கடந்த 3-12-2011 அன்று சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தனது வைர விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. மத்திய அமைச்சர், ஜி.கே.வாசன், டாக்டர் நல்லி குப்புசாமி, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இந்த விழா - அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள், நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்பாளர்கள் திரண்ட நிலையில், காலை 10.30 முதல் இரவு 7.00 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.

அனைத்துப் பெருந்தகைகளும் வாழ்த்துரை வழங்கினர்; தகுதியோரான அறிஞர்கள், எழுத் தாளர்களையும் முன்னாள், இந்நாள் ஊழியர் களையும் தோழர்கள் கௌரவித்தனர்.

இந்த விழா எதற்கு?

விரைந்து ஓடிக்கொண்டிருக்கிற வரலாற்று ஓட்டத்தில் சற்று நின்று இந்த நிறுவனத்தின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் தன்னலம் பாராது தங்கள் அறிவு உழைப்பையும், உடல் உழைப்பையும் அர்ப்பணித்த, இன்றும் அர்ப்பணித்துவரும் உயர்ந்த மானுடர்களை நினைவு  கூர்வதுடன் பழைய, புதிய செயல்பாடுகள் இரண்டையும் அசைபோட்டு மகிழ்ந்து, புதிய சமூக, வரலாற்றுத் திட்டங்களுக்கு வித்திடுகிற வேளையாகவே இந்த வைரவிழா வேளையை நாம் கருத வேண்டியுள்ளது.

‘கருத்து மக்கள்திரளைப் பற்றிக்கொள்ளும் போது, அது பருப்பொருள் ஆற்றலாகி விடுகிறது’ என்ற கார்ல்மார்க்ஸின் சொற்றொடரை ஒட்டி, சமூகத்தின் - அதாவது, இன்று இங்குள்ள சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிற நோக்கில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் அரசியல், பொரு ளாதாரம், மெய்யியல், அறிவியல், சமூகவியல், இலக்கியம், பண்பாடு ஆகிய துறைசார் நூல்களை எழுதுவித்து, மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்து சமூகத்தில் மிகப்பெரும் அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சமூக விழிப்புணர்வு என்பது வரலாற்றுக் கோட் பாட்டுப்படி நிச்சயம் சமதர்மமாக மலரும்.

இவ்வாறு சமூக மலர்ச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் நூல்களை அறிஞர்கள் திறனாய்வு செய்வது, விவாதம் செய்வது, அதன் மூலம் வாசகர்களின் சிந்தனையைக் கிளரச் செய்வது என, ‘நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்’ இதழும் சமூக மேம்பாட்டுக்கான தனது சிறு பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வருகிறது.

இந்த வரலாற்று ஓட்டத்தில் செல்லும் கருத்துநிலைப் போரில் எங்களுக்குத் தூண்களாக விளங்கும் அறிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், நூலின் கையெழுத்துப் பிரதியாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வளாகத்துக்குள் நுழையும் வேளை முதல், அது நூல் வடிவம் பெற்று வாசகரைச் சென்றடைவது வரை அப்பணித் தொடரில் தத்தமது பணியைச் சிறப்பாகப் பங்களித்து வரும் அனைவருக்கும் ‘நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்’ இதழின் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி!
Pin It