நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் ஜுலை 2013, ஆகஸ்டு 2013 இதழ்களில் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ நூலை முன்வைத்துச் சில கருத்துகளை இசக்கி விவாதித் திருக்கிறார். இந்நூலின் இரண்டாம் பதிப்பினை அடையாளம் வெளியிட்டிருக்கிறது.

ஜுலை இதழில் லெவிஸ்ட்ராசின் கோட்பாடு பயனற்றது என்பதற்கு இசக்கி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மானிடவியல் கல்விப் புலத்தில் தொடக்க காலம் முதல் இன்று வரை எண்ணற்ற கோட்பாடுகள், அணுகுமுறைகள், கருத்தாக்கங்கள், எடு கோள்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மிகக் குறைந்த சமூகங்களை மட்டுமே ஆய்வு செய்ய நேர்ந்தது. மானிடவியல் காலனியத்தின் குழந்தை எனும் பால பாடத்தைக் கற்றவர்கள், அதன்பிறகு இப்புலத்தின் கருத்தியல் தளம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய இயலாத குறைபாட்டினை இசக்கி போன்றவர்கள் மூலம் காண நேரிடுகிறது.

காலனியத்தின் தேவைக்கு மானிடவியல் உதவியது என்பது உண்மைதான். ஆனால் காலனிய காலத்திற்குப் பிறகு மானிடவியலானது உலகம் தழுவி அந்தந்த நாட்டுக்குரிய அறிவுப் புலமாக மாற்றப்பட்டது. சீன தேசத்திற்குரிய மானிடவியலானது இன்றைக்குச் ‘சீன மானிடவியல்’ என்றழைக்கப்படுகிறது. ரஷ்ய நாட்டுக் குரிய மானிடவியல் ‘ரஷ்ய மானிடவியல்’ ஆகும். இவ்வாறு டச்சு மானிடவியல், நார்வீஜிய மானிடவியல், ஆப்பிரிக்க மானிடவியல், பிரெஞ்சு மானிடவியல், இந்திய மானிடவியல் என்றெல்லாம் அந்தந்த தேசத்திற் குரிய மானிடவியல் உருவாக்கப் பெற்றுப் பலகாலம் ஆகிவிட்டது. மேலைப் புலத்தாரே நம்மை ஆக்கிர மித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கருதுவது தவறாகும். ஒவ்வொரு தேசத்தின் மானிடவியலை இன்று அந்தந்த தேசத்தின் அறிஞர்களே வளர்த்தெடுக்கிறார்கள்.

இந்திய தேசத்தவரான சீனுவாசின் ‘சமஸ்கிருத வயமாதல்’ இந்தியர்களாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதை அறிய வேண்டும். மனித சமூகங்களை மேன்மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து புதிய தரவுகளைத் திரட்டும் போது பழைய கோட்பாடுகள் பலமிழக்கும் என்பதைப் புலமையாளர்கள் அறிவார்கள்.

இதுவரை உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் அவை உருவாக்கப்பட்ட காலத்திற்குப் பொருத்தப்பாடாக அமைந்தன. அடுத்தடுத்த காலகட்டங்களில் அவற்றின் போதாமை உணரப்பட்டதால் புதிய கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டன. தார்வினுக்குப் பிறகு ‘புதிய தார்வினியம்’ உருவானது. அதற்குப் பிறகும் புதிய கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதுவரையிலான மானிடவியல் கோட்பாட்டு உருவாக்கத்தைத் தமிழில் விவாதிக்க வேண்டும் எனும் இலக்குடையது மானிடவியல் கோட்பாடுகள். ஒவ்வொரு கோட்பாட்டின் இறுதியில் நூலாசிரியரே அக்கோட்பாடு மீதான விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளார்.

லெவிஸ்ட்ராஸ் அடிப்படையில் அமைப்பியம் சார்ந்தவர். தொல்காப்பியம் மொழியின் அமைப்பு பற்றியது. சசூர் அதனை வேறு வடிவத்தில் கொடுகிறார். லெவிஸ்ட்ராஸ் பண்பாட்டின் அமைப்பியத்தை ஆராய்கிறார். தொல்காப்பியம் வழி தமிழை அறிந்து கொள்ளமாட்டேன் என்றால் அதற்குத் தொல்காப்பியர் வருத்தப்படமாட்டார். அறிவதும் அறிவித்தலும் அவரவருடைய விருப்பமாகும். இசக்கியின் விமர்சனத்தி லிருந்து அவர் மார்க்சியத்தில் அடிப்படைவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இன்று சமூக அறிவியல்களில் மார்க்சியம் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது. மார்க்சிய சமூகவியல், மார்க்சிய மானிடவியல் போன்ற களங்கள் இந்தியா உள்ளிட்ட எண்ணற்ற நாட்டுக் கல்விப் புலங்களில் இணைக்கப் பட்டுள்ளன. அத்தகைய நிலைப்பாட்டில் தான் தமிழகப் பழங்குடிகள், தமிழகத்தில் நாடோடிகள், நரிக்குறவர் பற்றிய ஆய்வுகள் முதலானவற்றை பக்தவத்சலபாரதி அளித்துள்ளார்.

தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பிரக்ஞை பூர்வமான அவதானிப்புகளை முன்னெடுக்கும் வல்லமையைத் ‘தமிழர் மானிடவியல்’, ‘பாணர் இனவரைவியல்’, ‘பண்பாட்டு மானிடவியல்’ போன்ற பாரதியின் நூல்கள் கொண்டுள்ளன. மேலைப்புலத்தார் அனைவரையும் ஒரே தொகுப்பாக அடைக்கிவிட முடியாது. அறிவாராய்ச்சித் தளத்தில் ஐரோப்பிய மையவாதத்திலிருந்து விலகிப் பங்களித்தவர்களும் உண்டு. பிறமலைக் கள்ளரும், ஆஸ்திரேலிய முதுகுடிகளும் கொண்டுள்ள உறவுமுறை ஒன்று என்பதைப் பிரெஞ்சு தேசத்து மானிடவியலர் லூயி தூய்மோன் தான் முதன்முதலாகக் கூறியுள்ளார். இரு குடிகளிடமும் வளைதடி காணப்படுவது இன்னொரு ஒற்றுமையாக உள்ளது.

ஒப்பீட்டு இனவரைவியல் தளத்தில் தான் இத்தகைய முடிவுகளை எட்ட முடியும். இனவரைவியலை நிராகரித்து விட்டு மனித சமூகங்களில் சமூக மெய்ம்மைகளைத் (Social facts) தேட முடியாது. இனவரைவியல் என்பது சமூகங்களின் மெய்ம்மை பாற்பட்டது. புராதனச் சமூகம் பற்றிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கியுள்ள கருத்தினங்களை இசக்கி போன்றவர்கள் மறந்து விடக்கூடாது. மார்க்சியம் சமூக வகையினங்களை அடையாளப்படுத்து வதன் வாயிலாகவே தன் முன்னெடுப்பு களை விவாதிக்கிறது. மார்க்சியத்தில் சமூக வகையினங்கள் அதிகம் உள்ளன. புராதனச் சமூகம், இனக்குழுச் சமூகம் என்பவை விஞ்ஞானத்திற்குப் பொருந் தாது என்கிறார் இசக்கி. மார்க்சுக்கு ஏற்புடையது என்பதையாவது இசக்கி ஏற்கவேண்டுமல்லவா!

சாதி பற்றிய கோட்பாடுகளை இரண்டு இயல்களில் மானிடவியல் கோட்பாடுகள் அணுகுகிறது. நவீன கோட்பாடுகளைத் தவிர்த்துவிட்டு மரபுக் கோட்பாடுகளை மட்டும் தன் விருப்பம் போல் எடுத்தாளுவது விமர்சன மரபாகாது. சாதியம் பற்றி இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நூலாசிரியர் உருவாக்கி யவை அல்ல. கோட்பாட்டாளர்கள்; முன்வைத்துள்ள கோட்பாடுகளைத் தர்க்க ஒழுங்குடன் இந்நூல் விவாதிக் கிறது. விவரிப்பில் துண்டுகளாகவும் துணுக்குகளாகவும் பிரித்துக் கருத் துரைத்தல் என்பது நெறிமுறைப்பட்ட விமர்சனமாகாது. கோட்பாட்டாளர்கள் சொன்ன கருத்துகளை நூலாசிரியரின் கருத்துகள் எனும் தொனியில் முன் வைத்திருப்பது இசக்கியிடம் இருந்து எதிர்பாராத ஒன்று. மார்க்சியத்தைத் தாண்டி மானிடவியல் எதையும் சாதித்து விடவில்லை, சாதித்துவிட முடியாது என்ற இசக்கியின் கூற்றினை மார்க்சியப் புலமையாளர்கள் முடிவு செய்வார்கள்.

Pin It