தொல்பழங்காலத்தில் மனிதன் கல்லை முதலில் உடைக்கும் கருவியாகச் செய்து, பின்னர் வெட்டுக் கருவியாக முன்னேற்றி, தன் வாழ்க்கைத் தேவையைப் படிப்படியாக மேம்படுத்திக் கொண்டான்.

tha_pandian_450பின்னர் மழை, வெயில், விலங்குகளின் தாக்குதல் இவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மலைக் குகைகளில் வசிக்கத் தொடங்கியபோது, குகைச் சுவரிலே, மனித உருவங்களையும், விலங்கின் வடிவங்களையும் வரையத் தொடங்கி, அந்தப் பழக்கமே மேலும் முன்னேறி சிற்பங்களை வடிக்கிற நிலைக்குக் கொண்டு சென்றது. மனிதன் சிற்பங் களை வடிக்கத் தொடங்கியது கலை வரலாற்றில் முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும்.

நமது இந்திய மண்ணில், குறிப்பாக, தமிழ் நாட்டில் சிற்பிகளின் கலைத்திறனை, சிறப்பாகக் கோயில்களில் காண முடியும். கோயில்களில் உள்ளவை என்பதால் அவை மனிதன் என்ற உண்மை உருவுக்கும் இறைவன் என்ற கற்பனைக் கதை மாந்தருக்கும் இடையேயான உறவுப் போக்குகளைச் சுட்டிக்காட்டியதோடு மட்டுமின்றி, அரசியல், பண்பாடு, சமுதாயம் ஆகியவற்றின் உட்கூறுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தன; தொடர்ந்து உரைத்து வருகின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழன் இந்தச் சிற்பக் கலையிலும் கட்டடக் கலையிலும் எப்படிச் சிறந்து விளங்கினான் என்பதற்கான சான்றுகளை நேரில் கண்டு, அவற்றைச் சமுதாயத்துக்குத் தெளி வுறுத்தும் நோக்கில் தோழர் தா.பாண்டியன்

04-08-2011 அன்று ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி விழாவில் ‘கல்லும் கதை சொல்லும்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை நூலுரு எடுத் துள்ளது. சுமார் ஒன்றரை மணிநேரம் அவர் முழங்கிய அந்தச் செவ்வுரையில், பெண்ணியத்தில் தொடங்கி, கம்பன், இளங்கோ, பாரதி எனப் பேசிச் செல்லும் தா.பா., யூதர்களின் வரலாறெழுதும் நெறி, தில்லை நடராஜனின் சிலையில் உள்ள நுணுக்கங்கள், அகமதாபாத்தில் உள்ள குலுங்கும் கோபுரம் எனப் பல தகவல்களை எடுத்துச் சொல் கிறார்.

அகமதாபாத்தில் உள்ள மினார் ஒன்றை இடித்து, அதன் ரகசியத் தொழில்நுட்பம் என்ன என்று பார்த்து நானும் தெரிந்துகொள்வேன்; உங்களுக்கும் சொல்வேன் என்றும் மீண்டும் அதைக் கட்டிக் கொடுத்து விடுவேன் என்றும் வெளிநாட்டாளர் ஒருவர் வாக்குறுதி கொடுத்து பிரான்சின் உத்தரவாதத்துடன் களத்தில் இறங்கி மினாரை இடித்துத் தள்ளிவிட்டு, அதைத் தான் சொன்னது போல, பழைய நிலைக்குக் கட்டுமானம் செய்ய முடியாமல் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார். இதை நூலாசிரியர் கட்டுத் திட்டமாக, சுவையாக விளக்கி யிருக்கிறார்.

அடுத்து, ‘கம்போடியாவில் தமிழர்களின் கலை’ என்ற குறுந்தலைப்பில் தமிழர்களின் சிற்பக்கலைத் திறனைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்தி வாசகரை வியப்பில் ஆழ்த்தும்.

தமிழகத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிற்பங்கள், பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோயில் சிற்பங்கள் உள்ளிட்டவை ஒவ்வொன்றிலும் இடம் பெற்றுள்ள தமிழகப் பண்பாட்டு, வரலாற்றுத் தகவல்களை மிகவும் சுவையாகக் கூறியுள்ளார்.

நமது மூதாதையர்கள் சிற்பங்கள் வாயிலாகக் கூறும் தரவுகளை இன்றைய தலைமுறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென்றும், எதிர்வரும் சந்ததியினருக் காக நமது வரலாற்று, பண்பாட்டுத் தகவல்களை மேலும் விளக்கிச் செல்ல வேண்டுமென்றும் ‘கல்லும் கதை சொல்லும்’ என்னும் இந்த நூல் வலியுறுத்துகிறது.

ஆங்காங்கே பொருத்தமான படங்களை இருத்தி மிக அழகாக நூலை வெளியிட்டிருக்கிறது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.

தமிழர்கள் படித்துப் பயனுற வேண்டிய முக்கியத்துவம் உடைய நூல்களில் இதுவும் ஒன்று! 

கல்லும் கதை சொல்லும்

ஆசிரியர் : தா.பாண்டியன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.40.00

Pin It