தமிழ்க் கவிதைகள் ஒரு காலத்தில் தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள கவிஞர்களால் எழுதப்பட்டன. பின், மேல்சாதியைச் சேர்ந்த படிப்பறிவு உள்ளவர்களால் ரசனையை வெளிப் படுத்துவதற்காக இயற்றப்பட்டன. அதற்குப் பின்னர் வர்க்கரீதியாக சமூகத்தை அணுகி, உள்ளேயுள்ள சமூக முரண்பாடுகளை எடுத்துக்காட்டி, அவற்றைக் களைவதற்கான தீர்வு, பொதுவுடைமை சமு தாயத்தை மலரச் செய்வது ஒன்றுதான் - என்ற அடிப்படையில் பொதுவுடைமைக் கருத்துக்களை பாடுபொருளாகக் கொண்டு படைக்கப்பட்டன. பெரும்பாலும் மேலே கண்ட கருத்துக்களை மக்களுக்கு இடையே விதைத்தவர்கள் சமூகத்தில் மேல்தட்டிலிருந்த படைப்பாளிகளே! அல்லது இடைநிலைச்சாதியைச் சேர்ந்த கல்வியறிவு பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஆனால், நம்நாடு சுதந்திரம் பெற்று ஐம்பது; அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஓரளவு கல்வியறிவு பெற்ற பறையர், புலையர், வண்ணார், அருந்ததியர், ஆதிவாசி மக்கள், சவரத்தொழில் புரிந்து வரும் மக்கள் போன்ற சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது அடித்தட்டைச் சேர்ந்த ஏழை - எளிய மக்களிட மிருந்து நாவல்கள், கதைகள், கவிதைகள், இலக்கிய ஆய்வுகள், சாதி வரலாறுகள் போன்றவைகள் அவர் களுடைய கண்ணோட்டத்தில் படைக்கப்பட்டு, வெடித்துக் கிளம்பி வெளிவரத் துவங்கின.

kalaivanan 237இவைகள் காலம்காலமாக தங்களை ஒடுக்கிய சமூகத்தை, மேல்சாதியினரால் அனுபவித்து வந்த துன்பங்களை, இதுநாள் வரையில் கீழ்த்தரமான முறையில் நடத்தியதை, அதனால் ஏற்பட்ட அவ மானம், அல்லது வலியை இம்மக்களின் கலை - இலக்கியப் படைப்புகள் (குறிப்பாக கவிதை யுலகில்) நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இந்த வேளையில் ‘நவீனக் கவிதைகள்’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு இடைநிலைச் சாதியைச் சேர்ந்த இலக்கிய வாதிகளிடமிருந்தும் ஏராளமான கவிதைகள் வெளி வந்து கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இம்மாதிரி வெளிவந்து கொண்டிருக்கும் நவீனக்கவிதைகளின் ‘சட்டை’ தான் நவீனப்பாணியே தவிர, அவைகள் சுமந்து நிற்கும் கருத்துக்கள் அனைத்தும் சமூகத்தில் எந்த வித மாறுதலையும் நிகழ்த்த சக்தியற்ற மலட்டுக் கவிதைகளாகக் காணப்படுவதையும் இங்கே சுட்டிக் காட்டியாக வேண்டும். குறிப்பாக, அவைகள் படிப்பதற்கு ரசனையாகவும் அலங்காரமான வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

அரசியல் நெருக்கடி, பொருளாதாரச் சுரண்டல், பண்பாட்டுச் சிக்கல், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை கொலை செய்தல், காலம் கடந்து போன நிலவுடைமை அமைப்பின் பண்பாட்டு எச்சங்களை இலக்கியரீதியாக எடுத்துக்காட்டி விமர்சிப்பவர்களை அடித்துத் துன்புறுத்துவது அல்லது நாட்டைவிட்டுத் துரத்துதல், மிரட்டுதல் என சமூக முரண்பாடு உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ‘இவை களெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; கலை - இலக்கியம் என்றால் எங்களுக்கு ரசனையும், அலங்காரமான கவிதை நடையும் மட்டும்தான் முக்கியம் என்று சொகுசாக வாழ்ந்து கொண் டிருக்கும் இடைநிலைச்சாதியினரின் இலக்கியச் சந்ததியினரிடமிருந்து வெளிப்படும் கவிதைகளி லிருந்து முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது சமீபத்தில் வெளிவந்த திரு. இ.எம்.எஸ். கலை வாணனின் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு நூல்.

கலைவாணனின் ஒரு கவிதை கீழ்க்கண்ட வாறு நம்மோடு பேசுகிறது.

‘அம்மை கும்பிடுகது

தாணுமாலையனை

அக்காவுக்கு முருகனும்

தங்கச்சிக்கு

காஞ்சி காமாட்சியும்

மகளை கட்டிக் கொடுத்த வீட்டுல

உண்ணி கண்ணனை

உருட்டிப் போட்டு

கும்பிடுகாளுக

சித்தப்பன் மாரெல்லாம்

சபரிமலை சாமி கோஷ்டிகள்

எனக்கு பிடிச்ச சாமி

கத்திரியம்மன்,

கத்திமாடன்’ என்று

இந்தக் கவிதை கவிஞரின் சார்புநிலை, உலகக் கண்ணோட்டம் ஆகியவற்றை நமக்கு மிகத் தெளி வாக எடுத்துக்காட்டி விட்டது. மட்டுமல்ல; இந்தியப் பண்பாட்டில் ஆதிக்கம் பண்ணும் வைதீகக் கண்ணோட்டத்திற்கு நேர் எதிரான கண்ணோட்டத்தை உடையவர் இவர், என் பதையும் இக்கவிதை நமக்கு ஆர்ப்பாட்டமின்றி எடுத்துக்காட்டுகிறது. பத்தாம்பசலித்தனமாக, ஏராளமான பழுத்தக்கவிஞர்களும், நவீனக் கவிஞர் களும் தமிழ்நாட்டில் பூடம் தெரியாமல் சாமி யாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தன் இருப்பிலிருந்து மிகச்சரியான திசையை நோக்கியே இக்கவிஞரின் கவிதை தன் பயணத்தைத் துவங்கு கிறது எனலாம். அதோடு நின்றுவிடாமல் இன்றைய தமிழ் மக்களின் பண்பாடு எப்படி இருக்கிறது என் பதையும் இக்கவிதை நமக்கு வரைந்து காட்டுகிறது.

தாழ்த்தப்பட்டக் குடும்பத்தில் பிறந்தவர்கள் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந் தாலும் சரி (அது பொருளாதார ரீதியாக இருந் தாலும் சரி, சமூக ரீதியாக இருந்தாலும் சரி, நம் நாட்டிலுள்ள (அல்லது இந்தியச் சூழலில் பிறந்து வளர்ந்த) மேல்தட்டு மக்கள், அவர்களை தங்களுக்கு நிகரான மனிதர்களாக ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அளவுக்கு இளமையிலேயே சாதிவெறி அவர்களின் மனதில் ஏற்றி வைக்கப் படுகிறது. அவர்களுடைய மனங்களில் படிந்துள்ள சாதி அழுக்கை அவ்வளவு எளிதில் சலவை செய்து அகற்ற இயலாது. கருங்கல் போல் உறைந்து இறுகிக்கிடக்கிறது, அது. இதை கலைவாணனின் இன்னொரு கவிதை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

‘அரேபியாவுக்கு ஓடிப் போனான் (நாசுவன்)

ஆறுவருசம் கழிச்சு வந்து

காரும் வாங்கி

மேட்டுக் கடை முக்குல

இப்ப ஹோட்டல் வச்சிருக்கான்.

அன்னா

இட்லி தின்னுட்டு போற

வேலப்பன்

சொல்லிட்டுப் போறான்

நாசுவனுக்க சட்னியில

அஞ்சாறு மயிரு கிடக்குன்னு...’ என்று

சாதி, மத பேதமின்றி ஊருக்கு மருத்துவச்சி யாக இருந்து பண்டுவம் பார்த்தாலும் கூட ஊர், தாழ்த்தப்பட்ட பெண்களை மிக இழிந்தவர் களாகவேதான் கருதுகிறது என்பதை கலை வாணனின் கீழ்க்கண்ட கவிதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

‘ஊரு மருத்துவச்சியாக

அம்மா பிரசவம் பார்த்து

பூச்சு பறக்கி போட்ட

எல்லா குந்திராண்டங்களும்

இப்ப வளர்ந்து

ஆளுக்கொரு பனைமரத்துல,

பூதங்களா தொங்குது...’

ஆனால், அவர்களில் ஒருவர் கூட அப் பெண்ணை மதிப்பதில்லை.

சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணிக் கொண்டால், அதன் விளைவாக உடனே இடை நிலைச் சாதியினரிடம் காணப்படும் சாதியுணர் வானது அழிந்து, தொலைந்து போய்விடும் என, நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டாலும் கூட ‘நாசுவத்தியை நாசுவத்தி’ என்றே அடையாளம் காட்டுகிறார்கள் மேல்சாதி யினர் என்கிறது,

‘அடுத்த மாசம்

அக்கா மகனுக்கு

மெட்ராசுல கல்யாணம்’ என்று

தொடங்கும் அவரது கவிதை ஒன்று.

தாழ்த்தப்பட்டவர்கள் பல அரசியல், பொரு

ளாதாரம், பண்பாட்டுப் போராட்டங்களின் விளைவாக பொருளாதார ரீதியாக சமூகத்தில் மேலெழுந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும் கூட, அவர்கள் ஒரு காலத்தில் செய்து கொண்டிருந்த தொழிலைச் (அது, மேலோர் களைப் பொறுத்தமட்டில் மிக இழிவானதே) சுட்டி தாழ்த்திப் பேசும் வழக்கம் சமூகத்தில் இன்னும் தொடர்கதை போல் தொடர்ந்து கொண் டிருப்பதை கலைவாணனின் ஒரு கவிதை நமக்குச் சொல்கிறது.

ஒரு திருமணத்தின் போது இலையெடுக்கும் காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அக்கவிதை,

‘எல்லாவனும் தின்னுபோட்ட

எச்சி இலையை

கடவத்துல எடுக்கச் சொன்னான்

அவியலு மாடசாமி

நாசுவ பயவந்து

இலை எடுக்காத கல்யாணம்

அவனுகளுக்கு தர குறைவாம்.

தின்னுட்டு ஏப்பத்தோட

போற ஒரு தாயிளி

சொல்லிட்டுப் போறான்’

என கலைவாணனும் அக்கவிதையோடு சேர்ந்து வேதனையடைகிறார்.

‘பல கவிதைகளில் சலூன் பற்றிய பல சித்திரங்கள் நம்மை பால்ய கால ஓர்மைக்குள் இட்டுச் செல்கின்றன. சலூனில் அழகு காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், அண்ணாதுரை, கலைஞர், காந்தி, நேரு, இந்திராகாந்தி படங் களெல்லாம் இருந்ததாகக் கவிதை வரிகள் வரு கின்றன. கூடவே காடாய் கிடக்கும் இந்திய அரசியலை சீப்பில் வாரி கத்திரிகளால் வெட்டித் தள்ளி சிதறி விழுந்த முடிகளோடு கூட்டிப் பெருக்கி எல்லோரையும் உருவாக்கினோம் என்று கலை வாணனின் கவிதை பேசும்போது சலூன் என்பது வெறும் சலூன் அல்ல; அது, சமூகத்தை முடி வெட்டிய சிற்பக்கூடம், மயக்கத்தில் பத்திரிகை

கூட படிக்காமல் கிடந்த மக்களுக்கு ஒரு சாளரம் என்பதை பிரமிப்போடு நம்மால் உணரமுடிகிறது’ என்று கவிதைத் தொகுதியின் பின்னுரையில் கூறும் திரு. நட. சிவகுமாரின் கூற்றுக்களையும் நாம் மேற்கண்ட கருத்துக்களோடு கூட்டிச் சேர்த்து வாசிக்கும் பொழுது கலைவாணனின் கவிதை களுக்குரிய பல முகங்களை நம்மால் தரிசிக்க முடிகிறது.

தற்போது தமிழில் நவீன கவிதைகள் என்று சொல்லிக்கொண்டு வெளிவந்துகொண்டிருக்கும் பல கவிதைகளுக்கு அடையாளமே கிடையாது. போகிற போக்கில், ஏதாவதொன்றை ‘கவிதை’ என்று உளறிக்கொட்டிக் கொண்டு போவதாகவே தான் அமைந்திருக்கும். அதன் விளைநிலம் எது? அவற்றுக்குரிய பண்பாட்டு அடையாளம் எது? சமூகத்தில் அந்தக் கருத்துக்குரிய பிரதிநிதிகள் யார் யாரெல்லாம்? கவிதைகளின் நோக்கம் என்ன? என்று நாம் அக்கவிதைகளுக்குள்ளே இறங்கி தேடினோமானால், வெறும் பூஜ்ஜியம்தான் விடை யாகக் கிடைக்கிறது.

இம்மாதிரி வடிவங்களையும், உள்ளடக்கங் களையும் கொண்ட நவீன கவிதைகள் இன்று, தமிழ் இலக்கிய உலகில் புற்றீசல்போல் வெளி வந்து கொண்டிருக்கிறது. சமூக பயனற்ற இவை களைப் போன்ற மலட்டுக்கவிதைகளைப் பற்றி புகழ்ந்து பேசுவதோடு, அக்கவிதைகளின் சொந்தக் காரர்களான கவிஞர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து, ஊக்குவிக்கும் போக்கும் தமிழ் இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது.

ஆனால், அதே வேளையில் கலைவாணனின் கவிதை ஒவ்வொன்றுக்கும் பண்பாட்டு அடை யாளங்களோடு கூடிய ஒருமுகம் இருக்கிறது. அவற்றின் விளைநிலம் பற்றிய குறிப்பும் உள்ளன. ஒவ்வொரு கவிதையின் உள்ளடக்கமும் மேற்பூச்சு இல்லாமல் தெள்ளத் தெளிவாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒரு கவிதை.

‘தொட்டிலில் கிடக்கும் என்னை

                சலூனில்

வேலை முடிந்துவந்த அப்பா

                முத்தமிட்ட

கன்னப்பரப்பில்

                இரண்டு மூன்று

வெள்ளை முடிகள்

                ஒட்டியிருக்கின்றன

எந்த சாதிக்காரனின்

                அழுக்கு மயிரோ.’

வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட உண்மை, எவ்வளவு அழகாக கலையுண்மையாக வடிவம் பெறுகிறது, இங்கே!

தாடி, மீசை, அக்குள், அடி வயிறு - என மனிதர்கள் மீது மண்டிக்கிடக்கும் மயிர்க்காடு களை சாதி, மதம், இனம், மொழி என்று வேறுபாடு பார்க்காமல் தங்கள் வாழ்நாள் முழுக்க வெட்டித் திருத்தி சுத்தப்படுத்திய அந்த அழகின் வாரிசுகளை, தீண்டத்தகாதவர்களாக்கி தூரமாக எட்டி நிற்கச் சொல்வதை, அதனால் அவர்கள் அனுபவிக்கும் வேதனையை ஒரு கவிதை வலியோடு வெளிப் படுத்துகிறது.

‘செத்த வீட்டுக்கும்

பார்பர் ஷாப்புக்கும்

போனவங்க

குளித்த பிறகுதான்

வீட்டுக்குள் வரணும்

ஒட்டிய

முடிகள் போவதற்கும்

நாசுவன்

தொட்டதற்கும்’ என.

கலைவாணனின் சில கவிதைகள் சாதிய அடையாளங்களோடு வெளிப்படுவது மட்டு மின்றி, அந்த சாதிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாறுதல்களும் ஆங்காங்கே எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. இன்னுஞ்சில கவிதைகள் நம் நாட்டு சாதியமைப்பை நோக்கி, சவால் விடுகின்றன. வேறுசில கவிதைகளில் பழமையை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையும் புதுமையை தரிசிக்க முடிகிறது. சில கவிதைகள் சாதியுணர்வு களைச் சுமந்து கொண்டு திரிபவர்களைக் கெட்ட வார்த்தைகளால், ஆபாசமாகத் திட்டுகின்றன. கலைவாணன் தன் கவிதைகளில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவகையில் பயன்படுத்தும் ‘வசைமாரி’ அல்லது கெட்டவார்த்தைகள் பலவும் கிராமத்து மக்களுக் கிடையே வழக்கத்திலிருப்பவை தான். அவைகளை இந்தத் தொகுதியின் குறையாக ஒன்றும் சுட்டிப் பேச இயலாது.

கலைப்படைப்பைப்பற்றி பேசும் போது கலை இலக்கியப் பண்பாட்டு ஆய்வாளரான டாக்டர். கா.சிவதம்பி அவர்கள் கீழ்க்கண்ட ஒரு கருத்தை வலியுறுத்துவது வழக்கம்.

சமூகத்தில், ஒரு கலை இலக்கியவாதி எந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்பைப் படைத்தாலும் சரி, அது தன்னகத்தே ஒரு சமூக விமர்சனத்தைக் கொண்டிருக்க வேண்டும்; காரணம், அதுதான் கலைப்படைப்பின் உயிர்நாடி என்பது போன்று பேசுவார். இ.எம்.எஸ். கலை வாணனின் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிரு களி’ல் இது மிகச்சரியாகவே எடுத்துக் கையாளப் பட்டிருக்கிறது.

ஆக, தமிழில் சமீபத்தில் வெளிவந்த எந்தக் கவிதைத் தொகுதியை விடவும் இது குறைந்ததல்ல என்று, நாம் உறுதியாகச் சொல்லலாம்!

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்

ஆசிரியர்: கலைவாணன் .எம்.எஸ்.

வெளியீடு: கீற்று வெளியீட்டகம்

1/47, அழகிய மண்டபம்

முளகுமூடு அஞ்சல்,

குமரிமாவட்டம் - 629167

விலை: ரூ. 180/- 

Pin It