book10பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு 2021 பிப்ரவரி மாதத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்” என்னும் நூல்.

பேரா. ஆ.சிவம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் வரலாற்றியல், சமூகவியல், மார்க்சியவியல், மானிடவியல் உள்ளிட்ட துறைசார் அணுகுமுறையோடு தனக்கே உரிய ஆய்வு முறையியலை முன்னெடுத்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்.

இவருடைய மந்திரம் சடங்குகள், கோபுரத் தற்கொலைகள், பனைமரமே பனைமரமே, தாவர வழக்காறுகள் முதலான நூல்கள் இவரின் ஆய்வு முறையியலுக்கான சான்றுகளாக உள்ளன.

தமிழ்ச் சமூகம் குறித்த அடையாளங்களை மீட்டெடுத்தலுக்கான முறையியலாக: யூகங்களை முன்வைத்த கற்பனாவாத கருத்தியலைத் தவிர்த்து மக்களின் வாழ்வியல் அடிப்படையில் யதார்த்தவாத பின்புலத்தோடு அணுகுதல் என்பது பேராசிரியரின் ஆய்வு அணுகுமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டார் வழக்காற்றியலில் தொடர்ச்சியாக இவ்வாய்வு அணுகுமுறையிலான நூல்களை வெளியிட்டு, தமிழ்ச் சமூக அடையாள மீட்டுருவாக்கத்திலும், புதிய தலைமுறையினர் முன்னெடுக்க வேண்டிய ஆய்வு முறைக்கான வழிகாட்டியாகவும் தம் ஆய்வு நூல்களைக் கொண்டுவருவதில் சிரத்தையான கள ஆய்வை மேற்கொண்டு செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்.

பேரா. ஆ.சிவம் அவர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டு வடிவமாகத் தற்பொழுது வெளிவந்துள்ள “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்” என்னும் நூல் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வழிபாட்டு மரபை முன்னிறுத்துகிறது.

இத்தகைய வழிபாட்டு மரபை தமிழ் மொழியின் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, நடுகற்கள், வாய்மொழி வழக்காறுகள் முதலானவற்றைக் கொண்டு வெளிப்படுத்தியிருப்பது ஆய்வு முறையியலின் நுட்பத்தை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

மேலும், இந்நூலின் அமைப்பு முறையியலைப் பொருத்தவரையில் முன்னுரை, தொல் சமயம், இறந்தோர் வழிபாட்டின் சிதைவு, புராண மூதாதையர், இறந்தோர் வழிபாட்டின் எச்சம் என நான்கு தலைப்புகளிலான கருத்தமைவுகள், முடிவுரை, துணைநூற் பட்டியல், கலைச்சொல் (தமிழ், ஆங்கிலம்), ஒளிப்படங்கள் என ஓர் ஆய்வு முறையியலோடு அமைத்திருப்பது முதல் நிலை வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்

ஆய்வுமுறையியலைக் கற்பிக்கக் கூடியதாகவும் உள்ளது. இவற்றோடு, தமிழ் இனம் இயற்கை சார்ந்த வாழ்வியல் சூழல்களில் காரணகாரிய உணர்தலுக்கான முயற்சி, உணர்தல், எதிர்வினையாற்றல் முதலான இயக்கங்களைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

தமிழரின் தொல் சமயம் குறித்து உரையாடும் பேராசிரியர், இயற்கையைக் குறித்த புரிதல் இன்மையும், இயற்கையைக் குறித்த அச்சமும் சமயத்தின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்த நிலையைக் குறிப்பிடுகிறார்.

இவற்றோடு தொல் சமயத்தின் படிநிலைகளாக: ஆவியம், குலக்குறியம், இயற்கைப் பொருள் சார்ந்த வழிபாடு, உயிரியம், வெறியாட்டு ஆகியவற்றை டைலர், குரோவ்கன் முதலானோரின் வரையறைகளை எடுத்துக்காட்டியும் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உள்ள குறிப்புகளைச் சான்றுகாட்டியும் விளக்கியிருப்பது, திணைசார்ந்து தமிழர்களிடையே உருவாகி நிலைத்திருந்த தொல்சமய மரபின் இருப்பைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

காலந்தோறும் உருவான இலக்கியங்களில் உயிரும் உடலும் பெற்றிருக்கும் கருத்தியல், சாவின் இரு நிலைகளான மருத்துவச் சாவு, உயிரியல் சாவுக்கிடையிலான வேறுபாடு, துஞ்சுதல், மாய்தல் என்ற சொற்கள் குறிக்கும் பொருண்மைகளும் வேற்றுமைகளும், வீரச்சாவு, கடிமரம், கந்து ஆகிய சொற்களும், அச்சொற்களுக்குப் பின் உள்ள மக்களின் விழுமியநிலையையும் மக்கள் தங்களின் இருப்பிற்கான ஊடாட்டத்தை பேரா.ஆ.சிவம் அவர்களின் தொடர்ச்சியான உரையாடல் உணர்த்துகிறது.

இயற்கை வழிபாடு, வெறியாட்டு ஆகிய நிகழ்வுகள் ஆவி குறித்த நம்பிக்கை அணங்கு தெய்வமாக வளர்ச்சியடையும் நிலை முதலானவை ஒரு சமூகத்தின் சிந்தனை நிலையை வெளிப்படுத்துவதோடு, அச்சிந்தனையின் மூலமாக வெளிப்படும் பண்பாட்டு அடையாளங்களையும் விளக்குகின்றன.

‘இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’ என்னும் தலைப்பில் தமிழரின் வழிபாட்டினூடாக வெளிப்படும் தமிழரின் வாழ்வியல் குறித்த ஆராயும் பேரா.ஆ.சிவம், சமணம், பௌத்தம், வைதீக சமயங்கள் ஆகியவற்றையே தமிழரின் சமய வரலாறாகக் கற்பித்துக்கொண்டும், சைவம், வைணவம் உள்ளிட்ட சமயங்களே தமிழர் சமயம் என்ற அழுத்தமான பதிவுகளும், இன்னும் ஒரு படி மேற்சென்று சமயம் என்பது ஒற்றைத் தன்மையுடையது என்கிற பரப்புதலும் தொடர்ச்சியாகத் தற்பொழுது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், தமிழ் இனத்திற்கென ஒரு தொல்சமய மரபு உண்டு என்பதை விரிவான விளக்கத்தின் வழி உணர்த்தியிருக்கிறார்.

இவற்றோடு, தமிழ் இனத்தினரிடையே ஆவிகளின் மீதான நம்பிக்கையாக தன் குடும்பம், குலம், கால்வழி சார்ந்து இறந்தவரையும், முன்னோரையும் முன்வைத்த தொல்சமய மரபின் மூலம் அடைகாத்த நினைவுகளின் படிநிலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

“பண்டைய மக்கள் சிலரின் அகராதியில் கடவுள் என்பதைக் குறிக்கும் வார்த்தைக்கு இறந்த மனிதன் என்பதே பொருளாக இருந்திருக்கிறது” என்ற வில்டியூரெண்ட் அவர்களின் மேற்கோள் மனிதன் இறப்பின் மீது கொண்டிருந்த விழுமியத்தை உணர்ந்துகொள்ளச் செய்கிறது.

கற்கால சமூகத்தில் வாழ்ந்த மனிதன் ஆவி மீது கொண்ட நம்பிக்கையால், அந்த ஆவியை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாக ஓவியம் வரைதல், பதுக்கைகள் ஏற்படுத்துதல், நடுகல் உருவாக்கி வழிபடுதல் முதலான நிலையில் செயல்பட்டுள்ளான்.

இவ்வாறு ஆவியை நிலைநிறுத்துவதற்கு ஏன் ‘கல்’ பயன்படுத்தினான் என்ற வினா எழுகிறது. இந்த வினாவிற்கான விடையாக பேராசிரியர் அவர்கள், மிர்சியா எலியட் குறிப்பிடும், ‘புராதன மனிதர்களின் சமய உணர்வானது கடினத்தன்மை, முரட்டுத்தன்மை, நிலைத்த தன்மை என்ற மூன்றும் இணைந்ததாகும்.

கம்பீரமான தோற்றமுடைய ஒரு பாறை அல்லது கருங்கல்லை விட உயரமானதும் மரியாதையைத் தூண்டுவதுமான வலிமை பெற்ற எதுவும் அச்சமூகத்தில் இல்லை’ என்ற மேற்கோளைக் கொண்டு விளக்கியிருப்பது, ஒரு சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த உருவ, அருவ நிலைநிறுத்தல்கள், ஒரு சமூகத்தின் வாழ்வியல் சூழலுக்கும் வாழ்வியல் சூழல் சார்ந்து ஏற்படுத்திக்கொள்ளும் கருத்தியலுக்குமான தொடர்பை அறிந்துகொள்ளச் செய்கிறது.

மேலும், தொல்காப்பியத்தில் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்துதல் என்றும், புறப்பொருள் வெண்பாமாலை நூலில் கல்காண்டல், கற்கோள் நிலை, கல்நீர்ப்படுத்துதல், கல் நடுதல், கல்முறை பழுச்சல், இல்கொண்டு புகுதல் என்றும் நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிட்டிருப்பதும், தமிழ் இலக்கியங்களில் பரவலாக நடுகல் குறித்த பதிவுகள் இடம் பெற்றிருப்பதும்  ஒரு இனம் சார்ந்த வழிபாட்டு மரபின் தொடர்ச்சிக்கும் பரவலாக்கத்திற்கும் அடையாளமாகிறது.

‘இறந்தோர் வழிபாட்டின் சிதைவு’ என்னும் தலைப்பில் பேரா ஆ.சிவம் விவாதிக்கும் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தினர் உணர வேண்டிய இன்றியமையாத வரலாற்றுத் தன்மை.

சங்க இலக்கியம் உருவான காலத்தையடுத்து வளர்ச்சிபெற்ற நிலவுடைமைச் சமூகம் கட்டமைக்கும் சிந்தனை மரபு என்பது இறந்தோர் வழிபாடு என்கிற இனக்குழுச் சிந்தனையின் அழிப்பின் மீது உருவாக்கப்படுகிறது.

தொல்சமயம் நெறி அழிப்பிற்கான செயல்பாடுகளாக இனக்குழு அமைப்பையும், குறுநில மன்னர்களையும் ஒடுக்கி பேரரசு உருவாக்கல், அரசின் தலைமையாக மன்னன் இருத்தல், மன்னனும் கடவுளும் ‘இறை’ என்ற சொல்லால் அழைக்கப்படுதல், மன்னனுக்கு செலுத்தும் வரி ‘இறை’ என்ற சொல்லால் அழைக்கப்படுதல் முதலானவை உருவாகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக கடவுள் இருக்கும் இடங்களை கோட்டம் (புறநானூறு), கோயில் (மணிமேகலை) என்ற பெயர்களால் அழைக்கும் வழக்கம் உருவாதல், கோயில்களில் உறையும் தெய்வங்கள் உருவாதல், தெய்வ உருவாக்கத்தோடு அத்தெய்வங்களுக்குரிய புராணங்களையும் உருவாக்குதல் என்ற செயல்பாடுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தகைய சிந்தனைமுறையின் தாக்கம், தொல் சமய அழிவுக்கும் இறந்தோர் வழிபாட்டின் வீழ்ச்சிக்கும் காரணமாகிற போக்கினை பல்வேறு சான்றுகளின் மூலம் பேரா ஆ.சிவம் எடுத்துக்காட்டியிருப்பது, ஒரு சிந்தனைமுறையின் உருவாக்கத் தாக்கம், அதற்கு முற்பட்ட மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியல், செய்யும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் மரபான சிந்தனை அழிவிற்குக் காரணமாகும் என்ற உண்மையை முன்னிறுத்துகிறது.

வடமொழி ஆகமங்களை உள்வாங்கிய வைதீக சமயத்தவரால் கட்டமைக்கப்பட்ட புராண மரபைக் குறித்து ‘புராண மூதாதையர்’ என்னும் தலைப்பில் விரிவான இலக்கிய ஆதாரங்களோடு

பேரா ஆ. சிவம் உரையாடல் நிகழ்த்துகிறார். வைதீக சமய நெறியைப் பின்பற்றியவர்கள் தங்களின் சமய நிறுவனமயத்திற்கும், சமய நிலைபெறலுக்கும் தக்க களனாக பல புராணக் கதைகளை உருவாக்கினர்.

அவற்றில் மனுநீதிச் சோழன், சிபி மன்னன், அகத்தியர் என்ற மூவர் குறித்த புராணக் கதைகள் குறிப்பிடத்தக்கவை. இக்கதைகள் சங்கமருவிய கால இலக்கியமான பழமொழி நானூறு (மனுநீதிச் சோழன்) தொடங்கி வள்ளலார் காலம் வரையில் பன்முகங்களில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய புராணக்கதையின் எழுச்சி, தமிழ்ச் சமூகத்தின் குலக்குறி மரபு, குல வழியினர் அல்லது கால் வழி மரபு மழுங்கடிக்கப்பட்டு, புராணங்களின் அடிப்படையில் பல கதாபாத்திரங்களை உருவாக்கி புராண மூதாதையர்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புராண மூதாதையர்களை மையமாகக் கொண்டு நீதி, இரக்கம், மருத்துவம், இலக்கியம், இலக்கணம் என்பனவெல்லாம் உருவானதாக ஏற்படுத்தியிருக்கும் மாயை அரசியலை சான்றுகளுடன் எடுத்துக்காட்டியிருப்பதன் மூலம் வரலாற்றின் பொய்த்தன்மையை பிரித்து உணர வேண்டிய கடமை ஒரு இனத்திற்கு உண்டு.

இவை மட்டுமின்றி, புராண மூதாதையர்களால் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தி விடைகாண வேண்டிய கடமையும் உண்டு என்ற விரிவான சிந்தனையோட்டத்திற்குரிய களமாக ‘புராண மூதாதையர்’ பகுதியின் கருத்துகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக மனித இன வரலாற்றில் தொன்மையான இனமாக விளங்கும் தமிழ் இனம் தொடர்ச்சியாக ஒவ்வொரு குறிப்பிட்ட காலங்களிலும் ஒவ்வொரு அரசியல் சூழல்களையும், அவ்வரசியல் சூழல்கள் முன்னிறுத்தும் கருத்தியலையும் எதிர்கொண்ட சமூக அமைப்பாகும்.

இவ்வாறு மாறுபட்ட பல கருத்தியல்களையும் கடந்து, தமிழினத்தின் தொன்மையான சிந்தனை மரபின் எச்சமாக இடம்பெறும் தொல்சமயக் கூறுகள் மக்களின் வாழ்வியலில் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுவரை தொடர்ந்துகொண்டு வருவதையும் காண முடிகிறது.

இவ்வாறு தமிழினத்தின் சிந்தனைவழி தொடரும் எச்சங்களில் இறந்தோர் வழிபாடு குறித்த சிந்தனைத் தொடர்ச்சியை மையமாகக் கொண்ட பேரா. ஆ.சிவம் அவர்களின் உரையாடல் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

குடும்ப தெய்வம், குல தெய்வம், ஊர்த் தெய்வம், நீர்த் தெய்வம், நோய்த் தெய்வம் என்ற பல் நிலையிலான தெய்வங்களின் வழிபாட்டில் பொங்கலிடுதல், சாமியாடல், படையல் பொருள்கள் முதலான கூறுகளாக இன்றும் மக்களின் வாழ்நிலையோடு உறவாடிக் கொண்டிருப்பதை பேராசிரியரின் உரையாடல் சுட்டிக்காட்டுகிறது.

நாட்டார் தெய்வக் கூறுகளை விழுங்கும் வைதீக சமய நெறிகள், வெகுசன இந்துத்துவ முறையியல் முதலான வைதீக அரசியலின் சூழ்ச்சிகளைக் கடந்து இன்றும் மக்களிடையே தொல்சமயம் வழக்கத்தில் உள்ள நிலை, தொல்சமய நெறி உருவாக்கக் கட்டமைப்பின் உண்மைத் தன்மையையும் மக்களின் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.

தொல் சமயநெறி இந்து என்ற அடையாளத்தவர்களிடம் மட்டுமல்லாமல், இஸ்லாமியர், கத்தோலிக்க சமயத்தினரிடமும் அவரவர் சமயம் சார்ந்த நெறியோடு தொடர்வதையும் பேராசிரியருக்கே உரிய ஆய்வுமுறையிலான உரையாடல் வெளிப்படுத்துகிறது.  

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கான தொடர்ச்சியான ஆய்வு முன்னெடுப்பை இந்நூல் கொண்டுள்ளதை, “தொல் சமயத்தின் முக்கிய கூறுகளை உள்வாங்கியுள்ள நாட்டார் சமய நெறியானது ஒரு சமய நெறி மட்டுமல்ல. தமிழக அடித்தள மக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக்கான கணக்கற்ற தரவுகளைத் தம்முள் வைத்துள்ளது.

இவற்றை நம் கல்விப்புலம் சார்ந்த வரலாற்று வரைவு புறக்கணித்துள்ளது. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தரவுகளின் துணையுடன்தான் தமிழகத்தின் உண்மையான சமூகப் பண்பாட்டு வரலாற்றை எழுத முடியும்” என்ற பேராசிரியரின் வார்த்தைகளாலே உணரலாம்.

“தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு வரலாற்றைக் கண்டடைவதற்கு பேராசிரியரின் இந்நூல் முதன்மைத் தரவாக அமையும். பண்பாடுசார் ஆய்வுச் சமூகத்துக்குப் புதிய கண்களைத் திறந்து விட்டுள்ளார்.

பல திறப்புகளை திறனுடை ஆய்வாளர்கள் பெற்றுக்கொள்வதற்கான மடைகளையும் திறந்து காட்டியிருக்கிறார்" என்று முன்னுரையில் பேராசிரியர்   ச. பிலவேந்திரன் குறிப்பிட்டிருப்பதும் மெய்ப்படும்.

தமிழ் இனத்தின் தொன்மையான அடையாளத் தடங்களை எடுத்துக்காட்டியிருக்கும் இந்நூல் தமிழினம் கொண்டாடிக் களிக்க வேண்டியது கடமை. இந்நூலை வாசித்து களித்தும் விமர்சித்தும் பரவலாக்கம் செய்வோம்.

- முனைவர் மு.ஏழுமலை

Pin It