3.12.2011 | காலை 10 மணி | மாநகராட்சி சமுதாயக் கூடம் | கோடம்பாக்கம் | சென்னை – 24

இந்தியாவின் புகழ்பெற்ற பதிப்பகமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் 1951-இல் துவங்கி இப்போது அறுபது ஆண்டுகளை நிறைவாகக் கண்டு, அதன் வைரவிழா 03-12-2011 சனிக்கிழமை அன்று சென்னை கோடம்பாக்கத்திலுள்ள மாநக ராட்சி சமுதாயக் கூடத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

காலை 10.30மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த் துடன் துவங்கிய இவ்விழாவின் காலை அமர்வுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்கு நரான தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் வர வேற்புரையாற்றினார்.

“தென்னிந்தியாவில் சிறப்புமிக்க நிறுவனமான என்சிபிஎச்சின் வைரவிழாவுக்கு வருகை புரிந்துள்ள சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பணியாளர்கள், தோழர், தோழியர், மாண்புமிகு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், முற்போக்குச் சிந்தனையில் வாசிப்பு இயக்கம் கண்ட மாமனிதர் தோழர் தா.பாண்டியன், இந்திய அரசியலில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக் கும் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் து.ராஜா, நல்ல வாசகரும், எழுத்தாளரும் புத்தகக் கண்காட்சிகளுக்கு உறுதுணையாக இருப்பவரு மான நல்லி குப்புசாமி செட்டி, நல்ல உரையாளர், தொழிலதிபர், நற்சிந்தனையாளருமான ஜெம் கிரானைட்ஸ் நிர்வாக இயக்குநர் ர.வீரமணி, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர்.பழநெடுமாறன், தலையங்கத்தின் மூலம் நற்பணியாற்றி வரும், எழுத்தாற்றல் மிக்க தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், அரசியலையும், இலக்கியத்தையும் மிக அழகாக ஒருங்கிணைத்துச் செல்லும் தாமரை இதழ் ஆசிரியர் தோழர். சி.மகேந்திரன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், நூல் வாசிப்புக்குத் தாய்முயற்சியாக விளங்கும் பப்பாசி அமைப்பின் தலைவர் ஆர்.எஸ். சண்முகம், நற் சிந்தனையாளர் முனைவர் மே.து.ரா. ஆகியோரை வணங்கி வரவேற்கிறேன். 1947-ஆம் ஆண்டு, சுதந் திரத்துக்குச் சற்று முன்பு மாற்றுச் சிந்தனைக்கான ஒரே பதிப்பகமாகத் தோற்றுவிக்கப்பட்ட பீப் பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் மரபில் தோன்றிய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் வைரவிழாவுக்கு வந்திருக்கிற உங்கள் அனை வரையும் வரவேற்பதில் மிகவும் மகிழ்கிறேன்” என்றார் த.ஸ்டாலின் குணசேகரன்.

முனைவர் சேதுபதி விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மேடையில் நடைபெற்ற 23 தலைவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, என்சிபிஎச் வெளியீடான ‘கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ நூலினை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட, டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டி பெற்றுக்கொண்டார். வைரவிழா மலரை மாநிலங்களவை உறுப்பினர் தோழர் து.ராஜா வெளியிட, ஜெம் கிரானைட்ஸ் நிர்வாக இயக்குநர் ர.வீரமணி பெற்றுக்கொண்டார்.

பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத் தின் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்து, சிறப்புரையாற்றிய மத்திய அமைச் சர் ஜி.கே.வாசன் “உலகத்தின் மாபெரும் சித்தாந்த மேதையான, பொருளியல் விஞ்ஞானியான கார்ல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்று நூலினை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கியதே, எனக்கு அளித்த பெரும் அங்கீகாரம், மரியாதை ஆகும். உலகுக்கு மிகுந்த பயன்தரும் இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். சென்ற வாரம்தான் ரஷ்யாவுக்குச் சென்று வந்தேன். பொருத்தமாக இன்று இப்படியொரு சித்தாந்த நூலை இங்கு வெளிடுகிறேன்.

இன்றைய இளைய சமுதாயம் மாமேதை கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை, சிந்தனையைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இந்த நூலை இரண்டாவது பதிப்பாக இங்கே வெளியிடு கிறது. இதைப் படிக்கிற யாரும் மனிதகுலத்துக்குச் சேவை செய்யவேண்டும் என்று உடனடியாக முடிவெடுத்துவிடுவர். இளைய சமுதாயத்தினர் சேவை செய்ய வேண்டும் என்று இதுபோன்ற விழாக்களில் சபதமேற்க வேண்டும். சித்தாந்தம் மட்டுமல்ல, செயல்பாடும் கார்ல்மார்க்ஸிடம் இருந்தது. இந்த நூல் அனைத்து நூலகங்களிலும் இடம்பெற வேண்டும். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும்” என்றார்.

என்சிபிஎச் தலைவர் தோழர் ஆர்.நல்ல கண்ணு உரையாற்றுகையில், “தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கத்தை, முற்போக்குச் சிந்தனையை, சாதி, சமய வேறுபாடு நீங்கிய ஜனநாயக விழிப் புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதலில் ஜன சக்தி தோற்றுவிக்கப்பட்டது. மூத்த தோழர்கள் ப.ஜீவானந்தம், கல்யாண சுந்தரம், பி.சீனிவாசராவ் ஆகியோர் சுதந்திரத்துக்காகப் போராடிய ஜன சக்தியுடன் இணைந்து சிறு பிரசுரங்கள் அச்சிட்டு வெளியிட்டனர். ‘சைமன் கமிஷன் வெளியேறு!’ இயக்கம், அன்னியத் துணிகள் ஆதிக்க எதிர்ப்பு எனப் பல போராட்டங்களில் பங்கேற்ற தோழர் பி.எஸ்.ராவை அடித்து, அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அவரைக் கூவம் நதியில் தூக்கியெறிந்து விட்டனர் ஆங்கிலேயர்கள். அப்படியும் மீண்டும் எழுந்து வந்து நம்மிடம் எழுச்சியைத் தோற்று வித்தவர் தோழர் பி.எஸ்.ராவ்.

1947-ல் விவசாய மேம்பாடு, தொழில் வளர்ச்சி, விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய செய்திகளெல்லாம் நவயுகப் பிரசுராலயம் சார்பில் வெளியிடப் பட்டன. பின்னர், உலகத் தொடர்புக்காக ஆங்கில மொழியில் எழுத வேண்டிய அவசியம் ஏற் பட்டது. அதன் விளைவாகத் தோன்றிய பி.பி.எச். இந்தியத் தத்துவப் பிரச்சினை, லோகாயதம், மதங்களின் வரலாறு பற்றி நூல்களை வெளியிட் டது. இப்படியாக என்சிபிஎச் பரிணமித்தது. அதற்கு தோழர்கள் பி.எஸ்.ராவ், மோகன் குமார மங்கலம், கல்யாணசுந்தரம், வ.சுப்பையா ஆகி யோர் ஆணிவேராக இருந்தனர். இவர்களின் உழைப்பும் முயற்சியும் இன்று வளர்ச்சி பெற் றுள்ளது. நாட்டு இறையாண்மை, விடுதலைப் போராட்ட வரலாறு, மத நல்லிணக்கம், ஜன நாயகம், அறிவியல் வளர்ச்சி ஆகியவை நூல் களாக எழுதப்பட்டன. இது ஒரு கூட்டு முயற்சி.

வரலாற்று ஆய்வு அடிப்படையில் மார்க்ஸிய அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. “மூலதனம்” இந்தியாவில் இதுவரை தமிழ்மொழி உட்பட 5 மொழிகளில் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதனைத் தமிழில் வெளி யிட்ட பெருமை என்சிபிஎச்க்கு உரியது தோழர்கள் சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் எழுதிய கட்டுரை கள், உரைகளை நூல்களாக வெளியிட்டுள்ளது. சங்க இலக்கியம் 14 நூல்கள், திருக்குறள் சார்ந்து பல ஆய்வு நூல்கள், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய வரலாற்று நூல்கள், தத்துவ நூல்கள், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூல்கள் ஆகியவற்றை வெளி யிட்டுள்ளோம். அண்மையில், கோவையில் சிற்பி பாலசுப்ரமணியத்தின் நூலை வெளியிட்டோம். தாய்மொழி தாய்ப்பாலுக்குச் சமம். அதனால், அறிவியல், மருத்துவம், வணிகம், சட்டம் ஆகிய துறைசார் நூல்களைத் தமிழில் வெளியிட்டு தமிழில் எதையும் நூலாகக் கொண்டுவர முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. அம்பேத்கர் எழுதிய நூல்கள் மற்ற மாநில மொழிகளைக் காட்டிலும் அதிகமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதிய 40 நூல்களுள் 37 நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளோம். இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இத்தனை நூல்கள் மொழி மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் எழுதிய பகுத்தறிவு, பௌத்த மதப் பெருமை பற்றிய கருத்துகள் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவக்கூடியவை. நவீனத்தில் பொன்னீலன் எழுதிய கரிசல், புதிய தரிசனம், மறுபக்கம் ஆகிய என்சிபிஎச் நூல் களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். நா.வா.வின் நாட்டுப் பாடல்கள் தொகுப்பு வெளியிட்டுள் ளோம். குறிப்பிட்ட நாட்டுப் பாடலைப் பாடியவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அதைக் கேட்டு எழுதியவர் யார் என்ற அனைத்து விவரங்களும் நூலில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் நாட்டுப் பாடல்கள் என்றால், அதற்கு என்சிபிஎச் வெளியிட்ட நூல்தான் தகுந்த ஆவணமாகும்.

நல்ல கருத்துகளைப் படைப்பாளிகளைப் படைக்கச் செய்ய வேண்டும், மக்களை வாசிக்க வைக்க வேண்டும் என்பதே என்சிபிஎச்சின் நோக்கம். அண்மையில் காலஞ்சென்ற தோழர்கள் ஆர்.பி.எஸ்., சி.எஸ்., ஆகியோர் ஆலோசனையுடன் நிறுவனத்தில் பணியாற்றும் 400 பணியாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர் குழுவினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இன்னும் பல ஆண்டுகள் இயக்கமாகச் செயல்பட, உங் களுடைய ஒத்துழைப்பு வேண்டும்” என்றார்.

முனைவர் இ.சுந்தரமூர்த்தி உரையாற்று கையில், “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அறிவைப் பரப்பும் இயக்கம்; புத்தக இயக்கம். சாதாரண மக்களுக்குக்கூட சங்க இலக்கியத்தைக் கொண்டு போய்ச் சேர்த்த என்சிபிஎச்-சின் பணி இமாலயப் பணி. 200 ஆண்டுகளாகப் பதிப்பக வரலாற்றில் 60 ஆண்டுகளில் இந்நிறுவனம் மிகப் பெரிய சாதனையைச் செய்திருக்கிறது” என்றார்.

டாக்டர் பத்மஸ்ரீ குப்புசாமி செட்டி, “அண்ணாசாலை என்சிபிஎச் ஷோரூமூக்குச் செல்லத் துவங்கியது முதலாக, அந்த நிறுவனத் துடனும் பெரியவர் இராதாகிருஷ்ணமூர்த்தியு டனும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிட்ட மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அவரது தகப்பனாரைப் போன்று கலையார்வம் கொண்டவர். அவர் இந்த கார்ல்மார்க்ஸ் நூலைப் படித்துவிட்டு வந்து, இவ்விழாவில் உரை யாற்றியது அவருக்கு இருக்கும் புத்தக வாசிப்பு ஆர்வத்தைக் காட்டுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் ராஜா அண்மையில் எங்கள் கடைக்கு வந்திருந்தார். அது பயனுள்ள விஷயங்களைப் பேசுவதற்கான வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது. இங்கு வரவேற்புரையாற்றிய ஸ்டாலின் குண சேகரன் அரசியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர். மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் எளிமைக்கு உதாரணம் ஆவார். ஜெம் கிரானைட்ஸ் நிர்வாக இயக்குநர் வீரமணி எழுத்து, பேச்சிலும் ஜெம். இங்கு வருகை புரிந்துள்ள தமிழறிஞர் க.ப.அற வாணன் அவர்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்கிறேன். இங்கு வந்துள்ள அய்யா பழ.நெடு மாறன் அவர்கள் தினமணி நாளிதழில் எழுதும் நடுப்பக்கக் கட்டுரையைத் தவறாமல் படித்து வருபவன், நான். அவசரமாக வெளியூர் செல்ல நேர்ந்தால், அந்தப் பக்கத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு செல்வேன்” என்றார்.

ஜெம் கிரானைட்ஸ் நிர்வாக இயக்குநர் ர.வீர மணி பேசுகையில் “புதிய நூற்றாண்டு பதிப்பகத் தின் பெயரிலேயே புதுமையும், நூற்றாண்டும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெயரைச் சூட்டிய வர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள்! அறிவுப் பணி யாற்றும், பொதுப் பணியாற்றும், கல்விப் பணி யாற்றும் நியூ செஞ்சுரி நிறுவனத்துக்கு வாசகனா கவே நான் அறிமுகமானேன். மாணவனாக இருந்தபோது, என்சிபிஎச் வெளியிட்ட தேனீ வளர்ப்பு பற்றிய நூலைப் படித்துத்தான் தொழில் செய்யத் தொடங்கினேன். அதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என்சிபிஎச் நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன்” என்றார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றுகையில், “என்சிபிஎச் சின் அறுபது ஆண்டுக்கால சாதனைகளைப் பற்றித் தோழர் நல்லகண்ணு அவர்கள் விளக்கி னார்கள். இலக்கியப் பேராசான் ஜீவா வழிகாட்டு தலுடன் தொடங்கப்பட்டு, மக்களின் துணை யோடு, தொழிலாளர்கள் துணையோடு, எத் தனையோ இடையூறுகளுக்கிடையில் இந்நிறு வனம் வெற்றி நடை போட்டு வருகிறது. பெரு முத லீடு செய்து வெற்றியடையாதவர்களும் உண்டு. இதுவரை 5,000 நூல்களை வெளியிட்டுள்ள என்சிபிஎச் இந்திய அரசு, தமிழக அரசு, இன்னும் வெவ்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசு களைப் பெற்று, தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்நிறுவனத்தின் தமிழ்த் தொண்டு சிறந்தது. அம்பேத்கரின் நூல்களை மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெருமையுடையது என்சிபிஎச். நான் முன்பெல்லாம் இலங்கைக்குச் செல்லும்போது, அங்குள்ள எழுத்தாளர்கள் ‘தமி ழகத்தில் எங்கள் எழுத்துக்களை வெளியிடுவ தில்லை’ என்று குறைபட்டுக் கொள்வதுண்டு. அறிஞர்கள் கைலாசபதி, சிவத்தம்பியின் ஓரிரண்டு நூல்கள் மட்டுமே வெளிவந்தன. காரணம் நூல் வெளியிட ஆள் இல்லை. அந்த நிலையை மாற் றியது - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 1984-இல் சோவி யத் யூனியன் சென்று வந்த பிறகு ‘மதுரையிலி ருந்து மாஸ்கோ’ என்று கட்டுரை எழுதினேன். சோவியத் ஒன்றியம் மலருவதற்கு முன்பு ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தொடர்பை இஸ்கத் பத்திரிகையில் எழுதினேன். மீதியிருந்த செய்திகளையும் எழுதி முடித்துவிட் டேன். அதனை விரைவில் நூலாக என்சிபிஎச் நிறு வனத்துக்கு அளிப்பேன். நிறுவனம் நூற்றாண்டு விழா கொண்டாட வாழ்த்துகிறேன்” என்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தமது உரையின்போது, “தங்கத்துக்கு மதிப்பு என்று சொன்னால், பழைய தங்கத்துக்குக் கூடுதல் மதிப்பு என்றே சொல்ல வேண்டும். மலினமான புத்தகங் களை, பொழுதுபோக்குப் புத்தகங்களை வெளி யிடாத நிறுவனம் என்சிபிஎச். உயர்ந்த இலட் சியத்தோடு சான்றோர் பலரால் உருவாக்கப்பட்டு இன்று அதே இலட்சியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பதிப்பகம் மேலும் உயர வாழ்த்துகிறேன். என்சிபிஎச்-சால் சமூகப் பார்வை வளர்ந்தது; கோட்பாடு வளர்ந்தது; கோட் பாட்டை நடைமுறையுடன் பொருத்திப் பார்க்கும் செயல்முறை வளர்ந்தது. தமிழுக்கு உயிரான இயக்கம் பொதுவுடைமை இயக்கம் என்றார் ஜீவா. அது உண்மைதான். பொதுவுடைமை இயக் கம் நற்றமிழைத் தொடர்ந்து வளர்த்து வருவது உண்மைதான். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் பல்லவன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி யுவான்சுவாங் 14 ஆண்டுகள் இந்த நாட்டைச் சுற்றி வந்தான். காஞ்சிபுரம் வந்தான்; பௌத்த இலக்கியத்தில் மூழ்கினான். 672 ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, 20 குதிரைகளில் ஏற்றிக் கொண்டு சென்றான். அப்படிச் செல்லும்போது சிந்துநதியைப் படகு மூலம் கடக்க வேண்டிய நிலை. ‘படகில் உள்ள எடை குறைந்தால்தான் படகை ஓட்ட முடியும், எனவே, இந்தச் சுவடி களைப் படகிலிருந்து தூக்கிப் போடுங்கள்’ என்றான் படகோட்டி. உடனே, யுவான் சுவாங் ‘அப்படியானால், நான் குதித்துவிடுகிறேன். ஓலைச்சுவடிகள் பத்திரமாகக் கரைசேரட்டும்’ என்று நதிப் பிரவாகத்தில் குதிக்க முயன்றான். சீனப் பயணி யுவான்சுவாங்கின் மன உணர்வைச் சுட்டிக்காட்டவே இதைக் குறிப்பிட்டேன். பின்னர், 19 ஆண்டுகள் இருந்து அந்த ஓலைச்சுவடி களில் உள்ள இலக்கியங்களைச் சீனமொழிக்கு மாற்றம் செய்துவிட்டே இறந்து போனான். அது தான், சீன மக்களின், சமூக உணர்வு, பொது வுடைமை உணர்வு” என்றார்.

என்சிபிஎச்சின் சகோதர நிறுவனமான நவ கர்னாடகா நிறுவனத்தின் மேலாளர் ஈஸ்வர ரெட்டி உரையாற்றும் போது, “ஒரு நிறுவனம் வைரவிழா கொண்டாடுகிறதே... இதுவே ஒரு வரலாறுதான்! பல பதிப்பகங்கள் தோன்றி மறைந்தன. என்சிபிஎச் நிலைத்து நின்று தமிழ் மக் களிடையே அரசியல், பொருளாதாரம், வரலாறு, குழந்தைகள் இலக்கியம், மாணவர்களுக்கான நூல்களைக் கொண்டு செல்லுதல் என்று பரிண மித்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக வரலாறு படைக்கும்” என்று குறிப்பிட்டார்.

முனைவர் மே.து.ராசுக்குமார் தமது உரையில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இருப்பதுபோல வசதிவாய்ப்புகள் இல்லாத காலத்தில் புத்தகம் கிடைக்காத இடங்களுக்கெல்லாம் பயனுள்ள புத்தகங்களைக் கொண்டுசென்ற நிறுவனம் என்சிபிஎச். பஸ் ஸ்டாண்டு, ரயில்வேஸ்டேஷன் உட்பட எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி நூல்களை விற்றது, இந்த நிறுவனம். 1974-இல் எனது மக்கள் வெளியீடு நிறுவனம் வெளியிட்ட நூலைக் கூட 3000 பிரதிகள் விற்றுக் கொடுத்தது என்சிபிஎச்” என்றார்.

புதுடெல்லி பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஷமீம் ஃபைசி உரை யாற்றுகையில், “என்சிபிஎச் நிறுவனத்தின் செயல் பாட்டை எப்படிப் பாராட்டுவது என்று தெரிய வில்லை. 60 ஆண்டுகளாக பல சிக்கல்களைச் சந்தித்தோம். ரொமிலா தாப்பர், பிபன்சந்திரா, ஆர்.எஸ்.சர்மா ஆகிய வரலாற்றாசிரியர்களின் நூல்களையும், மார்க்சியம், லெனினியம், ரஷ்ய நூல்களையும், வட்டார மொழியில் வெளியிட்டு வருகிற என்சிபிஎச் நிறுவனத்தை வாழ்த்துகிறேன்” என்றார். தொடர்ந்து, அமரர் ஜீவா இயற்றிய பாடல் ஒன்று பாடப்பட்டது.

தொடர்ந்து, தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தமது உரையில், “1966 முதல் 1996 வரை முப்பது ஆண்டுகள் என்சிபிஎச் நிறு வனத்தில் பணியாற்றிய என்னை இவ்விழாவில் வாழ்த்திப் பேச அழைத்தமைக்கு நன்றி. என்சிபி எச்சில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒருநாள் திடீரென, பெரியவர் இராதாகிருஷ்ணமூர்த்தி என்னிடம் ரூ.75/- பணமும் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டும் கொடுத்து, ‘மதுரைக்குப் போ. தோழர் கருப்பஞ்செட்டி எல்லா ஏற்பாடுகளையும் செய் வார்’ என்று கூறி அனுப்பி வைத்தார். அப்படி திடுதிப்பென மதுரைக்குப் போய்ப் புத்தகம் விற்றது தொடங்கி, அடுத்து உத்தரப் பிரதேசத் தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது என என் அனுபவம் விரிந்தது. என்னைப் பட்டை தீட்டிய நிறுவனம் என்சிபிஎச். ஒவ்வொரு கிளைக்கும் சேல்ஸ் டார்கெட் உண்டு. சோவியத் நூல்களெல் லாம் அழகாக இருக்கும்; விலையும் குறைவு. அந்தப் புத்தகங்களைப் பள்ளிகளில் விற்கலாம் என்று ஆசைப்பட்டுச் சென்றால், மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும். தென்மாவட்டங்களி லுள்ள கிறித்தவப் பள்ளிகளில் எங்களை அனு மதிக்கமாட்டார்கள். காரணம், நாங்கள் பள்ளிச் சிறுவர்களைக் கெடுத்து விடுவோமாம்! அந்த எதிர்ப்புகளையும் தாண்டித்தான் அப்போது நூல்களை விற்பனை செய்தோம். இந்நிறுவனம் நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன்” என்றார்.

திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைச் சேர்ந்த முனைவர் ஜான் இமானுவேல், “ஆந்திர மாநிலத்திலேயே அதிக தமிழ் நூல்களைப் புழங்கும் ஒரே பல்கலைக்கழகம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகமே. அதற்குக் காரணமாகத் திகழ்பவை இத்தகைய தமிழ்ப் பதிப்பகங்கள்தாம். இப்படி ஆந்திராவில் தமிழை வளர்க்க உதவுகிற என்சிபிஎச் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்” என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளரும் ‘தாமரை’ இத ழின் ஆசிரியருமான தோழர் சி.மகேந்திரன் உரை நிகழ்த்துகையில், “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் வைரவிழாவில் பங்கேற்றுள்ள உங்களைப் போலவே நானும் மிகவும் மகிழ்கிறேன். எதிர்காலத்திற்கான தேர்ந்த அரசியல், சமூகக் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துச் செல்கிற நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். மாற்றங் களுக்கு நூல்கள்தான் அடிப்படை. அந்த அடிப் படைப் பணியைச் செய்துகொண்டிருக்கிறது என்சிபிஎச். ‘ஆதிக்க சக்திகளால் தடை செய்யப் பட்ட நூல்களை சமூக மாற்றத்திற்கான அரசியல் விழிப்புணர்வைத் தர வேண்டும் என்ற நோக் கத்தில் விற்கத் தொடங்கியது - என்சிபிஎச் நிறுவனம், என்றார்கள் தோழர் நல்லகண்ணு அவர்கள். அதே வழியில் தொடர்ந்து செயல் பட்டு வருகிறது என்சிபிஎச். அனைத்துத் துறை சார் நூல்களையும் வெளியிட்டு, மக்கள் பணியாற்றி வருகிறது என்சிபிஎச். அது இவ்வாறு சிறப்பாகச் செயல்படுதற்குக் காரணம் தோழர் பி.சீனிவாசராவ், தோழர் இராதாகிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் கூட்டுச் செயல்பாட்டு முறையே. என்சிபிஎச் என்னும் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு மனித உழைப்பு, அர்ப்பணிப்பு தேவை என்பதை என்சிபிஎச்சின் அனைத்துத் தரப்புப் பங்களிப்பாளர்களும் நிரூபித்திருக்கிறார் கள். எதிர்கால தமிழக, உலக மாற்றங்களுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வித்திட்டு வருகிறது. எதிர் காலத்தில் இந்நிறுவனம் பல சாதனைகளைச் செய்யும்” என்று குறிப்பிட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் து.ராஜா உரையாற்றுகையில், “பெருமை மிக்க, சிறப்புமிக்க வரலாறு கொண்ட நியூ செஞ் சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தோற்றம், வளர்ச்சி யில் பங்களித்த தோழர் பி.எஸ்.ஆர். தொடங்கி தோழர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் வரை என் வணக்கத்துக்குரியவர்கள் பலர். இந்த விழா வைச் சிறப்பிக்க வைத்துள்ள எழுத்தாளர் கள், பணியாளர்கள், அறிஞர்களுக்கும் என் வணக்கம். பெங்குவின், ஆக்ஸ்ஃபர்டு போன்று தமிழ்நாட்டில் தனக்கென்று தனியடையாளம் கொண்ட நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். தோழர் நல்லகண்ணு குறிப்பிட்டதுபோல தமிழகத்தில் மாற்றுச் சிந்தனையை, புதிய கருத்துகளை வழங்குகிற நிறுவனம் என்சிபிஎச். எந்த ஒரு சமூகப் போராளியாக இருந்தாலும் எங்காவது ஓரிடத் தில் என்சிபிஎச் என்ற பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. நான் இளைஞனாக இருந்த போது நியூ செஞ்சுரி வாசகர் பேரவையில் செய லாளர் பொறுப்பு வகிக்குமாறு என்னிடம் கேட்ட போது, என்னால் அதை ஏற்றுக்கொள்ள இய லாமல் போய்விட்டது. இன்றும் அதை நினைத் துப் பார்க்கிறேன். இப்போது உங்கள் நூலகம் இதழ் மாதாமாதம் டெல்லிக்கு வந்துகொண்டி ருக்கிறது. அதில் தோழர்கள் ஆ.சிவசுப்பிர மணியன், ந.முத்துமோகன் போன்றவர்களின் கட்டுரைகளைப் படிக்க முடிகிறது. பதிப்பகத் தன்மை மாறுகிறது. இன்றைய தொழில்நுட்ப வேகத்தில் புத்தக வாசிப்பு சாத்தியமா என்றொரு கேள்வி எழுகிறது. கண்டிப்பாக சாத்தியம், அவசியம்! சமூக மாற்றத்தில் நூல்கள் ஏற்படுத்தும் மாற்றம் இன்றியமையாதது. இன்று நவீனமயமாக ஃபேஸ்புக், ட்விட்டிங் என்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும், இவற்றில் இடம்பெறும் தகவல்கள் பிறகு நூல்வடிவம் பெறுகின்றன. இண்டர்நெட் வாசிப்பவர்கள் அதிகமானாலும் கூட நூல்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை; பாதிக்க முடியாது. ‘என்னதான் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து பட்டன்களைத் தட்டுகிற வசதி இருந்தாலும், கையிலே பேனாவைப் பிடித்து எழுதுகிற போதுதான் சிந்தனைத் தொகுதி ஓட்ட மாக வெளிவருகிறது’ என்பார் தோழர் தா.பாண்டியன். புத்தகம் ஓர் உயிர். உயிரிலுள்ள போராளி! அதனால்தான் புத்தகத்துக்குத் திரு விழா கொண்டாடுகிறோம் மூலதனம் நூலை எழுதிய போது அதைப் படிக்க ஆள் இல்லை. யாரும் வெகுவாக ஏற்கவில்லை. அதற்கு எங்கல்ஸ் விமர்சனம் எழுதிய பிறகுதான் பலரும் விழிப் படைந்து, மூலதனத்தை வாங்கினார்கள். இதற் கிடையில், மூலதனம் விற்பனையாகவில்லையே என்ற வருத்தத்தில் மார்க்ஸ் ‘இதை எழுதும் போது, நான் பிடித்துப் போட்ட சுருட்டுக்குக்கூட இந்தப் புத்தகம் பெறுமானம் இல்லாமல் போய் விட்டதே!’ என்றார். ஆனால், மூலதனம் பரவிய பிறகு ஏற்பட்ட மாற்றமும், பரபரப்பும் சாதாரண மானவை அல்ல. அண்மையில்கூட டெல்லிப் பேராசிரியர் ஒருவர் மூலதனம் கிடைக்காமல் என்னிடம் வந்து கேட்டார். இன்று உலகெங்கும் முதலாளித்துவ நாடுகள் மூலதனம் நூலைத் தேடிப் பிடித்துப் படிக்கின்றன. ஏன்? வெறும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அல்ல; அரசியல், கலாசாரம், சுற்றுச்சூழல் நெருக் கடிகளில் இருந்து மீளவும் மூலதனத்தைத் தேடு கிறார்கள். லெனின் ஒரு புரட்சியாளர், கார்க்கி எழுத்தாளர், இருவருக்கும் இடையே சுதந்திரத் தைப்பற்றி சர்ச்சை ஏற்பட்டது. இலண்டனில் கலவரம் ஏற்பட்டு கடைகள் சூறையாடப்பட்டன. அதற்குச் சமூகவியலாளர்கள் முன்மொழிந்த காரணம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து கருப்பர்கள் குடியேறிவிட்டனர்; அவர் களுக்கு சமூக மதிப்பு இல்லை என்பதே! யார் இந்தப் படைப்பாளிகள்? இந்தியாவில், தமிழகத் தில் அறிவைத் தேட வேண்டும். யாரிடமிருந்து அறிவைத் தேடுவது? இப்போது ‘Occupy Wall Street’ என்பது அமெரிக்காவில் எழுந்துள்ள இயக் கத்தின் முழக்கம். அதற்குக் காரணம் வருமான ஏற்றத்தாழ்வே! இந்தியாவில் சட்டீஸ்கரில் ஆதி வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட் டில் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் பனியன் தொழிலாளர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். எழுத்தாளர்கள் யாருக்காகத் தங்கள் பேனாவைப் பிடிக்க வேண்டும் என்று தெளிவுறுத்திக்கொள்ள வேண்டும். மாற்றம் பற்றிய கருத்துகள் பரப்பப்படாமல் தடுக்கப்படு கின்றன. இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? மக்களிடம் புரட்சிகர, முற்போக்குச் சிந்தனைகள் பரவக்கூடாது என்பதே காரணம். ஊடகங்கள் மக்கள் சிந்தனையைக் கட்டுப்படுத்து கின்றன. மக்கள் சிந்தனையைக் கிளர்ச்சியடையச் செய்ய வேண்டும். அது வரலாற்றுக் கடமை.

மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்; மக் களே வரலாற்றை மாற்றுகிறார்கள். மக்கள் வாழ்வில், சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக என்சிபிஎச் செயலாற்றுகிறது. இங்கே தமிழகத்தில் மேலும் புதிய எழுத்தாளர் கள், படைப்பாளிகள் உருவாக வேண்டும். தமிழ்ச் சமூகம் தேங்கிக் கிடக்கும் குட்டையாக இருக்கக் கூடாது. தமிழ்மொழி, தமிழ்த் தேசியம் இவற் றுக்கு அடையாளம் இருக்க வேண்டும். பழையது அல்ல, புதிதாக அடையாளம் காணவேண்டும். பொற்காலம் என்பது பழங்காலத்தில் அல்ல, எதிர்காலத்தில்தான் உண்டு. சமூகம் முன் னோக்கியே செல்ல வேண்டும். இப்போது வரலாறு முன்னேறிக்கொண்டே இருக்கிறது. மக்கள்தான் அதை முன்னெடுத்துச் செல்கிறார் கள்; தேவையான மாற்றங்களைச் செய்கிறார்கள். போஸ்ட் மாடர்னிஸம் என்று இன்று விவாதிக்கப் படுவது மரபுவழி எழுத்துக்களே. பாரம்பரிய மக்களிடமிருந்து எழுத்தாளர்கள் உயிர்பெற்று வருகிறார்கள். பள்ளி, சுடுகாடு, சாலை எதிலும் சார்புநிலை நிலவுகிறது. ஒடுக்கப்படுகிறவனுக்கும் ஒடுக்குகிறவனுக்கும் இடையில் சுரண்டப்படுகிற வனுக்கும் இடையில் சுரண்டுகிறவனுக்கும் எங்கே இருக்கிறது சார்புநிலை? மக்களுக்கான படைப்பு கள், எழுத்துகளை வெளியிடுவதற்காக, என்சிபிஎச் உள்ளிட்ட முற்போக்கு நிறுவனங்கள் தோன்றின. தமிழ் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற மொழியாக மாற, என்சிபிஎச் போன்ற நிறுவனங்களால்தான் வலிமை சேர்க்க முடியும். இந்நிறுவனத்தையும், இந்நிறுவனத்தில் இயக்கப் போராளிகளாகத் திகழும் பணியாளர்களையும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

விழாவின் காலை அமர்வுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் அ.கந்தசாமி நன்றியுரையாற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு, முற்போக்கு இசை நிகழ்ச்சியோடு தொடங்கிய பிற்பகல் அமர் வுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயன்மையர் சண்முகம் சரவணன் வரவேற்புரையாற்றினார்.

அமர்வுக்குத் தலைமை வகித்த பாவை பிரிண்டர்ஸ் மற்றும் பாவை பப்ளிகேஷன்ஸ் இயக்குநர் தோழர் ஏ.எம்.கோபு உரையாற்று கையில், “சமுதாயத்தில் மாற்றம் பெற வேண்டுமானால், மக்கள் அறிவு பெற வேண்டும். அதற்கான பணியைச் செய்து வருகிறது என்சிபி எச். கம்யூனிஸ்ட் என்றாலே அடிதடி, கலகம் என்று நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டோம். ஆனால், நாங்கள் அறிவார்ந்த முறையில் போராடுவோம். அப்படி கருத்துக்களமாக இயங்கிவருவது நமது என்சிபிஎச் நிறுவனம். பழைய கருத்துக்களையும் போதித்து, அவற்றை இன்றைய போராட்டத்துக் குப் பொருத்தி வீறுநடை போடுகிறது என்சிபிஎச். அதற்கு, உங்களுடைய ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும்” என்றார்.

எழுத்தாளர் பொன்னீலன் பேசும்போது, “இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் இத்தனை சொந்தக்காரர்களா என்று வியந்து போனேன். ஜனசக்தி பிரசுராலயம் வெளியிட்ட பேராசிரியர் பாலமோகன் தம்பி எழுதிய புத்தகத்தை மிகக் குறைந்த விலையில் வாங்கிப் படித்து, அப்போது தான் இந்த நிறுவனத்தின் தொடர்பில் மும்முர மானேன். அப்போது, என்னைப் போன்ற இளை ஞர்களுக்கெல்லாம் தாயாக விளங்கிய என்சிபிஎச் நிறுவனம் இன்றும் அந்த மதிப்பு குறையாமலே இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆங் காங்கே சிற்றூர்களிலும் நகரங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை அமைத்து, இரவு பகல் பாராது கொசுக்கடியுடன் பணியாற்றி வருகிறவர்கள் என்சிபிஎச் ஊழியர்கள். அப்படியெல்லாம் உழைத்த அடிப்படை ஊழியர்கள் இன்று அதிகாரிகளாகியிருப்பதை அறிந்து என் மனம் மகிழ்கிறது. ஊரில் ஒரு கதை உண்டு.. ‘நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வர்றேன்; நீ கொஞ்சம் அரிசி எடுத்துட்டு வா. ரெண்டையும் கலந்து, நாம ரெண்டு பேரும் ஆளுக்குப் பாதியாப் பிரிச்சு ஊதி ஊதித் தின்னுவோம்’னு சொல்வாங்களாம்! அப்படிப்பட்ட பதிப்பகங்கள் தமிழ்நாட்டில் உண்டு. எழுத்தாளர்களிடம் ‘நீங்கள் கொஞ்சம் பணம் கொடுங்க; நாங்க கொஞ்சம் பணம் போடு றோம். உங்கள் ஸ்கிரிப்டைப் புத்தகமா அச்சடிச்சு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்குவோம்’னு வியா பாரம் பேசுகிற பதிப்பகங்கள் இங்கே இருக் கின்றன. அவற்றுக்கு மாறாக இப்படியொரு நல்ல பதிப்பகமாக விளங்குகிறது என்சிபிஎச். நல்ல உருவாக்கம். இந்த விழா தமிழகத்தின் அறிவுத் திருவிழா. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒரு ஞானரதம். அப்போது மூன்று அமெரிக்க நாடகங்களைக் கொண்ட நூலை ரூ.300/- வாங்கிப் படித்தோம். ஆனால், அதே நூலை என்சிபிஎச் வெறும் பத்து ரூபாய்க்குக் கொடுத்தது. எழுத்தாளர்களை எழுத வைத்தல், வாசகர்களை வாசிக்க வைத்தல் என எல்லாப் பணிகளையும் செய்து தமிழகத்தில் அறிவுப் புரட்சி செய்து வரும் நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்” என்றார்.

தீக்கதிர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் தமது உரையின்போது, “தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கம் வளரத் தொடங்கிய பிறகுதான் நல்ல எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் உருவானார் கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் மூலதனம், உபரி வருமானம் நூல் தொகுதியை ரூ.2.50-க்கு வாங்கிப் படித்தேன். அப்படித்தான் என்னை நான் வளர்த்துக்கொண்டேன். எனது 14 நூல்களை வெளியிட்டு, என் அறிவுக்குத் தாயாக இருந்து என்னை வளர்த்தெடுத்த நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். இந்த நிறுவனத்திலிருந்து அறிவுலகத் துக்கு இன்னும் ஏராளமான நூல்கள் வரவேண் டும்,” என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, “கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்திலும், கம்யூனிஸ்ட்கள் தலைமறைவாக இருந்த காலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூகச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 1950களின் தொடக்கத் திலிருந்து கம்யூனிஸ்ட்களின் ரகசிய அறிக்கை களைப் பரிமாறிக்கொள்ளத் தோன்றிய பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் கிளை நிறுவன மாக என்சிபிஎச் கருத்துப் பரப்பில் பணியை அன்று முதல் இன்றுவரை செய்து வருகிறது. பண்பாட்டு ரீதியான செயல்களில் ஆர்வம் கொண்டு இந்தியர்கள் ரஷ்யாவுக்குச் சென்று வந்தனர். 1950களில் தொடங்கி, ரஷ்ய மொழி நூல்களும், ஆங்கில நூல்களும் இந்திய மொழி களில் வெளிவரத் தொடங்கின. என்சிபிஎச் நிறுவனம் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல் களை வெளியிட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. 1950 முதல் 1970 வரை தமிழ்ச் சூழல் களிலான கதைகளும், நவீனங்களும் உருவாயின. 1960க்குப் பின்னர் ஆங்கிலம் தெரியாத எழுத் தாளர்கள் தோன்றினர். அவர்கள்தான் தமிழை, கிராமத்தை எழுத்தாக்கினர். எஸ்.ஏ.பெருமாள் கூறியதுபோல நான் என்சிபிஎச் வெளியிட்ட இடதுசாரி மலிவுவிலை நூல்களை வாங்கிப் படித்தேன். தனக்கும் மக்களுக்கும் பொதுவான நிறுவனம் என்சிபிஎச் மட்டுமே. என்சிபிஎச் புத்தக வாசிப்பினால்தான் நான் உருவானேன். மாற்றுக் கருத்துகளை வளர்க்கும், மக்களுக்கான நிறுவன மான என்சிபிஎச் மேலும் சாதனைகள் செய்ய வாழ்த்துகிறேன்” என்றார்.

பேராசிரியர் ந.முத்துமோகன் தமது வாழ்த் துரையில், “நிகழ்ச்சி தொடங்கியது முதல் என்சிபிஎச்சின் முக்கியத்துவம் என்ன, சாதனை என்று பேசிவருகின்றபடி கிடைக்கின்ற தோற்றம் கம்யூனிஸ்ட், மார்க்சிய வரலாறு என்பது உலகின் மற்ற எல்லா இயக்கங்களைவிட தனித்ததொரு இயக்க வரலாறு என்பதை மெய்ப்பிக்கிறது. மார்க் சிய மெய்யியல் ஒரே சமயத்தில் அறிவாளிகளை யும், உழைப்பாளிகளையும் ஒன்று சேர்க்கிறது. இது விசித்திரமான சேர்க்கை. 1848-இல் தொடங் கிய இந்த இயக்கம் இதுவரை 20 புரட்சிகளைச் சந்தித்துள்ளது. சிந்தனையின், நவீன தமிழ்ப் பண் பாட்டின் மரபாக 60 ஆண்டுக்காலமாக வளர்ந்து நிற்கிறது நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம். இங்கு மேடையில் அமர்ந்திருக்கின்ற மூத்த தலை வர்களிடம், ‘நம் உழைப்பு வீண்போகவில்லை’ என்ற உற்சாகம் தெரிகிறது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளத்துக்காகப் பணியாற்றவில்லை; அதற்காக அவர்கள், வருத்தப்படவில்லை. ‘நிறுவனம் ஆற்றும் வரலாற்றுப் பணியில் நாமும் பங்கேற் றுள்ளோம்’ என்ற உணர்வுடன் அவர்கள் பணிபுரி கின்றனர். 90களுக்குப் பிறகு அம்பேத்கர் தொகுப்புகள், சங்க இலக்கிய நூல்கள், சிங்கார வேலர் சிந்தனைகள், ஜீவாவின் ஆக்கங்கள் என்று தொகுப்பு நூல்கள் வெளியிட்டமை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் சாதனைகளுள் குறிப் பிடத்தக்கவை. இந்த நிறுவனம் தனது படைப்புத் தளத்தை மார்க்ஸியம், அம்பேத்கரியம், தமிழ் அடையாளம் என்று விரிவாக்கிக் கொண்டு செல்கிறது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் பல நூறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன்” என்றார்.

முனைவர் ஆ.பத்மாவதி பேசுகையில், “அறக்கட்டளையைப் போன்ற இந்த என்சிபிஎச் சமூக மாற்றத்துக்கும், அரசியல் மாற்றத்துக்கும் பங்காற்றி வருகிறது. மார்க்சியத்தை இன்னும் எளிமைப்படுத்திப் பரப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேனாள் செய லாளர் யு.எம்.உசேன் உரையாற்றுகையில், “புத்தக விற்பனை என்பது இயக்கத்துக்கான முக்கிய கடமை. 1957-இல் சேர்ந்து 35 ஆண்டுக்காலம் பணி யாற்றினேன். புத்தகங்களை மக்களிடம் நேரடி யாகக் கொண்டு சேர்ப்பதே எங்கள் அடிப்படைக் கடமையாக இருந்தது. எங்களை அப்படிச் செய்ய விடாமல் பல தடைகள் ஏற்பட்டன. சோவியத் புத்தகக் கண்காட்சியை முதன்முதலாக ‘ஞான ரதம்’ என்ற பெயரில் டிராக்டரில்வைத்து நடத்தி னோம். இன்று இந்த நிறுவனத்தை இப்படி வளர்ச்சியுற்ற நிலையில் காண்பதில் மிகவும் மகிழ் கிறேன். மேலும் வளர வாழ்த்துகிறேன்” என்றார்.

திராவிடப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஆர்.விவேகானந்தகோபால் பேசும் போது, “தமிழ்ப் பதிப்பகங்களின் பணி என்ற தலைப்பில் நான் ஆராய்ச்சி செய்யும்போது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பணியைத்தான் பிரதானமாக எடுத்துக்கொண் டேன். ஓலைச்சுவடி முதல் இன்றைய நவீன புத் தகம் வரை வெளியான விவர அடிப்படையிலான வரலாறு எழுதப்பட வேண்டும்” என்று குறிப் பிட்டார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் இரா.காமராசு உரையாற்றுகை யில், “இந்த மண்ணில் சமூக நீதிக்காக, செருப்பு அணிவதற்காகப் போராடிய இயக்கம் பொது வுடைமை இயக்கம். அறிவு என்பதே உழைப்பால் வந்ததுதான். வேதம், இலக்கியத்தை எல்லோரும் படிக்க முடியாத காலமும் இருந்தது. அப்படிப் படித்தவர்களின் நாக்கை வெட்டிய நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு. என்சிபிஎச் நிறுவனம் கல் வியைப் பரப்பியது. அறிவு என்பது சமூகநீதியுடன் தொடர்புடையது. அந்த அறிவைப் பரப்பியது என்சிபிஎச். கலை இலக்கியத்துக்குக் கம்யூ னிஸ்டை விட்டால் வேறு நாதியே கிடையாது. என்சிபிஎச் ஊழியர்கள் அதைத் தங்கள் சொந்த நிறுவனமாகக் கருதிப் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் மேலும் வளரும்” என்றார்.

முனைவர் பத்மாவதி விவேகானந்தன் பேசு கையில், “என்சிபிஎச் மக்களுக்கான, மக்களால் நடத்தப்படும் ஒரு ஜனநாயகப் பதிப்பகம். இது அறியாமை இருளை நீக்குகிறது. அறிவுப் புதை யலாக விளங்கும் இந்த நிறுவனம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கி.இராசா தமது உரையில், “எங்கள் நூல்கள் இலங்கை, மலேசியா போன்ற நாடு களுக்குச் செல்ல முடிந்ததற்குக் காரணம் என்சிபி எச் நிறுவனம்தான். பொது மக்களுக்கான நூல் களை வெளிடுவதில் மட்டுமன்றிப் பல்கலைக் கழகக் கல்வி வளர்ச்சியிலும் சிறப்பாகப் பங்காற்று கிற என்சிபிஎச் அனைத்திலும் தனிமுத்திரை பதித் துள்ளது. 60 ஆண்டுகள் என்பதுகூட இந்த நிறு வனத்துக்குச் சிறுபருவம்தான். மேலும் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தழைத்து வளரும்” என்று குறிப்பிட்டார்.

முனைவர் பா.ஆனந்தகுமார் உரையாற்று கையில், “என்சிபிஎச் இரண்டு தலைமுறைகளுக் கான அறிவை வழங்கியிருக்கிறது. ‘என்சிபிஎச் இல்லையேல் தமிழ்நாட்டில் மார்க்ஸிய அறிவு இல்லை’ என்றார் தோழர் மாயாண்டி பாரதி. நூறு அறிவாளிகளுக்குச் சமமானவர்கள் இங்கு அமர்ந்திருக்கிற ஆசிரியர்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் பல தளங்களில் இடதுசாரி அறிவை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க் கிறது” என்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் உரை நிகழ்த்து கையில், “புத்தகம் போடுவதற்கும் பொருள் வேண்டும். புத்தகம் எழுதுவதற்கும் ‘பொருள்’ வேண்டும். அப்படிப் ‘பொருள்’ நிறைந்த புத்தகங் களைத்தான் என்சிபிஎச் 60 ஆண்டுகளாக வெளி யிட்டு வருகிறது. இன்றைய நிலையைப் பார்த் தால், கோடம்பாக்கத்தை எதிர்த்துதான் என்சிபி எச் போராட வேண்டிய நிலையில் உள்ளது. பதிப்பகம் என்றால் வியாபாரம் நடக்கும், வரு மானம் இருக்கும். அப்படி இருக்கும்போது பாராட்டு எதற்கு? என்ற கேள்வி எழும். எழட்டும். புத்தகம் போடுவது வெறும் பணி அல்ல, வர லாற்றுத் தொண்டு என்று தொடர்ந்து நிரூபித்து வருவதால், அது பாராட்டுக்குரியதே! அரசன் அலெக்ஸாண்டர் பழைய நூல்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடிப் பிடித்து, அவற்றை நகலெடுத்து தனது நூலகத்தில் வைத்துக்கொண் டான். புத்தகம் என்பது ஒரு புரட்சிக் குறியீடு. புத்தகம் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து வாசகனின் மனத்துள் செல்வது. படிப்பது தொடர்ந்து நீடித்துவர வேண்டும். கட்சிக் காரர்கள் தொடர்ந்து படிக்கவில்லை. ஆனால், என்சிபிஎச் படிக்க வைக்கிறது. ‘மார்க்ஸ் பிறந் தார்’ நூலைப் படித்த பிறகுதான் நான் நேர்மை யாக நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பண்பாடு, நாடு, பற்றி அறிவதற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பற்றி அறியவும் புத்தகங்கள் பயன் படும். பண்பாடாக, சமூக மாற்றமாகப் புத்தகங்கள் செயலாற்றுகின்றன. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த புத்தகங்களை வெளியிட்டு வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் மேலும் வளரும்” என்றார்.

தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்திய நாதன் உரையாற்றுகையில், “1984-இல் என்சிபிஎச் புத்தகம் ஒன்றில் என் பெயர் இடம்பெற்றபோது, சங்கப் பலகையில் எனது பெயர் இடம்பிடித்த பெருமை என்னை வந்தடைந்துவிட்டது. அச்சுத மேனன், இந்திரஜித், பரூக்கி ஆகிய மூவரின் பேட்டிகளை எடுத்து வைத்துள்ளேன். அதை நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம் நூலாக வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன். பாரதி, பாரதி தாசன், இங்கே மேடையில் அமர்ந்திருக்கிற சிற்பி போன்ற கவிஞர்களின் படைப்புகள் பிற மொழி களுக்குச் செல்லவில்லையே என்ற ஆதங்கம் என் மனத்தை நெருடுகிறது. தமிழ்ச் சாத்திரங்கள் பிறமொழிகளுக்குச் செல்ல வேண்டும். ஒரிஸ்ஸா அரசு, தமிழிலிருந்து ஒரியன் மொழிக்கு மாற்றப் படும் நூல்களுக்கும், அவ்வாறே ஒரியன் மொழி யிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல் களுக்கும் மானியம் கொடுக்கிறது. திரைப்படங் களின் இன்றைய நிலையை நாம் விமர்சிக்கிறோம். சங்ககாலத் தமிழர் வாழ்வைப் பற்றி எடுக்கப்பட்ட ‘பாலை’ என்ற தரமான, அவசியமான திரைப் படத்தை வெளியிடத் தமிழ்நாட்டில் திரையரங்கு கள் இல்லை. நாம் அந்நிலையை மாற்ற என்ன செய்யப் போகிறோம்? நல்ல திரைப்படங்கள் உருவாவதற்கு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு” என்றார்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தமது உரையில் “என்சிபிஎச் நிறுவனத்தை வாழ்த்துவதற் காக நான் இங்கு வரவில்லை; இந்த நிறுவனத்துக்கு நன்றி கூறவே வந்திருக்கிறேன். என்சிபிஎச் நூலா சிரியன் என்பதற்காக நான் இங்கு வரவில்லை; சோவியத் நூல்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு விற்கச் சென்ற தொண்டனாகவே இங்கு வந்திருக்கிறேன். மற்ற பதிப்பகங்கள் தொழிலைச் செய்கின்றன; என்சிபிஎச் தொண்டு செய்கிறது. இந்நிறுவனம் வெளியிடும் நூல்கள் இன்புறுத்துவதற்கு அல்ல; அறிவுறுத்துவதற்கு. என்சிபிஎச் வெளியிடும் நூல்கள் புரட்சிநூல்கள்; எரிமலைகள், சூறாவளிகளைக் கருத்தரிக்கச் செய்யும் தாய் என்சிபிஎச். தக்க தருணம் வரும் போது, சூறாவளி வீசும், எரிமலை வெடிக்கும். இப்போது வால் ஸ்ட்ரீட்டில் மார்க்ஸின் முகம் தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

என்சிபிஎச் ஆசிரியர்குழு உறுப்பினர்கள், நூல் ஆசிரியர்கள், நிறுவன ஊழியர்களை, நிறு வனத்தின் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, இயக்குநர் தோழர் தா.பாண்டியன், இயக்குநர் தோழர் ஸ்டாலின் குணசேகரன், பாவை பிரிண் டர்ஸ் மற்றும் பாவை பப்ளிகேஷன்ஸ் இயக்குநர் தோழர் ஏ.எம்.கோபு ஆகியோர் கௌரவித்தனர்.

அடுத்து, உரையாற்றிய தோழர் தா.பாண் டியன், “எல்லாச் செலவுகளுக்கும் பணம் கொடுத் தமைக்கும், எழுத்தாளனான எனக்குப் பணம் கொடுக்க மறந்தமைக்கும் நன்றி!’ என்று ஓர் எழுத் தாளர் ஒரு பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதிய கதை யும் உண்டு! என்சிபிஎச் நிறுவனத்திலும் சில வேளைகளில், அத்தகைய தவறுகள் நேர்ந்த துண்டு. அவற்றையெல்லாம் சரிசெய்து சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம். எழுத்தாளர்களாகிய உங்களை சீரிய சிற்பிகளாக மதிக்கிறோம். அந்த மரியாதை என்றும் தொடரும். பன்முகம் கொண்ட உங்கள் அனைவரின் ஒத்துழைப்புகளுக்கும் நிறுவனத்தின் சார்பின் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் (விற்பனை) எஸ்.சண்முகநாதன் நன்றியுரையாற்றினார். விழா இனிதே நிறைவுற்றது.

Pin It