வாழ்க்கையின் மதிப்புதான் என்ன? இந்தக் கேள்வி எழாத வரைக்கும் கவலை இல்லை.  வாழ்க் கைக்கு அர்த்தமும் தேவை இல்லை.  எழுந்தவுடன் தேடலும் தெளிவை நோக்கிய பயணமும் தொடங்கி விடுகிறது.  கவிதை உள்ளிட்ட சில அப்படி ஓர் அர்த்தமுடைய தேடலை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது. இந்தப் பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியமும் அதைத்தான் செய்கிறது.  இந்தக் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பாண்டூ அவர்கள் ஒரு கந்தகப் பூ என்பதால் கவிதையில் அனல் அடிக்கிறது.  கந்தக மானாலும் பூ என்பதால் வாசமும் வீசுகிறது.  மனதிற்கு இரண்டும் இதமும் பதமும் செய்கிறது.  ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ என்று பாரதியின் கவிதைத் தொடர் உண்டு.  இக்கவிதை களுக்குள் இவ்விரண்டையும் (அனல், மணம்) காணமுடிகிறது.  மரபின் முயற்சியும் புதுமையின் புரட்சியும் கவிதையில் வெற்றியை விளைவித்திருக்கின்றன.

மீண்டும் அதே கேள்வி.  வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன? அர்த்தப்படுத்தப்படாத வரை...  அர்த்தம் இழக்கும் நிலையில்... அர்த்தம் ஏதும் புலப்படாத நிலையில்...  பூஜ்ஜியம் தானே.  தன் வாழ்வின் அர்த்தங்களைப் புரிவதும், பிறர் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாகச் செய்வதும் வாழ்க்கையை மதிப்புடையதாக்குகிறது.  எண்கள் முதல் எதனையும் பூஜ்ஜியத்திலிருந்து தான் தொடங்க வேண்டியுள்ளது.  தொடங்கப்படாத பூஜ்ஜியங்களும் உலகில் உள்ளன.

‘என்னைப் படி

நான் உனக்கொரு

ஏணிப்படி’

என்று புத்தகம் அழைக்கும் கவிதையில் இயல்பாய் அமைந்துகிடக்கும் இயைபின் நயம் உறுத்தாமல் வருடுவதை உணரலாம்.  மரபை வலிந்து கடினப் பிரயத்தனங்களுடன் தூக்கிப்பிடிக்காத தன்மையைக் கவிதைகள் நெடுகிலும் காணமுடிகிறது.

இக்கவிதைகளின் இன்னொரு முக்கிய அம்சம் அங்கதம்.  அதைப் ‘பகடி’ என்ற சொல்லாலும் சுட்டலாம்.  சீட்டாட்டத்தில் ‘கழுதை’ என்றொரு ஆட்டம் ஆண்டு.  அதை இப்படியும் ஓர் அர்த்தப் படுத்திப் பார்க்க முடியும் என்பது இக்கவிதை மூலமாகப் புதிய புரிதல்.

“ஒரே வர்ணங்கள்

ஒன்றாய்க்

கூடிக்கொள்ள...

வெவ்வேறு வர்ணங்கள்

வெட்டிக் கொள்வதற்கே

களமிறக்கப்படுகின்றன.

எல்லா வர்ணங்களையும்

ஒன்றாய்க் கூட்டிப்

பிடிக்கத் துடிப்பவர்களுக்கு

எப்போதும் கிடைக்கிறது

கழுதைப்பட்டம்”

சமூகத்தில் நிலவும் வர்ணப்பாகுபாட்டையும், சாதி ஒற்றுமையைச் செயலில் காட்டுவோர் பெறும் சமூக மதிப்பையும், சீட்டாட்டத்தின் விதிகளைக் கொண்டு சிலேடை அமைந்திருப்பது பெரிய விந்தை.  இந்த ஒரு கவிதை போதும் கவிஞரின் சமூகப் பார்வையையும் கவிதைப் பார்வையையும் ஒருங்கே புலப்படுத்திட.

மானைக் கொன்ற பழங்குடி ஒருவன் குற்ற வாளிக் கூண்டில் நிற்பதாகப் புனையப்பட்ட கற்பனை நயம் செறிந்த கவிதையின் நிறைவில் யதார்த்தம் புத்தியில் ஓங்கி அறைகிறது.  மானைக் கொன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பழங் குடிக்கும் நீதிமன்றத்திற்குமாக மொழிபெயர்ப் பாளர் (துபாஷி) நியமிக்கப்படுகிறார்.  ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால், குற்றம், அபராதம், ரூபாய் போன்ற சொற்கள் அந்தப் பழங்குடியின் மொழியில் இல்லை.  மொழியில் இல்லையென் றாலும் அவர்கள் வாழ்க்கையிலும் இல்லை என்று தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.  புரிய வைக்க இயலாமல் தவிக்கும் நீதி அவனுக்கு ரூ 50,000 அபராதம் வழங்கச் சொல்லி நாகரிகத்தைக் காக்கிறது.  குடும்பத்திற்காய்... உணவுக்காய்...  தோலாடைக்காய் வேட்டையாடிய பழங்குடிக்குத் தீர்ப்பு வழங்கியதைக் கூறும் ‘தராசு’க் கவிதை, சட்டத்தைக் கேள்விக் குள்ளாக்கிக் கேலிக்குள்ளாக்குகிறது.

ஒரே சட்டம் அனைவருக்கும் பொருந்துமா? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் வேறு வேறு சட்டம்தானே இன்றும் உள்ளது.  பழங்குடியினரை மான்கள் போல் வேட்டையாடிய ஐரோப்பிய சமூகத்திற்குச் சட்டம் வளைந்து கொடுத்துதானே வந்திருக்கிறது.

வெளிநாட்டில் பணம் ஈட்டும் முயற்சியில் தனிமையுற்றவளின் ஏக்கத்தைப் பொழியும் கவிதையில்,

“அணைக்க ஆளில்லாததை

அறியாமல் பெய்யும்

பனிமழை”

என்ற வரிகள் சங்க இலக்கிய முல்லைத்திணையின் மழைக்கால மாலையையும் பிரிவுற்ற தலைவனைத் தழுவ ஏங்கும் தலைவியின் ஏக்கத்தையும் நினைவு படுத்துகின்றன.

“மாதிரியின் மூகமுடியில்

தன் முகவரி இழந்தவனே...

நில்!

சூரியனை உள்வாங்கினும்

தன் சுயம் இழக்காத

நிலவைப் பார்”

என, போலச் செய்பவர்களைச் சாடும் கவிதையில் நிலவைக் கொண்டு பாடம் நடத்துகின்றார் கவிஞர் பாண்டூ.  ‘இரவில் வெளிச்சம் வழங்கும் நிலவு’ என்ற பழி மொழியை எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.  ஆனால் சூரியனின் வெப்பத்தை வழங்காது குளிரொளியை வழங்குவதை எப்படி இரவல் என்று உரைப்பது என்று புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது கவிதை.

“மரங்களை மொட்டையாக்கி

மழைக்கு வேண்டுதல் வைப்போம்”

என்ற கவிதை வரிகள் மனதில் சற்று நேரம் விளை யாடிக் களிப்பையும் கவலையையும் வழங்குகின்றன.  மனித முரண்களையும் இயற்கைக்குப் பகையாகிக் கொண்டே அதற்கு ஏங்கும் அம்மனித ஏக்கங் களையும் கவிஞர் கேலி செய்கிறார்.  வேண்டுதலின் ஒரு பகுதியாக மொட்டையடிக்கும் நிகழ்வை மரங்களை வெட்டியவர்கள் (மொட்டையடித்த வர்கள்) மழைக்கு வேண்டுவதாய்ச் சொல்லும் நயம் சூழல் குறித்த பார்வைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

கும்பகோணத்தில் தீயில் கருகிய சிறார்களின் அஞ்சலிக் கவிதை தீயின் தவறுகளை உரைப் பதுடன் தவறு செய்தவர்கள் தப்பித்து வருவதை.

“நீதி பிறழ் பாண்டியன் மாண்ட பின்னும்

நன் மதுரை நகரெரித்த வழக்கம் தானோ?

சீதையை சிறையெடுத்த ராவணன் விடுத்து

இலங்கை நகரெரித்த பழக்கமோ”

என்று இலக்கிய ஆதாரங்கள் திரட்டி உரைக்கும் சமூகப் பார்வை நுட்பம் சார்ந்தது.

“எப்போதும் இருள் போக்கிப் போவாயே

இப்போதேன் இருளாக்கிப் போனாய்?

சோறாக்க வந்தவன் நீ சாம்பலாக்கிப் போனாய்...”

என்று ஒப்பாரி போல் கலங்கும் வரிகள் சோகத்தைக் கண் முன்னும் கண்ணீரைக் கண் வெளியும் நிறுத்துகின்றன.

விளை நிலங்கள் விற்பனை நிலங்களாகிப் போன இன்றைய சூழலில் புரிபடாத ஒரு பெருங் கேள்வி உள்ளத்தில் எழுவது இயற்கை.  விளைய வைத்து அழகு பார்த்த விவசாயிகள் எங்கே போனார்கள்? ‘பணி மாற்றம்’ என்ற கவிதையில் பதில் வழங்குகின்றார் கவிஞர் பாண்டூ.

“விலை நிலமாகிப் போன

விளை நிலத்தை

ஏக்கப் பார்வை பார்த்தபடி

செக்யூரிட்டியாய் நிற்கும்

முன்னால் விவசாயி”

என்று அதிர்ச்சி தந்து கவிதையை முடிக்கின்றார்.  இப்படியும் நடப்பது உண்டு தானே.

‘சிதறல்கள்’ என்ற பெயரிடலோடு ஹைகூ போல் அமைந்துள்ள சிறிய வடிவக் கவிதைகளின் தெறிப்புகள் பெரு வெள்ளத்தின் அழுத்தத்தை உட்கொண்டுள்ளன.

“மழலைப் பேச்சு

ரசிக்க முடியவில்லை

சமஸ்கிருத உளறல்”

என்று முடிகிறது ஒரு சிதறல்.  ஏன் இந்த மழலை தமிழில் பேசக்கூடாது.  சமஸ்கிருதச் சாடலை இப்படியும் சொல்லமுடியும் என்பதில் உள்ள அங்கதம் வியப்பளிக்கிறது.  பொருள் பொதிந்ததாய்ப் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் மந்திர உச்சாடணங்களில் மட்டும் இன்றும் வாழ்கிறது.  இதைத்தான் கேலி செய்கிறது இக்கவிதை.

பூஜ்ஜியங்களை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் சமூகத்தை, அல்லது போய்விட்ட சமூகத்தை, அதன் மதிப்பை அதில் உள்ள ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற அக்கறை கொண்டு படைக்கப் பட்ட கவிதைகளின் தொகுப்பிற்கு இப்படிப் பெயர் சூட்டி மகிழ்ந்திருப்பது அழகு.  தனியொரு கவிதையின் தலைப்பு இது என்றாலும், தத்துவார்த்தப் புரிதலை உள்ளடக்கிய தொடர் என்றாலும் இப்படியும் பார்க்க வழி இருக்கின்றது.  அதனால் தான் ஒட்டு மொத்த தொகுதிக்கும் தலைப்பாய் வாய்த்திருக் கின்றது.  பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் மனித மதிப்பு களைத்தேடும் பயணம்.  கவிதையைப் பற்றி ஆயிரம் சொன்னாலும் அதைக்கடந்தும் கவிதை சொல்வது ஆயிரம் இருக்கும்.  அதற்கு அந்தக் கவிதை நூலைத் தான் படிக்க வேண்டும்.  உணரப்பட வேண்டிய மனித மதிப்புகள்...  படிக்கப்பட வேண்டிய கவிதை நூல்...

Pin It