அல்கெய்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை மே 1-ஆம் தேதி பாகிஸ்தான் ஆபோட்டாபாத் நகரில் கொன்றுவிட்டோம் என்று வடஅமெரிக்க அரசின் அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். ‘ஜெரோனிமா’ என்று பெயரிடப்பட்ட அந்நடவடிக்கையை அமெரிக்கக் கடற்படை வரிசையின் ஆறாவது பிரிவு அதிரடித் தாக்குதல் வீரர்கள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. அதனால் அமெரிக்காவில் அவருடைய செல்வாக்கு சரிவடைந்துவிட்டது. ஒபாமா வரும் தேர்தலில் வெற்றி யடைவதற்கும் தன் செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கும் பின்லேடனைக் கொன்று விட்டதாகக் கூறுகிறார் என்ற விமர்சனம் அமெரிக்காவிலிருந்தே வரத் தொடங்கி விட்டது.

பின்லேடனைக் கொன்றுவிட்டதை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கொண்டாடுவதற்காக ஒபாமா இரவு விருந்தை ஏற்பாடு செய்தார். அவ் விருந்தில் பேசும்போது, “அமெரிக்கா இப்போதும் எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கின்றது என்பதை இந்நடவடிக்கை மூலம் நிரூபித்துவிட்டது” என்று கூறியிருக்கிறார். ஊடகங்களும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் அமெரிக்காவின் ‘திருப்பணி’யை ஏற்றிப் போற்றிப் பரவுகின்றன. ஆனால் இசுலாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தைப் பிறப்பித்து ஊட்டி வளர்த்ததே அமெரிக்காதான் என்று நாம் கூறினால் பலரும் வியப் படையலாம்.

வரலாற்றில் சற்று முன்செல்வோம். 1950களுக்குப் பிறகு அரபு உலகமெங்கும் தேசிய விடுதலைப் புரட்சிப் புயல்கள் தோன்றின. இப்புயல்கள் 1950களில் புதிய உலக ஆட்சி யாளராகத் தோற்றமெடுத்த வடஅமெரிக்கப் பேரரசின் ஆதிக்கத்தைத் தூக்கியெறிய எத்தனித்தன. அரபு தேசிய விடுதலை இயக்கங்களில் பொதுவுடைமை இயக்கத்தினரே முன்னணியில் நின்றனர். நாத்திக பொதுவுடைமை இயக்கப் பரவலைத் தடுப்பதற்கு வடஅமெரிக்கப் பேரரசு கடவுளின் பேரால் ஜிகாதி இயக்கங்களைத் தோற்றுவித்து வளர்த்தது. குறிப்பாக ஆப்கானில் நிறுவப்பட்ட நஜிபுல்லா தலைமையிலான பொதுவுடைமை அரசிற்கு எதிராக அமெரிக்கா 1979-இல் தோற்றுவித்து ஊட்டி வளர்த்த இயக்கமே பின்லேடனின் அல்கெய்த. இன்று தான் தோற்றுவித்த பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடுவதாகக் கூறிக் கொண்டு ஆப்கான், ஈராக் நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்து உள்ளது. இப்போது பாகிஸ்தானும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குள்ளான நாடு என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையிலிருக்கும் கனிமவளப் பகுதிகளை நேரடி ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்க இராணுவம் வெளித் தெரியாத இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தது. அந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு இருந்தது. இப்போது நிறைவேறியிருக்கும் ‘பின்லேடன் கொலை நடவடிக்கை’ அப்பகுதி அமெரிக்க இராணுவத்தின் பிடியிலிருப்பதைக் காட்டுகின்றது. இந்நடவடிக்கையால் பாகிஸ்தானின் அமெரிக்க அடிவருடி அரசு குட்டு வெளிப்பட்ட திருடனைப் போன்று என்ன சொல்வது என்றே தெரியாமல் திருதிருவென்று விழிக்கின்றது.

அமெரிக்க அரசு பின்லேடனைக் கொன்ற அதிரடித் தாக்குதலுக்கு ‘ஜெரோனிமா’ என்று பெயரிட்டுள்ளது. ஜெரோனிமா அமெரிக்கத் தொல்குடிப் போராளி; அமெரிக்க அரசு தொல்குடி நிலங்களைத் திருடிக் கொண்டதற்கு எதிராகப் போராடிய அப்பாச்சி இன மக்களின் தலைவர். அமெரிக்க இனவெறி அரசு உறுதி மொழிகள் கொடுத்துப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவரைக் கைது செய்தது. கடும் உழைப்பு தண்டனை அளித்துக் கொடுமைப்படுத்தியது. ஒரு சுதந்திரமான நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானுள் புகுந்து அமெரிக்கா தனக்குச் சரியென்று பட்டதைச் செய்து முடிப்பதற்கு ‘ஜெரோனிமா’ பெயரை வைத்திருப்பது ஒரு கேலிக்கூத்து; ஜெரோனிமாவை அவமானப்படுத்துவது ஆகும். சுதந்திரத்தின் அடையாளமான ஜெரோனிமாவை பேரரசின் ஆதிக்கவெறி அடையாளமாக மாற்ற முயல்கிறது அமெரிக்கா.

இசுலாமிய அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்து ஊட்டி வளர்த்த அமெரிக்க அதிகார வர்க்கம் ஒருபோதும் இசுலாமிய அடிப்படைவாதத்தை, பயங்கரவாதத்தை அழிக்காது; அழிக்கவும் முடியாது; ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் பல நாடுகளை ஆக்கிர மிக்கவும், உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கவும் மட்டுமே செய்யும். இசுலாமிய அடிப்படை வாதத்தை விடுதலைக்குப் போராடும் அரபுலக மக்களே முழுமையாக ஒழித்துக் கட்ட முடியும். ‘பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறேன்’ என்ற பெயரில் அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதை எதிர்ப்பது அவசியம். ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பறிக்கும் ‘பின்லேடன் கொலை நடவடிக்கை’ போன்ற ஆதிக்கவெறி சாகச நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

Pin It