிக்க அழைத்தன.

தேரி செம்மணல் மேடு பள்ளங்கள் விரிவான நிலப்பரப்பும் நாடகத்திற்கு தோதாய் அமைந்து விட்டது. தேரியிலிருந்து வேம்பார் கடற்கரைக்கு நாடகக் கலைஞர்கள் பல தடவை இரவில் நடந்தனர். இரவுக்கான சிறிது வெளிச்சத்தில் பாதை விலக விலக பாதங்களின் ஓசையில் பாம்புகள் விலகின. பனை வாசனை முகர்ந்து பேய்களால் அலைந்த கனவுகளைத் துக்கம் கொண்டு கண்ணீரின் கதை களாய்க் காற்றில் அலையும் எழுத்துக்களைப் பனை ஓலையில் வாசித்து முகர்ந்தபடி வேறு வேறு மணல் சிற்பங்களை வடித்தனர். பாதைகள் கடந்து சென்றாலும் மீண்டும் அதே பாதைகள் வருகின்றன. ஒத்திகை காலங்களில் பூச்சிகளாயும் எறும்புகளாய் உருமாறினர். பொம்மைகளுடன் இரவில் பேசினர். முகமூடிகள் கட்டித் தழுவி இனம் புரியாக் கண்ணீருடன் தூங்கலாயினர். ஊரின் கண்ணீர் நாடக நிலமாய் மாறி கனவு குருவியாய் இசைக்கிறது. கரிசல் பாதையில் போன நாடகக் காரர்கள் எப்போது வருவார்கள் என தங்கம்மாள்புரம் காத்திருக்கிறது. பெரிய கிழவியிடம் பிடிமன் வாங்கி.

தாயை இழந்த பனைமகள் காற்றில் பனை இழந்த இனங்களின் பாடல்களைத் தேரிக் காற்று துயரமாய் இசைக்கிறது. விடுதலையின் குறியீடாக பனைமரம்.

II

குருமலை அய்யனார் கோவில் காட்டு தேவ தைகள் முன் மிருக விதூஷகம் நாடகக் கலைஞர் முருகபூபதி மற்றும் நாடகக் காரர்கள் நாடகப் பிரதி வைக்கப்பட்டு வேண்டுதல் செய்யப்பட்டது.

அய்யனார் கோயில் முன்பு மிகப் பெரிய ஆல மரங்களும் விருட்சங்களும் அதன் அருகில் தாமரைக் குளமும் அதன் அருகில் வழிப் பாதையில் கால பைரவனுடன் கருப்பசாமி காவல் தெய்வமும் காட்சியளித்தது. ஒற்றையடிப் பாதை சிறிது தூரத்தில் புளியமரத் தோப்பு வட்ட வெளியில் ஒத்திகை நடத்துவது என அனைவராலும் தேர்வு செய்யப் பட்டது. சமயலறை உருவாக்குதல் சமையல் பொருள்களை வாங்க அருண், பாலமுருகன் நண்பர்கள் கோவில்பட்டி குருமலை அங்கும் இங்கும் அலச்சல் பணிகளைத் தொடர்ந்தனர். நாடக ஒத்திகைகள் பணிகள் எனவும் டியூப்லைட் கட்டுதல் உணவு தயாரிக்கும் பணிகள் முடிக்க இரவாயிற்று. இரவில் வசன உச்சரிப்புகள் காற்றில் மிதந்து வந்தன. இரவில் அவரவர் பிடித்தமான திண்ணைகள், வெளித் திண்ணைகளில் கவிதை, ஊர்க் கதைகள் எனப் பேசியபடி அயர்ந்தனர். கோயிலில் ஓர் துறவியும் மனப் பித்தமடைந்த ஓர் பெண் விறகு அடுப்பில் கோவிலுனுள் சமைத்துக் கொண்டிருந்தாள். வாழ்வின் துயரங்களில் அலைக் கழிக்கப்பட்டவள். கோயிலில் மனமுருகி வேண்டு கிறாள். துயரங்களில் நாடகக் கலைஞர்களின் கலைப் பித்தில் அவர்களும் உள் இருந்தாள். தொலைவில் இருந்து சமையல்காரரும் நானும் துறவியும் ஒத்திகைகளை வசனங்களைக் கேட்டபடி சமையல் செய்து வந்தேன்.

துறவி அதிகம் பேசவில்லை. நாடகக் காரர்கள் அதிகாலை நாடகப் பொருள்கள், பொம்மைகள், முகமூடி கோணி சாக்குகள் சுமந்து செல்வதை மௌனமாய் அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பார். பித்தமகள் தனக்குத் தானே ஏதோ கை ஆட்டிப் பேசிக்கொண்டிருப்பாள். துறவி அதிகம் யாருடனும் பேசுவதில்லை. மௌனம் தான் கேள்விக்குப் பதில், சிறிய பதில்கள். அவரிடம் தெரிந்த செய்தி ஒன்றுதான். அவர் 14 வயதில் துறவியாக ஆனதால் எல்லாம் அலைந்து பார்த்தாகிவிட்டது. தற்சமயம் மகாலிங்கம் கோயில், குருமலையில் மாறி, மாறி இருப்பதாகவும் அருகில் உள்ள தன் கிராமத்திற்குச் செல்வதில்லை எனவும் கூறினார். அலைந்த பாதையின் இருட்டை ஏதுவாய் அவருள் வடிவம் கொள்கிறது. மௌனத்தின் மொழி ஆல மரமாக வேர் விட்டுள்ளது. மௌனம் மனிதனை கஷ்டப்படுத்துபவையா? அதனுள் என்ன இருக்கிறது எனத் தேடுவது எவ்வாறு? என ஊரின் கதைகள் தாமரைக் குளத்தில் பதுமைகளாய் ஆலமரங்களில் தேடி அலையும் அணில்கள் எந்த பிரதிபலனின்றி அலைபவை. இரை தேடியா? விளையாட்டா? காதலா? கனவா? என்னவென்று சொல்வது? விருட் டென்று அங்கும் இங்கும் அலைகிறது அணில்கள். தனக்கான உணவைச் சேமித்துக் கொள்வதில்லை.

சூரியன் உதிக்கும் முன் நாடகக் கலைஞர்கள் நாடகப் பொருள்களைச் சுமந்தவாறு சென்று விடுகின்றனர். தினசரி கூட்டு வாழ்வின் இயக்கம் பகிர்தல், குரல் பயிற்சி, உடல் அசைவுகள் நாடக நிலத்திற்குச் சென்றவுடன் வேறு வகையான நாடக நிலத்தின் மனிதர்களால் உருமாறினர். கலைஞர்கள் தனிமையில் இல்லை. கனவுகளுடன் இருக்கின்றனர். கனவுகள் என்றும் கைவிடுவதில்லை. ஆலமர வேர் களில் தூங்கிய கனவுகளில் யார் யாரோ வருகின்றனர். வேர்களின் மடியில் நாடகப் பயிற்சி களைப்பில் அயர்ந்து தூங்கினர். குருமலை ஆலமரத்தில் எத்தனை மனிதர்கள் இளைப்பாறி ஆற்றல் பெற்றுள்ளனர்.

தாமரைக் குளத்தில் அனைவரும் ஒன்றாய்க் குளித்து அவரவர் வேட்கையைத் தணித்தனர். இரவில் தான் குளிப்பார்கள். ஒவ்வொரு குரலிலும் காமத்தின் ஏக்கம் சிரிப்பாய் உருமாறியது. எல்லோரும் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள்தானே! அலைந்து திரிந்தவர்கள், காடுமலை மண், மேடு சர்ப்பங்களின் பாதையில் அலைபவர்கள், அலைந்த அனுபவங்கள் காயங்கள், வலிகள் ஏமாற்றங்கள், குற்றங்கள், தோல்விகள், ஏக்கங்கள் அழிந்துகொண்டிருக்கும் நிலத்தில் இருந்து வருபவர்கள். எல்லாம் தெரிகிறது. வீழ்ச்சியில்தான் கனவு உருவாகிறதோ!

நிழல் தரும் ஆலமரங்களும், அய்யனார் கோவில் சிறு தெய்வங்களும் ஏழுகன்னிமார் கோயிலும் நமக்கான வெளிதானே. வனத்தின் ஓயாத பூச்சிகளின் இசை வெளியில் நாடகப் பிரதி.

III

கோமாளிகளின் உடல்களிலிருந்து பிரிந்த உடலிகள் எங்கு அலைகிறது. கரிசல் வெப்ப நிலத்தின் புதிரிலைகள் ஒவ்வொன்றாய் கோர்த்திய மிருக விதூசகம்.

நிலத்தின் பாதையில் எங்குச் செல்வது எனத் தெரியாமல் அலைகிறார்கள். கோமாளிகளின் ஊர்ப் பாதைகள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. கோமாளிகள் அலைந்த பாதை களில் குழந்தைகள் எங்கள் கோமாளி அண்ணா எங்கே எனக் கண்ணாமூச்சி விளையாட்டில் எந்த புளிய மரத்தில் கோமாளி ஒளிந்திருப்பார் எனத் தேடி எங்கோ ஓர் மரத்தில் கோமாளி ஒளிந்திருப்பான் என நம்பிக்கையுடன் மரங்களைச் சுற்றி வருகிறது குழந்தைகள் இருட்டு நிழலில் போனவர்களைத் தேடவேயில்லை ஊர்.

கழற்ற முடியாத முகமூடிகளுடன் எந்த ஊரிலோ எந்த நகரத்திலோ பைத்திய குடுவைகளைச் சுமந்து அழுக்கடைந்த உடைகளுடன் நட்சத்திரங்களைப் பார்த்து அழுதபடி நாடோடிகளாய் ஊர், தேசம் எதுவுமற்றுப் பாதை எதுவென அறியாமல் பெயர் களை மறந்து பூச்சிகளாய் நிலத்தின் பூர்வீக தானிய விதைகளைத் தேடிச் செல்கிறார்கள்.

பூமியின் ரத்த நிலத்தின் விசும்பலில் உடல்களில் ரத்தம் பூசி, புலி நகரின் கனவுகளைத் தேடி உடைந்த பொம்மைகளையும் பெண்களின் கண்ணீரையும் நட்சத்திர ஒளியில் கழுவுகிறார்கள். பறவைகளிடமும் இயற்கையுடன் மரங்களுடன் பேசுகிறார்கள். நாடக பிரதியின் உடல்களின் வலியும் கண்ணீரும் ரத்தமும் கசிகிறது. உடல்களில் இருந்து கைவிட்டுப் போன கதைகளைத் தேடி எங்கெங்கோ அலைகிறார்கள். தன் மூதாதையரின் கனவுகளைத் திருப்பித்தர கடவுளிடம் கண்ணீர் விடுகிறார்கள்.

நிலத்தில் சிதறிய ரத்தப் பூக்களைச் சுமந்த வர்கள் கனவுகளாய்க் கடல் பறவைகளாய் சுருள் நத்தைகளாய் உருமாறுகிறார்கள்.

கைவிடப்பட்ட இனத்தின் சிதைந்து போன நிலத்தின் எரிந்த யுத்தக் கனவு பூமியில் விரிகிறது. எரிந்த பனை மரங்களிலிருந்து விடுதலையின் பாடலைப் பறவைகள் பாடுகின்றன.

பூமியின் மேல் கைவிடப்பட்ட இனங்களின் நிலத்தில் எப்போதும் கழுகுகள் காத்திருக்கிறது.

அப்பாவின் நரிகட்டிலிருந்து மெல்லிய இருளாய்

கண்ணில்

நிழல்

கனவு விரட்டிய பாடல்

துரத்துகிறது

நகரின் நெடி மரண வாசல் கதவு

வழி

மெலிந்த நிலத்தின் உடல்களை அழைக்கிறது

ஒடிய கால்களில்

மஞ்சள் தானியம் பூத்து கரும்பிய

பின் தொடர்கிறது

இரும்பின் வாசனை

தங்க நாற்காலி சாலையில்

வரைபடத்தில் காணாமல் போன

ஊர்களைத் தேடி

ஓடிக் கொண்டிருக்கிறேன்

வீட்டில் எனக்கான கட்டிலை

யார் யாரோ தயாரிக்கிறார்கள்

நகரி பற்றிய கோடுகள்

பாம்பின் விஷப்பல்கள்

எண்களில் ஒளிந்திருக்கிறது

அதிகாலை எலக்ட்ரிக் ரயில்

ஒசை பயத்தில் காபாலங்கள் அதிர

தாயின் கருப்பு வெள்ளை புகைப்படத்தின்

ஊதுவத்தி வாசனை தேடிய

இருப்பு

நிழலாய் அலைகிறது

பழன் கிழவன் ஊர் எதுவென

தெரிந்தவர்கள்

யாராவது சொல்லுங்கள்

அதுவரை

நரிகனவில்

தூங்கப் போகிறேன்

யாரும் எழுப்பாதீர்கள்

என்னைத் தேடி கீழ்த் திசையிலிருந்து

பபூஃன் கிழவன்

ஓர் இரவில் வருவான் - குமணன்

இக்கவிதை மிருகவிதூஷகம் நாடகக் கலைஞர்களுக்கும் கோடாங்கி முருகேசனுக்கும் நினைவாக எழுதப்பட்டுள்ளது.

Pin It