ஒரு குறிப்பிட்ட சூழலில் இலக்கியம்பற்றி ஏங்கல்ஸ் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்: “இதுவரை எழுதப்பட்ட இலக்கியங்கள் எல்லாமே நடுத்தர வர்க்கத்தினரால் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நடுத்தர வர்க்கத்திற்காக எழுதப்பட்டவையாக உள்ளன.” அந்த நிலைமை இன்று பெருமளவுக்கு மாறுபட்டிருப்பதை உலக அளவில் எழுதப்பட்டு வரும் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

எல்லாவிதமான சமுதாயங்களிலும் உழைக்கும் மக்களுக்கான கலை, இலக்கிய வெளிப்பாடு கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன. அவை பெரும்பாலும் வாய்மொழி அளவில் மட்டுமே இருந்து வந்திருக்கின்றன. மனித வரலாற்றில் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வியக்கத் தகுந்த அளவில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மனித வாழ்வும், வர லாறும் எழுதப்பட்டு, விரிவாகப் பரவலாக்கப் பட்டு, வளர்ச்சியைப் பற்றிய பதிவுகளாக நிலை பெற்று வருகின்றன. தொடக்க காலத்தில் கல்வி யறிவு பெற்றிருந்த நடுத்தர வர்க்கம் மட்டுமே தமக் கான இலக்கியங்கள் வடிவப்படுத்திக் கொண்டன.

முதலாவது சோசலிசப் புரட்சிக்குப் பிறகு, உலக அளவில் நிகழ்ந்த வியக்கத்தகுந்த வளர்ச்சி யின் விளைவாக ஒவ்வொரு சமுதாயத்தின் அடிப்படைச் சக்தியாக விளங்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை இலக்கியப் பதிவுகளாக வடிவம் பெற்றது என்பது ஒரு வரலாற்று உண்மை.

சோசலிசப் புரட்சியின் பின்னணியில் உழைக்கும் மக்களின் விழிப்புணர்வையும், எழுச்சி யையும், வளர்ச்சியையும் நேரில் கண்ட மாக்சிம் கார்க்கி வரலாற்றின் மாற்றத்தையும், வளர்ச்சியை யும் தன்னுடைய இலக்கியங்களில் பதிவு செய்தார். அதற்கு அடிப்படைக் காரணம் அவர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்ததுதான்.

காதல், வீரம், ஒழுக்கம், பிணி, மூப்பு, சாக்காடு போன்றவை குறித்த கருத்தோட்டங்களை முன் வைத்து எதார்த்தமும், புனைவும் கலந்த கற்பனை யான இலக்கியங்களை வடிவமைப்பதே அன்றைய மரபாக இருந்தது. அந்த மரபிலிருந்து விலகி அசலான வாழ்க்கையின் இயக்கத்தை வரலாற்று வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் துல்லியமாக உணர்ந்து அதற்கு இலக்கிய வடிவம் அளிக்கும் ஒரு புதிய மரபை நிறுவியவர் மாக்சிம் கார்க்கி. அவருடைய இலக்கியத் தாக்கம் உலக அளவில் உணரப்பட்டுப் புதிய மரபிலான புதிய புதிய இலக்கியங்கள் தோன்றத் தொடங்கி இன்று வரை அந்த மரபு தொடர்ந்து நடைமுறையில் பின்பற்றப் படுகிறது.

பழைய இலட்சியக் கோட்பாடுகள் தகர்க்கப் பட்டு எதார்த்தமான வாழ்க்கை பற்றிய மதிப்பீடு களை முன்வைத்து சமூக அறிவியல் நோக்கில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருவது இன்று இயல்பாகிவிட்டது.

இந்த விதமான ஒரு புதிய மரபு தமிழ் இலக்கியத்தில் சென்ற நூற்றாண்டில் 1927-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது. முதலாவதாக ‘முருகன் ஓர் உழவன்’ என்ற நாவலை கா.சி.வேங் கடரமணி எழுதினார். அதைத் தொடர்ந்து 1932-இல் அவரே ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவலை யும் எழுதினார். அவை மனிதாபிமானக் கண் ணோட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பாகவும், சமூகச் சீர்திருத்தமாகவும் இருந்தன. அந்த நாவல்களைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி எதார்த் தமும், கற்பனையும் கலந்த புனைவுகள் இலக்கியங் களாக வெளிவந்தன.

தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்திய விடு தலைக் காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பின்புலமாக்கி வடிவமைக்கப் பட்ட நாவல்களில் குறிப்பிடத் தகுந்தது தொ.மு.சி. ரகுநாதனின், ‘பஞ்சும் பசியும்’. அந்த நாவலைத் தொடர்ந்து எதார்த்த வாழ்க்கையை முதன்மைப் படுத்தி பல கோணங்களிலும் இலக்கியங்களை வடிவமைக்கும் மரபு தமிழில் பரவலாகியது. அந்த வகையான இலக்கிய வடிவாக்கங்களில் மாறு பட்ட தன்மையைக் கொண்ட ஒன்றாக வெளிப் பட்ட நாவல் ‘மலரும் சருகும்’. அதை எழுதிய டி.செல்வராஜ் மாறுபட்ட ஒரு நாவலாசிரியர் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டவர். அதைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘தேநீர்’ நாவல் முற்போக்கு இலக்கிய வட்டத்தில் அவருக்குத் தனிப்பட்ட ஒரு செல்வாக்கை உருவாக்கியது. தேயிலைக் காடுகளில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பன்முகத் தோற்றத்தை அவர் ‘தேநீர்’ நாவலின் வாயிலாக வெளிப்படுத்தினார்.

தற்போது, தோல் பதனிடும் தொழிலில் ஈடு பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நாவலாக வடிவமைத் திருக்கிறார். கற்பனைக்கும் எதார்த்தத்திற்கும் மாறுபாடு காணமுடியாத விதத்தில் அவர் ‘தோல்’ நாவலை வடிவப்படுத்தியிருக்கிறார். மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகளையும், இயங்கும் முறைகளையும், வாழ்க்கைச் சிக்கல் களையும் உயிரோட்டமுள்ள ஒரு மொழி நடையில் நாவலாக அவர் வடிவமைத்திருக்கிறார்.

நாவலில் பலவிதமான மனிதர்கள் அவரவர் களுடைய சூழலுக்குத் தகுந்த வகையில் இயங்கு வதை அலங்காரப் பூச்சு எதுவும் இல்லாமல் சித்திரித்திருக்கிறார். வழக்கறிஞரும் தொழிற் சங்கத் தலைவருமான சங்கரனில் தொடங்கி கருங்காலி மிக்கேல்சாமி வரை 117 மனிதர்கள் இந்த நாவலில் உயிருடன் உலவுகிறார்கள் என்று குறிப்பிடலாம்.

தோல்பதனிடும் தொழில் முக்கியமான தொழில்களில் ஒன்று என்று குறிப்பிடுவதில் எவருக்கும் மாறுபட்ட ஒரு கருத்து இருக்க முடியாது. தோல் பொருட்கள் எல்லாவிதமான மக்களின் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் உடை யவையாக இருந்து வருகிறது. அதற்கான மாற்றுப் பொருட்களும் இன்று நடைமுறையில் பயன் பாட்டுக்கு வந்துள்ளதை அனைவரும் அறிவோம். ஆனாலும், தோல் பொருட்களின் தேவை சமு தாயத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அதன் முக்கியத்துவம் குறைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இருந்தாலும், அந்தத் தொழில் இன் றும் நடைமுறையில் இருந்துவருகிறது. அந்தத் தொழிலில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறார்கள்.

தோல் பதனிடும் தொழிலில் பலவகையான சிக்கல்களும், சிரமங்களும் இருந்துவருகின்றன. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரியத் தொழில் அல்ல. பலவகையான சமூகத்தைச் சேர்ந் தவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ளார் கள் என்ற உண்மையை இந்த நாவலின் வாயிலாக அறியலாம். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித் துவர்களும் இந்த நாவலில் பங்கு பெறுகிறார்கள். அவர்கள் பலவகையான சாதிகளைச் சேர்ந் தவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்களாக வந்து போகி றார்கள். அவரவருக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வாழ்க்கை பற்றிய உணர்வும் உள்ளன. பொருத்தமான உறவுகளைப் போலவே பொருத்தமில்லாத உறவுகளும் அவர்களுக் கிடையில் நிலவுகின்றன. உரசல்களும், மோதல் களும், அடிதடிகளும் பரவலாகக் காணப்படு கின்றன. மனித உறவுகள் எதார்த்தத்தை மீறாமல் இயல்பாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அறியாமை மிகுந்த அப்பாவிகளாக வாழ்ந்து கொண்டே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை உணர்த்தி அவர் களுக்கிடையில் நல்லுறவையும், ஒற்றுமையையும் உருவாக்கத் தொழிற்சங்கத்தினர் வாழ்க்கையைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள்.

தொழிற்சங்கம் போராட்டத்தின் பல வகையான தன்மைகளையும் இந்த நாவலில் காண முடிகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களின் உறுதி மிகுந்த அசைக்க முடியாத நம்பிக்கையை எதார்த் தமாகப் பார்க்க முடிகிறது. அன்பும், கருணையும், தியாகமும் நிறைந்த மனிதர்கள் இந்த நாவலில் உயிருடன் உலவுகிறார்கள். வன்மமும், குரூரமும், வக்கிரமும் உடைய மனிதர்களும் தங்களை நிலைப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். தனி உடைமையின் ஆதிக்க வெறியையும், இரக்க மில்லாத மனமும் உடைய மனிதர்களும் நாவலில் இயல்பு மீறாமல் இயங்குகிறார்கள். அதிகார வர்க்கத்தின் ஆதிக்க மோகமும், பாலியல் விகார மும் உழைக்கும் மக்களின் அடக்கமான வாழ்க் கையை எப்படியெல்லாம் சீர்குலைக்கின்றன என்பதை இயல்பு மீறாமல் நாவலாசிரியர் தனக்கே உரிய இயல்பான எளிமையான மொழியில் புலப் படுத்துகிறார். சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக உழைக்கும் மக்களை ஒருங் கிணைக்க உயிரையே பணயமாக வைத்துப் போராடும் தொழிற்சங்கவாதிகளையும் அவர் அடையாளம் காட்டுகிறார். கொத்தடிமை முறைக்கு உள்ளாக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாகும் தொழிலாளர்களின் அவலநிலையை நாவலில் பரவலாகக் காண்கிறோம். வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் தொழில் சூழலுக்குள் இயங்கும் வழியற்ற மனிதர்களின் நெருக்கடியான வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்திரித்திருக்கிறார் நாவலாசிரியர்.

காதல் வாழ்வின் மாறுபட்ட கோணங்களை உயிரும், சதையும் உள்ள மனிதர்களின் உணர்வு நிலைகளிலேயே நாவலாசிரியர் வெளிப்படுத்து கிறார். பரிதாபத்திற்குரிய மனிதர்களின் அன்பை யும், பாசத்தையும் பரவலாகத் தகுந்த சூழலுடன் இனம் காட்டுகிறார். வாழ்வதற்கான தாகம் மிகுந்த உணர்வுகளுடன் அதற்கு முரணாக உள்ள சூழல் களை மனிதர்கள் எப்படி எதிர்கொண்டு முன் னேறுகிறார்கள் என்பதை நாவலின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அழுத்தமாக மனதில் பதியும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடாக ஒவ்வொருவரின் குரலும் ஒலிக்கின்றன. முரண்பட்ட மனப் போக்குகள் முட்டிமோதி ஒன்று கலந்து கரைகின் றன. மனித உறவுகள் வளர்கின்றன.

சாராம்சத்தில் இந்த நாவல் அசலான மனிதர்களையும் அவர்களின் உழைப்பு சார்ந்த வாழ்க்கையையும், தவிர்க்க முடியாத வாழ்க்கைச் சூழலையும் துல்லியமாகக் காட்சிப்படுத்தி மன வெழுச்சியைக் கிளறிவிடுகிறது. முதலாளிகளும், தொழிலாளர்களும், அதிகாரிகளும், தொழிற் சங்கத்தினரும் அவரவருடைய தளங்களில் இருந்தபடி வாழ்க்கையை முரண்பாடுகளுக்கிடை யில் எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறார் நாவலாசிரியர். மனிதர்கள் நன்மையும் தீமையும் கலந்தவர்களாக இருக் கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் சுரண்டல் தன்மையுள்ள சமூகக் கட்டமைப்பைத் தோல் பதனிடும் தொழில் சூழலில் சார்புத் தன்மை இல்லாமல் பொது நிலையில் காலூன்றி இந்த நாவலை அவர் வடிவமைத்திருக்கிறார்.

நாவலில் சித்திரிக்கப்பட்ட மனிதர்கள் பலரும் எளியவர்களாக இருப்பதோடு ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அன்பு செலுத்துவதும் அது சாத்தியமில்லாத நிலையில் வம்பு வழக்குகளில் இறங்குவதும் அந்த மக்களுக்கு இயல்பு. நல்லுறவுகளுடன் வாழ்வது ஒன்றே அவர் களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. உறவுகள் முறிவதும், முறிந்த உறவுகள் திரும்பவும் இணை வதும் அவர்களுக்கு இயல்பானவை. பணஉறவு களுக்குச் சாத்தியமில்லாத சூழலில் அவர்கள் அன்பையும், பரிவையும், இரக்கத்தையும் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். வறுமைப்பட்ட வாழ்க்கைக்குள் அகப்பட்டுக் கொண்ட அந்த எளிய ஏழை மக்களுக்கு அதைக் காட்டிலும் வேறொன்று சாத்தியமாவதில்லை. ‘அகம் அறியாமல் பேசி முகம் அறியாமல் உறவாடும்’ அந்த மனிதர்கள் எவ்வளவு உன்னதமானவர் களாக இருக்கிறார்கள் என்று உணரும்போது வியப்பும், பெருமிதமும் தோன்றுகிறது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்துகொள்ளுவதற்காக அவர்கள் எப்படி யெல்லாம் தங்களை இழந்துவிடுகிறார்கள் என்ற அவலத்தை நாவலில் அடையாளம் காண முடிகிறது.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராட முடியாத நிலையில் கண்ணீர் விட்டு அழுது புலம்புகிறார்கள். அநீதிக்கு எதி ராகப் போராடும் மனிதர்களின் வாழ்க்கையைக் குறித்து அவர்கள் கலங்குகிறார்கள். அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட முடியாத நிலையில் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையையே சபித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரையும் அவரவர் தனித்தன்மை களோடு நாவலாசிரியர் அறிமுகப்படுத்தும் விதத் தில் கண்களைவிட்டு அகலமறுக்கும் ஓவியமாகக் காட்டுகிறார்.

காட்டாகப் பலவற்றையும் சொல்லலாம். குறிப்பாக, அவர் மாடத்தியை அடையாளப் படுத்துவதிலிருந்தே ஒவ்வொருவரைப் பற்றியும் எப்படிச் சித்திரிக்கிறார் என்பது புலனாகிறது.

“மாடத்தியோவெனில் அவனுக்கு நேர்எதிர் மாறான ஒருவிதமான முசுடுக்குணம் கொண்ட வள். தராதரம் பார்க்காமல் கூடப் பேசிவிடுவாள். மாடத்தி என்றால் சேரி வாலிபர்களுக்குக் கூடப் பயம்.”

“மாடத்தி கருப்பி என்ற போதிலும் தாடிக் கொம்பு அழகர் கோவில் சிலைகளைப் போன்ற வடிவழகு. வெற்றிலைச் சிவப்புக் கலந்த கனத்துத் தடித்த உதடுகளும், பேசத் துடிக்கும் நயனங்களும், தீபாவளி வெடி வெடித்தாற் போன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் அவளது தெறித்த பேச்சும் மாடத்திக்கு என்று தனி அழகு சேர்த்திருந்தது.” அழகும், அறிவும், ஆற்றலும் எங்குதான் இல்லை என்று சொல்வதற்கு இது ஒன்று போதும்.

வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் விரும்பியும், விரும்பாமலும் இணை சேர்ந்து இணங்கியும், முரண்பட்டும் வாழுகின்ற மனிதர்களின் கலைக் கூடமாகச் சமுதாயம் இயங்குவதை நாவலாசிரியர் மனம் நெகிழும்படியாக இதில் வடிவப்படுத்தி யிருக்கிறார். வாழ்க்கை சாதி, மத, இன அடை யாளங்களை மீறி எப்படி தீவிரமாக இயங்குகிறது என்பதை ஒருவித ஆய்வுக் கண்ணோட்டத்தில் கலைவடிவமாக்கியிருக்கிறார். கற்பனையான, உயிரில்லாத மனிதர்களின் உணர்வுகள் போல் அல்லாமல் வாழத்துடிக்கும் எதார்த்தமான உயிருள்ள மனிதர்களின் உணர்வுகள் நாவலில் பரவலாகப் பார்க்க முடிகிறது.

ஏசுவடியாளின் கடைசி ஆசையை நிறை வேற்றும் தாயம்மாளின் கருணை உள்ளம் இயல் பாக எதார்த்தமான நிகழ்வுகளில் வெளிப்படுத்தப் படுகிறது. நாவலில் வரும் மனிதர்கள் எல்லோரும் இன்றும் நெருக்கடியான சூழலுக்குள் வாழ்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாவல் நமக்குப் புலப்படுத்துகிறது. அன்பும், கருணையும், நீதியும் உள்ள மேல்தட்டு வர்க்க மனிதர்களையும் நாவலில் நாம் காண முடிகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் பின் னணியில் இயங்கிய சமுதாய, அரசியல் இயக்கங் களையும் இவற்றைச் சார்ந்தவர்களையும் அவர் நாவலில் உள்ளடக்கியிருக்கிறார். ஒவ்வொரு மதத்திற்குள்ளும், ஒவ்வொரு சாதிக்குள்ளும் உள்ள உள்முரண்களையும், அவற்றின் மோதல் களையும் எந்தவிதச் சார்பும் இல்லாமல் அதனதன் இயல்பில் நாவலில் முழுவதிலும் அவர் சித்திரித்திருக்கிறார்.

ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினை இருப்பதைச் சித்திரிக்கும் போது உழைக்கும் மக்களின் வாழ்க்கையே ஒரு போர்க்களமாக இருந்து வருகிறது என்ற உணர்வை நாவல் நம்முள் விளைவிக்கிறது.

தொழிற்சங்கத் தலைவனாக இயங்கும் சங்கரன் அக்ரஹாரத்தைச் சேர்ந்த மனிதன். அவனுடைய தலைமறைவு வாழ்க்கை அதற்கே உரிய தொனியோடு அழுத்தமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. சநாதன தர்மத்தை மீறியும் வாழ்க்கை உன்னதமான தன்மையுடன் இயங்குகிறது என்பதை சங்கரனின் தார்மீகக் குணத்தின் வாயி லாக அவர் நமக்குப் புலப்படுத்துகிறார்.

வியக்கத்தகுந்த, தவிர்க்க முடியாத இயல்பான வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடே மனிதக் கலாசாரமும், பண்பாடும் வளருகிறது என்பதை இந்த நாவல் எதார்த்தமான நிகழ்ச்சிகளின் வாயிலாக உணர்த்துகிறது. விரிவான ஒரு தளத்தில் இயங்கும் ஒரு வாழ்க்கையைத் திறந்த மனத்தோடு பார்க்கும் அனுபவத்தை இந்த நாவல் நமக்கு வழங்குகிறது. இயல்பான மனிதர்களின் இயல் பான உறவுகள் அவர்களுக்கே உரிய இயல்பான மொழியில் இயல்பான தொனியில் அடக்கமாக இந்த நாவல் வடிவம் பெற்றிருப்பது ஓர் அரிய முயற்சியின் விளைவே. இதுவரை அறியப்படாத ஒரு வாழ்க்கையை, அதில் அங்கம் வகிக்கும் இயல்பான மனிதர்களோடு இந்த நாவல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. முழுவதுமாக மாறுபட்ட ஒரு வாசிப்புக்கு நம்மை இந்த நாவல் இட்டுச் சென்று மனநெகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.

Pin It