அழகியல் (Aesthetics) என்பது, அழகுணர்ச்சி (Esthetics) என்றும் அழைக்கப்படுகிறது. அழகு மற்றும் சுவை குறித்து ஆராயும் தத்துவப் படிப்பு அழகியல் என்று அழைக்கப்படுகிறது. கலையின் தத்துவம், இயற்கை கலை மற்றும் கலைப் படைப்புகளுக்கு விளக்கமளிக்கின்ற அல்லது மதிப்பீடு செய்கின்ற ஒரு துறையாகவும் வளர்ந்து வருகின்றது. அழகியலைக் குறிக்கும் "Aesthetics" என்ற சொல் " aisthetikos" என்ற கிரேக்க சொல்லிலிருந்து தோன்றியது ஆகும். இதன் பொருள். 'புலனறிதல்' என்பதாகும். இடைக்காலத்தில் Alexander Baumgarten எனும் அழகியலர் Reflection of Poetry  (1735) எனும் தனது நூலில் முதன் முதலாக Aesthetics என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அழகியல் என்ற கல்விப் புலத்தினை ஒரு பொது வரையறைக்குள் கொண்டு வந்துவிட முடியுமா என்றால் அது கடினமான ஒன்றுதான். அழகான, அசிங்கமான, விழுமிய, நேர்த்தியான, சுவை, விமர்சனம், கவின் கலைகள், சிந்தித்தல், இன்பம் போன்ற சிந்தனைகள் மற்றும் அவை குறித்த அனுபவம் இணைந்து அழகு மற்றும் சுவை போன்ற கருத்துக்களைத் தீர்மானிக்கின்றன. அழகியல் குறித்தக் கருத்துக்களை, உணர்வுகளை எடுத்துரைப்பதற்கு சரியான புரிதல் கொண்ட தத்துவார்த்த அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. இக்கட்டுரையானது அழகியல் ஆய்வுப் புலத்தில் பயன்படுத்தப் படக்கூடிய கலைச் சொற்கள் குறித்தப் புரிதலை விளக்க முற்படுவதோடு மட்டுமல்லாது, பிறதுறைகளோடு இணைந்து இயங்கும் முறையியலையும், அணுகுமுறையாக எவ்வாறு உருவெடுக்கிறது என்ற செயல்பாட்டினையும் விளக்குகின்றது.

அழகு குறித்த அறிஞர்களின் கருத்துக்கள்

ப்ளேட்டோ "வடிவம் தான் அழகு" என்கிறார். அரிஸ்டாட்டில் "தனித்தனிப் பொருள்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை முறைப்படுத்துவதால் அழகு உண்டாகிறது என்கிறார்". படைப்புப் பனுவலின் அக அமைப்புச் சீர்மையும், படைப்பின் சமூக செயல்பாடும், சமூக மதிப்புகளோடு படைப்பிற்குரிய உறவும் ஒன்று சேரும்போது அப்படைப்பு அழகுடையதாக மாறுகிறது என்று Mukarovsky  (1979) கூறுகிறார். ஓர் இலக்கியப் படைப்பின் ஒட்டுமொத்தமே அழகைத் தருகின்றது என்று G. Lukach (Marxian Aesthetics)  கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் முறைமை (order), ஒத்திசைவு (symmetry),  துல்லியம் (definiteness) ஆகியவை அழகுக்கு அடிப்படை என்கிறார். படைப்பின் அழகு என்பது படைப்பாளியின் படிப்புத்திறனிலிருந்து வெளிப்படுகிறது என்று F.R. Levis  (1962) குறிப்பிடுகின்றார். வாசகனின் வாசிப்பில்தான் அழகு வெளிப்படுகிறது என்பது Roland Barthes  கருத்து. அந்த வாசிப்பிற்கு இவர் super reader  என்று கூறுகிறார். அழகு என்பது விளக்கத்துடன் இணைந்தது. குறியீடுகளை விளங்கிக் கொள்ளுதலே விளக்கம் என்று பொருள்படும். அனுபவங்களை விளங்கிக் கொள்வதைக் கலைவடிவங்கள் ஊடுகடத்துகின்றன. விளங்கிக் கொள்ளுதல் என்பது சார்புடைய ஓர் எண்ணக்கரு. சமூகத்தின் விளைபொருளாகிய மொழி அழகியலைப் புலப்படுத்தும் பண்பு கொண்டது. புலக்காட்சி கொள்ளல், சிந்தித்தல், அறிவையும் அனுபவங்களையும் தேக்கி வைத்தல், ஊடு கடத்தல் முதலிய செயற்பாடுகள் மொழியால் மேற்கொள்ளப்படுகின்றன.

அழகியல் என்பது கலைகளின் தத்துவங்களில் உள்ள துறைகளில் ஒன்று. அழகியல் மொழி மட்டுமின்றி இயற்கைப் பொருட்களையும் எல்கையாகக் கொண்டுள்ளது. ஒரு பொருளானது ஒருவர் பார்வையில் அழகு நிறைந்ததாய் இருந்து மற்றவருக்கு அது அழகியல் தன்மை குறைவாய் உள்ளதாய் தோன்ற வாய்ப்புள்ளது. காரணம் அழகியல் குறித்த நியாயங்கள் ஒருசார்புத் தன்மையில் இருப்பதே ஆகும். பலதரப்பட்ட மக்களின் பல்வேறு மனநிலைகளோடு அழகியல் இணைக்கப்பட்டுள்ளது என்பதே அதன் பதில். அதே நேரத்தில், அழகியல் தரத்தை வரையறுத்தல் என்ற கேள்விக்கு குறைந்தபட்சம் அழகியல் வரையறுக்கப்பட, கொள்கைகளை கண்டறிய வேண்டும் என்றால், அழகு அல்லது மற்ற அழகியல் கருத்துக்கள் குறித்து அறிய ஒரு தத்துவவியல் ஆய்வு என்பது அவசியமாகிறது.

அழகியல் விஷயத்தை ஒரு பொது வரையறைக்குள் கொண்டு வருவது கடினம். அதற்கான வரையறை உருவாக்குவதே நவீன அழகியலின் முக்கியப் பணியாக உள்ளது. நம் அனுபவம் ஒரு சுவாரசியமாக மற்றும் புதிராக உலகினில் தெரிந்திருந்தால், அழகான, அசிங்கமான, விழுமிய, மற்றும் நேர்த்தியான தளங்களில் சுவை, விமர்சனம், நுண்கலை, சிந்தித்தல், புலனுணர்வு குறித்த அனைத்தும் நமது கொள்கைகள், கூட்டுறவு மற்றும் ஒத்த நலன்களில் ஈடுபட்டு வருகின்றோம் என்று கூறலாம். நமது இந்த உணர்வு தவறானது என்று இருந்தால், நாம் கொண்ட அழகு மற்றும் சுவை போன்ற கருத்துக்களும் தவறானதாகவே இருக்கும். நமது உலக நோக்கோடு இயைந்து உருவாக்கிக் கொள்ளுகின்ற மேற்கூறிய முடிவுகள் தவறானது என்று இருப்பின், பொருள் குறித்த அழகு மற்றும் சுவை போன்ற கருத்துக்களை மறுபரிசீலனை செய்வது அவசியமாகின்றது.

அழகியல்

அழகியலின் பொருள் குறித்த அணுகுமுறையான அழகியல் பொருட்களைத் தேர்ந்தெடுத்து அந்த மாதிரியின் முக்கியத்துவத்தை அழகியல் பொருள் மற்றும் தத்துவ அழகியல் ஆகிய இரண்டினையும் கூறலாம். இந்த வேறுபாடு இடைக்கால தத்துவ மரபிலும் மற்றும் சமீப நிகழ்வியல் குறித்த ஆய்வுகளிலும் முக்கிய பங்கு வகித்தது. உதாரணமாக ஒரு நபர் ஒரு இருட்டறையில் மண்டபத்தில் உள்ள ஒரு வெள்ளை துணி மடிப்பு பார்த்து பயந்து, ஒரு ஆவி என்று நினைக்கிறார். அந்தப் பொருளானது ஒரு பேயாக இருக்கும் போது, இங்கே, பயம் துணி ஆகிறது. ஆனால் பயம் ஒரு தத்துவ விவாதம். அஞ்சப்படுகிற விஷயங்களை ஒரு விவாதமாக வழங்கினாலும், பொருள் எப்போதும் தன்னுடைய இருப்பில் உள்ளது. அதேசமயம் பொருள் குறித்த அந்த பயம் மனதில் நிலையாகவே உள்ளது. Clive Bell (Art, 1914) கலைக் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அதுவே அதன் முக்கிய வடிவமாகவும் உருப்பெறுகிறது என்கிறார். ஆக கலை என்பது அதன் தன்மையின் அடிப்படையில் வேறுபடுகின்றது என்று அவர் கருதுகிறார். எப்போது ஒன்று கலை என்று அறியப்படுகிறது என்பதற்கு அவர் தரும் பதிலும் இதுதான் "அது எப்போது கலை என்று அறியப்படுகிறதோ அப்போதுதான்", என்கிறார்.

மேலும், இது கலை வடிவங்கள் இடையுள்ள ஒற்றுமையை மட்டும் பார்ப்பதல்லாமல் அவைகளின் வேறுபாடுகளினையும் கவனத்தில் கொள்வது என்பதும் தத்துவார்த்த முக்கியத்துவம் வாய்ந்தது. அது கிட்டத்தட்ட எதையும் அழகான பார்வையில் சில புள்ளியில் இருந்து காணலாம் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அழகு குறித்த ஒருவரின் அனுபவம் முக்கியமாக அழகானது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது அந்தப் பொருள் குறித்த அறிவைப் பொறுத்தது. ஒன்றைக் கல் என்று சொல்வதற்கும், அதனையே இன்னொருவர் சிற்பம் என்று சொல்லுவதற்கும் பொருள் குறித்த அறிவு என்பது இங்கு முதன்மையாக நிற்கின்றது. காண்ட் (Kant) - ன் அழகியல் வெளியீட்டுத்திறன் கோட்பாட்டின்படி நமது அழகியல் உணர்வு எப்போதும் பொருள் பற்றிய ஒரு கருத்து வழியே சார்ந்திருக்கின்றது. அதேநேரத்தில் மனித உருவத்தின் அழகும் உருவம் குறித்த வரையறையில்தான் அடங்குகின்றது. (உதாரணமாக: ஒரு சாரார் குதிரையின் வளர்ந்த இடுப்பு அழகாக உள்ளதாக கருதுகின்றனர். ஏனென்றால் வளைந்த அம்சங்கள், முதுகு போன்றவைகளைக் கூறலாம்). ஆக அழகியல் குறித்த எந்த முடிவுகளும் பொதுவானதாக இருப்பதில்லை. அழகான அம்சங்கள் அடங்கிய சிற்ப செயல்பாடு உள்ளது; அதே அழகியல் வேலைப்பாடுகள் ஒரு கட்டிடக்கலைக்குத் தேவையில்லாமல் இருக்கலாம்.

அழகியல் உணர்வு

ஒரு குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே அழகியல் நலன்கள், அழகியல் அனுபவம், உற்பத்தி, கலை பாராட்டுதல், அழகு, வெளிப்பாடு, மற்றும் வடிவம் போன்ற கருத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். இக்குந்த தளங்களுக்கு மனிதர்கள் அணுக என்ன இருக்கிறது? என்று பிளாட்டோ போன்ற ஆரம்பகால தத்துவஞானிகள் காலத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருந்தாலும், Emmanuel Kant போன்றவர்களும் இடைக்காலத்தில் தங்களின் பங்காக கேள்விகள் எழுப்ப மறுக்கவும் இல்லை என்றே கூறலாம். Kant கூறுவது யாதெனில் பகுத்தறிவு என்ற ஒன்று மட்டும்தான், அழகியல் ஆர்வம், அழகியல் குறித்த விமர்சனத்தை வைக்க முடியும்; அழகியலில் பகுத்தறிவு செலுத்தப்படும் வரை அது முழுமை பெறுவதில்லை என்கிறார். ஏனெனில் "பகுத்தறிவிற்கு தத்துவார்த்த நிலையிலும் சரி, நடைமுறையளவிலும் சரி அதற்கான பணிகள் ஏராளம் " என்பதே அவர் கூறும் விளக்கம் ஆகும்.

அழகியல் அனுபவம் மற்றும் அழகு குறித்த விமர்சன தளத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை Kant பின்வருமாறு கூறுகிறார்.

  1. அழகியல் அனுபவம் என்பது அறிவார்ந்த/பகுத்தறிவுள்ள உயிரிகளிடம் உள்ளது.
  2. ஓவ்வோர் உயிரியிடமும் பகுத்தறிவு சிந்தனை இருப்பது அவசியம் எனவும்
  3. அழகியல் அனுபவம் என்பது அறநெறிக்கு நெருங்கிய நிலையில் இருக்கிறது எனவும் கூறுகிறார்.

அழகியல் அனுபவம்

அழகியல் அனுபவம், ஓர் உள்ளுணர்வு தன்மை கொண்டது. இந்த அணுகுமுறைக்கு எளிய இரண்டு முன்மொழிவுகள் தரப்படுகின்றன: 1. அழகியல் பொருள் என்பது பொருளின் உணர்வு அனுபவம் போன்றது. அது கேட்டல், பார்த்தல், அல்லது கற்பனை செய்தல் எனும்போது உணர்ச்சி வடிவில் உள்ளது. 2. அழகியல் பொருள் கருத்தில் கொள்ளக்கூடிய ஒன்று; அதன் தோற்றமானது அகநிலையின் விருப்பமாகவும் ஒரு பொருள் குறித்த உணர்ச்சி கலந்த இன்பமாக மட்டும் இல்லாமல் களஞ்சியமாகவும் உள்ளது. Kant - ற்கு பிந்தைய அழகியல் குறித்த கருத்தியல் அனைத்தும் மேற்கூறிய இரண்டு முன்மொழிவுகளைச் சார்ந்து இருந்தது. Hegel - ன் கலைக் கோட்பாடானது அதாவது "எண்ணத்தின் புலனுணர்வு உருவகம்" என்ற நிலையை எட்டியது. Kant அதை பின்வருமாறு குறிப்பிடுகிறார். "உணர்ச்சி" என்பது, "தனிப்பட்ட" "குறிப்பிட்ட", மற்றும் "தீர்மானிக்கப்பட்ட", "அறிவார்ந்த ", "அருவமான", "பருண்மையான", "உலகளாவிய", "பொது" போன்றவற்றோடு இணைந்துள்ளது என்கிறார். எண்ணங்கள் சில சமயங்களில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. Kant இதனை முரண்பட்ட அறங்களின் இணைவில் ஏற்பட்ட"சுவை" என்று குறிப்பிடுகிறார்.

அழகியல் மதிப்பீடு என்பது Kant கண்ட கருத்தாக்கமாகும். அதன்படி, அவரவர் அகனிலைக்கு ஏற்ப அழகுணர்ச்சி அமையும்.

  1. i) சுய முடிவு (self determine) உ.ம்: தேர்ந்தெடுத்த ஒன்றினை அழகு என்றும் மற்றவற்றை அழகில்லை என்று மறுக்கும் (எனக்குப் பிடித்தது என்ற சுய தீர்மானத்தினை இங்குக் குறிப்பிடலாம்) ii) பிரபஞ்சம் (universal) உ.ம்: அனைவரும் ஏற்கும் அழகை ரசிக்க வைக்கும் (உலக அழகி), iii) தேவை (necessary) உ.ம்: தனக்கு வேண்டியதை அழகாக்கிக் கொள்ளும் (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு), iv) நோக்கம் (purpose) உ.ம்: (உள்நோக்கத்தோடு அழகை ஏற்றுக்கொள்ளும்). ஆக Kant-ன் படி அழகு என்பது உணர்ச்சியோடு இயைந்த அழகுணர்ச்சி. இதனையே (அழகியலை) HEGEL துல்லியத்துடன் இணைத்துப் பார்க்கிறார். இவர் கலைக்கு இணையாக அழகியலைப் பயன்படுத்துகிறார். அழகியல் அல்லது அழகுணர்ச்சிப் பற்றி கூறும் போது மூன்று வகை புலனறிவைப் பிரித்துக் காட்டுகிறார். முறையே பொருத்தமான புலனுணர்வு (proper sensible) 2. பொதுவான புலனுணர்வு (common sensible) 3. புலனுணர்வுத் தரம் (sensible quality). மேலும் அழகியல் அனுபவமானது கீழ்க்கண்டவாறும் இணைந்திருப்பதைக் காணலாம். அவையாவன: 1. ஞாபகங்கள், 2. உணர்வு, 3. அறிதல் திறன். அதோடு மட்டுமல்லாது அழகியல் அனுபவத்திற்கான சூழல்கள் பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றன. முறையே, 1. சமூக சூழல் (இனச் சூழல், வர்க்கம், பாலினம், பண்பாடு, அரசியல்), 2. ஒழுக்கச் சூழல் (சமயம், பாலினம், வன்முறை)
  2. சுவை (நல்ல சுவை, என்னுடைய சுவை (my taste)). மேலும் சில புறக்காரணிகளால் அழகியல் அனுபவமானது தீர்மானிக்கப்படுகிறது. அவையாவன...1. தகவல் தரும் காரணிகள் (தலைமுறைகள், ஒப்பீடு, பூர்வீக இருப்பு), 2. தற்சார்பு காரணிகள் (உளவியல் காரணிகள், உடலமைப்பியல், தூரநிலை போன்றவை)

அழகியலும் உளவியலும்

அழகு என்பது உளவியலோடு தொடர்புடையது: பல வண்ணங்களினாலே தீட்டிய ஓவியமும் அழகாக இருக்கின்றது. ஒரே ஒரு வண்ணத்தினாலே தீட்டிய ஓவியமும் அழகாகத் தான் இருக்கின்றது. வண்ணம் என்ற ஒரு மாறியை வைத்துக்கொண்டு உளவியல் தொடர்பான முடிவை எடுக்க முடியாது. பல்வேறு மாறிகளை தொகுப்பதன் வாயிலாகவே அழகியல் நயப்பு பற்றிய விளக்கங்களைப் பெற முடியும் என்பது தெளிவாகின்றது.

கலையும் அழகியலும்

ஒன்றைக் குறித்த தாக்கம், அதனைத் தொடர்ந்து ஆக்கப் பெறும் கலை வடிவங்களில் மனவெழுச்சிக் குமுறல்கள் மிகையளவில் காணப்படுகின்றன. தாமதித்த நிலையில் ஆக்கப் பெறும் கலைவடிவங்களில் மனவெழுச்சி ஒருவித ஒழுங்கமைப்புடன் காணப்படுகின்றது. கலை வெளியீடு என்பது "பயன்", "செலவு - மனித உழைப்பு; கலைப்பொருளாக்கத்திற் பொதிந்துள்ள உழைப்பின் தொடர்பு நாட்டுப்புற மரபுகளிலே தெளிவாக விளக்கப்படுகின்றன. ‘ஆடல் அறியா அரங்கு', ‘கேள்வி ஞானம்', ‘சித்திரமும் கைப்பழக்கம்', போன்ற தொடர்கள் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் கல்வியோடும் பயிற்சியோடும் இணைந்த உழைப்பின் இன்றியமையாப் பண்பைக் கலைகளிலே புலப்படுத்துகின்றன." ஒருவரது உளகோலங்களின் வேர்கள் யதார்த்தத்திலேயே புதைந்து நிற்கும். நாட்டுப்புறக் கலைகளில் இதன் தொடர்ச்சியை வெகு எளிதாகக் காணலாம் (நாட்டுப்புற இலக்கிய வடிவம் என்பது அந்தந்தச் சூழலுக்குத் தகுந்தாற் போல் மாறக்கூடியது); "சிக்கனம் - கவிதை என்பது மொழி சிக்கனத்தின் வடிவம்".

இனிமையான மனவெழுச்சிகள், அழகு தருகின்றன. மகிழ்ச்சி, களிப்பு, அன்பு, காதல் போன்ற இனிய மனவெழுச்சிகள் அழகைத் தூண்டுகின்றன. இனிமை தராத மனவெழுச்சிகளும் அழகைத் தருகின்றன. ஏனெனில் அவை அவை வாழ்க்கைப் போரின் வெற்றிக்கும், முரண்பாடுகளின் புரிந்துணர்வுக்கும், உறுதுணையாக நிற்கின்றன. கலைஞனது உணர்வுகளும், சுவைப்பவனது உணர்வுகளும் சமநிலை கொள்வதற்கு இருசாராரும் ஒரே சமூகப் பிணைப்புடையோராய் இருத்தல் வேண்டப்படுகிறது. இல்லாவிடில் ஒருவரது உணர்ச்சி மற்றவருக்கு இரவற் பண்புடையதாகி விடும். கற்பனைத்திறன் மூவகை அருவிகளாகச் செயற்படும். அழகியற் கற்பனை, அறிவியற் கற்பனை, சமயக் கற்பனை என்றவாறு அறியப்படுகின்றது. கற்பனையின் பங்கு மனித அனுபவத்தின் உணர்ச்சி மற்றும் அறிவார்ந்த கூறுகள் அவைகளுக்கு இடையே இருக்கும் சாத்தியம், உறவுகள் மற்றும் சார்புகளை பற்றி அறிய மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. காண்ட் கூறுவது போல் ‘நவீன தத்துவவியலில் ஒரு தனித்துவமான "மன ஆசிரிய" அல்லது “கற்பனை செயலாக்க” எனும் மன நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திறனில் செயலாக இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது. அழகியல் அனுபவம் இயற்கையுடனான உயிர் உறவில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. சுற்றுப்புறமானது ஒருங்கிணைவு, நிலைத்தன்மை, அழகு போன்றவற்றை பெற்றுத் திகழ வேண்டும்; இயற்கையினை இரசிப்பதற்கு அறிவியல் அறிவு மிக அவசியம்; இயற்கைச் சூழல் இரசனை மற்றும் இயற்கை பாதுகாப்பு போன்ற சிந்தனை பல்துறை அறிஞர்கள் வாயிலாக முன்னெடுக்கபடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டார்/நாட்டுப்புற அழகியல்

அழகியல் என்பது நாகரீக மனிதர்களிடம் மட்டுமே காணப்படுவதென்ற கருத்து முற்றிலும் தவறானது. நாட்டார் அழகியலுக்குண்டான தனித்துவம் மற்றும் முக்கியத்துவம் என்பதை பின்வருமாறு கூற முடியும். நாட்டார் வழக்காறுகளுக்கும் - நிகழ்த்துக் கலைக்குமான உறவு; நிகழ்கலை வடிவத்திற்கும் - வழிபாட்டு சடங்கிற்குமான உறவு; வழிபாட்டுச் சடங்கிற்கும், பழக்க வழக்கம் - புழங்குபொருட்களுக்குமான உறவு அழகியல் தன்மை கொண்டவை. எல்லாவற்றிற்கும் மேலாக சூழலைப் பொறுத்து நாட்டுபுற அழகியலின் தன்மை மாறுகிறது. உதாரணமாக நாட்டார் வழக்காறுகளின் பனுவலுக்கு ஒரு வடிவம் கிடையாது. பனுவலின் நீட்சியும், அளவும் நிகழ்த்துநர்-பார்வையாளர் பொறுத்தே அமைகின்றது. நாட்டார் நாட்டுப்புற அழகியலைப் பொறுத்தளவில், அழகில் உலகப் பொதுவான அழகு (Universal Beauty) என்று ஒன்று கிடையாது. ஏனெனில் அது சமூக, பண்பாட்டு, பொருளாதார நிலைமைகளால் உருவாக்கப்படுகின்றது என்பதே ஆகும்.

அழகியல் அணுகுமுறைகள்

அழகியலின் மூன்று அணுகுமுறைகள் மூன்று விரிவான தளங்களில் உள்ளன. அவை பின்வருமாறு.

  1. அழகியல் - இலக்கியம்

பெரும்பாலும் அழகியல் என்பது இலக்கிய விமர்சனம் என்ற நிலையிலே இருந்தது. அதோடு மட்டுமல்லாது அதற்கான நியாயங்களையும், தர்க்க, சீர்பாடுகளையும் சொற்ப காலம் அது கொண்டிருந்தது. Edmund Burk என்பவர் தன்னுடைய " On the Sublime and Beautiful (1757)" என்ற புத்தகத்தில் அழகியல் குறித்த கருத்தாக்கத்திற்கும், அழகியலின் குணாதிசயங்களைப் படிப்பதற்கும் மனிதனின் மனப்பான்மையே முதன்மை என்கிறார். அவர் குறிப்பிடுகிற கம்பீரம் மற்றும் அழகு என்பது இன்றைய நவீன அழகியல் அணுகுமுறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சமீபகாலங்களில் தத்துவவியலாளர்கள் நவீன இலக்கியக் கோட்பாடுகளான பிரதிநிதித்துவம், உணர்வு வெளிப்பாடு, வடிவம், நடை, உணர்ச்சி பசப்பு போன்றவைகளில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இவைகளுக்கு இரண்டு வித நோக்கங்கள் இருக்க முடியும்: ஒன்று, எப்படி இந்த விளக்கங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன என்பது? இரண்டாவது, மனித அனுபவங்களில் அழகியல் எப்படி தனித்துவம் வாய்ந்தவைகளாக அறியப்படுகின்றது/ வெளிப்படுத்தப்படுகின்றன என்பது?

  1. அழகியல் - தத்துவம்

அழகியல் அனுபவத்தில் மறுமொழிகள், மனோபாவங்கள், உணர்வுகள் போன்றவைகளும் மனித அழகியல் குறித்த தத்துவ இயல் ஆய்விற்கு கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுகின்றன. Emmanuel Kant தன்னுடைய "The Critique of Judgement " (1790) என்ற நூலில் அழகியலின் சிறப்பினை தீர்மானிப்பது எது என்பது பற்றிச் சொல்லும்போது இவ்வாறு கூறுகிறார். நமது அறிவியல் பூர்வமான ஆர்வங்களையும், நடைமுறை சாத்தியங்களையும் குறிப்பிட்ட ஒன்றன் மேல் கொண்டுள்ள தொடர்பில் பிரித்து விடுகிறோம். ஆகவே அழகியல் என்பது ஒரு சார்பற்ற மனோபாவம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளவேண்டும். பல கோணங்களில் அழகியல் உணர்வை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என்பது இதன் மூலம் நிறுவ முடியும். ஆனால் Kant-ன் இந்தக் கருத்தை G.W.F. Hegel மற்றும் Ludwig Wittgenstein (Philosophical Investigations (1953)) போன்றோர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஏனெனில் 'அழகியல் மனோபாவம்', 'அழகியல் அனுபவம்' என்பது முழுக்க முழுக்க தத்துவ உளவியலினை சார்ந்த ஒன்று என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு முக்கியமான வேறுபாட்டை இந்நேரம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது மனதின் தத்துவம் மற்றும் உளவியல் அனுபவம். தத்துவம் என்பது அறிவியல் அல்ல. ஏனெனில் ஒரு நிகழ்விற்கான காரணத்தை பரிசோதனை செய்வதில்லை. அது செய்வது கருத்தியல் ரீதியான விசாரணை. நிகழ்வியம் (phenomenology) மற்றும் கருத்தியல் விசாரணை இரண்டும் தத்துவவியலில் மிக முக்கியமான ஒன்று. ஒன்றுக்கொன்று வேறுபட்டதாயினும் அறிவியல் முறையில் நாம் கண்டறிய வேண்டியவற்றைக் குறித்து வரையறுக்கப்பட வேண்டியுள்ளதை நமக்கு நினைவுப் படுத்துகிறது.

  1. அழகியல் - பொருண்மை

இந்த அணுகுமுறையானது நாம் தேர்ந்தெடுத்துள்ள பொருள் மற்றும் அதன் பொருண்மையின் அடிப்படையில் விவரிக்க வேண்டிய சவால்களை பிரதிபலிக்கின்றது. வழக்கமான வர்க்கம், கலை படைப்புகளை உள்ளடக்கிய முதன்மையான அழகியல் நிலைகளையும் முன்னிலைப் படுத்துகிறது (இயற்கை, பொருளின் பரிமாணங்கள் போன்றவைகள்). நாம் இத்தகைய ஒரு அணுகுமுறையை ஏற்க வேண்டும் என்றால், அழகியல் மற்றும் கலைகளின் தத்துவம் இடையே ஓர் உண்மையான வேறுபாடு முற்று பெறவேண்டிய நிலை வந்து விடுகின்றது. மற்றும் அழகியல் கருத்துக்கள், அழகியல் அனுபவத்தின் வழியே படைப்புக்களைப் புரிந்து கொள்வதற்கும் முறையே கருத்துக்கள், கலை மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் அனுபவங்களும் அவசியமாகிறது. இவ்வாறு ஹெகலின், அழகியல் மீதான தத்துவவியலின் ஆளுமை, கலை வடிவங்களும், ஆன்மீக உள்ளடக்கமும் அழகியலின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அழகியலில் இதேபோல் கலைச் சிக்கல்களில் அழகியல் கவனம் செலுத்தியது பழைமையான அணுகுமுறை என்று ஹெகல் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அழகியலின் பொருண்மை குறித்த அணுகுமுறை, கலை மீது இந்தக் கவனம் தேவையில்லை என்று கருதப்படுகிறது. யாரேனும் அழகியல் மேல் வைத்திருக்கும் ஒரு வெளிப்படையான மதிப்பு கூட ஒருவேளை ஓர் ஒப்பீட்டளவில் முக்கியத்துவமற்ற வெளிப்பாடாக இருக்கலாம். அழகியலின் முதல் கவனம் என்பது உண்மையான, மேன்மையான அழகியல் அம்ச பொருட்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்வது ஆகும்.

மேற்குறிப்பிட்ட மூன்று அணுகுமுறைகளையும் பொருத்திப் பார்க்கும்போது ஒன்று கொன்று பொருத்தப்பாடு இல்லாமலிருந்தாலும் அவைகளுக்குள் அழகியல் என்ற பொதுதளத்தின் இணக்கம் இருக்கின்றது. அழகியல் குறித்த இந்த மூன்று அணுகுமுறைகளினையும் முத்தரப்பு வடிவம் (tripartite) என்று அழைக்கலாம்.

நிறைவாக

அழகியலைப் பற்றிய ஆய்வுப் புலமானது செயற்கையான சூழல், இயற்கையான சூழல், பண்பாட்டுச் சூழல் போன்ற வகைமைகளோடு ஆராய்வதோடு மட்டுமல்லாது, அவற்றின் பல்நிலை வடிவங்களோடு தொடர்புபடுத்தி அழகியல் அறிவுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். அறிவுசார் அம்சங்கள் (cognitive aspects) மரபு வழி அறிவு முறைகள் (indigenous knowledge system), நவீன அறிவியல் போன்றவைகளின் உதவியோடு அழகியல் புலத்தை அணுகும் பொழுதுதான் ஆழமான புரிதலோடு அழகியல் விளக்கம் மற்றும் அழகியலை அணுகுதல் ஆரம்பமாகின்றன.

பார்வை நூற்கள்: 

• இ. முத்தையா, நாட்டுப்புற பண்பாட்டு மரபு: மாற்று மரபு, மதுரை: அரசு பதிப்பகம், 1998
• இராமசாமி, மு. 2012. நாடக அழகியல், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
• க. குளத்தூரன், 2018. சுற்றுச்சூழலும் அழகியலும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
• கிருஷ்ணவேணி, ஏ.என். 2008, இந்திய அழகியல், சென்னை: குமரன் புத்தக இல்லம்.
• ச. ஜெயராசா, அழகியல், இணுவில்-மருதனாமடம்: அம்மா வெளியீடு, 1989.
• தி.கு. இரவிசந்திரன், தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்: அழகியல் இணைநிலைகள், சென்னை: அலைகள் வெளியீட்டகம், 2011. பக்.105-134
• தி.சு.நடராசன், தமிழ் அழகியல், நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம், 2012
• மல்லிகா, அரங்க. 2008. தலித் பெண்ணிய அழகியல், சென்னை: அறிவுப்பதிப்பகம்.
• வேணுகோபால், சரசுவதி, இ. முத்தையா மற்றும் ஆசீர்வாதம், சீலா. 2000. தமிழக நாட்டுபுறக்கைவினைக்கலைகள்: பன்முகப் பார்வை, மதுரை: தமிழ்நாட்டுப்புறவியல் ஆய்வு மையம்.
• Aristotle, 2018 (Reprint). Poetics, New Delhi: Finger Print Classics
• David E. Cooper (Ed.), Blackwell Companions to Philosophy, A Companion to Aesthetics; Oxford: Blackwell Pubishers, 1992 (2001 Reprinted)
• Deshpande, G.T. 2009. Indian Poetics, Paranjpe, Jayant (Trans.), Mumbai: Popular Prakashan. Pvt. Ltd.
• Gordan Graham, Philosophy of The Arts: An Introduction to aesthetics, London: Routledg, 1997 (2005 third edition).
• Jacques Ranciere, The Politics of Aesthetics: the distribution of the Sensible, Gabriel Rockhill (Trans.), London: Continum International Publishing Group, 2000 (2004 translation).
• Kendall Walton, "Aesthetics - What? Why? and Wherefore?", in The journal of Aesthetics and Art criticism, 65:2. Spring 2007
• Krishnaveney, A.N. 2009. The Theory of rasa: A Comparative Study, Jaffna: Harikanan
• Layton, Robert. 1991. The Anthropology of Art, Cambridge: Cambridge University Press.
• Muthukumarasamy, M.D. 2004. Folklore, Public Sphere and Civil Society, Chennai: National Folklore Support Centre
• Robert A. Georges and Michael Owen Jones. 1995. Folkloristics: An Introduction, Bloomington: Indiana University Press.
• Sykes, Karen. 2005. Arguing with Anthropology: An Introduction to critical theories of the gift, London: Routledge
• Tony Dunn, Aesthetics and Politics: Reymond Williams' Marxism and Literature, Herbert Marcuse's The Aesthetic Dimension.

- சி. ஜஸ்டின் செல்வராஜ், மதுரை காமராசர் பல்கலைக்கழக நுண்கலைகள் மற்றும் அழகியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

Pin It