சேலம் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்றவர் இலா.வின்சென்ட். முதல் காந்தியப் புதினம், காந்தாரியின் தராசு, அமைதிக்காக, மீண்டெழுதல், தமிழ் நிலமும் இனமும் என்னும் நூல்களின் ஆசிரியர்.  ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு தன்மைத்தவை.  ஆய்வாளர், கட்டுரையாளர், படைப்பாளர் என்னும் நிலைகளில் பயணித்தவரின் மற்ற பரிணாமங்களைக் காட்டும் அளவில் தந்த புது படைப்பு ‘வலிகளைக் கடத்தல்’.  ஆய்வுக் கட்டுரைகள் என்று அடையாளப் படுத்தியுள்ளார்.

முற்போக்கு இலக்கியவாதிகளில் முன்னணியில் இருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன்.  நாவல், சிறுகதை, நாடகம் என்னும் தளங்களில் இயங்கியவர்.  தொ.மு.சி. ரகுநாதனின் நாடகங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது முதல் விமரிசனம்.  ரகுநாதனின் நாடக உலகத்திற்குள் செல்வதற்கு முன் தமிழில் நாடகங்கள் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறியுள்ளார்.  நாடகங்கள் போக்கையும் தெரிவித்துள்ளார்.  மொழி சார்ந்த படைப்புகளில் கடினமானது நாடகம் என்கிறார்.  பஞ்சும் பசியும் அவர் நாவல் எனினும் நாடகமாக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.  அண்ணனும் தம்பியும், முதல் சிலை பேசிற்று வரை ஒவ்வொரு நாடகம் பற்றியும் அதன் கருத்தையும் கூறித் தன் கருத்தையும் வெளிப் படுத்தியுள்ளார்.  நாடகங்களின் கட்டுக்கோப்பு, உத்திகள், மொழி, பாத்திரப் படைப்பு ஆகியவற்றையும் ஆய்ந்தளித்துள்ளார்.  இவைகள் பாராட்டும்படி யிருப்பினும் கருத்தில் புதுமை இல்லை என்கிறார்.

தமிழ் நாடன் தமிழின் ஆகச் சிறந்த ஓர் ஆளுமை.  அவரின் படைப்புகளில் மிகவும் பேசப்பட்டது ‘சாரா’ நாவல்.  சர்வ தேசம் சார்ந்து படைக்கப் பட்டது.  ஸ்ரீநிவாசன் ஸ்ரீரங்கம் தென் கலை அய்யங்கார்.  சாரா ஒரு யூதப் பெண்.  ஒரு சர்வதேச தலித்.  இவர்களுக்கிடையிலான காதலை மையப் படுத்தி இருந்தாலும் உலக அளவிலான இனப் பிரச்சினையைப் பேசியதாகும்.  சாரா நாவலின் மீதான விமரிசனத்தை ‘மூன்றாவது சாரா’ ஆக்கி யுள்ளார்.  ஒரு சாரா மூதாதை.  இரண்டாம் சாரா நாவல் நாயகி.  மூன்றாம் சாரா நாயகியின் மகள்.  நாவலின் மையக் கருவைக் கூறியுள்ளார்.  தமிழ் நாடன் யூத ஆதரவாளரா?, சோவியத் எதிர்ப்பாளரா?, பார்ப்பனிய வாதியா?, பகுத்தறிவு வாதியா? என பல வினாக்கள் எழுந்தாலும் பல முறை வாசித்ததில் யூதர்களை ஒடுக்கும் ருஷ்யாவின் மனித உரிமை மீறல்களே முன்வைக்கப்பட்டுள்ளது என்று கருத் துரைத்துள்ளார்.  அன்பு செய்ய அறிவுறுத்தும் சாரா தமிழ் நாடனின் இறவாப் படைப்பு என்று முடித்துள்ளார்.

விமரிசனம் அணிந்துரையாக உள்ளது.  தமிழ் நாடனின் ஆய்வு நூல் ‘திருக்குறள் புதிர்கள்’, திருக்குறளைத் திருத்திய குறள் ஆக்கியுள்ளார் தமிழ் நாடன்.  வள்ளுவர் பாணியிலேயே ‘மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்கிறார்.  திருக்குறள் ஒரு வழி நூல் என்று துணிந்து கூறியதைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.  திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றிய பல முரண்பாடுகளைக் கண்டறிந்து தமிழ் நாடன் கூறியதை வியந்து போற்றியுள்ளார்.  ஆய்வாளரும் விமரிசகரும் திருக்குறளைத் திரும்பவும் திருத்தியும் வாசிக்கச் செய்துள்ளனர்.

கவிஞர் சிற்பி படைப்பு உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.  எதைப் பற்றியாவது, எவரைக் குறித்தாவது எழுதியபடியே இருப்பார்.  பாரதியின் சிறை நாள்களை வைத்து ஒரு தொகுப்பு எழுதினார்.  காந்தியின் வாழ்வில் நடந்த 25 நிகழ்வு களை வைத்து ‘மகாத்மா’ என்று ஒரு காவியம் படைத்துள்ளார்.  காவியத்தைப் போற்றி ஒரு மகா கவிதை என்றும் நாட்டுப் பண் என்றும் புகழாராம் சூட்டியுள்ளார் ஆய்வாளர்.  அமைதியை விரும்பிய கருத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திலகவதி பல நாவல்கள் மற்றும் ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார்.  அவரின் ‘கல் மரம்’ நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.  கல் மரத்தின் மீது விமரிசனக் கல்லை எறிந்துள்ளார் இலா.வின்சென்ட்.  மக்களைக் காக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர் திலகவதி என்கிறார்.  பச்சை மரம் நாளடைவில் கல்மரம் ஆவதைப் போலக் கட்டடத் தொழிலாளியும் உறுதியாகின்றான் என்று நாவல் விவரிப்பதைக் கூறியுள்ளார்.  இந் நாவல் ஏன் விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய ‘பாய் பரமானந்தன்’ என்னும் புதினத்தை முன்வைத்து இலா.வின்சென்ட் ‘பாய் பரமானந்தன் முதல் காந்திய புதினம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் மிக விரிவாகவே அலசியுள்ளார்.  பல்வேறு கோணங்களில் ஆய்ந்துள்ளார்.  இத்தொகுப்பில் ‘முதல் காந்தியத் தாக்கம் பெற்ற புதினம் தலைப்பில் பாய் பரமானந்தன் குறித்து எழுதியுள்ளார்.  அந்நூலின் சுருக்கமாகவே உள்ளது.

தமிழ் இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் எல்லைகளைக் கடந்து ஞானி என்னும் பெயருக்குப் பொருத்தமாக விளங்கக் கூடியவர் கோவை ஞானி, ஆழமானது, அழுத்தமானது அவரின் படைப்புலகம்.  ஞானியின் படைப்புகளை ஆய்வு செய்து தொகுக்கப் பட்டது.  ‘ஞானியின் படைப்புலகம்’.  இத்தொகுப்பை ஆய்ந்து தந்த கட்டுரை ‘ஞானி தரிசனம்’.  ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்கிறது என்று அறிந்து தெரிவித்துள்ளார்.  நிறைவாக இத்தொகுப்பின் மூலம் ‘ஞானி தரிசனம்’ கிடைக்கிறது என்கிறார்.  அது மானுடம் வெல்லும் என்பதைக் காட்டுகிறது.

ஓர் ஆய்வாளர், ஒரு கட்டுரையாளர், ஒரு சிறுகதையாளர் என்றாலும் அடிப்படையில் ஒரு கவிஞர் கு.கணேசன்.  இன்னும் இனிக்கிறது, முகவரி இல்லாத முகங்கள், உயிரின் ஓசை, மரபின் விழுதுகள், விழி வாசல் தேடி, தாலாட்டும் தென்றல், வார்ப்புகள் என மரபும் புதிதுமாய்ப் பல கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.  இவைகளிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட ‘கு.கணேசன் கவிதைகள்’ என்னும் தொகுப்பாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பிற்கு வழங்கப்பட்ட அணிந்துரை வலிகளைக் கடத்தலில் இணைக்கப்பட்டுள்ளது.  விமரிசிப்பதற்கும் அணிந்துரைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.  அணிந்துரைத்திருப்பினும் மெல்ல விமரிசனத்தையும் வைத்துள்ளார்.

கவிஞர் இன்குலாபின் ஒரு பனுவல் ‘குறிஞ்சிப் பாட்டு’.  சேலம் முகடு அமைப்பால் சேலத்தில் நிகழ்த்தப்பட்டது.  புலம்பெயர்வின் துயரம் ‘குறித்த தாகும்.  மூவேந்தர்கள் பாரியைக் கொன்றதை ஈழப் பிரச்சினையுடன் ஒப்பிடுதல் கூடாது என்கிறார்.  பாரி இறப்பு, அழிவு, மகளிர் புலம்பெயர்வு மட்டுமே பேசி மக்களைப் பேசாதது குறித்து வினா எழுப்பி உள்ளார்.

தோழர் சி.மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்’ மனக்குகை ஓவியங்கள்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகள், பூமி பாலகனின் ‘போராட்ட வாழ்க்கை’ நாவல், மதுர பாரதியின் முகவரி தொலைத்த தேசம் ‘கவிதைத் தொகுப்பு ஆகியவற்றின் மீதான விமரிசனங் களையும் தொகுப்பில் காண முடிகிறது.

மூத்த படைப்பாளிகளின் தொகுப்புகள் மீதான விமரிசனங்களுடன் புதுக்கவிஞர்களின் தொகுப்புகள் குறித்த விமரிசனங்களும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.  கவிஞர் தி. பரமேஸ்வரியின் ஓசை புதையும் வெளி தொகுப்பு விமரிசிக்கப்பட்டுள்ளது.  பரமேஸ்வரியின் கவிதைகள் வாசகனைச் சிக்க வைத்துவிடும் தன்மையானவை என்கிறார்.  உரிமைக்கும் உறவுக்கும் இடையில் தவிக்கும் வலியைக் கவிதைகளில் காண்கின்றன என்று கண்டறிந்து கூறியுள்ளார்.  கவிஞர் நிறை மதியின் ‘பேச நிறைய இருக்கிறது’ மீதான விமரிசனம் நிறையவே பேசியுள்ளது.  கவிஞரின் வாழ்வுக்குச் சாட்சியம் கூறுகின்றன என்கிறார்.  பொ.செந்தில ரசுவின் ‘வடு வேட்டை’யை வாசகனை வலி உணரச் செய்யும் அளவில் வெற்றி அடைந்திருக்கிறது என்கிறார்.  இம்மூன்றுமே கவிஞர்களின் இரண்டாம் தொகுப்பு என்பது ஒரு சிறப்பு.  ‘தொடக்கம் சரியானால் முடிவும் சுபமே’ என்னும் அ.சௌந்தர ராஜனின் கவிதைத் தொகுப்பும் தமிழமுது என்னும் பெரிய சாமியின் தொகுப்பும் இலா.வின்சென்டால் விமரிசிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் அரவாணிகள் புறக்கணிக்கப்படு கின்றனர்.  அவமதிக்கப்படுகின்றனர்.  அவர்களை மனித இனமாக மற்றவர்கள் ஏற்பதில்லை.  அரவாணியர்களும் மனிதர்களே என்று மெய்ப்பிக்கும் வகையில் மு.முனிஷ் ‘தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ குறித்த தகவல்களைத் திரட்டி ஒரு தொகுப்பைத் தந்துள்ளார்.  ‘அரவாணியக் கோட்பாட்டு உருவாக்கம்’ பெற்றுள்ளது என்கிறார் ஆய்வாளர்.  இத்தொகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

பாவலர் எழு ஞாயிறு வருடம் ஒருமுறை தன் பிறந்த நாளில் தவறாது ஒரு புத்தகத்தை வெளியிட்டு வருகிறார்.  சேலத்தைச் சேர்ந்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களிடம் ஒரு மதிப்புரையை, ஓர் அணிந்துரையை, ஒரு வாழ்த்துரையைப் பெற்று தொகுப்பில் இணைப்பது வழக்கம்.  ‘ஓர் எளியவனின் சில அருவினைகள்’ என்னும் தொகுப்பிற்கு, இலா.வின்சென்ட் எழுதிய வாழ்த்துரையே ‘ஒரு வரலாறு வாழ்ந்துகொண்டிருக்கிறது’ இதுவும் வலிகளைக் கடத்தலில் இடம்பெற்றுள்ளது.  பகுத்தறிவுப் பாதையில் திட்டமிட்டபடி வாழ்ந்து கொண்டிருக்கும் எழு ஞாயிறுவின் வரலாற்றைச் சுருக்கித் தந்துள்ளார்.  தன்மானம் மிக்க தமிழர் களுக்கானது எழு ஞாயிறுவின் வரலாறு குறிப்பிடத் தக்கது.

‘ஒரு பொன் வண்ணம்’ என்பது ஓவியர் பொன். ரகுநாதனுடனான இலா.வின்சென்ட் அவர்களின் நேர்காணல்.  ஆய்வுக்கு அப்பாற்பட்டது.  ஆய்விற்குட் பட்டது.  எனினும் பொன்.ரகுநாதன் என்னும் கலைஞனின் எண்ணங்களை அறிய முடிந்தது.  ஓவியக் கலைஞனைச் சிறப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது நேர்காணல்.

படைப்பு என்பதும் படைப்பாளியின் வாழ்வு என்பதும் வலிகளைக் கடந்ததே ஆகும்.  படைப்புகளை ஆய்விப்பதும் வலிகளைக் கடந்தே நிகழ்ந் தேறும்.  ‘வலிகளைக் கடத்தல்’ தொகுப்பு மூலம் படைப்பாளிகளின் வலியை உணரச் செய்துள்ளார்.  தன் வலியையும் தெரிவித்துள்ளார்.  வலிகளைக் கடத்தல் என்னும் கட்டுரைக்கு ஒவ்வாதது எனினும் இங்குப் பொருத்தமாகவும் கவித்துவமாகவும் உள்ளது.  ஒரு படைப்பை ஆய்வு செய்வதுடன் நில்லாமல் அதைத் தாண்டியும் படைப்புத் தொடர்பான மற்ற நூல்களை வாசித்து அதிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பது இலா.வின்சென்டின் தீவிர வாசிப்பிற்குச் சான்று.  படைப்புகள் குறித்துப் பேசியதுடன் படைப்பாளர் பற்றியும் பேசியுள்ளார்.  படைப்புகளைத் தேர்ந்தெடுத்து விமரிசித்துள்ளார். விமரிசனங்கள் மட்டும் தொகுத்திருந்தால் தொகுப்பு கவனம் பெற்றிருக்கும்.  படைப்பாளர்கள் ஆய்வாளருடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கட்டுரைக்கான மொழியைக் கையாளும் திறன் பெற்றவராகவும் ஆய்வாளர் விளங்குகிறார்.  தொடர்ந்து வலிகளைக் கடந்து வெற்றி பெற வேண்டும்.

Pin It