வரலாற்றாய்வறிஞர் பேராசிரியர் முனைவர் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் எழுதிய தமிழகக் கடற்கரையில் போர்ச்சுக்கீசியர், ஐரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய துணி வணிகம், மற்றும் பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நகரம், ஆகிய ஆங்கில நூல்களை நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே நூலகத்தில் படித்துள்ளேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும், காலனியத் தொடக்ககாலம், மற்றும் காலனிய வளர்ச்சி காலம் ஆகிய நூல்கள் மூலம், வரலாற்றின் மீது என் ஆர்வம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் அதிகமாகத் திரும்பியது.
கடல்சார் வரலாறு
சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் என்ற நூல், 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் ஆட்சியின் போது சோழமண்டலக்கரை உலக வரலாறு அளவில் முக்கியத்துவம் பெற்றதை விளக்குகிறது. இந்நூல் வேளாண்மை, கைவினைத்தொழில் கிராம மற்றும் நகர்ப்புற இணைப்பு, உள்நாட்டு வணிகம், மற்றும் அயல்நாட்டு வணிகம் ஆகியவைப் பற்றி விரிவாக எழுதி, சமூகத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் அழுத்தம் பெறுகிறது.
மேற்சொன்ன நூலில் குறிப்பிட்டுள்ள அயல்நாட்டு வணிகம் மட்டும், போர்ச்சுக்கீசிய ஆவணங்களின் அடிப்படையில் தனி ஒரு நூலாகவே ஜெயசீல ஸ்டீபன் ஆழமாக ஆய்வு செய்துள்ளார். முத்துக்கள் மற்றும் சங்குகளின் வர்த்தகம், குதிரை, யானை, வெடியுப்பு வணிகம், அரிசி, துணிமணி வணிகம், தமிழக பொருளாதாரத்தின் தன்மையை மாற்றிய வாசனைப் பொருட்கள், உலோகம், விலையுயர்ந்த கற்கள், தங்கம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. போர்ச்சுகீசியர் தங்கிய கடலோர சிற்றூர்கள் நகரமாக்கியதும் வர்த்தகத்தின் விரிவும் அளவிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ் வணிகர்கள் பற்றி மட்டும், அவர்கள் மேற்கொண்ட கடற்பயணங்களின் வணிகக் கப்பல்கள், சரக்குகள், தென்கிழக்கு ஆசியாவின் மன்னர்கள் வழங்கிய சலுகைகள், கடல்சார் வணிகம் பெருக உதவியைப் பற்றி ஒரு நூல், விளக்குகிறது. மலாக்கா, மணிலா, ஜாவா, தாய்லாந்து, சுமத்ரா தீவு, மலாய் தீபகற்பம், பிராக், பினாங்கு ஆகிய இடங்களில் தமிழர்கள் பல்கிப் பெருகி, பல தமிழ் வணிகர்கள், பிரதம மந்திரி, துறைமுக அதிகாரி, வரி வசூலிக்கும் அதிகாரி, கப்பல்படை தலைவர் போன்ற பதவிகளில் நியமனங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் வழியே நடந்த ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா கடல்சார் வணிகம் (1570-1880) தனியே ஒரு நூலில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. ஏற்றுமதியான பொருட்கள், இறக்குமதியான பொருட்கள், விலையின் குறிப்புகள் ஆகியவையும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாறு
கடல்சார் வணிகத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை நூல்களில் விளக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து ஒப்பந்த தமிழ் தொழிலாளர்கள் பிரெஞ்சு கயானா, குவாதலுப், மர்த்தினி, மொரிஷியஸ், ரீயூனியன் தீவுகளுக்கு புலம்பெயர்ந்தது (1729-1883) ஆவணங்களில் அடிப்படையில் ஒரு நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள், குடியேறியவர்களின் எண்ணிக்கை, கப்பல் புறப்பட்ட தேதி, கப்பல் பெயர், ஒப்பந்தம் முடிந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆகிய புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பாகும். இதுவுமன்றி பயணத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை, பயணித்த கூலிகளின் சாதி ஆகியவைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கயானா, டிரினிடாட், ஜமைக்கா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் நத்தாலுக்கும் புலம்பெயர்ந்த வரலாறு (1837-1896) சிறப்பாக புள்ளிவிவரங்களோடு ஒரு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் மேற்கொண்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ஒவ்வொரு நபருக்கும் காலனிய குடிபெயர்ப்பாளர் எண் வழங்கப்பட்டுள்ளது சிறப்பானது ஆகும். ஆறு மாத கைக்குழந்தைக்குக் கூட ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொரிஷியஸ் பயணமான தமிழ்க் கூலிகள், மாவட்டம் வாரியாக அனுப்பப்பட்ட தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இலங்கை சென்று காப்பித் தோட்டங்களில் பணியாற்றிய கூலித்தொழிலாளர்கள், மலாயாவில் வாழ்ந்த கூலிகளின் சமூக வாழ்க்கை ஆகிய விவரங்களும் ஒரு நூலில் வழங்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
இதோடு மட்டுமல்லாது தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் மலாயா, பர்மா, சுமத்ரா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, டாஸ்மேனியாவிற்கு ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டதும் (1787-1896) அவர்களின் வாழ்க்கையும், சிறையிலிருந்து துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றும்வரை நடந்த நிகழ்வுகளும், கைதிகளின் கோரிக்கை, கைதிகள் மனு அளித்தது, கைதிகள் பற்றிய ஆங்கிலேயர்களின் கொள்கை, குற்றவாளிகளின் இறப்பு ஆகியவைகளும் ஒரு நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகம் (1547-1792) பற்றி ஒரு நூலில் மிகவும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலிருந்து நன்னம்பிக்கை முனை வழியாக ஐரோப்பியர்கள் பயணித்ததை நாம் அறிவோம். ஆனால் இந்த நூலில் தமிழகத்திலிருந்து மலாக்கா, மணிலா வழியாக பசிபிக் கடலில் பயணித்து, மெக்சிகோ நாட்டிற்கு தமிழ் அடிமைகள் அனுப்பி விற்றது தெரிவிக்கப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா நாட்டிற்கு தமிழ் அடிமைகள் சென்றது ஒரு வியப்பான செய்தி. இவ்வாறு உலகளாவிய அடிமை வணிகம் நடந்ததை புலப்படுத்துகிறது. இதுவரை எவரும் எழுதாத ஒரு வரலாறு இதன் மூலம் நமக்குத் தெரிகிறது.
தமிழ்ச் சமூகத்தின் வரலாறு
ஜெயசீல ஸ்டீபனின் சில நூல்களில், காலனிய தொடக்ககாலத்தில் பல சாதி மக்களின் வரலாறு தெளிவாக விளக்கப்படுகிறது. பறையர், பள்ளர் வாழ்க்கை, கொல்லர், தச்சர் வாழ்க்கை, மீனவ சமூகமான கரையாளர், முக்குவர், செம்படவர், பட்டணவர் ஆகியோரது வாழ்க்கைப் பற்றி ஒரு நூலில் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் (கி.பி.600-1565) பற்றி தனியே ஒரு நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூலியாட்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிமைகளின் வாழ்வியல் சூழல் (1621-1878) பற்றி ஒரு நூல் விளக்குகிறது. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை பற்றி (1574-1793) ஒரு நூல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இதில் போர் அவலங்கள், மக்கள் பட்ட துயரங்கள், கைவினைஞர்கள் இடம்பெயர்தல் ஆகியவைகள் விளக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சாதிகளின் அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு நடந்த அனைத்து விவரங்களும் மிக சிறப்பாக தனியே ஒரு நூலில் விளக்கப்பட்டுள்ளது. தொழில் வகைகளும், சாதிகளும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதும், சாதிய புராணங்கள் புனையப்பட்டு தோன்றியது மற்றும் இவைகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உள்ளது என்பதும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப்பாய்களும் போர்களும் தமிழகத்தில் காலனியமயமாக்கலும் அதன் சமூகத் தாக்கம் பற்றி ஒரு நூல் விவரிக்கிறது. நெசவாளர்களும், துணி வணிகர்களும் பற்றி தனியே ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும், தமிழ்வழிப் பள்ளிகள், கல்வி நிலை, மேற்கத்தியத் தாக்கம் மற்றும் புதுப்பரிமாணங்கள் பற்றி ஒரு நூல் விளக்குகிறது. தமிழக இசைக்கலைஞர்கள், நடனக்காரிகள் மற்றும் நாடக-நடிகர்கள் பற்றியும், நிகழ்த்துக்கலை வரலாற்றில் ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும் பற்றி ஒரு நூல் விளக்குகிறது. காலனியகால உள்ளூர் கலைஞர்கள், வண்ணஓவியர்கள், ஐரோப்பியர் வண்ணஓவியங்கள் தொடர்பாக தனியே ஒரு நூல் விளக்குகிறது.
தமிழ் மக்களின் அறிவாற்றலும் ஐரோப்பியர்களின் தாக்கமும்
தமிழகத்தில் தொழில்நுட்பம் எவ்வாறு சிறப்பாக இருந்தது என்று ஒரு நூல் விளக்குகிறது. இந்த நூல் கட்டடத் தொழில்நுட்பம், பாய்மரக் காலத்தில் கடலோடிகளும் கப்பலும், படகு தொழில்நுட்பம், இரும்பு மற்றும் எஃகு உருமாறும் தொழில்நுட்பம், பீரங்கி, பீரங்கிக்குண்டுகள், வெடிமருந்து, துப்பாக்கிகள், போர் ஏவுகணைகள், போர்ப்படை தொழில்நுட்பம் பற்றி விளக்குகிறது.
தமிழர்களின் சித்த மருத்துவத்தை ஐரோப்பியர்கள் கண்டதும் தெரிந்துகொண்டதும் பற்றி ஒரு நூல் விளக்குகிறது. பூச்சிக்கடி, வண்டுக்கடி, தேள்கடி, நாய்க்கடி, மற்றும் நச்சு பற்றிய தமிழர் மருத்துவம் பற்றி இது விளக்குகிறது. தமிழ் மருத்துவச் சுவடிகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. மருத்துவத் தகவல் பரிமாற்றம் மூலம் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி பற்றியும் விளக்குகிறது.
தமிழத்தில் ஐரோப்பியர்கள் கண்ட விலங்குகள் பற்றியும், விலங்கு அறிவியல் ஆராய்ச்சி நடந்தது பற்றியும், மருத்துவ விலங்கியல் வளர்ச்சி பற்றியும் ஒரு நூல் விளக்குகிறது. இந்நூலில் ஐரோப்பியர்கள் கண்ட பறவைகள், பூச்சிகள், விலங்குகள், பாம்புகள், மீன்கள் பற்றியும், அவர்கள் வரைந்த படங்கள், வண்ணஓவியங்களும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் நிலப்பரப்பில் நிகழ்ந்த தட்பவெப்ப மாற்றங்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள், மக்கள் பட்ட இன்னல்கள் பற்றி 9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை, இதுவரை எழுதப்படாத வரலாறு எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் மழைநிலவரம், சந்தித்த பஞ்சம், வறட்சி, புயல், சூறாவளி காற்று, வெள்ளம், நிலநடுக்கம், பேரலை தாக்கங்கள், ஐரோப்பியர்கள் வருகைக்குப்பின் தமிழகத்தில் அறிமுகமான தொழில்நுட்பங்கள் வெப்பநிலை, வளிமண்டலம் அழுத்தம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் அறிவியல் மாற்றங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் இலக்கியப் பயணத்தை ஐரோப்பிய மொழிபெயர்ப்புகளின் வழியே ஒரு நூல் விளக்குகிறது. தமிழிலிருந்து போர்ச்சுக்கீசியம், இத்தாலியன், லத்தீன், ஆங்கிலம், டச்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு நடந்தது பற்றி விளக்குகிறது. சமஸ்கிருதம், மராத்தி, வங்காளம், மற்றும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு நடைபெற்றது விளக்கப்படுகிறது. எபிரேயம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து பைபிள் தமிழில் மொழிபெயர்ப்பு நடந்தது பற்றி விளக்குகிறது. இதனால் நடைபெற்ற தமிழ் உரைநடை வளர்ச்சி, மற்றும் அச்சாக்கத்தின் தாக்கம் பற்றி விவரிக்கிறது.
தற்போது இறுதியாக வெளிவந்துள்ள 25ஆம் நூலில் தேயிலை, புகையிலை, காப்பிக்கொட்டை தமிழகத்தில் அறிமுகமாகி வர்த்தகம் நடந்தது பற்றி விளக்கப்பட்டுள்ளது. பல வகையான மதுபானங்கள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடந்த வணிகமும் நுகர்வும், இதனால் தமிழக சமூகத்தில் ஏற்பட்ட சீரழிவு பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள்
நான் ஏற்கெனவே புதுச்சேரியின் ஊர்ப் பெயர்கள் குறித்து சிறு ஆய்வு நூல் எழுதிக் கொண்டிருந்தபோது, பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நூலை மொழிபெயர்த்து சமூக ஊடகங்களில் ஏன் வெளியிடக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களை சந்திக்கவேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். அப்போது திரு. சீனு. தமிழ்மணி அவர்கள் பெற்றோரின் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவு ஒன்று நடந்தபோது, ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் உரையைக் கேட்டேன். பின்னர் புதுச்சேரிப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கடல்சார் வரலாற்று கருத்தரங்கில், 02-03-2020 அன்று அவரை சந்தித்தேன். பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நூலின் ஒரு இயலை மொழிபெயர்த்துள்ளேன், அதை தாங்கள் அனுமதித்தால் வெளியிடலாம் என நான் எண்ணியுள்ளதை தெரிவித்தேன். பின்னர், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மின்னஞ்சல் மூலம் மொழிபெயர்த்த கட்டுரையை அனுப்பிவைத்தேன். இதன்பிறகு அவர் என்னைத் தொடர்புகொண்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம், வரலாற்று நூல்களை வெளியிட்டு வரும் ‘தமிழ் மக்கள் வரலாறு’ வரிசையில், பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நூலின் மொழிபெயர்ப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், தேர்தெடுத்த ஏழு இயல்களை மொழிபெயர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நானும் இதுபோல சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என எதிர்நோக்கியிருந்தபோது, அவர் கூறிய ஏழு இயல்களை உடனே மொழிபெயர்த்து அனுப்பினேன். இந்நூல் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.
இதன்பிறகு, தமிழ் இலக்கியப் பயணம், அடுத்து, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், பிறகு, தமிழக அடிமைகள், கூலியாட்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் சமூகச்சூழல், மற்றும் சிப்பாய்களும் போர்களும் போன்ற 12 நூல்களை நான் கடந்த 5 ஆண்டுகளில் மொழிபெயர்த்தது, இதுவரை வெளிவந்துள்ளன.
அரசு அலுவலகத்தில் நான் பணிபுரிந்த போதும், ஏற்கெனவே சுற்றுச்சூழல் இயக்கத்தில் தன்னார்வலராக இருந்தபோதும், மொழிபெயர்ப்பு செய்துள்ள அனுபவம் எனக்கு கைகொடுத்தது. தமிழ் இலக்கியப் பயணம் நூலை மொழிபெயர்க்கும்போது தான், பல புரியாத சொற்களும், கிருஸ்துவ மதம் சம்பந்தமான சொற்களும், அதன் பொருள்களும், விரிவான தேடலையும் மற்றும் அதன் உள்ளாழ்ந்த அர்த்தத்தையும் உணர்த்தி, மொழிபெயர்ப்பு செய்ய மேலும் ஊக்கமூட்டியது. முனைவர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கு போர்ச்சுக்கீசியம், டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் ஆகிய பல ஐரோப்பிய மொழிகள் தெரியும் என்பதாலும், ஐரோப்பிய ஆவணக்காப்பகங்களிலும், நூலகங்களிலும் தேடி அலசி, அவரின் ஆய்வுகள் மிகத் தெளிவாக இருப்பதாலும், பல சொற்கள் அந்தந்த மொழியோடு எழுதியிருப்பார். அதனால் நான் பல நேரங்களில் பேராசிரியரைத் தொடர்புகொண்டு சந்தேகத்தை கேட்டு எழுதி மொழிபெயர்த்தேன் சில நேரங்களில் அதன் வேர்ச்சொல், மூலச்சொல் எந்த மொழி என்பதையும் தேடி, பொருளைப் புரிந்து அதற்குத் தகுந்தவாறு மொழிபெயர்த்தேன். நான் இதுவரை படித்திராத பல புதிய சொற்களையும் இவரது பெரும் அறிவுப்புலத்திலிருந்து கற்றுக்கொண்டேன்.
முனைவர் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் ஆங்கில நூல்களில் சொற்றொடர்களைப் படித்து, புரிந்து மொழிபெயர்த்து வருகிறேன். ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பிரித்து தொடர்ச்சியாக அடிக்குறிப்புகளில், அதன் தரவுகள், ஆதாரங்கள், நூல்கள் போன்றவற்றை கட்டுரையின் முடிவில் தந்திருப்பார், அதையும் சற்று உற்றுநோக்கி படித்துப்பார்த்து அதன் மூலத்தை சில நேரங்களில் சுருக்கமாக மொழிபெயர்ப்பில் எழுத வேண்டி வரும். பெயர்ச்சொற்களின் உச்சரிப்பு, சரியாகப் பயன்படுத்தி மொழிபெயர்த்து வருகிறேன். குறிப்பாக தமிழகத்தில் நிகழ்ந்த தட்பவெப்ப நிலை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள், மக்கள் பட்ட இன்னல்கள் நூலில், பல அறிவியல் கலைச்சொற்கள், அறிவியல் உபகரணங்களின் பெயர்கள் ஆகியவையும் பேராசிரியருக்கு பல துறைகளில் இருக்கின்ற ஆழ்ந்த அறிவும் புலப்பட்டது. இதோடு அவரின் பன்முகத் தன்மையுடன், காலனிய காலத்தில் தமிழ் மக்களின் உண்மையான நிலையை ஆணித்தரமாக எடுத்துக்கூறும் பாங்கும், மொழிபெயர்க்கும்போது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
பேராசிரியர் வெளிநாடுகளுக்குச் சென்று ஆவணங்களைத் தேடி, அதிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தார், ‘தமிழ் மக்கள் வரலாறு’ என்ற நூல் வரிசையில் காலனிய கால வரலாற்று இடைவெளியை நிரப்புவதற்காக, இதுவரை 25 நூல்களை வெளியிட்டு, மிகப் பெரிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தத் ‘தமிழ் மக்கள் வரலாறு’ நூல் வரிசை வெளிவர இதில் நானும் பங்கு கொண்டுள்ளேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக மொழிபெயர்க்க ஊக்கமளித்த வரலாற்றாய்வறிஞர் பேராசிரியர் முனைவர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாருக்கும் நன்றி.
- கி.இளங்கோவன்