மராத்தி மூலம்: சரண்குமார் லிம்பாலே
ஆங்கிலத்தில்: பிரியா அதர்கர்
தமிழில்: அன்பாதவன்

கேட்கவில்லை
உங்கள் வானத்திலிருந்து
சூரியனையோ சந்திரனையோ

உங்கள் பண்ணையை, நிலத்தை
உங்களின் உயரமான வீடுகளை
மேன்ஷன்களைக் கேட்கவில்லை

நான் கேட்கவில்லை
பொருட்களையோ, சடங்குகளையோ
சாதிகளை அல்லது உட்பிரிவுகளை

உங்கள் அன்னையரையோ
சகோதரிகளையோ மகள்களையோ
கேட்கவில்லை

நான் கேட்பதெல்லாம்
மனிதனாக எனது உரிமையை

எனது நுரையீரலிலிருந்து எழும்
ஒவ்வொரு சுவாசமும்
உங்கள் நூல்களில், பாரம்பரியங்களில்
நரக, சொர்க்கங்களில்
அச்சமூட்டும் மாசுகளால்
உண்டாக்குகின்றன பயங்கர அதிர்வுகளை

எங்களின் உறைவிடங்களை சிதிலமாக்க
திரளுகின்றன உங்கள் கைகள்
அடிப்பீர்கள் என்னை உதைப்பீர்கள்
சூறையாடி எரிப்பீர்கள் எங்கள் வீடுகளை

ஆனால் எங்ஙனம் கிழிப்பீர்கள்
கிழக்கில் ஆதவனைப்போல
விதைக்கப்பட்டிருக்கும்
என் வார்த்தைகளை...?

ஜாதிக் கலவரமெனும் தொற்றுநோய்
நகரம் நகரமாக
கிராமம் கிராமமாக
மனிதர் மனிதராக புரையோடும்
பூட்டப்படவும் விலக்கப்படவும்
சாலை மறிக்கப் படவும்
புலம் பெயர்க்கப்படவும் என...

எனது உரிமைகள் எனக்குத் தேவை
தாருங்கள் என் உரிமைகளை

மறுக்க முடியுமா உங்களால்
இப்படி கொளுத்தப்படும் நிலையை

பிடுங்கி யெறிவேன்
ரயில் தண்டவாளங்களைப் போல
வேத நூல்களை
நகரப் பேருந்தைப் போல எரிப்பேன்
நியாயமற்ற உம் நியாயங்களை

எனது உரிமைகள் உதிக்கின்றன
சூரியனைப் போல
மறுக்க முடியுமா உங்களால்
இந்த சூர்யோதயத்தை...?

Pin It