மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு ஈரோட்டில் வெற்றிகரமாக 13-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கு இதயம் நிறைந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைக்காட்சிகளும், இணையதளமும், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற நவீன சாதனங்களும் அசுர வேகத்தில் பெருகி, பெரியவர்களையும், இளைஞர்களையும் தன் பக்கம், கொத்துக் கொத்தாக அள்ளிப் போகும் இன்றைய காலகட்டத்தில், புத்தகம் வாசிப்பதன் சுகத்தை மக்கள் மனதில் பதிய வைக்க அரும்பாடுபடுகின்றன புத்தகக் கண்காட்சிகள்.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவது பெரிய விஷயமல்ல.  மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் பொழுது போகவாவது மனைவி குழந்தைகளுடன் கண்காட்சிக்கு வந்து இளைப்பாறிச் செல்லும் கூட்டம் வரும்.

ஈரோடு என்பது தமிழகத்தின் நடுவிலே அகப்பட்டுக் கொண்ட ஒரு சிறு நகரம்.  விவசாயமும், தொழிலும் கைகோத்து அப்பகுதி மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளன.

மாணவ மாணவியருக்குப் பஞ்சமில்லை.  ஆனால் பள்ளியில் படிக்கும் கல்வி வேறு.  புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் புத்தகங்கள் வழி பெறும் ஞானம் வேறு.

sivakumar 600ஸ்டாலின் குணசேகரன் என்ற ஒரு தனி மனிதர்- வெற்றிகரமான வழக்கறிஞராக ஈரோடு வட்டாரத்தில் வலம் வந்த ஒருவர்- தன் குடும் பத்தின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது, வருமானம் பற்றி எண்ணாது, தன் வாழ்வை பொதுப்பணிக்கு அர்ப்பணித்து-13-வது ஆண்டாக, தனிமனித உழைப்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவினை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது ஈரோடு வட்டார மக்களுக்குக் கிடைத்த வரம் பெரும் பேறு.

பல்வேறு தொழிலதிபர்கள் விளம்பரங்கள் மூலம் புத்தகத் திருவிழாவை நடத்திட ஆதரவளித்த போதிலும், திருவிழா முடிவில் சுமார் 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை கடன் கூடிக் கொண்டே இருப்பதை நானறிவேன்.

இருந்தபோதிலும், ஒரு தனிமனிதர் பெருந் தொகை கொடுத்தால், அவரது செல்வாக்கால் சுதந்திரமாக புத்தகக் கண்காட்சியை நடத்த முடியாது என்று நினைத்த ஸ்டாலின் குணசேகரன் அவர்கள், நஷ்டத்தை பின்னால் பார்க்கலாம் என்று, ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த பதிப்பகத் தாரைப் பட்டியலிட்டு அவர்களுக்கு - நேர்மை யான முறையில் ஸ்டால்கள் ஒதுக்கி ஆண்டுக்கு ஆண்டு புத்தக விற்பனை கூடிச் செல்ல வழிவகை செய்துள்ளார்.

டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நடை பெறும் கண்காட்சிகளில் இல்லாத சிறப்பு அம்சம் என்னவெனில், புத்தகத் திருவிழா நடைபெறுகின்ற 12 நாட்களும் மாலை நேரங்களில் மிகச்சிறந்த பேச்சாளர்களை - பல்துறை மேதைகளை அழைத்து வந்து, மக்கள் முன் உரையாற்றச் செய்வதுதான்.

விதவிதமான, வண்ணமயமான புத்தகங்களை வாங்க, பட்டாம் பூச்சிகள் போல 100 மைல் சுற்றளவிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பஸ்களில் வந்து குவிவது காணக் கிடைக்காத காட்சி.

அதைவிட ஒவ்வொரு நாளும் வி.ஐ.பி.க்களின் உரையைக் கேட்க பேராசிரியர்களும், பெரும் தொழிலதிபர்களும், கல்வியாளர்களும், குடும்பப் பெண்களும், சிறு தொழில் செய்யும் மக்களும் கடலெனக் கூடி உரையைக் கேட்பது - உன்னிப் பாகக் கேட்பது - அவர்களுக்கிடையே வீண் அரட்டை அடிக்காமல் கேட்பது - பேச்சாளர் களை சிலிர்க்க வைக்கிறது.

2006-ல் முதன் முதல் ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் கன்னிப் பேச்சாளனாக ஏறி உரை நிகழ்த்தினேன்.  அந்த மக்கள் தந்த ஊக்கமும் ஆதரவும்தான் இன்று மாபெரும் காவியங்களான ராமாயணம் - மகாபாரதத்தை 2 மணி நேரம் தங்குதடையின்றி ஒரு சொட்டு நீர் அருந்தாமல், ஒரு சிறு பேப்பர் குறிப்பு இல்லாமல் பேசக் கூடிய ஆற்றலை என்னுள் வளர்த்துள்ளது என்று சத்தியம் செய்து சொல்வேன்.

அழகுத்தமிழில் அலங்காரமாகப் பேசி தமிழ் மக்களைக் கவர்ந்தவர்கள் அறிஞர் அண்ணா - கலைஞர் அவர்கள், ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் - நாவலர் நெடுஞ்செழியன் போன்றவர்கள்.

சென்னைக் கடற்கரையில் பசி வயிற்றோடு இரவு 10 மணிவரை காத்திருந்து அவர்களின் தமிழ் உரையை நாங்கள் ரசித்த காலமெல்லாம் ஓடி விட்டன.

இன்றும் தமிழகம் தழுவி, நிரம்பப் படித்த வர்கள், பேசும் ஆற்றல் மிக்கவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  அவர்களை உயிர்ப்புடன் வைத் திருக்கும் பணியை ஈரோடு புத்தகத்திருவிழா 13- ஆண்டுகளாகத் திறம்படச் செய்து வருகிறது.

ஈரோடு வட்டாரத்து மக்களின் ரசனை மிக உயர்ந்தது.  பேச்சாளர் உரை, சிறப்பாக இல்லா விடினும், ஆழமான செய்திகள் அவற்றில் இல்லா விடினும், கூச்சலிடுவதோ கூட்டத்திலிருந்து மொத்த மாக எழுந்து சென்று அவமானப்படுத்துவதோ, நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.

புத்தகக் கண்காட்சி, மேடைப் பேச்சுடன் நிற்காமல், மக்கள் சிந்தனைப் பேரவை - ஆண்டு தோறும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்பாளர் களுக்கு ஜி.டி. நாயுடு விருது - ரூபாய் ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்குகிறது.

படிக்கும் ஆர்வத்துடன், காசு கொடுத்து மாணவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்கு 12 லட்சம் உண்டி யல்கள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறது.

ஆண்டு முழுக்க சேர்த்த பணத்தில், மாணவன் புத்தகக் கண்காட்சியில் தனக்குப் பிறந்த புத்தகங் களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

உலகத்தமிழர் படைப்பரங்கம் - ஒன்றை உருவாக்கி மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி - போன்ற நாடு களில் வாழ்ந்த வாழ்கின்ற படைப்பாளிகளின் நூல்களை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர்.

இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ‘கவிதைத் திருவிழா’வும் நடத்துகின்றனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த - மூத்த, முத்திரை பதித்த கவிஞர்கள் வரவழைக்கப்பட்டு - புதிதாக எழுதப்பட்ட நெடுங்கவிதையொன்றை பல்லாயிரம் மக்கள் முன்பு வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள்.

ஆயிரம் சினிமாக்களும், தொலைக்காட்சி களும், இணையதளமும் சேர்ந்தாலும் ஆசைப் பட்ட புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி பஸ்ஸிலும், ரயிலிலும் உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் படித்து அசை போடுகிற சுகத்தை கொடுத்துவிட முடியாது.

ஈரோடு புத்தகத் திருவிழா போல, தமிழகத்தின் அத்தனை பெரு நகரங்களிலும், ஸ்டாலின் குண சேகரன் போன்ற பொதுநலம் பேணும் இளைஞர்கள், வருங்காலத்தில், திருவிழாக்களை நடத்தி அறிவுச் செல்வத்தை பெருக்கிட வேண்டும் என்று மனமார வேண்டி அவர்களுக்கு வாழ்த்துச் சொல் கிறேன்.

Pin It