தோழர் இளவேனில் காருவகி என்ற இலக்கிய வரலாற்று நாவலை 2012 ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ளார். இந்நாவல் வெளியிட பெரிதும் உறுதுணையாக நின்றவர் மாணவர் நகலக உரிமையாளர் திரு.அருணாசலம் அவர்கள்.

ilavenil 248நாம் வரலாற்றுப் புத்தகங்களில் அறிந்த சாம்ராட் அசோகன் வேறு. இளவேனில் இந்நாவலில் காட்டு கின்ற அசோகன் வேறு. அசோகன் வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறைந்திருந்த பகுதிகளே இந்நாவலில் காட்டப்படுகின்றன. கலிங்கப் போரில் அசோகர் வென்றார். ஆனால் போரினால் விளைந்த துன்பங்களைக் கண்டு இவர் மனம் கலங்கினார். அதனால் போரே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தார். அன்பு வழியை மேற்கொண்டார். பௌத்த கொள்கைகளை ஏற்று பௌத்த சமயம் பரப்புவதற்கான வழிகளில் ஈடுபட்டார் என்பது நாம் அறிந்த சுருக்கமான வரலாற்றுச் செய்தி.

அசோகன் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியது கலிங்கப்போர். அந்தப் போரில் அசோகன் யாருடன் போரிட்டான்? அவன் பெயர் என்ன? என்ற ஐயமும் கேள்வியும் இளவேனிலை ஓர் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி விட்டது.

‘இரு மன்னர்களிடையே நடந்த கலிங்கப் போரில் ஒருவன் அசோகன் - இருக்கிறான். இன் னொருவன் யார்? அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லையே ஏன்?’ அசோகனின் வரலாறு, அவனுடைய தாத்தா சந்திரகுப்தர் வரலாறு, சந்திரகுப்தனின் தாத்தா மௌரியர் வரலாறு, மௌரியரின் தாய் மூராவின் வரலாறு, பௌத்த மதத்தின் வரலாறு அனைத்தையும் படித்து முடித்தும் அந்த இன்னொரு மன்னன் யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தமிழிலக்கியமும், கல்வெட்டுச் சான்றும் பன் மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆய்வும் இதற்கு விடையளித்துள்ளன.

“இவை புறநானூற்றிலிருந்து புறப்பட்டவை. சோழ மன்னன் இளஞ்சேட் சென்னி என்று சிறப் பிக்கப்படுகிறான். பாழிக் கோட்டையைப் போரில் அழித்ததால், இந்தப் பேரும் பெருமையும் பெற்றான்.

பாழிக் கோட்டையைத் தகர்த்து வெற்றி கண்ட இளஞ்சேட் சென்னி அந்தப் போரில் யாரை எதிர்த்துப் போரிட்டான்? வம்ப மோரியருடன் ‘அந்தப் போர் நடந்ததாகப் புறநானூற்றுத் தடயங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்த மௌரிய மன்னன் யார்?

பதில் இல்லை. நீண்ட ஆய்வுக்குப்பின் பன் மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அந்தப் புதிரை அவிழ்த்தார்.

பாழிப் போரில் இளஞ்சேட் சென்னியுடன் போரிட்ட மௌரிய இளவரசன் அசோகன் தான்.

பன்மொழிப் புலவரின் சிறப்பு வாய்ந்த இந்த ஆய்வு வெறும் இலக்கியப் பங்களிப்பாகவே மதிக்கப்படுகிறது. ஒரு வரலாற்று உண்மை வெளிப்படையாகவே மறைக்கப்படுகிறது.

பொதுவாக இந்திய வரலாறு என்றால் அது வடநாட்டு மன்னர்களின் கதைத் தொகுப்பாகவே பலராலும் எழுதப்படுகிறது.

தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுகிற தமிழ்நாட்டு நூலாசிரியர்களும் கூடப் பாழிப் போரை மறைக் கிறார்கள். ‘செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிதான் பாழிக் கோட்டையைத் தகர்த்து, மௌரியப் படைகளைக் கலிங்கம் வரை விரட்டிச் சென்று அசோகனுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியவன்’

என்பது நாவல் எடுத்துக்காட்டும் வரலாற்று உண்மை. ‘அசோகனின் மனமாற்றத்திற்குக் கலிங்கப் போர் காரணம் என்றாலும் அவனை நல்வழிப் படுத்தியதில் காருவகி என்னும் பெண்ணுக்கு அவனுடைய காதலிக்குப் பெரும்பங்கு உண்டு என்று அசோகனின் கல்வெட்டு களிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்ற மற்றொரு செய்தியும் நாம் இதுவரை அறியாத வரலாறாகும்.

புகழ் பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் கே.எம். பணிக்கரின் கருத்தையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

‘உலக வரலாற்றிலேயே மன்னனாக இருந்து கொண்டு ஒரு மாபெரும் சோஷலிச குடியரசைக் கட்ட நினைத்து அரும்பாடுபட்டவன் அசோகன் தான். ஆனால் அவனை அவ்வாறு உருவாக்கிய பெண்ணை நாம் மறந்து விடுகிறோம். அசோகனின் கல்வெட்டில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்த அந்தப் பெண்ணைப் பற்றி விரிவாக எழுத யாருக்கும் மனம் இல்லை. ஒருவேளை அவளோர் அரசிளங் குமரியாக இருந்திருந்தால் வரலாற்றின் பல பக்கங்களில் இடம் பெற்றிருப்பாள். காவிய நாயகியாகக் கொண்டாடப்பட்டிருப்பாள். கடவுள் அம்ச மாகவே உயர்த்தப்பட்டு வழிபாட்டுக்குரிய வளாகியிருப்பாள். ஆனால் காருவகி ஓர் ஏழைப் பெண். எளிய மகள். மறைக்கப்பட்டுவிட்டாள்.’

என்ற கே.எம்.பணிக்கரின் கருத்தும் இந்நாவலுக்கு உரமூட்டுவதாக அமைந்துள்ளது.

சாம்ராட் அசோகனின் ஆசை தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்துவதே. இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்ட அசோகன் தமிழகத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டான். இந்தத் திட்டமிடுதலில் அர்த்த சாஸ்திரம் எழுதிய மாபெரும் அறிஞரான கௌடில்யர் வழிகாட்டியானார். அசோகனுக்குக் குருவான கௌடில்யர் சூதும் சூழ்ச்சியும் நிறைந்தவராகவும்

பிறகு தன்னையே வெறுத்து விடுதலையாகி வெற்றி மாலைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு வெளியேறும் கௌடில்யராகவும் காட்சியளிக்கிறார் இளவேனில் படைப்பில்.

‘ஒரு படைப்பில் உருவான கௌடில்யரைக் காணும் யாருக்கும் அவரை வெறுக்கத் தோன்றாது. மாறாக ‘அடடா இத்தனை அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு மாமனிதரை நமது சமூக அமைப்பு வழி மாற்றி விட்டதே! என்று சுயவிமரிசனம் செய்து கொள்ளவே தோன்றும்!’ என்று கௌடில்யரைப் பற்றி ஒரு புதிய பார்வையை வழங்கியுள்ளார்.

அசோகனின் வரலாற்றை ஒரு புனைவிலக்கியமாக எழுதிக் காட்டியுள்ளாரா அல்லது அசோகனின் காதலி காருவகியின் வரலாற்றை எழுதிக் காட்டியுள்ளாரா என்ற கேள்வி எழும். ஏனெனில் இந்நாவல் சோழநாட்டின் மன்னரான இளஞ்சேட் சென்னியின் நிலப்பரப்பி லிருந்தே தொடங்குகிறது.

அறிவுக் களஞ்சியங்கள் நிரம்பிய ஒரு சத்திரம் மருத்துவர் நெல்லியங்கோடு பாதுகாப்பில் உள்ளது. அவருடைய மகள் பீலிமா, திரையன் மகள் அன்னி மிஞிலி (அன்றில்மிழலை அன்னிமிஞிலியாயிற்று) ஆகியோர் அவருக்குத் துணையாக விளங்குகின்றனர்.

அன்னிமிஞிலி மாடு மேய்க்கும் பெண். ஆனால் அவள் அறிவுத் தெளிவும், சமூக உணர்ச்சியும், துணிவும், கனிவும் மிக்கவள் என்பதை அவளுடைய உரையாடல் காட்டுகின்றது. தன் தோழி பீலிமாவிடம் தம் நாட்டைப் பற்றியும் மன்னனைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் பேசும்பொழுது,

“இதோ நாம் வாழ்கிறோமே, இந்தப் பகுதி இப் பொழுது சோழ நாடு. இதற்கு முன் சேரநாடாக இருந்தது. நாளை பாண்டியர்களோ பக்கத் திலுள்ள கலிங்கர்களோ இதைக் கைப்பற்றிக் கொண்டால், அப்போது இது எந்த நாடு? ஏன் பின்னொரு நாளில் தமிழ்நாடு என்று சொல்வதே கூடத் தடை செய்யப்படலாம். ஒரு நாட்டின் எல்லைகள் மாறுகின்றன. கொடிகள் மாறு கின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் அடக்கு முறைகள் மாறு வதில்லை. அடிமைத் தனம் மாறுவதில்லை. மனிதன் மனிதனாக வாழ வாய்ப்பே வருவ தில்லை. இது ஏன்? அதுதான் யாருக்கும் புரிய வில்லை!.

புத்தபிரான் சும்மா சொல்லிவிடவில்லை. ஆசைகள்தாம் இத்தனை அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம். அதனால்தான் ஆசையை அடக்கு என்றார். நம் தமிழ்ப் புலவர் கூடத் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’! என்று சொல்லியிருக்கிறாரே!.

ஆனால் இதெல்லாம் பொதுவான தீர்வுதான். உன் தந்தை ஒரு வைத்தியர்தானே! அவரிடம் கேள், சர்வரோக நிவாரணி என்றொன்று இருக் கிறதா என்று நிச்சயம் இல்லை என்பார். அப்படித்தான் இதுவும் ஆசையை அடக்கு என்று ஓர் அரசனிடம் சொல்லலாம். அடிமையிடம் போய் அப்படிச் சொல்ல முடியுமா? புத்தரால் கூட அது முடியாது”

என்ற அன்னிமிஞிலியின் கருத்து, அவளுடைய அறிவாற்றலைக் காட்டுகிறது.”

இதுவே கலிங்கப்போரின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. அன்னிமிஞிலியின் மாடுகளை கோசர்கள் கைப்பற்றுகிறார்கள். அறிவுக்களஞ்சியமாகத் திகழும் ஏடுகள் நிறைந்த சத்திரம் எரிக்கப்படுகின்றது. கோசர் களிடம் நீதி கேட்கப் போன அன்னிமிஞிலியின் தந்தை திரையனின் கண்கள் குருடாக்கப்படுகின்றன. இவற்றை யெல்லாம் கண்ணுற்ற சோழ நாட்டு மன்னன் இளஞ் சேட் சென்னி பழி தீர்க்க படை நடத்திச் செல்கின்றான்.

கலிங்கப்போர் தொடங்கிவிட்டது. போரில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவம் செய்ய அன்னி மிஞிலி புறப்பட்டாள். அண்ணன் சுசீமன் சதியால் அசோகன் தாக்கப்பட்டு அருவியில் வீசி எறியப் படுகிறான். அசோகனை அன்னிமிஞிலி காப்பாற்று கிறாள். ஆனால் ‘அன்னிமிஞிலி அசோகனைக் காப்பாற்ற வரவில்லை. அவள் அசோகனைக் கொல்ல வந்த சதிகாரி’ என குற்றம் சாட்டப்பட்டு கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கு நடுவே நிற்க வைக்கப் படுகிறாள்.

உபகுப்தர் என்ற பௌத்த துறவி அன்னிமிஞிலியை கௌடில்யரிடமும் அசோகனிடமும் தன் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி யாசகமாகப் பெற்று அவளை விடுவிக்கின்றார். அசோகனின் வளர்ப்புத் தாயான உலும்பினி மூலம் அன்னிமிஞிலி அசோகனை எவ்வாறு காப்பாற்றினாள், அவனை கொலை செய்ய முயன்ற வர்கள் யார் என்ற உண்மையை அறிகின்றான் அசோகன். பிறகு தன்னைக் காப்பாற்றிய அன்னியின்மீது காதல் கொண்டு அவளைச் சந்திக்கின்றான். போரில் காய முற்றோருக்கும் உதவியற்றோருக்கும் மருத்துவச்சியாகச் செயல்படுபவள் அன்னிமிஞிலி என்று யாரும் அறியா வண்ணம் அவளுக்கு ‘காருவகி’ என்ற பெயரை உபகுப்தர் சூட்டுகின்றார். எதிரிகளால் அவளுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ‘காருவகி’ என அன்னிமிஞிலிக்கு உபகுப்தர் பெயர் சூட்டுகின்றார்.

அது என்ன காருவகி?

‘உலகம் செழிக்க வரும் கார்மீது உவகை கொள்ளும் மயிலைக் கார் உவகி என்றால், அதே இயல்பு கொண்ட உனக்கும் அது பொருந்தும். பொதுஉடைமை எனும் மழைமீது உவகை கொள்ளும் நீயும் ஒரு கார் உவகிதான். ஆம் இன்று முதல் உன் பெயர் ‘காருவகி’ என்று தூயத் தமிழில் பெயர் சூட்டிவிட்டார்!!’

கலிங்கப்போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்ததும் அவர்களை இழந்த உறவினர்கள் கண்ணீர் சிந்தி அழுது புரளும் காட்சியை காருவகி அசோகனிடம் காட்டி,

‘மக்களைக் கொன்று மண்ணை வெல்வதுதான் பேரரசின் இலட்சியமா? உலகை வெல்வது எப்படி? ஆயுதங்களாலா?ஆயிரமாயிரம் பேரைக் கொன்று குவித்தா? என்று கூறி அன்பால்தான் உலகை வெல்ல முடியும். அன்பால்தான் இதயங்களை ஆளமுடியும். ஆயுதங்களை ஆயுதங்களே முறியடித்துவிடும்’ என்று அசோகனின் மனதை மாற்றினாள்.

கௌடில்யரும் ‘என் வாழ்வில் எனக்கு நேர்ந்த தோல்வியும் தாங்க முடியாத அவமானமும் கலிங்கப் போர்தான். அன்றே நான் அரசியலிருந்தும் மௌரிய சாம்ராஜ்யத்திலிருந்தும் மக்களின் நினைவிலிருந்தும் வெளியேறுவது என்று முடிவு செய்துவிட்டேன்’ என்று கூறி வெளியேறுகின்றார்.

அன்னிமிஞிலி என்றொரு மாடு மேய்க்கும் பெண் சாம்ராட் அசோகனின் காதலி என்பதும், வடநாட்டில் பஞ்சம் வந்தால் தென்னாட்டார் கப்பல்கள்மூலம் உணவு தானியங்கள் அனுப்பி வைத்ததும், கலிங்கப் போரில் அசோகனுடன் போரிட்டவன் தமிழ்நாட்டு சோழமன்னன் இளஞ்சேட் சென்னி என்பதும், கலிங்கப் போரில் அசோகன் வெற்றி பெறவில்லை என்பதும், புலவர் ஊன் பொதி பசுங்குடையார், இளஞ்சேட் சென்னியின் போர் யானையை பரிசாகப் பெற்று

போரை நிறுத்தி விடுவதும், மோரியர் கைப்பற்றிய துளு நாட்டையும் விடுவித்துவிட்டு கலிங்க நாட்டின் மையப் பகுதியில் நின்று போர்புரிந்து வெற்றி கிட்டும் நிலையில் இருந்தவன் சோழ மன்னன் இளஞ்சேட் சென்னி என்பதும் காருவகி வழங்குகின்ற வரலாற்று உண்மைச் செய்திகள்.

அசோகனின் பிறப்பு, கௌடில்யரின் பிறப்பு குறித்த செய்திகளும் இதில் இடம் பெறுகின்றன. இந் நாவலாசிரியர் இளவேனிலின் மொழிநடையில் சொற்கள் தென்றலும் புயலுமாக வலம் வருகின்றன. கதை மாந்தர்களின் உணர்வை சமுதாய நடப்பியலுடன் கலந்த ஒன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

போர்களைப் பற்றித் தமது அனுபவ மதிப்பீடுகளை விவரித்த இளஞ்சேட் சென்னியின் உரையை ஒரு சான்றுக்குக் காட்டலாம்.

“போர்களின் விடையைக் கணித முறையில் கூட்டிக் கழித்துப் பார்க்கக் கூடாது. எந்த ஒரு போரிலும், அந்தப் போரின் நோக்கமும் வீரர்களின் மனநிலையும்தான் வெற்றி தோல்வி களை நிச்சயிக்கின்றன. இதிலே நமது நோக்கம் தெளிவானது. ஆக்கிரமிப்பை எதிர்ப்போம். அடிமைத் தனத்தை வெறுப்போம். நமது வீரர்களும் சரி, குடிமக்களும் சரி, குடியரசின் ஆதரவாளர்கள். அறம் சார்ந்து நிற்பவர்கள். பழிக்கு அஞ்சுகிறவர்கள்.

“நாம் சோழர்கள் என்றும், சேரர்கள் என்றும், பாண்டியர் என்றும், வேளிர், துளுவர், கொங்கணர் என்றும் என்று பல முகங்கள் இருந்தாலும் ஒரே இனத்தவர். தமிழர்கள், சாதி சமயம் அறியாதவர்கள். தலைமைக்கும், புலமைக்கும், அறிவுக்கும், திறமைக்கும் இங்கே தடை போட எதுவும் இல்லை. இனத்தால், மொழியால், கொள்கைகளால் நம்மால் ஓரணியில் நிற்க முடியும்.”

“அங்கே அப்படி இல்லை. சனாதன வெறியும் சர்வாதிகார மோகமும்தான் போருக்குத் தலைமை தாங்குகின்றன. அவர்களின் கனவோ அகன்ற பாரத வர்ஷம்! அதோடு ஏன் நிற்க வேண்டும்? உலகம் முழுவதுமே ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்று கூட ஆசைப்படலாம். தப்பில்லை. ஆனால் அதை நிறைவேற்றுவது எப்படி?”

“பல நாட்டினங்கள், பல மொழிகள், பல கருத்தோட்டங்கள். இவை போதாதென்று சாதி மதங்களாக நூறு கூறுகள். அத்தனை மக்களையும் ஒருமைப்பாடு என்கிற உலையிலே போட்டு உருக்கி வார்ப்பதா? மனித இதயங்கள் உலோக மல்ல, உருக்குவதற்கு, ஒருமைப்பாடு என்பதும் ஓருலகம் என்பதும் சொர்க்கமாகக் கூட இருக்கலாம். ஆனால் சொர்க்கத்துக்கு அனுப்பு வதானாலும் சாட்டையால் அடித்து அனுப்ப முடியாது.” (பக்.116)

நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து, ஆய்ந்து, தாம் கண்ட உண்மைகளை ஒரு புனைவிலக்கிய

மாக ஒரு புதிய இலக்கிய வரலாற்றுப் புதினத்தை அற்புதமான மொழிநடையில் வழங்கியுள்ளார். ஆங்காங்கே துண்டுதுண்டாக இருந்த வரலாற்றுச் செய்திகளை ஒன்றிணைத்து ஒரு சிறந்த புனை விலக்கியத்தைப் படைத்துள்ளார்.

08.02.2015 அன்று சென்னையில் நடந்த காருவகி கருத்தரங்கில் இசைஞானி இளையராஜா அவர்கள் பேசும்போது ‘மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருந்த அசோகன் அவனோடு போரிட்ட தமிழ்நாட்டு மன்னனிடம் மண்டியிடுவதற்குப் பதிலாக பௌத்தத்தில் சரணடைந்தான் என்று தோன்றுகின்றது’ என்றார். ஆய்வாளர்களின் சிந்தனைக்குரிய செய்தி.

“காருவகி” வரலாற்று ஆய்வாளர்களிடையே இலக்கிய வாசகர்களுக்கிடையே வரவேற்பு பெறுவாள் என்பதில் அய்யமில்லை.

காருவகி - வரலாற்றுப் புதினம் -

பதிப்பாசிரியர் : ந. அருணாசலம்

வெளியீடு: அழகு சிஸ்டம்ஸ்,

சென்னை - 600 017

விலை: ரூ.200/-

Pin It