‘தமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்குக் காரணமென்ன?’ என்ற என் கட்டுரையைப் படித்து விட்டு நண்பர் லூர்து எஸ்.ராஜ் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். லூர்து எஸ்.ராஜ் சிறுவர் இலக்கியப் பணியில் தன்னை மனப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொண்டவர்.  50-க்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

கீழே இருப்பது அவருடைய கடித வரிகளாகும்:

“தமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சியைப் போக்க சமூக அக்கறையுடன் எழுதுகின்ற எழுத்துக் களே தேவை என்று எழுதியிருந்தீர்கள். சமூக அக்கறையில்லாமல் யார் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?எல்லாரும் சமூக அக்கறையுடன் தான் எழுதுகின்றனர். ஆனால் பெற்றோரும் கல்வித் துறையும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.  அதனால்தான் 300 கோடி, 400 கோடி இலஞ்சம் எல்லாம் சர்வ சாதாரணமாகக் கைமாறுகிறது. 

பொறியியல்,மருத்துவம்,பல் மருத்துவம் என எல்லாத் துறைகளிலும் திறமைக்கு இடமில்லை.  இதுதான் இன்றைய நிலை.  தனிநபர் ஒழுக்கம் முக்கியத்துவம் பெறவில்லை.  பாலியல் வன்முறைகள் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.  அரசியல் அசிங்க மாகி வருகிறது. இத்தனைக்கும் காரணம் தனி மனித ஒழுக்கமின்மையே. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்கிறேன். பேராசை பெருநஷ்டம் என்பதைச் சிறுவயதில் நாம் எத்தனை கதைகளில் படித்தோம்.  இப்போது அது எங்காவது, எப்போதாவது போதிக்கப்படுகிறதா? அன்பு, பாசம், தியாகம், ஒழுக்கம், பொதுநலம், துணிவு, தீமையை எதிர்த்துப் போராடுதல் என்பன எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று, ஏன்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.”

நானும் சிந்தித்துப் பார்த்தேன். நண்பரின் கடிதம் குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள்களைப் பற்றிப் பேசுவதாகப் பட்டது. குழந்தை இலக்கியம் நல்ல போதனைகளுடன் இருக்க வேண்டும் என்று நண்பர் கூறுகிறார். இதைத்தான் டாக்டர் பூவண்ணன் “இன்றைய சிறுவரை நாளைய சிறந்த குடிமக்களாக மாற்றும் அற்புத ஆற்றல் பெற்றது சிறுவர் இலக்கியம்” என்று குழந்தை இலக்கியத்தின் குறிக்கோளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

‘இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்’
என்று பாவேந்தர் பாரதிதாசனும்,

“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்”
என்று அழ.வள்ளியப்பாவும்,
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடே இருக்குது தம்பி”
என்று கவிஞர் வாலியும்

இந்த நோக்கத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் குறிக்கோள் குழந்தை இலக்கியத்திற்கு இருக்கிறது என்பதையே எல்லோரும் சொல்ல வருகிறார்கள். அதனால் கவிமணி காலந்தொட்டு குழந்தைகளுக்கு ஒழுக்கம், குடிமைப்பண்புகள் பற்றிய பாடல்களை இயற்றியுள்ளார்.

முதலாவதாக உள்ள ஒழுக்கம் கடவுள் நம்பிக்கை!

‘கள்ள வழியினிற் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!’

இவ்வாறு ‘தெய்வம் துணை’ என்று கவிமணியைத் தொடர்ந்து மகாகவி பாரதியும்,

‘தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்கு வரமாட்டாது பாப்பா’ என்கிறார்
‘எல்லாம் அறிந்த கணபதியே
எவ்வரம் கேட்பேன், தெரியாதா?
நல்லவன் என்னும் ஒரு பெயரை
நான் பெற நீ வரம் தா தா தா...’

என்று குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவும் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
குழந்தை இலக்கிய இதழ்களில் முதலாவது தோன்றிய பாலியர் நேசன்,கிறித்துவ மத நம்பிக் கையைக் குழந்தைகளிடம் போதிக்க வெளியிடப் பட்டது. நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் கிறிஸ்துவ மதநம்பிக்கையை வலியுறுத்தும் குழந்தை இலக்கிய நூல்கள் ஏராளம் வந்துள்ளன.

1817-ஆம் ஆண்டிலேயே இஸ்லாமியப் பள்ளிகளை ஏற்படுத்திக் குழந்தைகளுக்காக அல்லாவைப் போற்றிப் பாடும் பாடல்களை எழுதிய செய்யது முகம்மதுவின் புகழ் பெற்ற பாடல் இது:

‘ஹஸ்பீ ரப்பீ ஜல்லல் லாஹ்
மாஃபீ கல்வீ கைருல்லாஹ்
நூரு முகம்மது சல்லல்லாஹ் - ஹக்
லா யிலாஹ இல்லல் லாஹ்’

‘பைபிள் கிறிஸ்தவர்களைத்தான் உருவாக்கியது.  குரான் இஸ்லாமியர்களைத்தான் உருவாக்கியது.  பகவத் கீதை, இந்துக்களைத்தான் உருவாக்கியது.  அவை மனிதர்களை உருவாக்கவில்லை’ என்ற ஒரு விமர்சனத்தை அறிந்திருந்த காரணத்தால்தான் என்னமோ மழலைக்கவிஞர் குழ.கதிரேசன் மதச் சார்பற்ற நிலையில் நின்று தனது குழந்தை இலக்கியக் கோட்பாடு பற்றிய பாடலில்,

‘இறைக்கோர் வடிவம் தந்தாலே
எல்லாக் குழந்தைக்கும் போகாது!
தனிமைக் கூண்டில் அடைப்பட்டுத்
தங்கக் கவிதை இருந்துவிடும்!’ என்று,இறைக்கோர் வடிவம் குழந்தைப் பாடல் களுக்குத் தேவையில்லை என்று கூறுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான நிலையைப் பாவேந்தர் பாரதிதாசனிடமும் பட்டுக்கோட்டையிடமும் பார்க்க முடிகிறது.

‘தெய்வம் தொழ வேண்டா - அது
தீது செய்யத் தூண்டும்’ என்று
இளைஞர் இலக்கியத்தில் கூறுகின்றார் பாரதி தாசன்
‘தனியுடைமை  கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா - தானாய்
எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா’
என்று பட்டுக்கோட்டையின் பாடல் ‘தெய்வம் துணை’என்பது பழைய பொய் என்று சூசகமாகக் குறிப்பிடுகிறது.

ஆம்!கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு பற்றிய சிக்கல் குழந்தை இலக்கியத்திலும் இருப்பதை அறிய முடிகிறது. எதைப் பின்பற்றுவது என்ற குழப்பம் குழந்தை இலக்கியப் படைப்பாளிகளிடம் தோன்றாமல் இல்லை.

குழந்தை இலக்கியம் குழந்தைகளின் முகத்தையும்,அகத்தையும் பிரதிபலிக்க வேண்டுமென்று மழலைக் கவிஞர் கூறுகிறார்.  கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைகளின் மன இயல்புக்கு ஏற்றதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ என்கிறது பைபிள்.  கடவுள் பயத்தை ஊட்டி வளர்ப்பதால் குழந்தைகளிடம் மனப் போராட்டங்களே ஏற்படுகின்றன. மதத் தத்துவங்கள் குழந்தைகளின் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவை. குழந்தைகளைத் தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களாகவளர்க்கவேபெற்றோர்கள் விரும்புகிறார்கள். ‘குழந்தைகளை வளர்க்காதீர்கள்; வளர விடுங்கள்’ என்று அறிஞர் பெர்னாட்ஷா கூறியதை மறந்து விடக்கூடாது.

அடுத்து, குழந்தை இலக்கியக் குறிக்கோளாக, பிள்ளைகளிடம் மொழிப்பற்றை ஏற்படுத்துவது என்பதாகஇருக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும்,பாடம் படிக்க வேண்டுமென்பது பற்றிக் கவிமணி முதல் ஈரோடு தமிழன்பன் வரை அழகான பாடல்கள் எழுதியுள்ளார்கள்- சற்று வித்தியாசமாக.

பெண்கல்வியை வலியுறுத்திய பாரதிதாசன் இசைப்பாடல் :
“தலைவாரி பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை”
என்று ஒரு தந்தை பாடுவதாக அப்பாடல் அமைந் திருந்தாலும் அது அற்புதமான பாடலே!
பாரதியும்கூட பெண்குழந்தைகளுக்கு முக்கியத் துவம் தரவேண்டுமென்பதற்காக ‘கண்ணன் என் குழந்தை’என்று பாடாமல் ‘கண்ணம்மா என் குழந்தை’என்று பாடியுள்ளது கவனிக்கத்தக்கது.

குழந்தை இலக்கியம் மொழித்திறன்களைக் குழந்தைகளுக்கு வழங்குகிறது என்பது உண்மை.  ஆனால் குழந்தை இலக்கியம் தமிழ்மொழியில் ‘படி’ என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்தொழுது படித்திடடி பாப்பா’ என்று பாரதி ஆரம் பித்து வைத்த கடவுள் வணக்கத்திற்கு அடுத்த படி யான மொழி வணக்கத்தை எல்லாப் புலவர்களும் பிடித்துக் கொண்டார்கள்.  இது தவிர பாவலரேறு பெருஞ்சித்திரனார், ‘தமிழும் ஆங்கிலமும் தவறாது கற்பாய்’ என்ற பாடலில்,
‘எனவே தம்பி இனிமைத் தமிழுடன்
ஆங்கில மொழியிலும் அறிவைப் பெறுக, நீ!
‘அகம்’ தமிழ்மொழியெனில் ஆங்கிலம் ‘புற’ மாம்!
இருமொழிக் கொள்கை,மும்மொழிக் கொள்கை என்பதெல்லாம் குழந்தைகளின் பிரச்சினையல்ல;அது பெற்றோரின் பிரச்சினை. குழந்தை எந்த மொழியில் படிக்கவேண்டுமென்பதைப் பெரியோர் தீர்மானிக்கிறார்கள்.  அந்த மொழி, இந்தமொழி என்று கூறிச் சொந்த மொழியை அனாதையாக்கி யவர்கள் குழந்தைகள் அல்ல. தாய்மொழியில் கல்வி என்பது குழந்தையின் உரிமை. எத்தனையோ உரிமைகள் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன.  ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று பேசுபவர்கள் படிப்புக்கு எது என்பதை உணர்ந்தார்களா?மொழிப்பற்றைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டுமென்று பேசுபவர்கள் அதை விளக்கினால் நல்லது!

மொழிப்பற்றைப் போல்தான் நாட்டுப்பற்றும். நாலு வரி எழுதினாலும் குழந்தைகளுக்கு நாட்டுப் பற்றைப் பற்றி எழுதாதவர்கள் இல்லை.

‘அமிழ்தில் இனியதடி பாப்பா! நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!’

என்று பாரதி ஆரம்பித்துவைத்தார். பல வகையாகப் பரவிடும் பரம்பொருளைப் பற்றிப் பேசும் பாரதி ஆன்றோர் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறார்? குழப்பம் இல்லையா!

‘அன்பென்று கொட்டு முரசே - மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்,
உடன் பிறந்தவர்களைப் போல் - இவ்
வுலகில் மனிதரெல்லாரும்!
இடம் பெரிதுண்டு வையத்தில் - இதில்
எதுக்குச் சண்டைகள் செய்வீர்?’ இந்தக் கருத்து பாரதியின் முரசு பாடலில் வரும். இந்தக் கருத்துக்கள் தானே மண்ணில் மைந்தர்களாக வாடிநவதற்கு ஏற்புடையவை. நாடுகளுக்கிடையிலான சண்டையில்நாட்டுப்பற்று எரியும் நெருப்பில் விடப்படும் எண்ணெய் ஆகிறது.போரினால் அதிகம் அல்லல்களை அனுபவிப்பவர்கள் குழந்தைகளே என்பதை எல்லாரும் அறிவர். பிரிவினைகள்,எல்லைகளற்ற பரந்த உலகம் குழந்தைகளுடையது.

குழந்தை உலகத்தில் சுயநல வேலிகளைப் போடுபவர்கள் பெரியவர்கள்தான். குழந்தைகள் ஏற்றத்தாழ்வுகளை அறியாதவர்கள்.அவர்களிடம் போய் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிறோம்.பொய் என்றால் அதன் அர்த்தம் புரியாதவர்கள் குழந்தைகள். அவர்களிடம் போய் ‘பொய் சொல்லக் கூடாது பாப்பா’என்கிறோம்.‘திருடாதே பாப்பா, திருடாதே!’ என்று குழந்தைகளிடம் போடீநுப் பாடுகிறோம்.தனியுடைமையை ஏற்படுத்தியது குழந்தைகளா?குழந்தைக்காக என்று கூறிப் பெரியவர்கள் செய்த குற்றம் அல்லவா அது.பெரியவர்களுக்குக் கூற வேண்டியகருத்துகளைக் குழந்தைகளுக்குக் கூறிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைப் பருவத்திலே கூறினால் மனதில் பதிந்துவிடுமாம். இப்படியொரு நொண்டி சமாதானம்!

அடுத்து,குழந்தை இலக்கியத்தில் அதிக பங்கு வகிப்பது இயற்கையைப் போற்றுதல், உயிரினங்கள் மீது அன்பு ஆகியன.

‘நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா’
போன்ற நாடோடிப் பாடல்கள் குழந்தைகள் நிலாவைப் பார்த்து ரசித்த காலத்தைச் சேர்ந்தவை.  கதவு, சன்னல்களை இறுக்கி மூடி அவற்றுக்குச் சட்டையும் தைத்துப் போட்டு அறைக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு வளர்பிறை தெரியுமா? தேய்பிறை தெரியுமா?

‘நறுக்கி எறிந்த நகத்தைப் போல
இருக்கும் நிலாவே - நீ
நகர்ந்து நகர்ந்து போவதெங்கே?
சொல்லு நிலாவே’

குழந்தைக் கவிஞரின் பாடல் உவமைதான் புரியுமா?குழந்தைகளுக்கு இயற்கையாகவே காகம்,குருவி,கிளி,கோழி,ஆடு,மாடு இவைகளிடம் அன்பு உண்டு. பறவை,விலங்குகள் உலகத்தோடு இப்போது குழந்தைகளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது?அவைகளோடு பழக,உறவாட குழந்தை களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?‘கான்கிரீட்’உலகத்தில் வாழ்ந்து கொண்டு வெட்கமில்லாமல் ‘கிளியே, கிளியே, பறந்து வா’ என்று குழந்தை களைப் பாடச் சொல்கிறோம். கூண்டுக்கிளியின் சுதந்திரத்தைப் பற்றிக் குழந்தைகளிடம் பாடம் சொல்பவர்கள் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டுகிறேன்.

நாட்டுத் தலைவர்களைப் பற்றியும்,பழம் பெரும் கவிஞர்களைப் பற்றியும் நிறைய எழுதப் பட்டு இதுவும் குழந்தை இலக்கியத்தின் குறிக் கோளாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.  இது குழந்தை இலக்கியமாகுமா என்பது புரியவில்லை. பாடத்திட்டம் சார்ந்து தரப்படும் இவ்வகைக் குழந்தை இலக்கியத்தில் உள்ள முரண்பாடுகள் பரிசீலனைக்கு உரியவை.

தமிழ் குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள்கள் கவிமணி,பாரதி,அழ.வள்ளியப்பா ஆகியோரிட மிருந்து பயிலப்பட்ட ஒன்றாகவே உள்ளது. பெரும் பான்மையோர் இம்மும்மூர்த்திகள் வகுத்த பாதை யிலேயே சென்றுள்ளனர். பழகிய பாதை பலருக்கு சௌகரியமாக போனதைப் பற்றி விமர்சனங்கள் எழாமல் இல்லை. அழ.வள்ளியப்பாவின் சீடரான தம்பி சீனிவாசன் மத்திய அரசின் குழந்தை இலக்கியப் பரிசு பெற்றவர். ‘யூனிசெப்’ நடத்திய குழந்தை இலக்கியப் பட்டறையில் பயிற்சி பெற்றவர். இது குறித்துத் தனது பார்வையை வெளிப்படுத்தினார்.

‘குழந்தைக்கு என்று பாடல் எழுதும்போது திரும்பத் திரும்ப வீட்டு மிருகங்கள், விளை யாட்டுப் பொருட்கள், தாய், தந்தை போன்ற குடும்ப உறுப்பினர்கள் என்றே எழுதுகிறார்கள்.  பல குழந்தைப் பாடநூல்களைக் கவனித்தால் இந்தக் குறை நன்கு தெரியும்.  குறிப்பிட்ட 30, 40 பொருட் களைப் பற்றியே தான் எல்லாக் கவிஞர்களும் பாடல் இயற்றி இருப்பார்கள்.  புதிய கோணங்களில் பார்த்து, புதிய சந்தங்களில் அமைத்து எழுதத்தானா பொருட்களுக்குப் பஞ்சம்?குழந்தையின் செயல்களைக் கவனித்தால் கற்பனை பெருகும்.’கடைசி வரி முக்கியம். குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும் எண்ணங்களும் செயல் களுமே வெளிப்பட வேண்டும். ஆனால் வெளிப் பட்டவையெல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே!குழந்தையின் முகத்தை,அகத்தைக் காட்டுவது போல் சில எடுத்துக்காட்டான பாடல்கள் இல்லாமல் இல்லை.  அவை மிகக் குறைவே.

தம்பி சீனிவாசனின் ‘சிவப்பு ரோஜா’தொகுப்பில் உள்ள ‘மீண்டும் வருமா?’‘புரியவில்லை அம்மா’ஆகிய பாடல்கள் குழந்தையின் முகத்தை,அகத்தைக் காட்டுவன.கவிமணியின் ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’குழந்தையின் பார்வையிலிருந்து பாடப்படுவ தாகும்.

‘குழந்தைக் கவிஞன் தன் பார்வையால் எதையும் பார்ப்பதில்லை, குழந்தைக்குரிய கண்களால் காண்கிறான்’என்கிறார் அறிஞர் எமர்சன். குழந்தையின் கண்கள் வியப்பால் விரிபவை; வினா கேட்பவை.

‘குரங்கின் அச்சம்’ பாரதிதாசனின் பாடல்  ‘கீழிருக்கும் விழுதையெல்லாம் ஒளி பாம்பாய் எண்ணி எண்ணி உச்சி சென்று தன் வால் பார்க்கும் என்று குழந்தையின் வியப்பை வெளிப்படுத்தும்.

ஷண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதையான,

கண்ணன் என் தம்பி
காலையில் எழுவான்
ஓவென அழுவான்
அப்பா எழுந்து
ஏனெனக் கேட்பார்.
அம்மா வந்து
அப்பம் கொடுப்பாள்,
அப்பமும் தின்று
கையையும் கடித்து
அழுவான் பின்னும்
கண்ணன் என் தம்பி

குழந்தையின் கண்களில் எழும் கேள்வி உணர்வு இக்கவிதையில் ஆழ்ந்து உள்ளது.“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது”என்று நினைத்துக்கொண்டு குழந்தை இலக்கியத்தைச் சம்மட்டிகளாக ஆக்கி விடக்கூடாது.குழந்தை இலக்கியம் குழந்தையை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முதலில் தமிழ் குழந்தை இலக்கியத்தை அதன் பழைய குறிக்கோள்களிலிருந்து விடுதலை செய்வோம்.

Pin It