'இயற்கை விவசாயம்' என்கிற ஜெயபேரிகையைக் கையில் எடுத்து, கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழ் மண்ணில் முழங்கிக் கொண்டிருந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், டிசம்பர் 30 அன்று இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார்! தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுக்க இருக்கும் அவருடைய அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்களை, இது கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

''ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவு களை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும்'' என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப் பாகப் பார்த்த நிலையில்... சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... எனப் பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார்.

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித் திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, மரபணு மாற்றப் பட்ட விதைகள், பூச்சிகொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங் களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி யிருக்கிறார்.

இறப்பதற்கு முன்பாகக்கூட, களத்தில்தான் நின்றிருந்தார் இந்தப் பசுமைப் போராளி! ஆம், காவிரிப் பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 'இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இங்குள்ள விளைநிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்’ எனப் பதைபதைத்து, கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கனமழையிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்காடு கிராமத்தில், டிசம்பர் 30-ம் தேதி இயற்கையோடு கலந்தார் நம்மாழ்வார்.

இறுதி நிமிடங்கள்...!

டிசம்பர் 30 அன்று இரவு, 'நம்மாழ்வார் இயற்கை எய்தி விட்டார்’ என்று பசுமை விகடனுக்கு வந்த செய்தி, ஆசிரியர் குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இது உண்மையாக இருக்கக்கூடாது’ என்றே மனம் பதைபதைத்தது. மீண்டும் மீண்டும் சிலரைத் தொடர்பு கொண்ட போது, அது உண்மை என்பது உறுதியானது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், விவசாயிகள் நம்மைத் தொடர்பு கொண்டு அழுகையும், ஆற்றாமையுமாக விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

அன்று இரவே, அவருடைய உடலை... கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் கொண்டு செல்ல குடும்பத்தாரும், உடன் இருந்தவர்களும் முடிவு செய்தனர். ஆனால், 'பசுமை விகடன்’ ஆசிரியர் குழு ஆலோசனை செய்து, 'உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும்... அவருடைய உடலைப் புத்தாண்டு தினத்தில் விதைக்க வேண்டும்’ என்று குடும்பத்தாரிடம் பேசினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தின் மையப்பகுதி திருச்சி என்பதால், அங்கே நம்மாழ்வாரின் உடலை வைத்தால் விவசாயி களும் பொதுமக்களும் வருவதற்கு வசதியாக இருக்கும் என்கிற எண்ணத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனை செல்போனில் தொடர்பு கொண்டோம். நள்ளிரவு 12.30 மணி என்ற போதும், போனை எடுத்துப் பேசியவர், தகவல்கேட்டு மிகுந்த அதிர்ச்சியானதோடு... 'எந்த இடத்துல வைக்கணும்னு சொல்லுங்க... ஏற்பாடு செய்றேன்’ என்று பரிவோடு சொன்னார். ஆனால், 'தஞ்சாவூரிலேயே வைக்கலாமே’ என நம்மாழ்வாரின் குடும்பத்தார் விரும்ப... பிறகு, தஞ்சாவூர், பாரத் கல்லூரித் தாளாளர் புனிதா கணேசனின் அனுமதி பெற்று, கல்லூரி வளாகத்தில் நம்மாழ்வாரின் உடல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து 'வானகம்' பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப் பட்டது! அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது!

முன்னதாக, வானகம் பண்ணைக்கு சாரை சாரையாகத் திரண்டு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவருமே கலங்கிப் போய்த்தான் நின்றனர். கூட்டம்கூட்டமாக, ஆங்காங்கே நின்று கொண்டு விவசாயிகள் பேசிக் கொண்டிருந்தனர். தர்மபுரியைச் சேர்ந்த கேழ்வரகு விவசாயி அருண் உள்ளிட்டோர் ஓரிடத்தில் நின்றிருக்க... அங்கே 'பசுமை விகடன்' ஆசிரியர் குழுவினரும் மற்றும் சிலரும் இருந்தனர்.

அப்போது பேசிய அருண், ''இனி, நம்மாழ்வார் இடத்துக்கு யார் வருவாங்க... நம்மளையெல்லாம் யார் வழி நடத்துவாங்க...'' என்றொரு கேள்வியை முன் வைத்தார். அப்போது 'பசுமை விகடன்' ஆசிரியர் சொன்ன பதில்-

''இதென்ன கேள்வி... இனி நாம் ஒவ்வொருவருமே தான் நம்மாழ்வார். கடைசி வரை, நம் ஒவ்வொருவர் பின்னாலும் நம்மாழ்வார் வந்து கொண்டே இருப்பார் என்று எத்தனை காலத்துக்கு எதிர்பார்க்க முடியும்?

அவர் அடிக்கடி சொல்வது என்ன? 'நீங்கள் ஒவ்வொரு வருமே ஒரு இயற்கை வேளாண் விஞ்ஞானியாக வடிவெடுக்க வேண்டும். நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் செய்யத் தேவையில்லை. 'அரியானூர்' ஜெயச்சந்திரன், நெல்லு விதைச்சுருக்கார்... போய் பாருங்கனு சொல்றேன். 'முருகமங்கலம்' சம்பந்தம் பிள்ளை, சீமை காட்டாமணியைத் தன் உரமாக்கியிருக்கார்... போய் பாருங்கனு சொல்றேன். அங்க போய் பார்த்து, அவங்க பயன்படுத்தியிருக்கற தொழில்நுட்பங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்புடையதா இருந்தா... பின்பற்றுங்க. இல்லைனா... உங்க பாணியிலயே விவசாயத்தைச் செய்யுங்க. அவரு சொன்னாரு... இவரு சொன்னாருனு எதையும் செய்யாதீங்க. நீங்களா சிந்திச்சி, தற்சார்போட விவசாயம் செய்யுங்க' என்பதைத்தானே முக்கியமாக முன்வைப்பார் நம்மாழ்வார். அப்படியிருக்க... தொடர்ந்து நீங்கள், இன்னொரு நம்மாழ்வாரைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி?'' என்றார் ஆசிரியர்.

அருகிலிருந்த 'திண்டுக்கல்' வெள்ளைச்சாமி, ''ஆமாம்... எத்தனை காலத்துக்கு இப்படியே

இருப்பீங்க. இப்படியே இருந்தா, அது நம்மாழ்வார் ஐயாவுக்குச் செய்யுற மரியாதையும் இல்லை. அவர் இத்தனை நாளா பாடுபட்டதுக்கும் அர்த்தமும் இல்லை. இனிமே இயற்கை விவசாய ஜோதி நம்ம ஒவ்வொருத்தர் கையிலயும்தான். நாமெல்லாருமே நம்மாழ்வாரா மாறி... அவர் சார்புல அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதுதான்'' என்று சொல்ல... சுற்றியிருந்த அனைவருமே ஆமோதித்தனர்.

ஆம், இயற்கை விவசாய ஜோதி, இனி நம் ஒவ்வொருவரின் கைகளிலும்தானே!

நன்றி: பசுமை விகடன்

Pin It