காற்றின் விசை கடலின்மீது ஒலியெழுப்பாமல் இருந்தால், நாம் இந்தியத் தென் கடலோரத்தில் நின்று, இலங்கைவாழ் தமிழர்களின் அழுகுரலைக் கேட்கலாம். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் காபி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியவும், இதர பணிகளில் தினக்கூலி வேலை செய்யவும், இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து இலங்கைத் தீவுக்குச் சென்று தலைமுறை தலைமுறையாக அந்தத் தீவை வாழ்வித்து வருபவர்கள்தாம் இன்று அங்கே இலங்கை அரசிடம் உரிமைப் போர் நடத்தி வருகின்றனர்.

c_mahendran_450இலங்கைத் தீவின் கடற்கரைக் கிராமங்களுள் ஒன்றான முள்ளிவாய்க்கால் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை அரசு தனது பயங்கரவாதத்தின் மூலம் கொன்று குவித்தது. இதனை மையமாகக் கொண்டு ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற தலைப்பில் நூலொன்றை எழுதியிருக்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும், ‘தாமரை’இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன்.

இவர் ஏற்கெனவே இலங்கைக்குச் சுற்றுப் பயணம் சென்று, அங்கு வசிக்கும் - அப்போது வசித்த - மக்களை நேரில் சந்தித்துப் பல தகவல்களைத் திரட்டி வந்து, ‘தீக்குள் விரலை வைத்தேன்’என்ற தலைப்பில் பயனுள்ள நூல் ஒன்றை எழுதினார். தொடர்ந்து இலங்கைத் தீவில் தமிழினம் அனுபவிக்கும் கொடுமையையும், இனப் போராளிகளின் போராட்டங்களையும் அக்கறையுடன் கவனித்து, அவ்வப்போது மேடைகளில் பேசியும் ஏடுகளில் எழுதியும் தமது கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்; இருக்கிறார். இந்தக் கருத்துநிலைப் பரப்பில் ஒரு கூறாக ஆனந்த விகடன் இதழில் தொடர்கட்டுரை எழுதினார். ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலின் வடிவம்.

கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, நந்திக்கடல் வட்டாரத்தின் இயற்கையழகுகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய வண்ணம் தொடங்கும் நூல் ‘மெனிக் ஃபாம் என்னும் சித்ரவதை முகாமை நெருங்குகையில், வாசகர் மனம் தன்னைத் திடப் படுத்திக் கொள்ள வேண்டும். நம் சகோதர, சகோதரிகள் அகதி நிலையுற்று, முகாமின் தங்கும் கூடாரங்களில் - உணவெல்லாம் பிறகு - முதலில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றித் துடிக்கிற நிலையைக் கூறுகிறது நூல். பின்னர், தோளில் தன் ஒரே குழந்தையையும், கைப்பை ஒன்றையும் சுமந்துகொண்டு முள்ளி வாய்க்காலிலிருந்து 8 கிலோ மீட்டர் நடந்தே வந்து பின்னர் ஒரு வழியாக மெனிக் ஃபார்ம் முகாமுக்கு வந்து சேர்கிறாள் தமிழ்ப் பெண்ணொருத்தி. தொடர் வயிற்றுப் போக்கால் துடித்துத் துவண்டு போன தன் குழந்தையை முகாமின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்ட முனை கிறாள். அங்கே அவளுக்குக் கிடைக்கும் தகவல் அப்படியே அதிர வைக்கிறது. தமிழர்களின் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்று விடுவார்களாம் இலங்கை ராணுவத்தினர்.

இதனை இலங்கை அரசின் இனப் பேரழிவுக்கான சான்றுகளில் ஒன்றாகக் கூறும் நூலாசிரியர் மகேந்திரன் ஈழத்து மக்களால் ‘இலயான்’என்றழைக்கப்படும் ஈக்களால் தமிழர்கள் மெனிஃபார்மில் அவதியுறும் அவலத்தை விவரிக்கிறார்.

சித்திரவதை முகாமிலிருந்து விடுதலை செய்யப் பட்ட முற்றாக உடல் ஊனமுற்ற சுரேஷ் என்ற சகோதரனின் நேர்காணல் செய்தியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் உட்பட பலர் பட்ட மானுட மீறல் கொடுமைகளைப்பற்றி உள்ளம் குமுறுகிறார்.

குடும்பத்தினர்கள் பல வேறு இடங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்ட வேதனை நிகழ்வுகளின் பகிர்வையும், ஊடகவியலாளர் இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமையையும் நூலில் பதிவு செய்துள்ளார் மகேந்திரன்.

அடுத்து, பதுங்குகுழி வாழ்க்கை, பட்டினியால் குழந்தைகளின் உயிர் தாய், தந்தையரின் கண்களுக் கெதிரே பிரிந்து போவது என நெஞ்சை உலுக்கும் செய்திகள் நூலில் தொடர்கின்றன. ‘போர் வேளையில் போராட்டக்காரர்களை எதிர்க்கிறோம்’என்று உலகத்துக்கு வசனம் எழுதிவிட்டு, பொது மக்களை, பெண்கள், முதியோர், குழந்தை களையெல்லாம்கூட கொடூரமான குண்டுகளால் தாக்கியதோடு போர்முனையில் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்த மருத்துவர்களைக் கூட மிரட்டி அப்படிச் செய்யவிடாமல் முடக்கியுள்ளது ராஜபக்ஷே அரசு என அறிகையில் அவருடைய கொடூர மனம் உலகுக்குப் புரிகிறது.

‘பாதுகாப்பான பகுதியில் உங்களைத் தங்க வைக்கிறோம்’என்று தமிழ் மக்களை நம்ப வைத்து, எப்படியெல்லாம் அவர்களுக்குத் துரோகமிழைத்தது; உயிருடன் வைத்தே துன்புறுத்தியது இலங்கை அரசாங்கம்’ என்று நூலின் பல பக்கங்கள் எடுத்துச் சொல்கின்றன.

இறுதியில் இலங்கைவாழ் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில் ஐ.நா. சபையின் மற்றும் இந்திய அரசின் கடமைகளைச் சுட்டிக்காட்டி, அவை அந்தக் கடமைகளைச் செய்யத் தவறியதை இடித்துரைக்கும் சி.மகேந்திரன்,

“முள்ளிவாய்க்கால் அழிவற்றது,

அது, விதைப்பதை விதைத்துவிட்டு,

அறுவடைக்காகக் காத்து நிற்கிறது!”

என்ற கூற்றுடன் நூலை நிறைவு செய்கிறார்.

இரவு பகல், வெயில் மழை என இயற்கை இயங்கட்டும்; வரலாற்றை மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.

வீழ்வேனென்று நினைத் தாயோ?

ஆசிரியர் : சி.மகேந்திரன்

வெளியீடு : விகடன் பிரசுரம்

விலை : ரூ.100/-

Pin It