தமிழ்ச் செவ்வியல் நூல் வரிசையில் உள்ளனவற்றுள் திருக்குறளும், நாலடியாருமே முதன் முதலாக அச்சு வடிவம் பெற்றன. 1812இல் தஞ்சை மாநகரைச் சேர்ந்த மலையப்பப் பிள்ளையின் மகனாகிய ஞானப்பிரகாசன் என்னும் அறிஞர் திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டு நூல்களை ஒன்றாக இணைத்து அச்சிட்டு வெளியிட்டார். இதனுள் திருவள்ளுவமாலையும் இணைத்து அச்சிடப் பட்டுள்ளது. செவ்வியல் நூல் வரிசையில் உள்ள வேறெந்தவொரு நூலும் இந்த இரு நூல்களுக்கு முன்னராக அச்சானதாகச் சான்றுகள் இல்லை. 1812இல் தொடங்கிய தமிழ்ச் செவ்வியல் நூல் பதிப்பு வரலாறு இன்றைக்கு இரு நூற்றாண்டு நிறைவை அடைந்துள்ளது. இரு நூற்றாண்டு நிறைவை அடையும் இந்த நேரத்தில் தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு, பாட வேறுபாடுகள், செம்பதிப்புகள் குறித்த உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன என்பன குறித்து விவாதிப்பதும் அந்த விவாதத்தின் பயனாகச் செம்பதிப்பிற்கான சூழலை அடையாளம் காண்பதும் பயனுள்ளதாக அமையும் எனக் கருது கிறேன். இதடினப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதும் சூழல் ஏற்பட்டது.

2004-ஆம் ஆண்டு இந்திய அரசால் தமிழ் மொழி செம்மொழித் தகுதியுடைய மொழி என்ற அறிவிப்பை வெளியிட்ட பின்னர் தமிழ் நூல்களின், குறிப்பாகச் செவ்வியல் நூல்களின் பதிப்பு, பாட வேறுபாடுகள், இவற்றை உள்ளடக்கிய செம் பதிப்பு என்னும் சொல்லாடல்கள் சற்று அதிகமாக நிகழ்த்தப்படுகின்றன. இவற்றை ஒருவகையில் தமிழில் ஏற்பட்டுள்ள புதிய ஆய்வுப் போக்காக நாம் மதிப்பிடலாம்.

செம்பதிப்பு என்ற சொல்லாடலை நிகழ்த்து வதற்கான வாய்ப்பைப் பாட வேறுபாடுகளே வழங்குகின்றன. தொன்மையான இலக்கிய, இலக்கண உருவாக்க மரபைக் கொண்ட மொழியில் தோற்றம் பெறுகின்ற எல்லா நூல்களிலும் பாட வேறு பாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாக அமைந்து விடுகிறது. நீண்ட நெடிய இலக்கிய, இலக்கண உருவாக்க மரபைக் கொண்ட மொழியில் ஒரு காலத்துப் புலமை மரபினரால் உருவாக்கப்படுகின்ற இலக்கண, இலக்கிய நூல்கள் பல்வேறு வடிவங் களில் (வாய்மொழி மரபு, ஓலைச்சுவடி, அச்சுப் பதிப்பு), பல்வேறு சூழல்களை எதிர்கொண்டு பயணித்து வருகின்ற நிலையைக் கொண்டிருக்கும். அந்தப் பயண இடைவெளியில் விடுபடல்கள், இடைச்செருகல்கள், வேறுபாடுகள், திருத்தங்கள் போன்றன மூலநூலோடு இரண்டறக் கலந்து விடுகின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றன. எது உண்மைப் பாடம், எது இடையில் சேர்ந்த பாடம் என்று நாம் எளிதில் கண்டு மதிப்பிடமுடியாத நிலையை அவை பெற்றுவிடுகின்றன. மூலநூலோடு கலந்துவிடுகின்ற அவ்வகை வேறுபாடுகள் பற்றிய விவாதக் குறிப்புகள் தமிழ் உரை மரபில் நிரம்பக் கிடைக்கப் பெறுகின்றன. சில உரையாசிரியர்கள் பாடவேறுபாடுகள் பற்றிய விவாதத்தை விரிவாக நிகழ்த்தியுள்ளதையும் உரை மரபில் காணமுடிகிறது. உரையாசிரியர்கள் பாட வேறுபாடுகள் பற்றி விவாதம் நிகழ்த்திய முறைகளுக்கிடையில், அவர்கள் உரைச் சான்றிற்காக மேற்கோளாக எடுத்தாண்டுள்ள பாடல்களில் காணப்படும் வேறுபாடுகள் தனித்து நோக்கத்தக்கனவாக உள்ளன. ஒரே பாடல் உரை யாசிரியர்கள்தோறும் வேறுபாடுகளுடன் மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ள தரவுகள் உரை மரபில் ஆங்காங்குக் கிடைக்கப் பெறுகின்றன. உதாரணத்திற்கு நாம் அனைவரும் அறிந்த பாடல் ஒன்றை இங்குச் சுட்டலாம்.

கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை யீன்றவென் மேனி

முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே

(உ.வே.சா.1903)

இது ஐங்குறுநூற்றில் தலைவி கூற்றாக இடம் பெற்றுள்ள ஒரு பாடலாகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரை கண்ட உரையாசிரியர் களுள் நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம் பூரணர் ஆகிய மூவரும் இந்தப் பாடலை மேற் கோளாக எடுத்தாண்டுள்ளனர். நச்சினார்க்கினியர் கற்பியல் ஆறாம் சூத்திரத்திற்கும், பேராசிரியர், இளம்பூரணர் இருவரும் உவமவியல் உள்ளுறை எவை என்பதற்கான 25ஆம் நூற்பா விளக்கத்திற்கும் இந்தப் பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

இங்கு நாம் வியக்கத்தகும் செய்தி என்ன வென்றால் மேற்கோளாகக் காட்டப்படும் இந்தப் பாடல் மூன்று உரையாசிரியரின் உரைமேற்கோள் களிலும் வெவ்வேறு பாடங்களுடன் வேறுபட்டு அமைந்திருப்பதாகும். இன்னும் இதனினும் வியக்கத் தகும் செய்தி என்னவென்றால் தொல்காப்பியப் பொருளதிகார அச்சுப் பதிப்புகள்தோறும் இந்த மேற்கோள் பாடல் புதிய புதிய பாடங்களுடன் வேறுபட்டுக் காணப்படுவதாகும். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சான்றுகளைக் காட்டலாம். பதிப் பாசிரியர்கள் வேறுபட்ட பாடங்களைக் கொண்ட தற்கான சான்றுகள் இன்று நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன. இன்றைய நிலையில் நமக்கு இது மிகப் பெரிய இழப்பாகும்.

1885இல் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையை முதன்முதல் பதிப்பித்து வெளியிட்ட சி.வை.தாமோதரம் பிள்ளை இந்தப் பாடலை இவ்வாறு காட்டியிருக்கிறார்:

கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்

சரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை யீன்றவெம் முயங்க

லதுவே தெய்யநின் மார்பு சிதைப் பதுவே

(கற்பு.6ஆம் சூத்திர மேற்கோள்)

இதே பாடல் 1948இல் சி.கணேசையர் பதிப் பித்து வெளியிட்ட பொருளதிகார நச்சினார்க் கினியர் உரைப் பதிப்பில் கீழ்வருமாறு இடம் பெற்றுள்ளது.

கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை யீன்றவெம் மேனி முயங்க

லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே

(மேலது)

இதே பாடல் பேராசிரியர் உவமவியல் 25ஆம் சூத்திர உரையில் மேலும் வேறுபட்டுக் காணப் படுகின்றது. 1885இல் வெளிவந்த சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பில் (1855இல் சி.வை.தா. பொருளதி கார உரை முழுவதையும் பேராசிரியர் உரை என்று அறியாமல் நச்சினார்க்கினியருடையதாகக் கருதி வெளியிட்டார். பின்னர் அது 1917இல் ரா.ராக வையங்காரால் தெளிவுபடுத்தப்பட்டது) கீழ் வருமாறு இடம்பெற்றுள்ளது.

கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வ னீன்றவெம் முயங்க

லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே

1943ஆம் ஆண்டில் வெளிவந்த ச.கணேசையரின் பொருளதிகாரப் பேராசிரியர் உரைப் பதிப்பில் இதே பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.

கரும்புநடு பாத்திகயிற் கலித்த தாமரை

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வ னீன்றவெம் முயங்க

லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே

இங்கு நச்சினார்க்கினியர், பேராசிரியர் என்னும் இரு உரையாசிரியர்கள் கொண்ட பாடம் எது? இவற்றுள் பதிப்பாசிரியர்கள் காட்டியுள்ள பாடத்திற்கான சான்றுகள் என்ன என்பதற்கான விவாதத்தை நிகழ்த்துவதற்குப் பாட வேறுபாட்டு ஆய்வு அவசியமாகிறது. இந்தப் பாடல் இதனினும் இளம்பூரணர் பொருளதிகாரக் கற்பியல் 6ஆம் சூத்திர உரையில் வேறுபாடுகளுடன் இடம் பெற்றுள்ளது; அதனினும் இந்தப் பாடல் இளம் பூரணர் உரை அச்சுப் பதிப்புகள் தோறும் வேறு பாடுகளுடன் காட்டப்பட்டுள்ளன.

1933-ல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்ட பொருளதிகார இளம் பூரணர் உரைப் பதிப்பில் (இதற்கு முன்னரே அகத் திணையியல், புறத்திணையியல் இரண்டினையும் 1928இல் வெளியிட்டிருந்தார்) மேற்கண்ட ஐங்குறு நூற்றுப் பாடல் இவ்வாறு காணப்படுகிறது.

கரும்புநடு பாத்திக் கதிர்த்த வாம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வ னீன்றவெம் மேனி முயங்க

லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே

இவற்றுள் களையும் என்பதற்குத் தளையும் என்றொரு பாடமிருந்ததாகவும் வ.உ.சி. அடிக் குறிப்பில் காட்டியிருக்கிறார் (1933, ப.239) இதே பாடல் 1956இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள பொருளதிகார இளம்பூரணர் உரைப் பதிப்பில் முற்றிலும் வேறுபட்டுக் காணப் படுகிறது.

கரும்புநடு பாத்திக் கதிர்த்த ஆம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை யீன்றவெம் மேனி

முயங்கல்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே

(1956, ப.272)

இவற்றுள் சீர் அமைப்பு வேறு வடிவில் காட்டப்பட்டிருப்பதுடன் புதிய பாடவேறுபாடு களும் அமைந்திருந்தலைக் காணமுடியும். மேலே கண்ட மூன்று சான்றுகளின் வழி மூல நூலாசிரியர் கொண்ட பாடம் எது என்பதைக் கண்டறிவதைக் காட்டிலும் உரையாசிரியர்கள் கொண்ட பாடம் எது என்பதைக் கண்டு தெளிய வேண்டிய சிக்கல் எவ்வளவு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டி யுள்ளது. இவ்விடத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஐங்குறு நூற்றிற்கு உரை எழுதிய பழைய உரைகாரர் சில பாடல்களுக்கு மட்டும் உரை எழுதியுள்ள நிலையில் இந்தப் பாடலுக்கு உரை எழுதாமல் விட்டுச் சென்றுள்ளார். யார் யாருக்காகச் சொல்லப் பட்டது என்ற குறிப்பு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஐங்குறுநூற்றிற்கு உரை எழுதிய உரையாசிரியர் பார்வையில் இந்தப் பாடல் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை என்பதாகவே நாம் மதிப்பிட வேண்டி யுள்ளது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்களால் மட்டுமே இந்தப் பாடல் அதிக கவனத்திற்கு உட்பட்டுள்ளது. ஆக இலக்கண உரையாசிரியர் காலத்திற்குப் பின்னரே இந்தப் பாடல் புலமை மரபில் வெகுவாக மதிக்கப்பட்டு வந்துள்ளதாக நாம் புரிந்துகொள்ளலாம். இந்தச் செய்தி இன்னொரு வகையான புரிதலுக்கும் நம்மை இயல்பாக இட்டுச் செல்கிறது. தொல் காப்பியப் புரிதலுக்குச் சங்கப் பாடல்கள் அடிப் படைத் தரவாக இருந்துள்ளமையை இச்செய்தி வழியாக அறியமுடிகிறது.

இந்த ஒரு பாடலுக்கு மட்டும் ஐங்குறுநூற்றுச் சுவடிகளிலும் அச்சுப் பதிப்புக்களிலும் காணப் படும் பாட வேறுபாடுகளோ இன்னும் மிக அதிகம். இந்த ஒரு பாடலில் மட்டும் சுவடிகள் அச்சுப் பதிப்புகள் இரண்டிலும் சேர்த்துக் காணப்படும் பாட வேறுபாடுகள் இருபத்தைந்திற்கும் மேற் பட்டனவாகும் (செம்மொழி நிறுவனத்தில் ஐங்குறுநூற்று நூலின் செம்பதிப்புப் பணியில் ஈடுபட்டபோது இந்த வேறுபாடுகள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. 1903 இல் ஐங்குறுநூற்றைச் சுவடியிலிருந்து பெயர்த்தெழுதி அச்சுப் பதிப்பை உருவாக்கிய உ.வே.சாமிநாதையர் இப்பாடலின் அடிக்குறிப்பில் கீழ்வரும் பாடவேறு பாடுகளைக் குறித்துக் காட்டுகிறார்.

பாத்திக் கலித்த, ஈன்றதென் மேனி, பாத்திக் கலித்த, ஈன்றவெம் முயங்கல், கதித்தவாம்பல், அதுவேதெய்ய நின்மார்பு

1903இல் வெளியிடப்பட்ட பதிப்பில் ‘யீன்ற வென் மேனி எனப் பாடம் கொண்ட உ.வே.சா. 1920இல் யீன்றவெம் மேனி எனப் பாடம் கொண் டிருக்கிறார். முதல் பதிப்பில் காட்டிய பாடங் களோடு ஈன்றவென் முயங்கல் என்றவொரு புதிய பாடத்தையும் அடிக்குறிப்பில் காட்டியிருக்கிறார்.

பாத்தியிற், பாத்திக், பாத்தி; கலித்த, கதித்த, கதிர்த்த, வாம்பல், தாமரை (அடி- 1); களையும், தளையும் (அடி-2) புதல்வனை, புதல்வன், யீன்றவெம் மேனி, யீன்றவென் மேனி, யீன்ற தென்மேனி, யீன்றவெம் முயங்கல், யீன்ற வென்முயங்கல், முயங்கன்மோ, முயங்கல், முயங்கலதுவே, முயங்கன்மே (அடி - 3, 4)

ஐங்குறுநூற்றின் 65ஆம் பாடலுக்குரிய இப் பாடங்கள் சுவடிகளிலும் அச்சுப் பதிப்புக்களிலும் காணப்படுவனவாகும். ஐங்குறுநூற்றுப் பாடல் களுள் மிக அதிகமான பாட வேறுபாடுகளைக் கொண்டுள்ள பாடல் இந்த ஒரு பாடல் மட்டுமே யாகும். எப்படி இந்த ஒரு பாடலில் மட்டும் இவ்வளவு வேறுபாடுகள் தோன்றின என்பதையே தனித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. சங்க இலக்கியப் பாடல்களில் உரையாசிரியர் காலத்திலேயே மிகுதி யான பாடவேறுபாடுகள் தோன்றிவிட்டன என்பதற்கு இந்த ஒரு பாடல் நல்ல உதாரணமாகத் திகழ்கிறது. செம்பதிப்பிற்கான அவசியத்தையும் இவ்வேறு பாடுகள் வழி நம்மால் பெறமுடிகிறது.

தமிழ்ப் பாட வேறுபாட்டு ஆய்வை உரை மரபிலிருந்து தொடங்க வேண்டும் என்பதை அழுத்த மாக வலியுறுத்த ஏராளமான சான்றுகள் அவற்றுள் உள்ளன. பாடவேறுபாடுகள் பற்றிய விவாதக் குறிப்புகளை உரை மரபிலிருந்து ஏராளமாக மீட்டெடுக்க முடியும். பரிபாடலுக்குக் கிடைத் துள்ள பழைய உரைகளுள் ஒன்று பரிமேலழகர் உரை; இதற்கு அமைந்துள்ள உரைப்பாயிரம் பாட வேறுபாடுகள் பற்றியும், பாடத்தேர்வு பற்றியும் இவைகளை உள்ளடக்கிய செம்பதிப்பு உருவாக்கம் பற்றியும் வலியுறுத்துவதாக உள்ளது. பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரைப் பணியுடன் செம்பதிப்புப் பணியையும் மேற்கொண்டுள்ளார் என்பதற்கு அந்தப் பாயிரப் பாடல் துணையாக உள்ளது. அப்பாடல் கீழ்வருமாறு:

கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி

முணைவேன் முருக னெனவிவர் முதலிய

திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த

சங்க மென்னுந் துங்கமலி கடலு

ளரிதி னெழுந்த பரிபாட்ட டமுத

மரசுநிலை திரீஇய வளப்பருங் காலங்

கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற்

பாடிய சான்றவர் பீடுநன் குணர

மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற்

றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பு

மெழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்

பகுதியின் வந்த பாடகர் பிழைப்பு

மொருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடந்

திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற்

சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற

மதியின் றகைப்பு விதியுளி யகற்றி

யெல்லையில் சிறப்பிற் றொல்லோர் பாடிய

வணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்

சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டின

னீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்

பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே.

பண்டைக் காலத்தில் அரசர்களுடைய பிறழ்ச்சி யால் இந்நூல் படித்துப் பாராட்டுவோரற்றுக் கிடந்ததென்றும் அக்காலத்தில் பழைய நூல் களினிடையே தம் சொல்லை மடுத்து வேறு படுத்தும் இயல்புள்ள கந்தியா ரென்பவராலும் பொருள் தெரியாமல் எழுதியவர்களாலும் பாடகர் களாலும் இந்நூலில் நேர்ந்த பலவகைப்பட்ட பிழைகள் அறிஞர்களுடைய செவிகளை வெதும்பச் செய்தலைத் தெரிந்து அப்பிழைகளை நீக்கி ஆராய்ந்து உண்மையான பாடத்தையறிந்து சிற்றறிவினர்க்கும் தெற்றெனப் புலப்படும்படி இவர் இவ்வுரையை இயற்றின ரென்று (உ.வே.சா.பரிபாடல் பதிப்புரை, 1903, ப.20, 21) இப்பாயிரம் கூறுகிறது.

பாடவேறுபாடுகள் நேர்ந்த சூழல், பாடவேறு பாடுகளைத் தொகுத்தல், தொகுத்த வேறுபாடு களைக் கொண்டு பாடத் தேர்வு செய்தல், தெரிவு செய்யப்பட்ட பாடங்களைக் கொண்டு உரை எழுதல் என்னும் செம்பதிப்பிற்கான கூறுகள் இப்பாயிரத்தின்வழிக் கிடைக்கப் பெறுகிறது. பரிமேலழகர் பரிபாடலுக்குச் செம்பதிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார் என்பதை இப்பாயிரம் உணர்த்துகிறது.

பரிமேலழகர் காலத்தை மு.அருணாசலம் பிள்ளை 13ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடு கிறார். பரிபாடல் பாடல்கள் தோன்றின காலம் உரையாசிரியர்கள் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். 13ஆம் நூற்றாண்டிலேயே பிழைகள் பல புகுந்து விட்டதாகப் பரிமேலழகர் கருதியிருக்கிறார் என்றால் இன்றைக்குக் கிடைத்திருக்கும் பரிபாடல் பாடல்களை எவ்வகையில் மதிப்பிடுவது, அணுகுவது என்ற பெரும் சிந்தனை நம்முள் எழுகிறது.

பரிபாடல் 70 பாடல்களைக் கொண்ட நூலென்று ஒரு வெண்பா குறிப்பிடுகின்றது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாடலோ இருபத்திரண்டுதான் (உ.வே.சா. 1918, ப.4). இந்த இருபத்திரண்டு பாடல்களும் ஒரே சுவடியில் இருந்து பெயர்த்து எழுதிப் பதிப்பிக்கப்படவில்லை. பழைய உரைகளில் காட்டப்பட்ட மேற்கோள்களி லிருந்தும், புறத்திரட்டிலிருந்தும் தேடிக்கண்டு தொகுத்துதான் பரிபாடலை உ.வே.சா. அச்சிட்டு உள்ளார் என்பதை அந்நூலின் பதிப்புரை வழி அறிய முடிகிறது. உரைகளில் மேற்கோளாக ஆளப் பட்ட பாடல்களின் நிலை உரையாசிரியர்கள்தோறும் பதிப்பாசிரியர்கள்தோறும் வேறுபட்டிருந்ததை மேலே கண்டோம். அப்படியென்றால் உரைமேற் கோள்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பரிபாட்டின் பாடல்களை இன்றைய நிலையில் எவ்வகையில் மதிப்பிடுவது என்று நாம் ஆழமாகச் சிந்தித்தாக வேண்டும். இந்த முரண்பாடுகள் செம்பதிப்பிற்குரிய முக்கியத்துவத்தை ஆழமாகச் சிந்திக்க வழிவகுக் கிறது. உரை மரபில் இவ்வளவென்றால் அச்சுப் பதிப்பில் காணப்படும் வேறுபாடுகள் இன்னும் மிக மிக அதிகம். இவை பற்றிய குறிப்புகள் அச்சுப் பதிப்புகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

1812இல் திருக்குறள், நாலடியார் இரண்டையும் இணைத்து முதன்முதலாக அச்சில் வெளியிட்ட தஞ்சை ஞானப்பிரகாசன் குறித்திருக்கும் செய்திகள் திருக்குறளில் மட்டுமல்ல பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் ஏற்பட்ட நிலையைத் தெளிவாக உணர்த்துகின்றன. அப்பகுதி இவ்வாறு காணப் படுகிறது:

கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையி னியற்றிய - இலக்கணவிலக்கியங்களாகிய - அரிய நூல்களெல்லாம் - இந்நாட்டில் - அச்சிற்பதிக்கும் பயிற்சியின்றிக் கையினா லெழுதிக் கொண்டு வருவதில் - எழுத்துக்கள் குறைந்தும் மிகுந்தும் - மாறியுஞ் சொற் கடிரிந்தும் பொருள் வேறுபட்டும் பாடத் துக்குப் பாடம் - ஒவ்வாது பிழைகள் மிகுதி யுமுண்டாகின்றவால் - அவ்வாறு பிழை களின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி - அச்சிற்பதித்தலை வழங்குவிப்பதற் குத்தேசித்து - நூலாசிரியர்களுள் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரருளிச் செய்த - அறம் பொருளின்ப மென்னும் - முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூல பாடமும் - முனிவர்க ளருளிச்செய்த நீதிநூலாகிய நாலடி மூலபாடமும் - இப்பொதச்சிற் பதிக்கப் பட்டன.

எத்தனை வகையான பிழைகள் கொண்ட தாகத் திருக்குறள் சுவடிகள் காணப்பட்டிருப்பின் இப்படியான கருத்துக்களைப் பதிப்பாசிரியரால் பதிவு செய்திருக்கமுடியும். இவற்றோடு அவர் நின்றுவிடவில்லை அப்பதிப்பை உருவாக்க அவர் மேற்கொண்ட சில குழு முயற்சிகள் குறித்தும் கீழ்வருமாறு பதிவு செய்து சென்றிருக்கிறார்.

இவை அச்சிற்பதிக்குமுன் தென்னாட்டில் பரம்பரை - ஆதினங்களிலும் வித்துவ செனங் களிடத் திலுமுள்ள சுத்தபாடங்கள் பல வற்றிற்குமிணங்கப் பிழையற - இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர் களாலா ராய்ந்து சுத்தபாடமாக்கப் பட்டன.

இன்றைய செம்பதிப்பு ஆக்கத்திற்கு அவசிய மான கருத்தாக இவற்றை நாம் கொள்ளலாம். இவற்றோடு அவர் கொண்டிருக்கும் பாடங்கள் குறித்து ஐயம் ஏற்படின் கண்டு தெளியவேண்டிய வழிமுறை குறித்தும் இவ்வாறு குறிப்பிட்டிருக் கிறார்.

இஃதுண்மைபெற - திருப்பாசூர் முத்துச் சாமிப்பிள்ளை திருநெல்வேலிச் சீமை அதிகாரி - ம.ராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டி லிருந்தழைப்பித்த சுத்தபாடங் களுடனெழுதிவந்த வரலாறு.

இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனா ரருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் திருவள்ளுவ மாலையும் - ஆக - மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் - உரைபாடங்களதற்குக் கருவியாக வேண்டும் - இலக்கண விலக்கியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப்பாடந் தீர்மானஞ்செய்து - ஓரெழுத்து ஓர் சொல் நூதனமாகக் கூட்டாமற் குறையாம லனேக மூலபாடங்க ளுரைபாடங் களுக் கிணங்கினதாகத் தீர்மானம் பண்ணிய சுத்தப் பாடம் பார்த்தெழுதிச் சரவைபார்த்த பாடமாகை யாலும் - அந்தப்படி தீர்மானம் பண்ணியெழுதின பாடமென்பதும் - இ(அ) வடங்களிலிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்து செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்கறோன்றப்படும் - ஆகை யாலும் பாடங்களிலெள்ளளவேனும் சந்தேகப் பட வேண்டுவதின்று.

1812இல் வெளிவந்த திருக்குறள் முதல் அச்சுப் பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் செய்திகள் செம்பதிப்பின் தேவையை அழுத்தமாக வலியுறுத்தி நிற்கின்றன. பாடவேறுபாடுகள் ஏற்படும் சூழல்கள், பதிப்பாசிரியன் செய்ய வேண்டியன, பதிப்பாசிரி யனுக்குத் தேவையான இலக்கிய, இலக்கணப் புலமை, பாடம் குறித்து அறிஞர் பெருமக்களோடு விவாதம் செய்தல், சுவடி, அச்சுப் பதிப்புகளோடு ஒப்பீடு செய்து பாட நிர்ணயம் செய்தல், பாடம் கொண்டதற்குரிய ஆதாரம் போன்ற செம்பதிப்புப் பணிக்குரிய பல கூறுகள் மேற்குறித்தவற்றுள் பொதிந்து காணப்படுகின்றன. இவையெல்லா வற்றினும் ஒரு பதிப்பாசிரியரின் கடமை எதுவாக, என்னவாக, எப்படியாக அமைய வேண்டும் என் பதும் அவற்றுள் உணர்த்தப்பட்டுள்ளன. பழம் பெரும்நூலொன்றைப் பதிப்பிக்க முயற்சி மேற் கொள்ளும் ஒருவர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவலும் அவற்றுள் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழ் நூல்களின் நிலை சுவடிகளிலும் அச்சுப் பதிப்புகளிலும் எப்படியிருந்தன என்பதற்கு உ.வே.சா. குறிப்பிடும் கீழ்வரும் ஒரு செய்தி இன்னும் சுவாரசியமானதாக உள்ளது.

அந்தக் காலத்தில் காலேஜ் வகுப்புகளுக்குத் தமிழ்ப்பாடம் வைக்கும் முறை மிக விசித்திர மானது. பேர் மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள். ஏட்டுச் சுவடியைத் தேடியெடுத்து உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப் பார்கள். அதை வைத்துக்கொண்டு தெரிந்தோ, தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் தமிழாசிரியர்கள் பாடம் சொல்லுவார்கள். சிலப்பதிகாரம் பழைய நூலென்பது மாத்திரம் அக்காலத்தில் தெரிந்திருந்தது. நூலைத் தெரிந்துகொள்வதைவிட நூலின் சிறப்பைத் தெரிந்துகொள்வது சுலபம். ஆதலின் அதன் சிறப்பைத் தெரிந்தவர்கள் அதிற் சில பகுதி களைப் பாடம் வைக்கத் தொடங்கினர். தியாகராச செட்டியார் காலேஜில் இருந்த காலத்தில் சிலப்பதிகாரத்திலுள்ள இந்திர விழவூரெடுத்த காதை பாடமாக வந்தது. ஏட்டுச் சுவடியை வைத்துக்கொண்டு அதை அவர் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்க வில்லை. பிள்ளையவர்களிடம் சென்று இரு வரும் சேர்ந்து பார்த்தார்கள். புஸ்தகத்தில் பல காலமாக ஏறியிருந்த பிழைகளுக்கு நடுவே உண்மையான பாடத்தை அறிவதே பிரும்மப் பிரயத்தனமாக இருந்தது. செட்டியாருக்குப் புஸ்தகத்தின் மேல் கோபம் மூண்டது. “என்ன புஸ்தகம் இது? இந்திர இழவூரெடுத்த காதையா?” என்று கூறி, இந்தச் சனியனை நான் பாடம் சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்புவேறு அசௌக்கியமாக இருக்கிறது. நான் ஆறு மாசம் லீவு வாங்கிக் கொள்கிறேன் என்று தீர்மானித்துக் கொண்டார் (என்சரித்திரம், ப. 519).

சென்னைப் பல்கலைக்கழகம் 1863ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் புகார் காண்டத்திலுள்ள சில பாடல்களைத் (கானல் வரி வரை) தேர்வுக்குரிய பாடமாக அறிவித்துள்ளது. இதன் தேவைகருதிப் புகார் காண்டத்தை மட்டும் சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டுவர சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அம்முயற்சியின் தொடர்ச்சியாகப் புகார்காண்டத்தில் கானல்வரி வரையிலான பாடல்களை மட்டும் 1872ஆம் ஆண்டு அன்றைக்குச் சென்னை பிரிஸிடென்சி கல்லூரித் தமிழ்ப் பண்டிதராக இருந்த தி.ஈ. ஸ்ரீநிவாஸராகவாசாரியார் அச்சுருவாக்கம் செய் துள்ளார். நான்கு ஆண்டுகள் கழித்து 1876இல் கானல் வரி உள்ளிட்ட புகார் காண்டம் முழுமை யையும் ஸ்ரீநிவாஸராகவாசாரியார் மீண்டும் பதிப்பித்துள்ளார். இதில் இரண்டு பக்க அளவிலான முன்னுரையையும் எழுதி அமைந்துள்ளார். முதல் பதிப்பு முன்னுரையில் சிலப்பதிகாரத்தை இயற்றி யவர் சேரமான் என்று கூறியிருப்பார். இரண்டாம் பதிப்பு முன்னுரையிலும் இவ்வாறே கூறியிருக் கிறார். ஆனால், முதல் பதிப்பு முன்னுரையில் அடியார்க்கு நல்லாரை நச்சினார்க்கினியன் என்று கூறியவர் இந்த முன்னுரையில் தனது கருத்தை மாற்றிக்கொண்டு இருவரும் வேறானவர்கள் என்பதைப் பதிவுசெய்திருக்கிறார்.

இவரின் தொடர்ச்சியாக 1880ஆம் ஆண்டு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் இருந்த தி.க. சுப்பராய செட்டியார் புகார்காண்டத்தை மட்டும் அச்சிட்டு வெளியிட்டு உள்ளார். அடியார்க்கு நல்லார் உரையின் துணை கொண்டு தாம் எழுதிய உரையோடும், உரை யில்லாத கானல்வரிக்கு மட்டும் தாமே புதிய உரையெழுதியும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். இந்தப் பதிப்புகள் பாடத்திட்டம் நோக்கம் கருதி வெளியிடப்பட்டனவாகும்.

கல்வி நிறுவனங்களில் பாடமாக இடம்பெற்ற உடன் உருவாக்கப்படும் அச்சுப் பதிப்புகளைக் கண்டுதான் உ.வே.சா. மேற்கண்ட கருத்தைப் பதிவுசெய்திருக்க வேண்டும். அவ்வாறான பதிப்பு களுள் ஒன்றைக் குறித்து மட்டும் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

இப்படித் தியாகராச செட்டியாரே சிரமப் பட்ட போது மற்றப் பண்டிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எப்போது பாடமாக வந்துவிட்டதோ உடன் புஸ்தகப் பதிப்பும் வந்துவிடும். சிலப்பதிகாரத்தின் முற்பகுதியை ஸ்ரீநிவாசராகவாசாரியாரும் சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் பத்திப்பித்திருந்தனர் (என் சரித்திரம், ப. 519, 520).

இவ்வகையான சிக்கலை எதிர்கொண்ட உ.வே.சா. இவற்றிற்கு மாற்றுவகையில் பழந்தமிழ் நூல்களுக்குப் பதிப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்திருக்கக்கூடும். இதனால்தான் பல பழந்தமிழ் நூல்களுக்குச் சிறந்த, நல்ல பதிப்புகளை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது.

உ.வே.சா. இப்படியொரு கருத்தைக் கூறிச் சென்றிருக்கும் நிலையில் இவர் பதிப்பித்து வெளி யிட்ட சிலப்பதிகார அச்சுப் பதிப்பிற்கும், சுப்பராய செட்டியார் பதிப்பித்த அச்சுப் பதிப்பிற்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளன. குறிப்பாகச் சில மேற் கோள் பாடல்கள் இரு பதிப்பிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன; உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டலாம். அரங்கேற்றுக்காதை 24ஆம் பாடலடியின் உரைச்சான்றிற்குக் கீழ்க்காணும் பாடல் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அப் பாடல் இருவர் பதிப்பிலும் கீழ்வருமாறு இடம் பெற்றுள்ளது.

வரியெனப் படுவது வகுக்குங் காலைப்

பிறந்த நலனுஞ் சிறந்த தொழிலும்

அறியக் கூறி யாற்றுழி வழங்கல் (தி.க.சு. 1880, ப.76)

வரியெனப் படுவது வகுக்குங் காலைப்

பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலு

மறியக் கூறி யாற்றுழி வழங்கல்           (உ.வே.சா. 1920, ப.99)

தி.க.சுப்பராய செட்டியாரும், உ.வே.சாமி நாதையாரும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்கள். புலமையுலகம் போற்றிய புலமையாளனின் மாணவர்கள் பதிப்பித்த சிலப்பதி கார அச்சுப் பதிப்புகளே இப்படியென்றால் பிற வற்றை நாம் எப்படி மதிப்பிடுவது என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படியாக வரலாறு நெடுக பாடவேறுபாடும் பாடவேறுபாடுகள் குறித்த விவாதங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

முடிவாகச் சில கருத்துக்கள்

இதுவரை கண்ட பாடவேறுபாட்டுத் தரவுகள் அனைத்தும் செவ்வியல் தகுதியுடையன என்று வரையறுக்கப்பட்டுள்ள நூல்களிலிருந்து திரட்டப் பட்டவையாகும். இந்தத் தரவுகள் செவ்வியல் நூல்களுக்குச் செம்பதிப்பு உருவாக்கம் குறித்த முக்கியத்துவத்தை ஆழமாக வலியுறுத்துகின்றன. செவ்வியல் நூல்கள் அனைத்திற்கும் செம்பதிப்பான ஆராய்ச்சிப் பதிப்பு, மூலப்பாடத் திறனாய்வு முறையில் உருவாக்க வேண்டிய தேவையை மேற் குறித்த தரவுகள்வழிப் பெறமுடிகின்றன.

தமிழ்க் கல்வி முறைக்குப் பயன்பட்ட நூல்கள் மட்டுமே அச்சுருவாக்கமும் மறுபதிப்புருவாக்கமும் பெற்றன, பெற்றும் வருகின்றன. இவ்வகைப் பதிப்புகள் யாருடைய பிரதியைக் கொண்டு அச்சிடப்பட்டன என்பதைக்கூட பதிவுசெய்யும் மனநிலையைக் கொண்டிராத பதிப்பாசிரியர் களால் உருவாக்கப்பட்டவையாகும். இவர்களிடம் பாடவேறுபாடுகள் குறித்து ஒன்றையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இவற்றைக் கடந்து செயல்பட்ட பதிப்பாசிரியர்கள் சிலர் இருந்தனர். அவர்களின் முயற்சி தனிமனித முயற்சியாகும். தனிமனித முயற்சியால் உருவாக்கப்பட்ட சிலரின் பதிப்புகள் செம்மையாக அமைந்துள்ளன என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவற்றோடு நாம் நின்றுவிடக்கூடாது. பழந்தமிழ் நூல்களில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து அவற்றிற்குச் செம் பதிப்புகளை உருவாக்க வேண்டிய பயணதூரம் எவ்வளவு என்பதைத் தரவுகள்வழிக் கண்டோம்.

மகாபாரதத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் நிறுவனம் சார்ந்து உருவாக்கப்பட்ட செம்பதிப்புகள் புலமையுலகம் மதிக்கும் அளவினதாக உள்ளன. அந்த அளவில் நம் செவ்வியல் நூல்களுக்குப் பதிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். செவ்வியல் நூல்களுக்குரிய பழைய ஓலைச் சுவடிகள், தாள் சுவடிகள், அச்சுப் பதிப்புகள் போன்றவற்றைத் தேடித்தொகுத்துச் செம்பதிப்புப் பணியை மேற்கொண்டால் சிறப்புற அமையும்; இன்றைய தமிழாய்விற்கும் பெரிதும் பயன்படும். அந்த அரிய பணியைச் செம்மொழி நிறுவனம் செய்துவருகிறது. எதிர்காலத் தமிழாய்வு உலகம் அதைப் படித்துப் பயன்பெறும் என்று நான் நம்பு கிறேன்.

துணைநூல் பட்டியல்

1.            அருணாசலம், மு. 2005. (திருத்தப்பட்ட பதிப்பு) தமிழ் இலக்கிய வரலாறு (13ஆம் நூற்றாண்டு). சென்னை: தி பார்க்கர்.

2.            கணேசையர், சி. (ப.ஆ.) 1948. தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன் ஐந்தியல் களும் நச்சினார்க்கினியமும், சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்.

3.            கணேசையர், சி. (ப.ஆ.) 2007 (2ஆம் பதிப்பு). தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

4.            கழகப் புலவர் குழு (ப.ஆ.) 1956. தொல் காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை, சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.

5.            சாமிநாதையர் உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம்

6.            சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1918. எட்டுத் தொகையுள் ஐந்தாவதாகிய பரிபாடல் மூலமும் ஆசிரியர் பரிமேலழகரியற்றிய உரையும், சென்னை: கமர்ஷியல் அச்சுக்கூடம்.

7.            சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1920. (2ஆம் பதிப்பு) சிலப்பதிகார மூலமும் அரும் பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், சென்னை: கமர்ஷியல் அச்சுக்கூடம்.

8.            சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1903. எட்டுத் தொகையில் மூன்றாவதாகிய ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும், சென்னப்பட்டணம்: கணேச அச்சுக்கூடம்.

9.            சிதம்பரம் பிள்ளை, வ.உ. (ப.ஆ.). 1933. தொல் காப்பியம் இளம்பூரணம், பொருளதிகாரம் (களவியல், கற்பியல், பொருளியல்) சென்னை: வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ்.

10.          சுப்பராய செட்டியார், தி.க. (ப.ஆ.). 1880. சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், அடியார்க்கு நல்லார் உரை, சென்னை: மிமோரியல் அச்சுக் கூடம்.

11.          ஞானப்பிரகாசன் (ப.ஆ.). 1812. திருக்குறள் மூலபாடம், தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரால் அருளிச்செய்தது, சென்னைப் பட்டிணம்: மாசத்தினச்சரிதை அச்சுக்கூடம்.

12.          தாமோதரம்பிள்ளை, சி.வை. (ப.ஆ.). 1885. தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க் கினியார் உரை, சென்னை: ஸ்காட்டிங் பிரஸ்.

(குறிப்பு: 2013, மார்ச்சு 6,7ஆம் நாட்களில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற “சுவடிப் பதிப்புகளில் உரைவேறுபாடுகள்” என்னும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Pin It