doctor jeeva1சிரிப்புச் சப்தங்களும்,
பேச்சொலியும், அலைபேசி அழைப்பொலியும்,
காடு சுற்றலும், அன்பு விசாரிப்புகளும் நிரம்பித் தளும்பும்
மருத்துவரைக் காணவில்லை...

அனைவரையும் சமமாக பாவித்த,
எழுதிக் கொண்டே இருக்கும்
பேனாக் கை விரல்களும், பாதி எழுதிய தாள்களும்,
விளக்கு எரிந்து கொண்டிருக்கும் அறையும்,
கண் கண்ணாடிகளும்,
கட்டுக் கட்டாக புத்தகங்களும்,
எழுதி முடிக்கப்பட்ட தாள்களும்,
அவர் தலையும், முதுகும், பாதங்களும்
படிந்த படுக்கையும்...
மருத்துவர் வீட்டிலும் இல்லை...

எப்போதும் குரல்களால் நிறைந்திருக்கும் மருத்துவமனை அறையும்,
மைசூர் காபியும், மெதுவடைகளும்,
பாதி திறக்கப்பட்ட கதவுகளும்,
அவர் தலை நேர் எரியும் விளக்கும்,
ஆசிர்வதிக்கும் கைகளில் பூக்களும்
அந்த அறையிலும் மருத்துவர் இல்லை...

எங்களுடன் மட்டுமில்லை எங்கும் இல்லை மருத்துவர்...
ஆனால் அவரது வீட்டு வரவேற்பறையில்
குளிர்சாதன கண்ணாடி அறையில் கண்மூடி
படுத்திருக்கிறார் மருத்துவர்,

மருத்துவரைப் பார்த்து வணங்கியபடி
அனைவரும் அவர் நினைவுகளில் கைக்குலுக்கியபடி
கண்ணோரங்களில் கசியும் கண்ணீரைத் துடைத்தபடி...
காத்திருக்கிருக்கிறார்கள்...
இயேசுவைப் போல் அவரும் வருவாரா...
காத்திருக்கிறோம்....

இப்படித்தான் அவரது நினைவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சட்டென்ற முடிவால் என்ன செய்வதென்றே தெரியாமல் அவரது வீட்டிற்கு வந்து அவரது வீட்டில் உயிரின்றி கண்ணாடிக்குள் படுக்க வைக்கப்பட்டுள்ள அவரது சிரிப்பற்ற,பேச்சற்ற வாங்க' என்கிற ஆச்சர்ய அன்பு நிறைந்த வரவேற்பு குரலின்றி மருத்துவர் ஜீவானந்தத்தை வித்தியாசமாக பார்த்து விட்டு அழுகையுடன் அகன்று கடப்பதைக் காண முடிந்தது.

வந்தவர்கள் அனைவரும் அசையாத மருத்துவரை அப்படிப் பார்த்துவிட்டு யாரிடமும் பேசப் பிடிக்காமல் அவசரக் கூரை வேய்ந்த வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்தபடி அவரது நினைவுகளில் ஆழ்ந்து கிடந்தனர்.

இதுபோன்றவர்களைத் தொடர்ந்து அங்கு இயல்பாக காண முடிந்தது. அவரது திடீர் இழப்பை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு மருத்துவராக இருந்தும் தன்னை யாரிடமும் மருத்துவராகவே அணுகியதில்லை அவர்.

அவர் தன்னை காந்தியவாதியாக, இடதுசாரி சிந்தனையாளராக, மார்க்ஸியவாதியாக, சோசலிசவாதியாக, சுற்றுச்சூழல் ஆர்வலராக, பெண்ணியலாளராக, கல்வியாளராக, இலக்கியவாதியாக, மொழி பெயர்ப்பாளராக, எழுத்தாள படைப்பாளிகளின் நண்பராக, அவர்களது வாசகராக தன்னை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தவர்.

அதை அவர் தன்னிச்சையாகவோ விருப்பமாகவோ பழக்கப்படுத்தியிருந்தார். டாக்டர் இல்லாத வீட்டையும், அவரில்லாத அவரது மருத்துவமனையையும், அவரில்லாத இருப்பை கற்பனை கூட செய்ய முடியாதவர்கள்தான் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

மருத்துவரது அடக்கத்திற்குப் பிறகு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவரது மகன் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் உறவினர்களை விடவும் பலரும் அவரது நண்பர்களாகவே இருந்தனர் என்றும், வந்தவர்களில் பலரையும் தங்களுக்கு அடையாளம் தெரியவில்லையென்றும், அவருக்கு இத்தனை நண்பர்களா என்கிற ஆச்சர்யமே தங்களுக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதுதான் அவர் இறந்ததற்கு ஒரு வாரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. மருத்துவரின் வீட்டிற்கு வரும் நண்பர்களை அவரது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்திட மருத்துவரின் நண்பர்கள் அவரது வீட்டில் தொடர்ந்து இருக்கும் நிலையே ஏற்பட்டது.

பொதுவாகவே தன்னை ஜீவா என்றழைப்பதை அதிகம் விரும்பும் டாக்டர் தன்னை பொதுவெளியில் எப்போதும் மருத்துவராக அறிமுகப்படுத்திக் கொள்ள விருப்பம் கொண்டவராக இருந்ததே இல்லை. அப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் ஏற்றுக் கொள்ளாதவராகவே இருந்தார்.

இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தன் காலத்தைய எழுத்தாளர்கள் முதல் இந்தத் தலைமுறை சமகால எழுத்தாளர்கள் வரை மதித்துப் போற்றினார். ஜெயகாந்தனை தனது மருத்துவக் கல்லூரி காலத்தில் கல்லூரி விழாக்களுக்கு அழைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர், ஜெயகாந்தன் அருகாமை மாவட்டங்களுக்கு எங்கு வருகை தந்தாலும் நண்பர்கள் பட்டாளத்துடன் சென்று பார்த்து விசாரிப்பதும், பேசிக் களித்து, பொதுக்கூட்டப் பேச்சை கேட்டு வருவதும் அவரது வழக்கமாகவே இருந்தது.

ஈரோட்டில் விமலாதித்த  மாமல்லன் இருந்த போது அவர் மருத்துவருக்கு மிகவும் விருப்பமானவராகவே இருந்தார். தமிழக அளவில் முதன்முறையாக நண்பர்கள் ஒன்று சேர்ந்து விடியல் திரைப்பட சங்கம் நடத்தியுள்ளனர். 

ஈரோட்டிற்கு  வந்த பிரமிள் கலந்து கொண்ட இலக்கியக் கூட்டத்தில்  கலந்து கொண்டதையும் அந்தக் கூட்டத்தில் வழக்கமான பிரமிளைப் பார்த்து வியந்து  இலக்கியம் வாசிக்காதவர்களை, நவீனக் கவிதைகளில் பரிச்சயமில்லாதவர்களை வெளியேற்றினார் பிரமிள் என்று மருத்துவர் ஜீவா சொல்லக் கேட்டதுண்டு.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபஞ்சனுக்கு மாத்திரைகளை வழங்குவதற்காக புதுச்சேரி சென்று வந்து கடைசிவரை அவர் உயிர் பிழைத்திட தனது புதுச்சேரி மருத்துவ நண்பர்களிடம் பிரபஞ்சனை அனுப்பி சிகிச்சை பெற வைத்தவர்.

இத்தனை முயற்சிக்கும் பிறகும் பிரபஞ்சன் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறிப் போனதை நாங்கள் அறிவோம். அதே நிலைதான் நேற்று வரை கி.ராஜநாராயணனுக்கும் நடைபெற்றது. ஒரு நண்பர் எங்களை அழைத்து கி.ராஜாநாராயணன் யாரின் அழைப்பையும் எடுப்பதில்லை.

மருத்துவர் ஜீவாவின் அலைபேசி அழைப்பை மட்டுமே விருப்பமாக எடுப்பதாகவும், அவரது அலைபேசி அழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். அதனால் ஜீவாவை பேசச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன்பேரில் மருத்துவரிடம் கேட்டதற்கு இன்று கூட காலை அவரிடம் பேசியதாகத் தெரிவித்தார். அந்த ஆச்சரியம்தான் மருத்துவர் ஜீவா.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எழுத்தாளர்களுக்கு பரிச்சயம் செய்வதற்காக ஊட்டியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சோலைச்சந்திப்பை நடத்தியவர்.

அதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், கோவை ஞானி, எஸ்.என். நாகராஜன், தேவதேவன் உள்ளிட்ட சமகால படைப்பாளிகள் கலந்து கொண்டனர். எழுத்தாளர்களையும் சுற்றுச்சூழல் குறித்து பேச வைத்தவர் மருத்துவர் ஜீவானந்தம்.

காந்திய சிந்தனைகள் பேசுவதற்காக ஈரோட்டிற்கு ஜெயமோகனை வரவழைத்தவர் மருத்துவர் ஜீவானந்தம். தொடர்ந்து பல வாரங்கள் விவசாய சங்கக் கூட்டரங்கில் குறைந்த காந்திய சிந்தனையுள்ள குறைவானவர்கள் கூட்டத்தில் பல வாரங்கள் ஈரோட்டிற்கு வந்து பேசிப் போனார் ஜெயமோகன்.

அதற்குப் பிரதிபலனாகத்தான் இன்றைய காந்தி புத்தகத்தினை மருத்துவர் ஜீவானந்தத்திற்கு சமர்ப்பணம் செய்தார் ஜெயமோகன். யானை டாக்டர் எழுதிய ஜெயமோகனை கொண்டாடித் தீர்த்தார் டாக்டர் ஜீவா.

அதேபோல்தான்  கோபிச்செட்டிப்பாளையத்தின் காந்தி லட்சுமண அய்யரை தமிழகம் அளவிற்கு அடையாளப்படுத்திய மருத்துவர் ஜீவா அவரது மறைவின் போது தினமணியில் முதல் பக்கத்தில் அவரது மறைவு குறித்த கட்டுரை வந்தபோதும் கலங்கித் தீர்த்தார். 

கவிதைகளை எழுதுவோரை ஊக்கப்படுத்து வதற்காக தமிழகம் முழுவதுமுள்ள கவிஞர்களுக்கான கவிதைப் பட்டறையை போதிமேடை அமைப்பின் மூலம் நடத்தியவர்.  சமகால எழுத்தாளர்கள், கவிஞர்களை ஈரோட்டிற்கு வரவழைத்து பேசவைத்து அவர்களை ஊக்கப்படுத்தியவர்.

ஓவியத்திலும் ஆர்வமுள்ளதால் சந்துரு, பாஸ்கரன் உள்ளிட்ட ஓவியர்களை ஈரோட்டிற்கு அழைத்து வந்து மாணவ,மாணவியர்கள் முன்னிலையில் ஓவியப்பயிற்சி போல் ஓவியர்களை வீதிகளில் மக்களையும், அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவரையும் அமர வைத்து ஓவிய உணர்வை மழலை ஓவியர்களுக்கு ஊட்டியவர்.

பிரெயின் பேங் என்கிற அமைப்பைத் தொடங்கி படித்த புத்தகங்களின் அனுபவங்களை பகிரச் சொன்னவர். அருந்ததிராயின் காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் புத்தகத்தைப் படித்தவர்கள் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் விமர்சனப்படுத்திடவும் ஆங்கிலப் பேராசிரியர்களுக்குப் பதில் தபால் அட்டையுடன் அனுப்பச் செய்தவர்.

பாரதியின் மீது பற்றுக் கொண்ட மருத்துவர் ஜீவானந்தம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவரது ஆங்கில குறுநாவலை பொன்வால் நரி என்கிற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

தமிழகம் அறியாத ஜே.சி.குமரப்பாவையும், தில்லையாடி வள்ளியம்மையையும் நூல்கள் மூலம் அறிமுகம் கொடுத்தவர். அதேபோல் திப்புசுல்தான் குறித்த ஆங்கில நூலை தமிழில் முதலில் மொழிபெயர்த்து மதநல்லிணக்கத்திற்கு அச்சாரம் போட்டவர்.

அவரது மொழிபெயர்ப்புக்கள், துண்டுப் பிரசுரங்களுக்கான தயாரிப்புகள் அனைத்துமே பயன்படுத்தப்பட்ட வெள்ளைத்தாளின் மறுபக்கமே எழுதப்பட்டன. அதனை வழக்கமாகவே வைத்திருந்தார்.

திருமண அழைப்பிதழ்கள்,விளம்பர அறிக்கைகள் என ஒருபக்கம் காலி வெள்ளைத் தாளின் மறுபகுதியில்தான் அவரது எழுத்துப் பயன்பாடு பெரும்பாலும் அமைந்திருந்தது.

அவரைப் பின்பற்றி அவரது பல நண்பர்களும் பயன்படுத்தப்பட்ட தாளின் பயன்படுத்தப்படாத மறுபக்கங்களையே இன்றும் எழுதப் பயன்படுத்தி வருகின்றனர். அவரிடம் 24 மணி நேரமும் எது குறித்தாவது திட்டமிருந்து கொண்டேயிருக்கும்..

எதையாவது எழுதிக் கொண்டும் மொழிபெயர்த்துக் கொண்டுமிருப்பதும் அவரது வாடிக்கையான பழக்கமானது. கடந்த 10 ஆண்டுகளாக அவரால் எழுதப்பட்ட நூல்கள் 100க்கும் மேலிருக்கும். எப்படி இவ்வளவு வேகமாக மொழிபெயர்க்க முடிகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும். வாசிப்பும் அப்படித்தான்.

ஆங்கில ஹிந்து நாளிதழின் முக்கியக் கட்டுரைகள் அன்றைய மதியத்திற்குள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். பலருக்கும் தெரியாத, அதுவரை அறிமுகமில்லாத புதிய விசயங்களை எழுதுபவர்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவார். அதனைப் பிறருக்கும் தெரியப்படுத்திட மிகவும் அக்கறை கொண்டவர். அதனாலேயே இன்றும் அவர் போற்றப்படுகிறார்.

கையால் எழுதுவதை விடவும் கணினியில் வேகமாகவும் விரைவாகவும் எழுதலாம் எனக்கூறி அவருக்கு கணினியை வழங்கியும் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அது சரியாக வராது என்று கடைசி வரை எழுதிக் கொண்டேயிருந்தார்.

அவரால் எல்லாச் சிந்தனைகளையும் ஒன்றாகவே பாவிக்க முடிந்திருக்கிறது. அனைத்தையும் சமமாகவே யோசித்து எழுதினார். அதனாலேயே அனைத்துத் தரப்பு சிந்தனையாளர்களும் அவருக்கு நண்பராக இதுவரை நட்பாக உள்ளனர். சோசலிச சிந்தனைக்கும், காந்தியச் சிந்தனைக்கும், இடதுசாரி சிந்தனைக்கும் இணைப்புப் பாலமாகவே இருந்தார்.

மாற்றுக்கருத்து இருக்கும் நண்பர்களையும் நண்பராகவே கைக்குலுக்கும் தன்மை கொண்டவர் அவர். தமிழகத்தில் இதுவரை அறியாத பலவற்றையும் அனைவருக்கும் தெரியப்படுத்திட வேண்டுமென்று அக்கறை கொண்டவர்.

குறிப்பாக, லாரிபெக்கர் வீடு கட்டும் முறை, ஜே.சி.குமரப்பாவின் காந்தியப் பொருளாதாரம், திப்புசுல்தான், தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்டவர்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை கொண்டவர். 

கண்பார்வை குறைந்த கிரெட்டா துன்பெர்கா மற்றும் லிசிப்பிரியா போன்ற சிறுமிகளால் எப்படி இப்படி யோசிக்க முடிகிறது, செயல்பட முடிகிறது. அவர்களைப் போன்றவர்களால்தான் இந்த முதிய வயதிலும் தன்னை இன்னும் உற்சாகமாக இயக்கி வைத்துக் கொள்ள முடிகிறது என்று கூறுவார்.

 துன்பெர்க்காவின் படத்துடன் கூடிய வாசகத்துடன் சுவரொட்டிகளை அடித்து தமிழகம் முழுவதும் தனக்குத் தொடர்புள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தார். கிரெட்டா துன்பெர்க்காவின் பேச்சடங்கிய மொழிபெயர்ப்புப் பிரதிகளை அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகித்தார்.

காந்தியின் 150-ஆண்டை மிகவும் அவசியத்துடன், அக்கறையுடன் கொண்டாடித் தீர்த்தவர். பள்ளி, கல்லூரிகளுக்கு காந்தியின் கருப்பு வெள்ளைப் படத்துடன் அவரது முக்கிய வாசகங்கள் அடங்கியவைகளை அனுப்பி வைத்தவர்.

அதனை பள்ளி, கல்லூரிகள் ஒட்டியதா இல்லையா அவரிடம் பதிலில்லை. என் வேலை அனுப்பி வைப்பது மட்டுமே என்பார். தன்னந்தனி மனிதராகவே அவருக்குத் தோன்றியதை சலிக்காமல் செய்து வந்தது இன்று நினைத்தாலும் வியப்பையே தருகிறது.

அவரால் எழுத முடிகிற வரை எழுதிக் கொண்டுதான் இருந்தார். தன்னால் எழுத முடியவில்லை என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. குடும்பத்தார், மருத்துவர்கள், நண்பர்கள் எதிர்ப்பை மீறியும் ஓய்வின்றி எழுதிக் கொண்டே நண்பர்களின் உதவியுடன் துண்டுப்பிரதிகளாக அடித்து அதனை கடைசிவரை அனுப்பிக் கொண்டே இருந்தார்.

இல்லையென்றால் வாட்ஸ் அப்கள் மூலம் தனது நண்பர்களின் பார்வைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அதற்கான விமர்சனங்களையும், எதிர்வினைகளையும் தனக்கானது என்று கருதி எதையும், எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராகக் காத்திருந்தவர்.

அவரது அணுக்கமான நண்பர்கள், பிரியமான தலைவர்கள் இறப்பும், இதயநோய் பாதிப்பும் மரணத்தை எதிர்கொள்ள முடியாத தன்மையை அவருக்குள் ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக தனது நண்பர்களின், உறவினர்களின் மரணத்தை அவர் தாங்கிக் கொள்ள முடியாத நிலையை உணர முடிந்தது.

அதேபோல் உறவினர்கள், நண்பர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டால் வீட்டாருக்கும் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார். இதயப்பாதிப்புக்குப் பிறகு உயிர்பிழைத்த அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மரணம் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மரணம் குறித்த அவரது பேச்சுக்கள் நண்பர்களால் ஏற்க முடியாததாகவே இருந்தது. கொரோனாவிற்குப் பிறகு அவருக்கு மீண்டும் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டு ஓய்வாக இருந்த போதும் நண்பர்களிடம் உரையாடுவது, மொழிபெயர்ப்புகளைத் தேடித்தேடி செய்வது நண்பர்களுக்கு விநியோகிப்பது, நண்பர்களை விசாரிப்பதன் மூலம் உரையாடுவது என்பது நிற்காமல் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

அவருக்கு ஓய்வு என்பது தற்போது அவருக்குக் கிடைத்துள்ள மரணம் மட்டுமே. எப்போதோ அவர் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த போது தனது மரணத்திற்குப் பிறகு தனது அஸ்தியைக் காட்டிற்குள்ளும், நேருவின் அலகாபாத் வீட்டினருகிலும் கரைக்கப் பட வேண்டுமென்பதே அவர் விருப்பமானதாக இருந்திருக்கிறது.

எழுத்தையும் வாசிப்பையும், அன்பைப் பகிர்வதுமாக இருந்த மருத்துவர் ஜீவானந்தத்தின் திடீர் மரணத்தை ஏற்க முடியாதவர்கள் அவரது திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல் திண்டாடிப் போயினர்.

அவருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள், அவரது மருத்துவ நண்பர்கள், இலக்கியவாதிகள், காந்தியவாதிகள், இடதுசாரி நண்பர்கள், சுற்றுச்சூழல் நண்பர்கள் எனப் பலரும் அதையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தனர். 

அவரது உடலும், உயிரும் மறைந்திருக்கலாம், அவரது உணர்வுபூர்வமான உண்மை இன்றும் அவரது எழுத்துக்கள் மூலமும், நட்பு மூலமும், கைக்குலுக்கல்கள் மூலமும், அன்பு விசாரிப்பு மூலமும் அனைவரிடத்திலும் வாழ்கிறது... வாழ்ந்து கொண்டிருக்கும்...

- ம.ராஜேந்திரன்

Pin It