கதை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றுதானே! அதிலும் நாட்டுப்புறக் கதைகள் என்றால் இன்னும் சுவையூட்டும் நிகழ்ச்சிகளையும் கற்பனைகளையும் எளிமையாகப் பின்னிக் கூறப் பட்டிருக்கும். அத்தகைய கதைகளை உள்ளடக் கியது தான் “தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகள்” என்னும் இந்தத் தொகுப்பு நூல்!

so_mu_muthu_450இதிலுள்ள பத்துக் கதைகளும் தாய்லாந்து சிறுவர்களின் வாழ்க்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் பல சுவாரசியமான கற்பனைகளையும் பொம்மைகளையும் வைத்துச் சுவைபட மெருகேற்றியிருக்கிறார் நூலாசிரியர் சொ.மு.முத்து.

இனி இதில் வரும் கதைகளைப் பார்ப்போம்.

‘பிறந்தநாள் பரிசு’ என்னும் கதையில் தன் பாட்டி கிரேணிக்குப் பிறந்தநாள் பரிசு வாங்கித்தர இயலாமல் தவிக்கும் சிறுவன் ஜார்ஜ் ஏற்கெனவே பரிசு வாங்கி வைத்திருக்கும் அவனுடைய சகோதரன் ஃபெப்பு இருவருக்கும் இடையே நடக்கும் உரை யாடல்களும் - தொடர் நிகழ்வுகளும்தான் கதையின் போக்கு. அதில் ஜார்ஜின் நற்குணங்களும், ஃபெப்புவின் காழ்ப்புணர்ச்சியையும் குழந்தைகளின் மனதில் நயமான நற்பண்புகளை வளர்க்கும் உத்தியாகக் கையாண்டிருக்கிறார், நூலாசிரியர்.

‘மோகினி பட்டாம்பூச்சி’ கதையில் ஓர் அழகிய பட்டாம்பூச்சியை மோகினியாகக் காட்டி அப்பட்டாம்பூச்சி ஒரு தீயவன் கையில் அகப்பட்டுக் கொண்டதைப் போலவும் அதை ஒரு சிறுமி காப்பாற்றுவதைப் போலவும் கதையைக் கூறி, குழந்தைகளின் மனதில் தோன்றும் துன்பத்தைக் கண்டறிந்து நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை ஆழமாகப் பதிய வைக்கிறார். மேலும், நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை கட்டாயம் உண்டு என்னும் எதார்த்த நம்பிக்கையை மோகினி கொடுக்கும் வரத்தின் மூலம் பிஞ்சுகளுக்கு ஊட்டுகிறார்.

அடுத்து, ‘ஆமைகளின் நகரம்’ என்னும் தலைப்பே மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக் கிறது. இக்கதையில் வரும் தீனாவைப் போலத் தான் இன்றைய பெரும்பாலான குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் கண்டிக்கும் போது குழந்தைகளுக்கு நம் மீது எரிச்சல் ஏற்படுவது இன்றைய பெரும்பாலான குடும்பங்களில் தினசரி நடக்கிற ஒன்றே! இக்கதைகளில் வரும் தீனா ஆமை யாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி ஆமைகளின் உலகத்திற்குள் நுழைந்து பின்னர் எதார்த்தத்தைக் கண்டறிகிறான். பின்னர் அவற்றைப் போலவே நாமும் வாழ்வது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை உணர்கிறான். தீனாவின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு, எப்படிச் செயல்படுகிறான் என்பதை அழகிய கற்பனை நயத்துடன் எடுத்துரைத்துள்ளார்.

குழந்தைகளின் குணமே தம்மிடம் உள்ள தன் பொருட்களை மற்றவர்களுக்குத் தர மறுப்பதுதான்! அப்படித்தான் ஜார்ஜும் தன்னுடைய காரை மிகவும் நேசித்தான். ஒரு நாள் தோட்டத்தில் விளையாடும் போது அவன் காரை மறந்து விட்டு விட, அதை இரண்டு குள்ள மனிதர்கள் எடுத்துச் செல்கின்றனர். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது, அது ஜார்ஜின் மனத்தில் எத்தகைய சிந்தனையை விதைக்கிறது என்பது. “காணாமல் போன மோட்டர் கார்” என்ற கதையில் கூறப்பட்டுள்ளது.

போலியும், பீட்டரும் மிகவும் கெட்டிக்காரக் குழந்தைகள். அவர்களின் ஒரே குறை அவர்களின் தாயார் இவால் சீக்கிரம் அவர்களை உறங்கச் சொல்வதுதான்! நேரத்துடன் உறங்கினால் மறு நாள் எழும்போது புத்துணர்ச்சியுடன் இருக் கலாம், பாடங்களை உற்சாகமாகப் படிக்க முடியும் என்பது அவர்களுக்குப் புரியாமல் தன் தாயின் மீது கோபப்பட்டார்கள். அவர்களின் தவற்றைச் சுட்டிக் காட்ட அந்தத் தாய் என்ன வழியைப் பின்பற்றினாள், அவர்கள் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள் கிறார்கள் என்பதே “நாங்கள் தூங்க மாட்டோம்” என்ற கதையின் சாரம்!

‘அழகான காகித ஓவியம்’ என்னும் கதை அதன் தலைப்பைப் போலவே அழகானது. தன்னம்பிக்கை குறைந்த மோரிஸ் என்ற சிறுவனுக்கு ஓவியர் மூலம் தன்னம்பிக்கையை அறிவுறுத்துகிறார் கதாசிரியர். அதன் பிறகு போரில் தன் திறனை வளர்த்துக்கொண்டு, அனைவரின் பாராட்டைப் பெறுகிறான் என்பதே இக்கதையின் உள்ளடக்கம்.

தன்னைவிட வல்லவன், பெரியவன் யாரும் இல்லை என்ற குணம் பெரியவர்களின் மத்தியில் மட்டும் இன்றிச் சிறுவர்களின் மத்தியிலும் உண்டு. இப்பழக்கம் சிறுவயதிலேயே மற்ற பிள்ளைகளின் வெறுப்பைச் சம்பாதிக்கும் என்பதைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோர் அறிவ தில்லை. அத்தகைய குணம் கொண்ட சிறுவன் போலி “மிஸ்டர் புட் ஹீம் ரைட்” கதையின் நாயகன். அவன் ஒரு முறை விடுமுறையின் போது தோட்ட வேலைக்குச் செல்ல, அத்தோட்டத்தின் முதலாளியை வைத்தே போலிக் குணத்திற்குத் தக்கதொரு பாடம் கற்பித்த விதம் மிகவும் அருமை.

ஒருவன் எப்போதும் தன்னைப் பற்றிப் பெருமை பாடிக் கொண்டிருந்தால் என்றாவது ஒரு நாள் மற்றவர்களின் மத்தியில் கேவலப்படுவான் என்பதைச் சிறுவர்களை வைத்துக் கூறியிருந்தாலும் இக்கதை பெரியோர்களுக்கும் பொருந்தும். அக்கருத்தினை பொம்மைகளை வைத்தே ‘மாலுமியின் அதிசய வீரச் செயல்கள்’ என்ற கதையின் மூலம் பண்பின் வலிமையையும் நம்முன் வைக்கிறார்.

ஒவ்வொருவரும் தான் மேற்கொண்ட முயற்சியின் கண் இடைவிடாது பாடுபட்டால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு என்ற கருத்தினை சிறார்கள் புரிந்துகொள்ளும் வகையில் பொம்மைகளின் நடையிலே எழுதப்பட்ட கதையே ‘டிப்போவும் ஜோலியும் கட்டிய வீடு’.

“மலைக்கோட்டையும் அட்டை வீடும்” என்ற கதையின் மூலம் சிறுவர்கள் தங்களின் இளமைப் பருவம் முதலே தமக்கு அருகில் இருப்பவர்களை அரவணைக்கும் நல்லதொரு பழக்கத்தினை உணர்த்துகிறார் ஆசிரியர்.

கதைகள் என்றாலே பெரியவர்கள் குழந்தைகளுக்கு மற்ற பிள்ளைகளைச் சுட்டிக்காட்டிக் கூறுவதுதான் என்று இல்லாமல் கதைக் கருவுக்குப் பொம்மைகளை வைத்துக் கற்பனை மெருகேற்றி உயரிய கருத்துகளைச் சிறுவர்களின் மனதில் எளிமையாக நுழைக்க முனைகிறார் நூலாசிரியர் சொ.மு.முத்து.

தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகள்

ஆசிரியர் : சொ.மு.முத்து

வெளியீடு : அறிவுப் பதிப்பகம்

விலை : ரூ.55.00

Pin It