இலக்கியம் உவமை, உருவகம், அணிநலன், வருணனை, தொன்மம் போன்ற உத்திகளால் பொலிவு பெறுகின்றது. ஒரு படைப்பாளன் இவ்வுத்திகளைக் கையாளும் பொழுது வெற்றியைத் தழுவுகின்றான். இவ்வுத்திகளுள் சிறப்பிடம் பெறுவது உவமை யென்னும் உத்தியே.  ஏனென்றால் உவமை, கவிஞனின் உணர்வு மேம்பாட்டை மட்டுமின்றி, உவமை மேம் பாட்டையும்,கற்போரின் உள்ளத்தை ஆட்கொள்ளும் திறத்தையும் உணர்த்தவல்லதாகத் திகழ்கின்றது. இவ்வுவமையென்னும் அழகியலைத் தம் கூர்த்த அறிவால் கண்டுணர்ந்த ஒல்காப்புகழ் தொல்காப்பியர் இவ்வுவமைக்கென்றே தனியியலை அமைத்துள்ளமை யான் இதன்சிறப்பினை உணர முடிகின்றது.

படைப்பாளர்கள் முந்தைய இலக்கியங்களில் தம் மனம் பதிவு செய்தவற்றைத் தமது படைப்புகளிலும் கையாளும் மரபு காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகின்றது.  இம்மரபு ‘உலக இலக்கியப் பொது நிலை’ என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  இத்தகைய இலக்கியத் தாக்கம் தமிழ்க் கிறித்தவக் கவிஞர்களின் படைப்புகளிலும் இழையோடுவதைக் காண முடிகின்றது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் எய்ச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. 

இவர் தமிழ் மண்ணில் தோன்றினாலும் பின்னாளில் கிறித்தவ மெய்யியலை ஏற்றுக்கொண்டவர், இரட்சணிய யாத்திரிகம் என்னும் மாபெரும் காப்பியத்தைப் படைத்தவர்.  கிறித்தவக் கம்பர் எனப் போற்றப் பட்டவர். தனது காப்பியத்தின் வழி இத்தமிழ் மண் போற்றும் அறத்தை வலியுறுத்த விரும்பியவர்.  குறிப்பாக, நீதிநூல்கள் தரும் அறநெறி உவமை களைத் தம் காப்பியத்தில் இழையோடச் செய் திருப்பவர். ஆகவே அறத்தின் பிழிவாய் விளங்கும் நீதி நூல்களின் உவமைகள் அறவாழ்க்கையின் மணி மகுடமாக விளங்கும் இரட்சணிய யாத்திரிகத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள இடங்களை ஆய்ந்தறிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேட்டுவன் புள்சிமிழ்த்தல்

துறவு மேற்கொண்டவர் ஐம்புலன்களை அடக் காமல், தாம் விட்டு வந்த இன்பங்களுக்காக மீண்டும் அவாவுறுதல் அவர் மேற்கொண்ட துறவறத்திற்கு ஒவ்வாத ஒழுக்கமாகும்.  இக்கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் இழிந்த துறவியர் அதனை மறைவாகவே செய்ய விரும்புவர்.  ஏனென்றால் துறவிக்கு உலகில் எப்போதுமே மதிப்பு உண்டு.  அஃது தன்னை நம்பும் உலகை வஞ்சிப்பதாகும். ஆகவே தான் இக்கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் துறவியரைத் தெய்வப் புலவர் மறைந்திருந்து பறவையைப் பிடிக்கும் வேடனின் செயலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றார்.  இதனை,

‘தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று’                                                                                                                (குறள் 274)

என்ற குறள்நெறி தெளிவாக விளக்குகின்றது. இவ் வுவமையினை உள்ளத்தில் பதித்த கிருஷ்ணபிள்ளை தனது காப்பியத்தில் அதனை இழையோடச் செய்கின்றார்.

இரட்சணிய யாத்திரிகத்தில் மாய சாலகன்,மாய வேடன் என்ற இருவர் பேரின்ப வீட்டிற்குக்கள்ள வழியில் விரைந்து சென்றுகொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு முன்பாக நேர்வழியில் பேரின்ப வீட்டிற்கு விரைந்த காப்பியத் தலைவனாகிய கிறிஸ்தியான், இவ்விடத்தில் வள்ளுவர் தரும் உவமையைக் கொண்டு அவர்களை இடித்துரைக்கின்றான். 

இதனை,
‘வேட்டுவன் புதன்ம றைந்து விடாதுபுட் சிமிழ்த்தல் போலக்
காட்டுமித் தவவே டத்திற் கரந்துல கின்பங் கொளவும்’                                               (இர.யா.பா.17:18)

என்ற பாடல் வழி அறிய முடிகின்றது. வள்ளுவரின் குறள் தரும் உவமையானது இங்கு முழுமையுமாகச் செல்வாக்குப் பெற்று வந்துள்ளது.

அடுத்தது காட்டும் பளிங்கு

அகத்தின் தன்மையை வெளிக்காட்டுவது முகம். அதனால்தான் அகத்தின் உள்ளீடாக விளங்குகின்ற கலித்தொகை,

‘முகம் தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு’ என்கிறது.

இத்தகைய முகத்திற்கு உவமை கூற வந்த வள்ளுவர்,

‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் 706.)என்கிறார்.  இதனையே, முன்றுறை அறையனார்,

‘நோக்கி அறிகில்லாத் தம்உறுப்புக் கண்ணாடி
நோக்கி அறிப அதுவேபோல் - நோக்கி
முகனறிவார் முன்னம் அறிப’                                                                                                         (பழ.நா.பா.146)

என்கிறார்.  விளம்பிநாகனார்

அகம் பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம் போல் முன்னுரைப்ப தில் நான்.                                                                                             (ம.க.பா.48)

என்கிறார். நீதிநூல்கள் தரும் இவ்வுவமையினை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணபிள்ளை தமது காப்பியத்தில் இவ்வுவமையை ஏற்றிப் போற்றுகின்றார்.

காப்பியத்தலைவனாகியகிறிஸ்தியான் முக்தி வழியில் விரைந்து சென்றுகொண்டிருந்தபோது‘நம்பிக்கை’என்னும் பெயர் கொண்ட ஒருவனைச் சந்திக்கின்றான்.  கிறிஸ்தியானின் முகத்தில் விளங்கிய தெய்வீக அழகு நம்பிக்கையைக் கவர்ந்துவிட, அவன் கிறிஸ்தியானை நோக்கி,

‘என் தந்தையே! நம்முன் இருக்கும் கண்ணாடியில் நம் முகம் தோன்றுவதைப் போல உன்னிடத்திலுள்ள அற ஒழுக்கமும் அதனால் விளைந்த நீதியும் உறுதியும் உன் தெய்வீக அழகு கலந்த தோற்றத்தில் காணப் பட்ட ஆழ்ந்த விசுவாசத்தின் சிறப்பும், என்னுள்ளத்தில் தோன்றிய நல்லுணர்ச்சியில் கலந்து வேரூன்றிவிட்டன’ என்று அவனது உள்ள மலர்ச்சியை எடுத்துரைக் கின்றான்.  இதனை,

‘நின்னிற் றோன்றுசன் மார்க்கத்தி னீதிநிண் ணயமும்
பொன்னிற் றோன்றிய மெய்விசு வாசத்தின் பொலிவும்
என்னிற் றோன்றிய வுணர்ச்சியிற் பதிந்தன வெந்தாய்
முன்னிற் றோன்றிய வாடியிற் றோன்றிய முகம்போல்’                                           (இர.யா.பா.42:18)

என்ற பாடலால் அறியலாம். இவ்வாறு நீதிநூல்கள் தரும் அடுத்தது காட்டும் பளிங்கின் உவமையானது இரட்சணிய யாத்திரிகத்தில் செல்வாக்குப் பெற்று வந்துள்ளது.

சுடச்சுடரும் பொன்

இரட்சணிய யாத்திரிகத்தின் காப்பியத் தலை வனாகிய கிறிஸ்தியானின் முகமானது துன்பம் வருத்த வருத்த ஒளியுடன் திகழ்ந்ததால், ‘பக்தி’ என்பாள் அவனை நோக்கி,

‘இடர்சு டச்சுட விலங்குகொன் னெனமிளி ரெழிலோய்’                                                ( இர.யா.பா.23:68)என்று விளிக்கின்றாள்.  இப்பாடல் வரிகளில்,

சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.                                                                                                             (குறள் 267)

என்ற வள்ளுவரின் உவமைநயம் இழையோடி இன்பம் பயப்பதனை அறிய முடிகின்றது.

‘எறிந்த வேல் மெய்யதா
வால் குழைக்கும் நாய்’

நட்புக்கு இலக்கணம் தருகின்ற நாலடி,தன்னை வளர்த்த பாகனையே கொன்று விடும் யானை போன்றோரின் நட்பினை விடுத்து, தன்னை வளர்த் தவன் தன் மீது வேல் கொண்டு எறியினும் அதனைத் தன் உடலிலே ஏற்றுக் கொண்டு வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும் நாய் போன்றோரின் நட்பினைக் கொள்ளுதல் வேண்டும் என்கிறது.  இதனை,

‘யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்’                                                                                                     (நாலடி 213)

என்ற பாடல் வரிகளால் அறியலாம். 

இதனை மனம் கொண்ட கிறிஸ்தவக் கம்பருக்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசின் நன்றி கெட்ட செயல் மனத்திரையில் ஓட இத்தகைய நாய்க்குரிய நன்றி கூட இல்லாமல் யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்துவிட்டானே!என்று கடுஞ்சொற்களால் அவனைச் சாடுகின்றார்.  இதனை,

‘எறிந்தவேன் மெய்நுழைந் திருக்க வாண்டையென்
றறிந்துவால் குழைத்துவந் தணுகுங் குக்கலுஞ்
சிறந்தபே ரருளொடுஞ் செய்த நன்றியை
அறிந்திடா தகன்றனன் யார்கொ லாமிவன்’                                                                     (இர.யா.பா.21:54)

என்ற பாடலால் உணர முடிகின்றது. 

நாலடியின் நயமான உவமையை ஏற்ற இடத்தில் பொருத்தி யுள்ள கிருஷ்ணபிள்ளையின் புலமையாற்றல் நமக்குப் புலனாகின்றது.

 உலைக் கலத்திட்ட ஆமை

பாத்திரத்தில் இடப்பட்ட ஆமையானது,அதனைக் கொல்லும் கொலைக்காரர் தன்னை உலையிலிட்டு அடுப்பிலேற்றித் தீயிட்டு எரிக்கையில் அதன் நிலைமையை உணர்ந்துகொள்ளாது தனக்கு அழிவைத் தரவிருக்கின்ற அந்நீரில் மூழ்கி விளை யாடும்.  இவ்வுலையில் இடப்பட்ட ஆமையை ஆசை என்னும் வலையில் வீழ்ந்து கிடப்போருக்கு ஒப்பிடுகின்ற நாலடி,

‘கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர்ப் படிந்தாடி யற்றே’என்று பாடுகின்றது.

நாலடி நவிலும் இவ்வுவமை கிருஷ்ண பிள்ளையின் உள்ளத்தில் பதிவாகி விட ஞானமற்ற மக்களும் இந்த ஆமை போன்றோரே என்பதனை உணர்ந்து,

‘தலைப்படு முணர்விலா ருலக சாலத்து
வலைப்படு மானென மறித்து வஞ்சகப்
புலைப்படு புவனபோ கத்தைப் புந்தியுற்
றுலைப்படு மாமையினுவப்ப ரொள்ளியோய்’

என்று பாடுகின்றார். இவ்வுவமையை இவ்விடத்தில் மட்டுமல்லாது தனது காப்பியத்தின் நான்கு இடங்களில் பயன்படுத்தியுள்ளமையை ஆய்வில் அறிய முடிகின்றது.

 இருதலைக் கொள்ளி

தம்மிடத்திலே நட்பு பூண்டார்க்கும்,அவரின் பகைவர்க்கும் இடையே பகைமையை வளர்க் கின்றோரை, பழமொழி இருதலைக் கொள்ளிக்கு உவமைப்படுத்துகின்றது.  இதனை,

‘ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
இருதலைக் கொள்ளியென் பார்’                                                                                          (பழ.நா.பா.142)

என்ற பாடலால் அறியலாம். இதனைத் தம்மனத்தில் பதிவு செய்த கிருஷ்ணபிள்ளை காப்பியத் தலைவனாகிய கிறிஸ்தியானின் மனநிலையினை விளக்கு மிடத்து இவ்வுவமையைப் பயன்படுத்துகின்றார். கிறிஸ்தியான் தீமை நிறைந்த நாசதேசம் என்ற தனது ஊரை விட்டு வெளியேறியவுடன் இன்ன வழியில் செல்வதென அறியாமல் தவித்ததால் அவனது மனநிலை இருதலைக் கொள்ளி போல் இருந்தது என்கிறார்.

‘இருதலைக் கொள்ளி யுற்ற வெறும்பென வேகு மார்க்கம்
ஒருதலை யானுங் காணா துணங்கியோன்’                                                                    (இர.யா.பா.2:5)
என வரும் பாடலால் அறிய முடிகின்றது.

 உமி குத்துதல்
தம்மை வந்தடைந்தவர்க்கு ஒரு தீமை வந்துற்ற தாயின் அத்துன்பத்தை உடனே நீக்குதல் வேண்டும்.  அவ்வாறு நீக்கவில்லையெனில் அந்நட்பானது உமியைக் குற்றும் பயனில்லாச் செயலாக இருக்கும் என்பதனைப் பழமொழி,

‘உமிக்குற்று கைவருந்து மாறு’                                                                                         (பழ.நா.பா.349)

என்ற உவமையால் உணர்த்துகின்றது.  திரிகடுகம் இதே உவமையை,

‘உமிக் குத்திக் கைவருந்து வார்’                                                                                       (திரி.க.பா.28)

எனக்கூறிப் பயனற்ற செயலைச் செய்வார்க்கு இவ்வுவமையை ஒப்பிடுகின்றது. இதனைக் கற்றுணர்ந்த கிருஷ்ணபிள்ளை காப்பியத்தில் இதனை இழை யோடச் செய்கின்றார்.

காப்பியத் தலைவனாகிய கிறிஸ்தியான் தீவினை நிறைந்த நாசதேசத்தை விட்டுப் பேரின்ப வீட்டை நோக்கிப் பயணம் மேற்கொள்கின்றான். வன்னெஞ்சன்,மென்னெஞ்சன் என்ற இருவர் அவன் பேரின்ப நாட்டிற்குச் செல்வதைத் தடுக்க ஓடி வந்தனர். கிறிஸ்தியானோ திரும்புவதாக இல்லை.  இந் நிலையில், கிறிஸ்தியானின் மெய்யுரை கேட்டு அவன் பின்னே செல்ல,வன்னெஞ்சன் அவனை நோக்கி,‘நீ கிறிஸ்தியானுடன் செல்வது என்பது உமிகுத்துவது போன்ற பயனற்ற செயல்’ என இகழ்ந்துரைக்கின்றான்.  இதனை,

‘உற்றமென் னெஞ்சகை யுறவ ருந்திட
வெற்றுமிக் குத்துதல் விழுமி தன்றுகாண்
சுற்றமுங் காதலுந் துனியின் மூழ்கநீ
பெற்றிடு பயனொரு பெற்றித் தாகுமோ’                                                                                     (இர.யா.பா.2:5)

என்ற பாடலால் அறியலாம். நீதிநூல்கள் தரும் உமி குத்துதல் உவமையானது இங்குச் செல்வாக்குச் சிறப்புறுவதைக் காண முடிகின்றது.

மேற்கண்ட உவமைகள் அனைத்தையும் கிருஷ்ண பிள்ளை நீதிநூல்களினின்று பதிவு செய்துள்ள தால் நீதிநூல்களின் தாக்கத்தினின்று விலகாத மரபுக் கவிஞர் என்பதும், கிறித்தவ மெய்யியலை ஏற்றுக்கொண்டு இக்காப்பியத்தைப் படைத்திருப்பினும் தமிழ் இலக்கிய மரபினைப் போற்றுபவராகக் காணப்படுகின்றார் என்பதும் தெளிவாகிறது.

தமிழறிந்தோர் இரட்சணிய யாத்திரிகக் காப்பி யத்தை ஏற்குமாறுச் செய்ய காப்பியத்தினூடே இவர் கையாண்டுள்ள உவமை உத்தி இவரது படைப்பின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாகிறது.

கிறித்தவக் கம்பர் எனப் போற்றப்படும் கிருஷ்ண பிள்ளை தமிழுக்குத் தந்த பங்களிப்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது தமிழறிந்த ஒவ்வொரு வரின் கடமையன்றோ!

Pin It