ஒவ்வொரு பொருளுக்கும் வரலாறு உண்டு. அவ்வகையில் செருப்பின் வரலாற்றைக் கூறுவது, ‘செருப்பு’ (ஒரு வரலாற்றுப் பார்வை) என்கிற ஜெயவீரதேவனின் நூலாகும். இதில் எட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை செருப்பின் ஆரம்பகால வரலாறு முதல் தற்காலத்தில் அதன் பயன்பாடு, தொழில்முறைகள் வரை விளக்குவதாக அமைந்துள்ளன. முதல் இரண்டு கட்டுரைகளில் தோலில் உற்பத்தி செய்யப்படும் கருவிகள், அதன் பயன்பாடு பற்றி வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளாக விளங்குகின்றன. வேளாண் பயன்பாட்டையும் அவை புழங்கப்படும் பகுதிகளில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படுத்து கின்றன.

மூன்றாவது கட்டுரையில் செருப்பின் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. பண்டைய இலக்கியங்களையும் வரலாற்று நூல்களையும் களஆய்வில் கிடைக்கப் பெற்ற தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு செருப்பின் வகைகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. சாதாரண விவசாயி பயன்படுத்தும் செருப்பு முதல் எலிசபெத் ராணி அணியும் செருப்பு வரை இக்கட்டுரை வகைப்படுத்துகின்றது.

நான்காவது கட்டுரை, பண்பாட்டில் செருப்பின் முக்கியத்துவத்தைப் பேசுகின்றது. இந்நூலில் மிக முக்கியமான கட்டுரையாக இதைக் கூறலாம். பல மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது. பார்ப்பனர்கள் மிக உயர்வானவர்களாகக் கூறிக்கொள்ளும் சூழலில் கட்டுரையில் கூறப்பட்டுள்ள பின்வரும் செய்தி வியப்பூட்டுவதாக அமைந்துள்ளது. “அக்காலத்தில் மைசூர் பார்ப்பனர்கள் தாழ்ந்தவர்களான ஹோலியர் களின் சேரிகளுக்குள் சென்றால் தமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் எனக் கருதிக் கூட்டமாக ஹோலியரின் சேரிக்குள் செல்வர். அப்போது ஹோலியர்கள் பார்ப்பனர்களைச் செருப்பால் அடித்துத் துரத்துவர். இதன்மூலம் பார்ப்பனர்கள் ஹோலியரிடம் செருப்பால் அடிவாங்குவதை மரியாதையாகக் கருதியதை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது” இவ்வாறு இருந்த சூழலில் தான் கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்பகுதிகளில் தாழ்ந்த சாதியினர் செருப்பு அணியக்கூடாது என்கிற நிலையும் இருந்துள்ளது.

இந்தியப் பண்பாட்டில் செருப்பு பற்றிய முக்கியத்துவத்தை விளக்கும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள வரலாறு மற்றும் கதைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை உரிய இடத்தில் கொடுக்கப் பட்டிருப்பின் மேலும் இச்செய்திகள்பற்றி அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருந்திருக்கும்.

ஐந்தாவது கட்டுரை, செருப்பு தொடர்புடைய தொன்மக் கதைகளைக் கூறுகின்றது. இக்கட்டுரையில் பிற சமூகத்தவரோடு சக்கிலியர்களுக்கு இருந்த உறவைத் தெளிவுபடுத்துகின்றது. கிருஷ்ணரோடு தொடர்புடைய தொன்மக் கதைகளே வழக்கில் இருக்கின்றன. அக்கதைகளில் செருப்பு தைக்கும் தொழிலைக் கிருஷ்ணரே சக்கிலியர்க்குக் கொடுத்த தாகவும் பிரதிபலனாக அவர்கள் மாட்டிறைச்சியைப் படைத்ததாகவும் அதனை ஏற்று அருள் புரிந்தார் என்றும் கூறுகின்றன. இக்கதையைப் படிக்கும் போது கிருஷ்ணர் சைவராக, மாடு புனித உயிராகக் கற்பிக்கப்பட்ட காலம் எது? அல்லது அருந்ததியரின் கிருஷ்ணர் மட்டும் மாட்டிறைச்சியை ஏற்றுக் கொண்டாரா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

இறுதி மூன்று கட்டுரைகளில் தோல் தொழி லாளர்களின் நிலை, தொழில் முறை, உற்பத்தி, வணிகம் முதலியனவற்றை விவரிக்கின்றன. பொருளா தாரம் உள்ளவர்கள் கொள்முதல் செய்பவராகவும் வணிகர்களாகவும் விளங்குகின்றனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் உற்பத்தியாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் வாழ்வாதாரத்திற்காக உழைப்பவர்களாகவும் உள்ளனர். வணிகம் என்கிற நிலையில் இத்தகைய வர்க்க வேறுபாடுகள் இயல்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலை பொருளுக்கான உற்பத்தி வாணிபத்திற்கும் பொருந்தும்.

ஓர் இனத்திற்கான தொழிலாக இருந்த நிலை மாறி அவர்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர் களாக மாற்றிப் பிற மேட்டிமை சமூகங்கள் வணிக நடவடிக்கைகள் மூலம் முதலாளிகளாகப் பரிண மித்தனர். இந்த நிலையைத் ‘தோல் வணிகம்’ கட்டுரையில் ஆய்வாளர் விளக்குகின்றார். “எந்த வொரு ஒதுக்கப்பட்ட தொழிலும் வணிக முக்கியத்துவம் மற்றும் பொருளாதார ரீதியில் லாபகரமான தாக மாறும்பொழுது தாழ்த்தப்பட்டவர்களிட மிருந்து பறிக்கப்படுகின்றது” அது கடவுளால் கொடுக்கப்பட்ட வாழ்வாதாரமாக இருப்பினும் பொருந்தும்.

இந்நூல் தமிழ்ப் பண்பாட்டில் செருப்பு என்னும் புழங்கு பெறும் இடம் பற்றிய முன்னோடி ஆய்வாக அமைகின்றது; வாசகர்களுக்குப் பல அரிய செய்திகளை வழங்குகின்றது; இனி வரும் ஆய்வுகளுக்கு ஒரு முக்கியமான ஆவணத் திரட்டாகவும் விளங்குகின்றது.
Pin It