ஈரோடு மாவட்டமும் காலிங்கராயன் என்ற பெயரும் பிரிக்க முடியாதவை. மாவட்டத்தின் ஒரு பகுதி முழுவதும் மஞ்சளாக விளைந்து செழிக்க வலுவான காரணம் காலிங்கராயன் பாசன வாய்க்கால்.

பவானியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து பிரியும் காலிங்கராயன் பாசன வாய்க்காலில் ஆண்டில் பத்து மாதங்களுக்கும் மேலாகத் தழும்பத் தழும்பத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும்.

இந்த வாய்க்காலுக்குப் பின்னால் வெவ்வேறு விதமான வரலாறுகள். வெறும் கதைகளோ என்றும் எண்ணச் செய்யும் தகவல்கள். ஆனால், மறுக்க முடியாத உண்மை, தொலைநோக்குடன் இந்தத் தடுப்பு அணையைக் கட்டி வாய்க்காலை வெட்டியவர் - காலிங்கராயன்.

பவானியில் தொடங்கி நொய்யல் வரை கோணல் மாணலாகச் சென்று, வழியெங்கும் கொங்கு மண்ணைச் செழிக்கச் செய்கிறது காலிங்கராயன் வாய்க்கால்.

இந்தக் கோணல்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு காரணம் கூறப்படுகிறது. வாய்க்கால் தொடங்கு மிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். முடிகிற இடமான நொய்யலில் 412 அடி. நேர்க்கோட்டில் தொலைவு 50 கி.மீ. இரண்டுக்கும் இடையேயுள்ள மேடு பள்ளம் காரணமாகத் தண்ணீர் விரைந் தோடிவிடுவதைத் தடுத்து வேகத்தைக் குறைப்பதற்காகவே இத்தனை கோணல்கள்.

 வளைந்து வளைந்து செல்வதால் வாய்க்காலின் நீளமும் சுமார் 90 கி.மீ. ஆக வளர்ந்து, இருபுறமும் பயனடையும் பரப்பும் அதிகரிக்கிறது. அன்றைய தமிழனின் தொழில்நுட்ப சாதனை!

தற்போது காலிங்கராயன் பாசன வாய்க்காலில் 786 மதகுகளின் வழியே பதிவு செய்யப்பட்ட 15,743 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. உண்மையில் பதிவு செய்யப் படாத நிலங்களின் பரப்பும் மேலும் சிலபல ஆயிரங்கள் இருக்கும்.

யார் இந்தக் காலிங்கராயன்? காலிங்கராயனின் கதைதான் என்ன? அறிந்துகொள்ள நமக்குப் பேருதவி யாக இருக்கிறது, ‘ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி’!

இந்த வமிசாவளியில் ஒன்றேபோல இருந்தாலும் இரண்டு பகுதிகள் என்று கூறலாம். முதல் பகுதி, காலிங்கராயன் பெயர்க் காரணமும் காலிங்கராயன் வாய்க்கால் உருவான கதையும். இரண்டாம் பகுதியில் காலிங்கராயன் பரம்பரையில் நேரிட்டதொரு வீழ்ச்சியும் பின்னர் எழுந்துநின்று நிலைப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வமிசாவளி, அதே தமிழில்.

•••

ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுகா ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயன் கவுண்டர் எனப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது:

என்னவென்றால்:-

பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திபட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அறுபதுனாயிரம் கோத்திரக்காரர்களில் பிற்காலம் - ரிஷபகிரி - சோழராஜா மகளை முரை சரிந்த சேர ராஜா பாணிக்கிரஹணம் பண்ணிக்கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தியெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்த படியினாலே - அப்போ வரப்பட்ட வேளாளருக்கு - தென்திசை நோக்கி வந்தபடியினாலே – தென்திசை வேளாளரென்று பேர் வரப்பட்டது.

சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு - சேரனுக்கு கொங்கணரெண்ணும் பேர் இருக்கிற படியினாலே - கொங்கு வேளாளரென்றும் - கொங்கு இருபத்தினாலு நாடுயென்றும் - யேற்படுத்தி இறுக்கும் நாளையில் - அக்காலத்தில் - யென் வம்சஸ்தனான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரைநாட்டுக்கு காணியாள (னுஇ) (னுக்கு) மேல்கரை முப்பத்தி ரெண்டு கிறாமத்துக்குச் சேர்ந்த - வெள்ளோடு குடியிருப்புக் காரனாயி - தம்முடய இஷ்ட தெய்வமான - சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சாற் - தேவஸ்தானம் சீறனேதாரணம் பண்ணிக்கொண்டிருந்தான்...

பூந்துரை னாட்டுக்கு - னட்டானஇ - வெள்ளோட்டு குடியிறுப்புக் காரனஇ யிருக்கும்னாளையில் - கங்கை குலம் - சரதந்த கோத்திரம் காலிங்ககவுண்டன்- யென்குங்குர - தன்னுடைய குமாரனுக்கு – கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு - மாமன் மச்சுனனான - பண்ணகுலத்தாளி வீட்டுல - பெண் கேட்டு கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு –பெண் சம்மதமாகி அந்த றாத்திரி சாப்புடுகுரதுக்கு சமயல் பண்ணுகிறவன் வந்து இவற்களுக்கு சமயல் பண்ணு குரதுக்கு யெந்த அரிசி போடுகிறது யென்று கேட்க அவாள் கம்பு வெளயிற சீற்மையிலேயிருக்கிற பேர்களுக்கு யெந்த அரிசி யென்று தெரிய போகுது பரறசிதானே போடு போவென்று சொல்ல அதுசேதி மேற்படி காலிங்க கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்புடாத படிக்கு இறுந்து நெல்லு வெளையும்படியாக நீர் பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகுரோ மென்று செபுதம் கோறிக்கொண்டு வந்துதம் வூருலே வந்துசேர்ந்து மனதிலே சூடு தோணி இருக்கும் நாளையில் இவர் இஷ்ட தெய்வமான சர்வேஸ்வரரை தன்னுடைய அபீஷ்டம் சித்த வேணுமென்று நினைச்சுயிருக்கு வேளையில் றாத்திரி சொப்பனத்திலே ஒரு விருத பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போற வளியாக வாக்கியால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாக சொப்பணமாச்சுது அந்த சொப்பன மானவுடனே கண்முளிச்சு பாற்கும் மிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக யிருந்து தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பனத்தை கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடு விட்டுவெளிஇலே வந்த சமயத்தில் சற்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்த சற்ப்பத்தைத் துடர்ந்து போய்யிந்த வழியாக போகுதென்ரு அடையாளங்கள் போட்டுக்கொண்டு வருகிற போது கொடுமுடி சேத்திரத்திலே சற்ப்பம் நிண்ணுது.

அந்த சற்ப்பம் போன போக்குலே வாக்கியாலு வெட்டி வைக்க வேணுமென்று னினைச்சு பவானி ஆத்தில குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைச்சு யிருந்த சமயத்தில் பவானி கூடல் ஸ்தளத்துக்கு மேல் புறத்தில் பவானி யாத்துல சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த யிடத்துலே அணைக் கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கே வடக்கை வூறாச்சி மலையும் தடமும் சுத்த கிறயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்தில் வெள்ளை வேட்டுவற்யென்ங்குற பாளையக்காரன் அணை கட்டுகுர யெல்லை தன்னதென்று சண்டை பண்ணின படியினாலே வெள்ளை வேட்டுவரை செயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சற்பம் போகியிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாக்கியால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாக்கியால் வெட்டி வச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தளத்து ஆத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சற்ப்பம் போன போக்குலே வாக்கியால் வெட்டின யேளு காத வழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.

அந்தச் சற்ப்பம் போக்குலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆத்துலே - சற்ப்பம் படுத்துயிறுந்த இடத்துல - அணையும் கட்டி விச்சு படியினாலே காளிங்க கவுண்டன் யென்னும் பேற்வரப்பட்டு பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபுத்தம் கோறியிருக்கப்பட்ட பெண்ணை குலத்துல தன்புள்ளைக்கு கலியாணமும் செய்துகொண்டு அம்ச புராணமாயி தெய்வ கடாட்சத்துனால சற்ப்பத்து னாமதேயமான காளிங்கரென்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்ற நாமதேயமும் இரண்டு நாமதேயமும் சேர்ந்து காளிங்க கவுண்டர் யென்குர பேற் பிறசுத்திப் பவறாயி தான் கட்டிவச்ச அணைக்கு காலிங்க கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியா லென்றும் தான் உண்டு பண்ணின நீற்ப்பாங்கு நிலத்தில் வெளயப்பட்ட காலிங்க நெல்லுயென்று வெளயப் பண்ணி சம்மந்த பாத்தியங்களுஞ் செய்துகொண்டுயிருந்தான்.

இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்கு கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபுதம் கோரி தீட்சை வளைத்துக்கொண்டு யிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நெறவேறி யிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக்கொண்டு யிருக்கிற சமயத்திலே ஒரு னாசுவண் திட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக்கண்ணாடியை யெதிரே வச்சு வணக்கத்துடனே நிண்ணுக்கொண்டு யிருந்தான். நித்திரை தெளிஞ்சி நெலை கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷகாறம் மாகியிருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டார். அந்த னாசுவன் யென் பேர் வெளங்கியிறுக்கும்படியாக பண்ண வேணுமென்று மனுவு கேட்டுக்கொண்ட படியினாலே தாம் கட்டுவிச்சு அணையோடும் தான் இறுக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்பிறம் நாசுவன் பேறாலே வூரு உண்டுபண்ணி னாசுவன்பாளையமென்றும் பேர் விளங்க பண்ணி அந்த னாசுவனுக்கு அந்த பாளையம் சர்வ மானியமாகக் கொடுத்தார்.

இப்படிக்குக் காலிங்கறாயக் கவுண்டர் யென்கிற பேர் பிறசித்திப் பெற்றவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக் காரராயி பூந்துறைனாட்டு நாடாதி பத்தியம் தாம் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு புள்ளை புள்ளை தலைமுறைக்கும் காலிங்க கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய்யிறுந்தார்கள்.

பவானி கூடலுலே கலிங்கக் கவுண்டன்யென் கிறவன் அணை கட்டி வச்சு மேற்பிடுறத்தி பண்ணினது. கலியுக சாகாபுதம் 2000 காலிங்க கவுண்டன் கட்டி யிருக்கப்பட்ட அனைஇலே மேற்படி கவுண்டனையும் சற்ப்பத்தேயும் சிலா பிறதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலாசாசனமும் யெளுதியிருக்குரது அந்த அணை போட்டு யிறுக்கப்பட்ட இடத்தில் குடிகள் பறம்பரையாஇ வருஷயிறுதியும் உச்சவம் பண்ணிக்கொண்டு வருகுரது வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிறதிமைக்கி பூசை நெய்வேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை வெளஞ்சுக்கொண்டு வருகிறது.

இப்படி ஈஸ்வரர் அனுக்கிறஹத்துநாலே மூர்த்தி கரம் உண்டாகியிருக்கிறது. இஸ்வறா அனுக்கிறஹத்துனாலே காலிங்க கவுண்டன் யென்ங்குர அம்சை புறுஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க கவுண்டற்யென்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது.

2

இப்படி காலிங்க கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துரை னாடாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே கொங்கு இருவத்தினாலு நாட்டுக்கும் பட்டக்காற்களாகி யிறுக்கப்பட்டவற்கள் சரியிருப்பும் சரிமறியாதிகளும் குடுக்கப்படாது யெந்று சொன்னதுனாலேயும் பூர்வத்தில் சேரமாம் பெறுமாள் சா(த்)தந்த கோத்திரகாற்களுக்கு கார் விடிக்கை நாடு பிறவும் பண்ணிக்கொடுத்து யிறுக்கிற படியினாலேயும் நாட்டு, பட்டக்காரர்கள் சரிமரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்ட படியினாலே வெள்ளோடு விட்டு மணவெருப்புனாலே ஆணைமலை சரிவிலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கநாடு காடு கொண்டு வனமாயிருந்ததில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகுரதுக்காக தங்கள் சனங்கள் இருந்த படியினாலே காவிடிக்க நாட்டு வனத்துக்கு வந்து மாடுகளையும் பாத்து மா(ட்)டுகளுக்கு சமரட்சணைக்காக பட்டிகளும் போடுவிச்சு அஞ்சாறு காளைகளும் கட்டிவிச்சு கொங்குயிருவத்திநாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும் இவற்களுக் கெல்லாம் அதிகமறியாதெகள் உண்டுபண்ணிக் கொள்ள வேணுமென்று நினைச்சு றாயசமுஸ்தானத்துக்குப் போனார்.

றாய சமுஸ்தானத்தில் காத்துக்கொண்டுயிருக்கும் நாளையில் பனிரெண்டு வருஷம் வரைக்கும் றாயரவர்கள் பேட்டியில்லாமல் கய்யிலே கொண்டு போன திரவியங் களெல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக் கொண்டு அதிவெஸனத்தை அடஞ்சவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிராத்தனைச் செய்துகொண்டு மனவயிரத்தை அடஞ்சவனாய் பெனுக்கொண்டை பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் செத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார்.

சுத்தவுபவாசத்துடனே காளி கோவிலிலே யிருக்கப்பட்ட காலிங்க கவுண்டன் சொப்பனத்துலே பனிரெண்டானாள் றாத்திரி றாயர் குமாரனுக்கு சித்த பிறம்மை பிடுச்சு அது னிவாரணம் யில்லாமல் யிருக்கிற படியினாலே நீ என்னுடைய சன்னியதானத்தில் இருக்கப் பட்ட விபூதியைக் கையிலே கொண்டு போய் அந்த சித்த பிறமையாயிருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்த பிறமை தீந்து றாசகுமாரனாக அரமனை போய் சேர்ந்து யிருப்பான் றாயர் அவர்கள் உன் பேரிலே சந்தோஷமாய் உன் மனோ பீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பனமாச்சுது.

அந்த சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரென்று நாள் பட்டினியிருக்கப்பட்டவன் விபூதியெடுத்துக் கொண்டு பெனு கொண்ட பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பாத்துக்கொண்டு வறுகுர சமயத்தில் றாசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிறமை பிடிச்சு தன்னப்போலே திறியுர குறிப்பை கண்டு பிடிச்சுறாசகுமாரன் பேறிலே காளியெ நினைச்சு விபூதி போட்டன் அந்த விபூதி தூளி றாசகுமாரன் பேறிலே விளுந்தவுடனே சித்த பிறமை தெளிஞ்சவனாய் றாச சின்னம்ங்களுடனே அரமனைக்குப் போய்ச்சேர்ந்தார்.

அக்காலத்தில் நரபதி சிம்ஹ ஸனாதிபதியான பெனு கொண்டை விசயநகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்கு சித்த பிறமை விடுதலை பண்ணினவனை தரிவிக்கச் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்திரவு செய்த படியினாலே அந்தச் சமயத்தில் தரிவிச்சு றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத்துனாலே காலிங்க கவுண்டனை பாத்து உன் சென்மபூமி முதலான விர்த்தாந்தம் என்ன வென்று கேட்குமிடத்தில் பவாநி கூடல் சமீபத்தில் உண்டு பண்ணின அணை வாக்கியால் வரலாறு முதலாகிய சங்கதிகளும் தெயிவ கடாச்சயத்துனாலே காலிங்க கவுண்டன் என்ற பேர் வரப்பட்ட வரலாறும் கொங்கு இருவத்தினாலு நாட்டுலே பட்ட குறுப்பு காரற்களை பாளையக்காற் சமானவசி மறியாதிகள் தாள்வு நடக்கப் பட்டு சமுஸ்தானத்துலே காத்து கொண்டுயிருந்து காளிகாதேவி அனுக்கிரஹம் பண்ணின நாள் வரைக்கும் வரலாறு அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்ன வென்று கேட்டார்கள்.

அப்பொ பேற் அறிய பண்ணிக் கொண்டபடியினாலே றாயற் அவர்கள் உத்திரவு செய்து என்னுடைய வம்சம் உத்தாரம் பண்ணியிறுக்குறபடியினாலே யென்னுடைய பேற் தெயிவ கடாட்சயத்துனாலே உண்டாகிய பேருடனே றாச கடாட்சயத்துனாலே குடுக்கப்பட்ட றாச சபுதத்துடனே காலிங்கறாய கவுண்டன் யென்று பேர் வச்சு உனக்கு யென்ன வேணுமென்று கேட்டார்கள். அந்தசமயத்தில் யென் காணியாட்சியான ஆனைமலை சாற்வுலே கானிக்கை நாடு யென்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக்கொண்டார்.

றாயரவர்கள் கடாட்சம் செய்து யாளி, சிமஹல்லா பல்லாக்கு, உபய சாமரம், சுறுட்டி, சூறியபான ஆல வட்டம், வெள்ளைக் கொடை பச்சைக்கொடை, பஞ்சவர்ண கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனும டால், கெறுட டால், மகர டால் பசவங்கர டால் பஞ்சு வற்ன டால், ஆனை மேல் பேறிகை, ஒட்டகை மேல் நகாறு, குதிரை மேல் டங்கா, யெருது மேல் தம்பட்டம், தாரை, சின்னம், யெக்காளம், பூரிகை, சிக்குமேளம் இது முதலான வாத்தியங்கள் பிறுதுகளும் கொடுத்து ரண பாஷிகாம் கலிகிதுறாயி, முத்தொண்டி, பஞ்சொண்டி, ஒண்டிரெக்கு வீர சங்கிலி, னாக்ககாணும் புவி சேறமம், கரடிமயிற் வக்கியபிரீ, தங்கனிகளம், வீரகண்டாமணி, சாமதுரோஹாவெ(ண்)டையும் தங்க மிஞ்சு யிது முதலான ஆபரணங்கள் எல்லாம் அலங்கறிச்சு குதிரைக்கு புலி தோல் மொமட்டு, அண்ட கல்வி, முகசல்லி, பக்கசல்லி, கால்தண்டை கலிகிதுறாயி இது முதலான ஆபரணங்கள் தறிச்சு பட்டத்து குதிரையென்று நெமுகம் செய்து பட்டண பிறவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சறிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மானசதாரனாக ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வர வேணுமென்று பட்டாபிஷேகம் செய்துபட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமர காரரை மேமுகம் செய்து இரட்ட வாள், பச்ச ஈட்டி, கறீட்டி, வெள்லி ஈட்டி, தங்க கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீனா மானுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள்.

முன்னாலே நாகூர் பாளைப்பட்டு பட்ட குறுப்புக்காற்கள் சரிசமான மறியாதெ குடுக்கரது யில்லை யென்று சொன்ன மனவெறுப்பு னாலே றாயசமுஸ்தானத்திலே காத்துயிருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிறுதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக்காரனாக காலிங்க ராய கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப்பட்டராய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனைமலை சறவுலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட யிடத்தில் சேர்ந்து அரமனையுங் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாக தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குளிகள் இருக்கப்பட்ட யிடத்தில் ஊர் கட்டி விச்சபடியினாலே ஊத்துக்குளியென்று கிராம நாமதேயம் உண்டாய் ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள்.

இராயர் சமுஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டு பாளையப்பட்டு உண்டான னாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1712 வரைக்கும் ஆண்டு 582க்கு பட்டங்களுடைய வரிசைகளையும் அவாளவாளுடைய சறியேகளும் இதன் கீளே எழுதி வருகிறது.

வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் காலிங்கராய னென்கிற பேர் வமுச பரம்பரையாய் பட்டகார்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது. காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன்.

தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கு வாய்க்காலும் வெட்டிவிச்சு அணையும் கட்டிவிச்சு காலிங்கராய னென்கிர பேர் பிரசித்திப்பட்டு வமுசா பிவிற்த்தியிலே காலிங்கறாய் னென்கிறவர் காவிடிக்க மனசுபுதாராறாயி காலிங்கறாயர் னென்கிற பேரிலை ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அனைவருடைய னாள் வரைக்கும் வெகுகாலமான படியினாலே வமுசங்கள் ஒளுகாயிதெறி(ய) வில்லை அணைக்கும் வாக்கியாலுக்கும் காலிங்கராயன் அணையென்றும் காலிங்கராயன் வாக்கியால் என்றும் பேர் பிரசித்தி படலாச்சுது.

•••

காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வம்சாவளி கூறுவதைப் போலக் கொண்டால் கி.மு. 1101 என்றாகிறது. ஆனால், கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில்தான் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. கி.பி. 1800- இல் வாய்க்காலைப் பார்வையிட்ட புகானன், 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்டதாகப் பதிந்துள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள், கிடைக்கும் வரையிலான சான்றுகளின்படி, கி.பி. 1265-இல் வீரபாண்டிய மன்னனின் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கிய காலிங்கராயன், கி.பி. 1270 ஆண்டு தொடங்கி, 12 ஆண்டு காலத்தில் வாய்க்காலை வெட்டி முடித்துள்ளார். சாலிவாகன சகாப்தம் 1203 கலியுக சகாப்தம் 4382 விய வருஷம் தை மாதம் 5 ஆம் தேதி, அதாவது கி.பி. 1282 ஆம் ஆண்டில், வாய்க்கால் பணி நிறைவு பெற்றதாக ஜமீன் ஊத்துக்குளி அகத்தூரம்மன் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

காலிங்கராயன் வாய்க்கால் மூலம், நதிகள் இணைப்பின் முன்னோடியாக, பவானி ஆறும் நொய்யலும் இணைக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து மலையம் பாளையம் பிரிவு வாய்க்கால், பெரிய வட்டம் வாய்க்கால், ஆவுடையார்பாறை வாய்க்கால் என மூன்று கிளைகள் பிரிகின்றன.

உறுதிபடத் தெரிய வராத ஏதோ ஒரு காரணத்தால் வாய்க்காலை வெட்டிய காலிங்கராயனோ அவர் குடும்பமோ அல்லது அவருடைய சாத்தந்தை கோத்திரத்தைச் சேர்ந்த பங்காளிகளோ காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தால் பயன் பெறவில்லை என்றொரு தகவல் இருக்கிறது. பூந்துறை நாட்டிலிருந்த காலிங்க ராயன், வாய்க்காலை மக்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, உறவினர்களை இந்தப் பாசனப் பகுதிகளிலிருந்து வெளியேறப் பணித்துவிட்டு, குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊற்றுக்குழிக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வமிசாவளியிலும் ஏதோ மரியாதைக் குறைவு காரணமாக நாட்டைவிட்டுக் காலிங்கராயன் வெளியேறிய தகவல் இடம் பெற்றிருக்கிறது.

காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன். யாராக இருந்தாலும் இன்றும் என்றும் ஈரோடு மாவட்டத்தின் செழிப்பில் இடம் பெற்றிருக்கும் பெயர் காலிங்கராயன், அவர் வெட்டிய வாய்க்காலில் வழிந்தோடும் நீரால்!

சான்றுகள்:

1) பாளையப்பட்டுகளின் வமிசாவளி - தொகுதி 1, தொல்லியல் ஆய்வுத் துறை, தமிழ்நாடு அரசு

2) காலிங்கராயன் கால்வாய் / புலவர் செ. இராசு

3) காலிங்கராய கவுண்டரின் கதை / எம். பாண்டிய ராஜன் / தினமணி - பெரியார் மாவட்டச் சிறப்பிதழ்/ 31.3.1997

Pin It