msv 533

என்பாடல் பசி தீர்க்கும் விருந்தாகலாம்!

என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்!

மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் சொல்லி விட்டுப்போன செய்தி என்ன?

எம்.எஸ்.வி சிறுவயதிலேயே இசை கற்றிருந்தாலும் நடிகனாகவேண்டுமென்றுதான் எலப்புள்ளிகிராமம், பாலக்காடு மாவட்டம், கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். நடிப்பதற்கான வாய்ப்பே காணக்கிடைக்காத சூழ்நிலையில் கோயம்புத்தூரிலிருந்த ஜூபிடர் கம்பெனியில் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் பணியாளராகச் சேர்கிறார். அவரது இசை யமைப்பு வேலைகளைக் கவனிக்கிறார். ஆர்மோனியம் கற்றுக்கொள்கிறார். பின்னர் 1948-இல் சென்னைக்கு வந்து சி.ஆர்.சுப்புராமனிடம் ஆர்மோனிய வாத்தியக்காரராக வேலைக்குச் சேர்கிறார். திடீரென சி.ஆர்.சுப்புராமன் மரணமடையவே, அவர் இசையமைத்து பாதியில் நிற்கின்ற பாடல்களை முடித்துத்தரச்சொல்லி படத் தயாரிப்பாளர்கள் பணிக்க, அதை ஏற்று ராமமூர்த்தியை துணையாக வைத்துக்கொண்டு அவரது படங்களை முடித்துக் கொடுக்கிறார்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ஜெனோவா’ எனும் பைபிள் கதைப்படத்தினில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுக மாகிறார். பின்னர் 1952-இல் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, இயக்கிய படமான ‘பணம்’ படத்தின் மூலம் பி.ராமமூர்த்தியுடன் இணைந்த இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம்தான் பராசக்திக்கு முன்பாகவே சிவாஜிகணேசனை அறிமுகம் செய்வதற்காக ஒப்பந்தமான படம்.

இப்படி எம்.ஜி.ஆருடனும் சிவாஜியுடனும் ஒரே நேரத்தில் அறிமுகமானவர் எம்.எஸ்.வி.

* * * * * * * *

இசையைக் கேட்பதின் மூலமும் பாடல்கள் உருவாவதைப் பார்ப்பதின் மூலமும் திரை இசை அமைக்கும் வேலைகளைக் கற்றுக்கொண்டு சாதனை யாளராக உருவானவர் எம்.எஸ்.வி. அவர் காலத்திய பிறவிக் கலைஞர்களெல்லாம் எந்த மூலையில் இருந்தார்களென்று தெரியவில்லை. கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால், இசைத்துறையிலும் யாராலும் சாதனையாளராக மாறமுடியும் என்பதுதான் இன்றைய இளம் இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ்.வி. தரும் செய்தி.

* * * * * * * *

புராண இதிகாசக் கதைப்படங்கள் எம்.எஸ்.விக்கு அதிகமாக அமையவில்லை. அந்தப்பகுதி முழுவதும் கே.வி.மகாதேவனுக்குரியதாகவே இருந்தது. சம்பூர்ண ராமாயணம் (வீணைக்கொடியுடைய வேந்தனே, இன்று போய் நாளை வாராய்), திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால்பெருமை, கந்தன் கருணை, மகாகவி காளிதாஸ் (இப்படங்களுக்கு பாடல் உதாரணங்கள் தேவையில்லையல்லவா) ஆகிய எல்லாப் படங்களுமே கே.வி.எம்.தான். எம்.எஸ்.விக்கு அமைந்தது ஒன்றோ இரண்டோதான். ஆனால் அதிலும் அவர் செய்த பங்களிப்பு (ராமமூர்த்தியுடன் இணைந்து) மறக்க முடியாதது. உதாரணம்: கர்ணன், கண்கள் எங்கே, நெஞ்சமும் அங்கே / கண்ணுக்கு குலமேது / என்னுயிர்த் தோழி கேளடி சேதி / இரவும் நிலவும் வளரட்டுமே / ஆயிரம் கரங்கள் நீட்டி / உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பாடல்களும் படத்தின் பின்னணி இசையும் எப்போதுமே இசையமைப்பாளர் களுக்கான பாடப்புத்தகம்தான்.

ஆனால் வரலாற்றுக் கதைப் படங்கள் மற்றும் மன்னராட்சி காலத்துப் புனைகதைப் படங்கள் எம்.எஸ்.வி-க்கு நிறையவே அமைந்தன. குறிப்பான படம். சிவகங்கைச் சீமை. (தொடக்க இசையிலேயே கலகலக்கின்ற; சாந்துப்பொட்டு சலசலங்க, சந்தனப் பொட்டு கமகமங்க! / பேரழிவை முன்னறிவிக்கின்ற; தென்றல் வந்து வீசாதோ, தெம்மாங்கு பாடாதோ! / போர்க்களம் நோக்கும் ராணுவ அணிவகுப்பை வழி நடத்துகின்ற; சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை / வீர முறுக்கினை செருக்குடன் தொடுக்கின்ற; வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது)

குழுநடனப் பாடல்களுக்கான குழுக்குரலிசையில் எம்.எஸ்.வி தனித்துவம் வாய்ந்தவர். படம் பாசமலர். பாடல், “வாரா யென் தோழி வாராயோ” பாடலின் தொடக்க இசை எப்போதும் பரவசமூட்டக்கூடியது. “பாட்டொன்று கேட்டேன். பரவசமானேன். நானதைப் பாடவில்லை,” அதே படத்தில் அமைந்த இப்பாடலின் இடையிசையும் அவ்வாறானதே.

* * * * * * * *

இளையராஜாவிடம் தனித்துவமான பாடல்கள் பல உண்டு. அதில் எம்.எஸ்வியுடன் இணைந்து இசை யமைத்த பாடல்களும் இடம்பெறுகின்றன. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தின் பாடல்கள் வெளிவந்த நேரத்தில் எம்.எஸ்.வியின் சொந்தப்படம் என்பதால் சும்மா பேருக்கு எம்.எஸ்.வி-யின் பெயரையும் இளையராஜாவின் பெயரோடு இணைத்துள்ளார்கள் எனப் பலர் பேசினார்கள். அது உண்மையில்லை என்பதை அப்படத்தின் பாடல்களே நிரூபித்தன. பாடல்களை எம்.எஸ்.வி அமைக்க இசையை இளையராஜா அமைத்துள்ளதாக அதில் பங்கெடுத்த பலரும் தெரிவித்துள்ளனர். “குழலூதும் கண்ணனுக்கு / வா வெண்ணிலா / ஊருசனம் தூங்கிருச்சு / தில்தில் தில்தில்.... மனதில்” அந்த அபூர்வமான இசைக் கோர்ப்பும் குரலினிமையும் இணைந்த பாடல்கள் இசையார்வலர்களுக்கு எப்போதும் விருப்பப் பாடங் களாகவே இருக்கும். அதுபோலவே அடுத்த படமான செந்தமிழ்ப்பாட்டு: வண்ண வண்ண சொல்லெடுத்து (ஜிக்கி)/ சின்னச்சின்ன தூறல் என்ன / கோமாதா (தொடக்க இசையைக் கவனிக்க).

இன்றைய இசை ரசிகர்கள்மீது எனக்கு ஒரு அனுதாபம் உண்டு. பாபநாசம் சிவன் / தியாகராஜ பாகவதர் (கிருஷ்ணா., முகுந்தா., முராரே.,) / எஸ்.ராஜேஸ்வரராவ் (பிருந்தாவனமும் நந்தகுமாரனும்)/ சி.ஆர்.சுப்புராமன் / சுதர்ஸன் / பெண்டியாலா நாகேஸ்வரராவ் (ஆண்கள் மனமே அப்படித்தான், 1958) / எம்.டி.பார்த்தசாரதி / மாஸ்டர்வேணு (ஆகாய வீதியில்) / கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் (துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே) / வி.தட்சிணாமூர்த்தி (ஆண்டவன் இல்லா உலகம் எது) / எஸ்.தட்சிணாமூர்த்தி (மாசிலா உண்மைக்காதலே) / ஆதி நாராயணராவ் (அழைக்காதே நினைக்காதே) / டி.பி.ராமச்சந்திரன் 1967 (பியூட்டிஃபுல், மார்வலஸ், எக்சசெலண்ட்) / டி.சலபதிராவ் 1956 (தேன் உண்ணும் வண்டு) / ஏ.எம்.ராஜா (பாட்டுப்பாடவா) / விஜயபாஸ்கர் (அன்பு மேகமே) / சலீல் சௌத்ரி (பூவண்ணம் போல நெஞ்சம்) / டி.கே. புகழேந்தி (நீலமாங்கடலைகள்) / எம்.பி.சீனிவாசன் 1974 (வானம் நமது தந்தை) / வேதா 1958 (டிங்கிரிடிங்காலே மீனாட்சி) / எல். வைத்தியநாதன் (அருள்வடிவே பரம்பொருள் வடிவே) / ஜி.தேவராஜன் 1971 (நீலக்கடலின் ஓரத்தில்) / வி.குமார் (உன்னிடம் மயங்குகிறேன்) / ஜி.கே.வெங்கடேஷ் (தொடுவதென்ன தென்றலோ மலர்களோ) / சங்கர் கணேஷ் (உனது விழியில் எனது பார்வை).... போன்ற பலரின் பாடல்கள் இப்போதும் கேட்கக் கிடைத்தாலும் இன்றைய ரசிகர்கள் அதை விரும்பிக் கேட்க முயல்வதில்லை. இன்றைய பாடல்களின் இனிமையைப் பழைய பாடல்களைக் கேட்ட பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். பழைய பாடல்களை அவர்கள் கேட்க மறுக்கிறார்கள். அது அவர்களுக்குத்தான் மாபெரும் இழப்பு.

* * * * * * * *

எம்.எஸ்.வி-க்கு தனது குரல் வளமானதாக அமையவில்லையே என்கிற ஏக்கம் இருந்ததாகத் தெரிகிறது. நீ இல்லாத இடமேயில்லை... (அல்லா, அல்லா) (முகம்மது பின் துக்ளக்,1970 - முஸ்லீம்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கில் துக்ளக் எடுத்த படம் இது. படம் படுதோல்வி. ஆனால் எம்.எஸ்.வியின் இப்பாடல் முஸ்லீம் அல்லாதவர்களை முஸ்லீம்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தக்கூடியது) / உனக்கென்ன குறைச்சல் (வெள்ளிவிழா, 1972. இசை: வி.குமார்) / எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே! (சிவகாமியின் செல்வன், 1974 - his master voice peace)/ கண்டதைச் சொல்லுகிறேன் (சில நேரங்களில் சில மனிதர்கள், 1976, ஜெயகாந்தன் எழுதிய பாடல்) / எனக் கொரு காதலி இருக்கின்றாள் (முத்தான முத்தல்லவோ, 1976 - super hit song) / தர்மத்தின் கண்ணைக்கட்டி நகரத்தில் ஆடவிட்டு இதுதானே நாகரீகம் என்பார் (பட்டிணப்பிரவேசம்) / சம்போ, சிவசம்போ (நினைத் தாலே இனிக்கும் 1979) / ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க! (சங்கமம் 1979, இசை: ஏ.ஆர்.ரகுமான்)...

இந்தக் குரலை உங்களால் மறக்கமுடியுமா?

* * * * * * * *

பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குகிற பழக்கம் கொண்டவரா நீங்கள்? இதோ உங்களுக்காக ஒரு எம்.எஸ்.வி வரிசை:

மாலைப்பொழுதின் மயக்கத்திலே (பாக்யலட்சுமி)/ ஒருநாள் இரவு பகல் போல் நிலவு (காவியத்தலைவி) / இந்த மன்றத்தில் ஓடி வரும் (போலீஸ்காரன் மகள்) / மனிதனென்பவன் தெய்வமாகலாம் (சுமைதாங்கி) / தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (ஆலயமணி) / அத்தான் என்னத்தான் (கற்பகம்) / ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் (பாலும் பழமும்) / யார் அந்த நிலவு (சாந்தி) / what I waiting, what I waiting (நினைத்தாலே இனிக்கும்)., போதும், எப்போதோ நீங்கள் தூங்கியிருப்பீர்கள்.

* * * * * * * *

தூங்காமல் இருப்பதற்காகப் பாடல்கள் கேட்கின்ற பழக்கமுடையவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவும் ஒரு எம்.எஸ்.வி வரிசை:

கண்மணிப் பப்பா (சந்திரபாபு) / அன்று வந்ததும் அதே நிலா (பெரிய இடத்துப் பெண்) / ஒரு பெண்ணைப்பார்த்து (தெய்வத்தாய்) / அவளுக்கென்ன அழகிய முகம் (சர்வர் சுந்தரம்) / கேட்டவரெல்லாம் பாடலாம் (என் தங்கை) / பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் (கண்ணன் என் காதலன்) / அதோ அந்தப் பறவைபோல (ஆயிரத்தில் ஒருவன்) / நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்றும் வாழ்விருக்கும் (நெஞ்சிருக்கும் வரை) / ஹேய்.., ஹேய்.., நாடோடி.., நாடோடி.., (அன்பே வா) / உலகம், அழகுக் கலைகளின் சுரங்கம் (உலகம் சுற்றும் வாலிபன்)... போதும். ஆனால், ஒரு வேளை இப்பாடல்களைக்கேட்ட உற்சாகம் தந்த களைப்பினால் நீங்கள் தூங்கியிருக்கவும் கூடும்.

* * * * * * * *

ஒரு இசையமைப்பாளரின் இறங்குமுகம் என்பது அவர் இசையமைப்பதற்கு படங்கள் வராத நிலை ஏற்படுவதும்; அவர் முன்பு இசையமைத்த பாடல் களோடு தற்போது இசையமைக்கும் பாடல்களை ஒப்பிடுகையில் புதியது பின்தங்கி இருப்பதும் ஆன காலத்தைக் குறிக்கிறது. படங்கள் வராததை விட்டு விடுவோம். ஆனால் பாடல்கள் ஜீவனிழந்து நிற்பதை என்னவென்று சொல்வது?

இளையராஜாவின் வருகைதான் காரணமா? பலர் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் காரணம் அதுவல்ல.

ஸ்ரீதரும், கே.பாலச்சந்தரும் எம்.எஸ்.வி-யைவிட்டு விலகினர். ஏன்? அலைகள்; நினைத்தாலே இனிக்கும்; நூல்வேலி: இவற்றில் எம்.எஸ்.வி-யின் பிரமாதமான இசைக்குப்பிறகும் ஏன் இந்த விலகல் நடந்தது? இளையராஜாதான் காரணமா? அப்படியானால் எம்.எஸ்.வி-க்கு என்ன ஆயிற்று? சந்தை வியாபாரமா? இளையராஜாவின் இசை மீது அவர்களுக்கிருந்த கவர்ச்சியா? தாங்கள் விரும்பும் (இளையராஜாவின் இசை போன்ற) இசையை எம்.எஸ்.வியிடம் இனிமேல் எப்படி வாங்குவதென்று தெரியாத தயக்கமா? பின்னதுதான் மிகச்சரியாகப் பொருந்தக்கூடிய காரணம்போல் தோன்றுகிறது. எம்.எஸ்.வியினுடைய ரசிகர்களையெல்லாம் தட்டிப்பறித்த இளையராஜாவிட மிருந்து மீண்டும் எம்.எஸ்.வியிடம் ஓடிவரவைத்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதை இளையராஜாவின் ரசிகர்களாலேயே மறுக்கமுடியாது.

* * * * * * * *

தொடக்க இசை; பல்லவி; இடையிசை 1; சரணம்; இடையிசை 2; சரணம்; இறுதியில் மீண்டும் பல்லவி எனும் வரிசைக்கிரமத்தை ஆழமாக உறுதிப்படுத்தியது எம்.எஸ்.வி-தான். ஒரே நேரத்தில் வெளிவந்த மூன்று படங்கள். பாசமலர்; பாலும்பழமும்; பாவமன்னிப்பு. தமிழகம் அதில் மூழ்கிக் கிடக்க வில்லையா? இன்று அம்முறையானது மாற்றத்தினை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாலும் இன்னும் பலகாலத்திற்கு இருந்துவிட்டுத்தான் மாறும்.

தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான “நீராருங்கடலுடுத்த நிலமடங்கைக் கெழிலொழுகும்” பாடலின் ராகம் மறந்துவிட முடியுமா?

தண்ணீர் தண்ணீர் படத்தின் பின்னணி இசையும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். பி.சுசீலா; எல்.ஆர்.ஈஸ்வரி; டி.எம்.எஸ்; பி.பிஎஸ்; எம்.எஸ்.வி இல்லாது இவர்களை நினைக்க முடியுமா?

* * * * * * * *

வாணிஜெயராமை அறிமுகம் செய்த ஒரு காரியத்திற்காக மட்டுமே தமிழ் சினிமா இசை ரசிகர்கள் எம்.எஸ்.வி-க்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். (மல்லிகை என் மன்னன் மயங்கும் / கண்ணன் கோயில் பறவை இது / தத்திச்செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு / எங்கிருந்தோ ஒரு குரல்வந்தது / பொங்கும்கடலோசை / நினைவாலே சிலைசெய்து உனக்காக வைத்தேன் / அந்த மானைப் பாருங்கள் அழகு / விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் / ஆகாயத்தில் தொட்டில் கட்டி / கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் / இரவு முழுதும் எனக்கு உன்மேல் கண்ணோட்டம் / கண்ணன் முகம் காணக் காத்திருந்தாள் / மலைராணி முந்தானை சரியச்சரிய /...

* * * * * * * *

இளையராஜாவின் வருகைக்குப் (1976) பிறகு எம்.எஸ்.வியின் இசையமைப்பில் ஒரு புதுவிதமான தோரணை உருவானது. மெல்லிசையிலிருந்து சற்று மாறுபட்ட அடர்த்தியான வடிவத்தினில் பாடல்கள் வந்தன.

ருக்கு ருக்குரு ருக்குரு ருக்குரு ருக்குரு ருக்குரு ருக்குரு ருக்குரு ருக்குரு பம்பம்பம், பம் பம் பம், என் ராசாத்தி வாருங்கடி (திரிசூலம்) / நாலு பக்கம் வேடருண்டு (அண்ணன் ஒரு கோயில்) / பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ (சிரித்து வாழ வேண்டும்) / விடிய விடிய சொல்லித்தருவேன் (போக்கிரி ராஜா) / ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆச; பாட்டைக் கேட்டா கழுதைக்கு ஆச (ரத்தபாசம்) / கவிதை அரங்கேறும் நேரம் (அந்த 7 நாட்கள்) / மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே (வண்டிக் காரன் மகன்) / வீணை பேசும் அதை மீட்டும் விரல் களைக் கண்டு (வாழ்வு என் பக்கம்) / வானவில்லைப் போல எங்கும் (தர்மராஜா) / தங்கத்தில் முகமெடுத்து (மீனவ நண்பன்) / ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன் (வைர நெஞ்சம்) / மான் கண்ட சொர்க் கங்கள் (47 நாட்கள்) / இதுதான் முதல் ராத்திரி (ஊருக்கு உழைப்பவன்) / என்னை விட்டால் யாருமில்லை (நாளை நமதே) / மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை (சாவித்திரி 1980) / இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் (சரணாலயம்) / நீ வருவாய் என நான் (சுஜாதா 1980) / சோலாப்பூர் ராஜா, கோளாப்பூர் ராணி (சந்திப்பு 1982) /.....

* * * * * * * *

மெல்லிசை தவிர்த்த பாடல்களிலும் சில புதுமையான விசயங்கள் எம்.எஸ்.வியிடம் இருந்தன. நான் பொல்லாதவன் (பொல்லாதவன்) / மை நேம் இஸ் பில்லா (பில்லா) இப்பாடலின் இடையிசையினில் விசில் ஒலியினைக் கோத்திருப்பது நல்ல கற்பனை. குறிப்பாக ரஜினிகாந்த் எனும் நடிகரின் உடல் மொழிக்குப் பொருத்தமான தாளத்தை ஆரம்ப கட்டத்தில் அதிகமாக அமைத்தது எம்.எஸ்.வி-தான். (வெத்திலையைப் போட்டேண்டி / நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு / மை நேம் இஸ் பில்லா) இக்கட்டான காலகட்டத்தில் வெளிவந்த “பில்லா” படத்தில் பாடல்கள் சரியாக அமையாது போயிருந்தால் ரஜினிகாந்த் எனும் நடிகர் மீண்டிருப்பது இயலாமலேயே போயிருக்கும் என்பதைப் பலர் அறிவார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்திற்காக எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்தனர். பாடல்களும் நன்றாகத்தானிருந்தன. ஆனால், அப்போது வீசிக்கொண்டிருந்த புயலில் அதை யாருமே கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினார்கள்.

* * * * * * * *

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பாவும். இவர்கள் இருவருமே பாடத்தெரிந்தவர்கள். இசைக்கலைஞர்கள். இரண்டாவது அணியில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவருக்குமே பாடத் தெரியாது. பாடலுக்கு வாயசைக்க மட்டுமே தெரியும். ஆனால், இவர்கள் வெறுமனே வாயசைத்த பாடல்கள் தான் சினிமா ரசிகர்களுக்கு அப்படங்களை நினை வூட்டியதோடு மீண்டும் மீண்டும் அவர்களைத் திரையரங்கிற்கு இழுத்துக்கொண்டும் வந்தன. அவர் களை வசூல் சக்கரவர்த்திகளாகவும் ஆக்கின. இவர்கள் சூப்பர் ஸ்டார்கள் ஆனதற்கு கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசையமைத்த பாடல்களின் மெட்டுக்களும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனும் வாலியும் எழுதிய வார்த்தைகளும்தான் காரணம் என்பதை யாராவது மறுக்கமுடியுமா? அப்படியானால் அசல் சூப்பர் ஸ்டார்கள் யார்?

* * * * * * * *

தமிழ் மக்களுக்கு சிலிர்ப்பு, சோகம், பரவசம், பக்தி, துயரம், சிரிப்பு, மென்மை ஆகிய உணர்ச்சிகளின் மூலமாக மகிழ்ச்சியைத்தந்த மெல்லிசையை அள்ளி வழங்கிய எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். சில பாடல்களை கேட்டுப் பாருங்கள். அதுதானே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிஅஞ்சலியாக இருக்கமுடியும்!

* * * * * * * *

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் / சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு / பன்சாயீ யீ.,யீ.,யீ., பாடும் பறவைகள் / சிலையெடுத்தான் அந்தச் சின்னப் பெண்ணுக்கு / பாடும்போது நான் தென்றல் காற்று / கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் / அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க / நான் உன்னைச் சேர்ந்த செல்வம் / செல்லக்கிளிகளாம் பள்ளியிலே / எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதில் என்ன சொல்லடி ராதா / பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே/ ஆடிவெள்ளி தேடி உன்னை / கங்கையிலே ஓடம் வந்ததோ / பொண்ணுக்கென்ன அழகு / விழியே கதை எழுது / கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல / அம்மாடி., யீ.,யீ..,பொண்ணுக்குத் தங்க மனசு / ஆனந்தத் தாண்டவமோ / .,

இசை கேட்டால் புவி அசைந்தாடும்,

அது இறைவன் அருளாகும்.

ஏழாம்கடலும், வானும் நிலவும், என்னுடன்

விளையாடும்,

இசை என்னிடம் உருவாகும்.............

இசை என்னிடம் உருவாகும்.............

Pin It