முற்றிய பனையோலைகளைப் பதப்படுத்தி ஒழுங்குபடுத்தி, ஓட்டையிட்டுத் தொகுத்து, கம்பியை இடையே செலுத்தி, அதனொடு கயிற்றை இணைத்து மேலும் கீழும் பலகையிட்டு, கயிற்றால் இறுகப் பிணித்துக் கொண்டும் தேவைப்பட்டபோது கயிற்றை அவிழ்த்துத் தனித்தனியே பிரித்தும் பனையோலை களில் எழுத்தாணியால் பண்டைய தமிழகத்தின் புலங்களையும் நிலங்களையும் பொறித்து வைத்தனர் தமிழர்.

ஆவணங்களும் ஓலையிலேயே எழுதிப் பாது காக்கப்பட்டு வந்தன.  நம்பியாரூரரை அந்தணர் வேடத்தில் வந்து ஓலை காட்டி ஆட்கொள்ளச் சிவ பெருமான், தான் அவை முன் காட்ட வைத்திருந்த அடிமைச் சீட்டான ஆளோலையை ஆரூரர் வலியப் பற்றிக் கீறியிட்டார் எனவும் கிழித்துவிட்டார் எனவும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.  இதிலிருந்து ஒடியாமல் (பனை ஓலை ஒடியும் ஆனால் கிழியாது) கிழிக்கப்படத்தக்கதான வேறுவித ஓலையும் அக்காலத்தில் பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

‘இருள்மறை மிடற்றோன் கையில் ஓலைகண்டு

அவையோர் ஏவ

அருள்பெறு கரணத் தானும் ஆவணம் தொழுது வாங்கிச்

சுருள்பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்’

(பெரிய.தடுத்தாட் - 57)

என்ற பாடலை நோக்க அவ்வோலை தொன்மை யாய்ச் சுருட்டி மடிக்கப்பட்டதால், மடிப்பினைப் பிரித்தகாலையும் பழுதுபடாமல் தன்னிடத்திலுள்ள செய்தியைத் திரிபின்றி வாசிப்பதற்கு உரிய வாய்ப் பினதாக இருந்த செய்தியை அறிகிறோம்.  பனை ஓலையை யன்றி இத்தகைய ஓலைகள் சிலவும் அக் காலத்துச் செய்திகளைப் பொறிக்கப் பயன்படுத்தப் பட்ட செய்தி புலனாகிறது.

சீவகன் நூல்புடைத்தாற் போன்று இனிய வித்தகம் சேர் நுண்வரிகள் பல கொண்டு தன் உள்ளக் கருத்தினை ஓலை ஒன்றில் வரைந்து அதனையும் தன் மோதிரத்தையும் ஒரு தினைக்கதிரில் வைத்துக் கிளி ஒன்றன் வாயிலாகக் குணமாலையிடத்து அனுப்ப, அவள் அந்த ஓலையைத் தெளிவாக வாசித்து அதன்கண் இருந்த செய்திகளை உணர்ந்தாள் என்றும் சிந்தாமணி (1032, 1044) கூறுகிறது.  இந்த ஓலை எம்மரத்தின் தொடர்புடையதோ என்று வியக்க வேண்டியவராயுள்ளோம்.  இப்பொழுது வடநாடுகளில் எழுத்தினைப் பொறிக்கப் பயன் படுத்தும் சீதாளம் என்ற ஓலை போலவும், பூர்ச பத்திரம் என்ற மெல்லிய மரப்பட்டை போலவும் சில மெல்லிய ஓலைகளும் அக்காலத்தில் பயன் படுத்தப்பட்டன போலும்.

இவ்வாறே கலுழவேகன் எழுதிய ஓலை (843) காந்தருவதத்தை சீவகனுக்கு முத்திரையிட்டுக் கொடுத்த ஓலை (1872) விதையத்தார் கோமானுக்குக் கட்டியங்காரன் அனுப்பிய ஓலை (2144) என்பன சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.  அவை பனை ஓலையில் எழுத்துக்கள், பொறிக்கப்பட்ட திருமுகமா, அன்றேல் வேறோர் ஓலையில் எழுதுகோலினால் மையைத் தோய்த்து எழுதப்பட்ட திருமுகமா என்பது தெளிவாகவில்லை.

மாதவி கோவலனுக்குக் கோசிகமாணி வாயிலாக அனுப்பிய முத்திரையிடப்பட்ட ஓலை, பனை ஓலையா அன்றி வேறொன்றன் ஓலையா என்பது அறியக்கூடவில்லை (சிலம்பு.13:75 - 76) இலக்கியங் களில் கற்பனை கலந்து கூறப்படும் செய்திகள் பலவாக இருப்பினும் எழுதப்படும் கடிதங்களை ஓலை என்ற பெயராலேயே குறிப்பிடுதலின் எழுத்து களைப் பொறிப்பதற்கு ஓலைகளே பயன்படுத்தப் பட்டன என்பதும், நமக்குப் பெரும்பாலும் உதவும் ஓலை பனையோலையே என்பதும் பெறப்படும்.

கிராம சபைகளில் உறுப்பினர்களைத் தேர்ந் தெடுத்தற்கு அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதிக் குடத்திலிட்டுப் பின் அவற்றை எடுத்து முடிவு செய்யும் நிகழ்ச்சியாகிய குடவோலை வாயி லாகத் தேர்ந்தெடுத்தல் என்ற செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

‘கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார்

பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்’

(அகம்.77)

என்ற இச்செய்தி அகநானூற்றில் ஒரிடத்து உவம மாக எடுத்தாளப்பட்டுள்ளது.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இராமநாதபுரம் முதலிய பகுதிகளில் குளங்கள், மீன் குத்தகைக்கு விடப்பட்ட செய்தி போன்ற நிகழ்ச்சிகள் சீவித் தூய்மைப்படுத்தி முறையாகக் கோத்து வைக்காத பனை ஓலைகளில் பொறிக்கப்பட்டனவாக அத்தகைய பனையோலைகள் பலப்பல கட்டுக்களாகக் காணப்படுகின்றன.1

சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இருக்கு வேதம் பாடப் பட்டிருக்கிறது.  அதாவது கி.மு.12ஆம் நூற்றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடிகளுக்கு நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்குவேதம் குறிப்பிடுகிறது.  இதிலிருந்து ஆரியர் சிந்துவெளியில் புகுந்த காலத்தி லேயே தமிழர் ஓலைச்சுவடிகள் வைத்திருந்ததை அறிய முடிகிறது.2

இவ்வாறு ஓலைச்சுவடிகள் அழிந்தது போக எஞ்சியவைகளைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்னை, அரசு ஆவணக் காப்பகம் சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, சரசுவதி மகால், தஞ்சை ஆகிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  யுனெஸ்கோ நிறுவனம், அழிந்து வரும் பண்டைய தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.3

இதுவரை வெளிவராத சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை அகரவரிசையில் தொகுத்து அரும் பொருள் சொல்லகராதியான ‘என்சைக்ளோபீ-டியா’வை, சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி யுள்ளது.  சமற்கிருதத்தோடு சேர்த்து, புத்தர் காலத்திய பாலி மொழியிலும், ஜைனர் காலத்தில் பிராகிருத மொழியிலும் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணியை 1935லேயே துவங்கிய இப்பல்கலைக்கழகம்4 உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகளைக் கண்டுகொள்ளாதது ஏனோ?

பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று தேடிப் பிடித்து பதிப்பித்தவர் உ.வே.சா. அவர்கள்.5  ஒருமுறை, சேலம் இராமசாமி முதலியார் அவர்களிடம் உ.வே.சா. பேசிக் கொண்டிருந்த போது சீவகசிந்தாமணியைப் பற்றித் தெரியுமா? என்று இராமசாமி முதலியார் கேட்டபோது, அப்படி ஒரு இலக்கியம் இருப்பதைத் தெரிந்து கொண்ட உ.வே.சா. அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இவற்றுடன் பல இலக்கிய நூல்கள் அழியும் நிலையில் இருப்பதைக் கண்டு அவற்றைத் தேடிச் சேகரித்து, தொகுத்து பிழை திருத்தி அச்சி லேற்றும் பணியை மேற்கொண்டார்.  இதுபோல 90க்கும் மேற்பட்ட நூல்களை அச்சிலேற்றி உள்ளார்.6  இந்திய நூலகங்களில் தேடிக் கிடைக்காமல் போன வற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் தாம் பெற்றதாக டாக்டர் உ.வே.சா. அவர்கள் கூறியுள்ளார்.  இன்னும் பாரிசிலுள்ள நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளைக் காண முடிகின்றது.

உலகிலுள்ள நூலகங்களிலேயே மிகவும் பெரியது லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள நூலகம்.  அதில் தமிழ் நூல்கள் குறிப்பாக பழைய ஓலைச்சுவடிகள் நிறைய சேகரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருக்கின்றன.7  இந்நூலகத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, புவியியல், தத்துவம், மருத் துவம், அறிவியல், மொழி பெயர்ப்பு நூற்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சென்ற நூற்றாண்டில் உ.வே.சா. தனிநாயகம் அடிகள், தெ.பொ.மீ. போன்றோர் உலகத்தின் மற்ற இடங்களில் உள்ள அரிய தமிழ் நூல்களைப் பற்றிய கவனமும் அவைகளைத் தாய்நாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையும் உள்ளவர்களாக இருந்தனர் என்பது அவர்களுடைய எழுத்துக்களில், நூல்களில் ஆங்காங்கே காணும் குறிப்புகளினால் நம்மால் அறிய முடிகின்றது.

உ.வே.சாமிநாதையர் தன் சிலப்பதிகாரப் பதிப்புக்குப் பாரீஸ் நூலகத்தில் உள்ள சிலப்பதி காரச் சுவடியைப் பயன்படுத்தினார்.  தெ.பொ.மீ. தன் அமெரிக்கச் சொற்பொழிவில் திபெத் நாட்டு பௌத்த மடாலயங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ச் சுவடிகள், அதன் ஒளிப்பட நகல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதனைத் தமிழகத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று 1958 வாக்கில் குறிப்பிடுகின்றார்.  இதுவரை அது நடந்தேறிவிடவில்லை.

தனிநாயகம் அடிகளார் இந்திய மொழிகளி லேயே முதன்முதலில் அச்சு வாகனம் ஏறிய தமிழ் நூலின் பிரதியை ரோமிலிருந்து ஒளிப்படம் எடுத்து அதனைக் குறித்தும் எழுதுகின்றார்.  அரை நூற்றாண்டுக் காலமாகியும் இவைகள் எவையும் ‘தன்மானத் தமிழர்களின்’ கவனத்திற்கு உள்ளான தாகத் தெரியவில்லை.8

அதே போல் உலகின் முக்கிய நூலகங்களில் ஒன்றான சரஸ்வதி மகால் நூலகத்தில் (தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது) 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள், தஞ்சை ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், பழமை யான நூல்கள் எனப் பல அபூர்வமான விஷயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக 1627இல் அச்சிடப்பட்ட பழமையான அச்சுப் புத்தகமும் இங்குப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளில் இதுவரை 50 மட்டும் தான் படித்து வெளிவந்துள்ளன.  அந்த 50 நூல்களுக்குள்தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப் பத்து, எட்டுத்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, சீவகசிந்தாமணி, பரிபாடல் போன்றவை உள்ளன.

இவற்றில் இருக்கும் இலக்கியங்களின் செழு மையும், தொன்மையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.  அப்படியிருக்கும்போது இங்குக் குவிந்து கிடக்கும் மூன்று லட்சம் ஓலைச்சுவடிகளையும் படித்தறிந்தால் எத்தனை தரமான படைப்புகள் வெளிவரும்.9

சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் ‘கீழ்த் திசை நூலகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் சேகரிக்கப் பட்ட 72 ஆயிரத்து 314 ஓலைச்சுவடிகள் இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.10

இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவை ஓரிலக்கத்திற்கும் மேல் உள்ளன.  இவற்றுள் 75 விழுக்காடு தமிழ் மொழியில் உள்ளன.  இவற்றை மைசூர் கல்வெட்டுத் துறையில் வைத்துள்ளனர்.  தமிழ் தொடர்பான அனைத்தையும் தமிழக அரசின் தொல் பொருளாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டால் தமிழ் தொடர்பான பல்வேறு விவரங்களை அறிய முடியும்.2

இதைப் போலவே கொங்கு நாட்டின் தலை நகராக விளங்கிய தகடூர் என்ற தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்று நிகழ்வுகள் ஓலைச்சுவடிகளில் எழுதப் பட்டுள்ளன.  அரசர்களின் வரலாற்றுக் குறிப்புகள், இறை வழிபாடு தொடர்பான தகவல்கள், ஜோதிட ரகசியங்கள், மருத்துவ சிகிச்சை முறைகள் எனப் பல்வேறு விதமான முக்கிய தகவல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் கிடைத்துள்ளன.

இராமாயணம், வித்கிரமாதித்தன் கதை, அண்ணமார் கதை, சிவபுராணம், திருவிளையாடல் புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களை எடுத்துச் சொல்லும் மிகப் பழமையான காலத்தைச் சேர்ந்த ஓலைச்சுவடிகளும் இந்தப் பகுதியில் கிடைத் துள்ளன.  இதன் மூலம் தர்மபுரி பகுதியில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மொழிக் கலப்பு கொண்ட பகுதியான இங்கு தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி களும் கிடைத்துள்ளன.11  தருமபுரியில் சேகரிக்கப் பட்ட 284 ஓலைச்சுவடிகள் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலும், தருமபுரி அகழ் வைப்பகத்திலும் உள்ளன.12  தர்மபுரி அகழ்வைப் பகத்தில் 76 அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருகிறது.11

மேற்கண்ட, ‘பொக்கிஷம்’ போலப் பாதுகாக்கப் பட்டு வரும் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதைத் தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் செய்ய வேண்டும் என்பதே நம் எண்ணம்!

Pin It