அன்புள்ள ஐயாவுக்கு, வணக்கம்.

அண்மைய எனது அனுபவத்தை உங்களோடும் இதழின் வாசக நணர்பகளோடும் பகிர்ந்துகொள்ள வேண்டி இம்மடலை எழுதுகிறேன்.

விரும்பத்தகாதவைகளைத் தவிர்ப்பதற்காக தனி இருக்கையாகத் தேர்வு செய்து முன்கூட்டியே பேருந்து டிக்கட்டை பதிவு செய்வது வழக்கம். பள்ளி ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் இம்முறை எனக்கு அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 22-11-2006ஆம் நாளன்று தீபகற்ப மலேசியாவின் தென்மாநிலமான சொகூரிலிருந்து வடக்கு நோக்கிப் பயனிக்கவிருந்த பேருந்தில் ஏறினேன். மண்டை நிரம்பிய எண்ணங்களோடு முன்னரே பதிவு செய்திருந்த எனது இருக்கையில் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் 'தமிழ் பேசறவங்க யாருமில்லையா?’ என்று வினவிக்கொண்டே வெள்ளை அரைக்கைச் சட்டையோடு மகமதிய அடையாளங்களான வெள்ளைக் குல்லா, நீண்டு நரைத்திருந்த வெண்தாடியோடு கூடிய பெரியவர் ஒருவர் தன் இருக்கையைத் தேடி முன்னும் பின்னும் நடந்த வண்ணம் இருந்தார். அவர் கையிலிருந்த பயணச் சீட்டை வாங்கிப் பார்த்து, என்னருகில் அமரும்படி கூறினேன். நன்றி சொல்லி அமர்ந்தார். தமிழ் நாட்டில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அவர் நண்பர்களைச் சந்திக்க வேண்டி பினாங்குத் தீவு நோக்கிச் செல்வதாக விவரித்தார். மாந்தநேயம் தவிர்க்கும் மதங்களை மறுக்கும் நான் ஒரு இயக்கவியல் பொருள் முதல்வாதி என்று என்னைச் சொல்லி வைத்தேன்.

பேருந்து நகரத் தொடங்கியதும் சன-பிப் 2006, கவிதாசரண் இதழைப் புரட்டினேன். ''மலேசியாவிலும் கவிதாசரண் விற்பனைக்கு கிடைக்கின்றதா? இங்கு உள்ளவர்களும் கவிதாசரண் படிக்கின்றார்களா!’ என்ற வியப்பு மொழி கேட்டு அப்பெரியவரின் முகத்தை ஊடுருவினேன். ஆனால், அவரின் முகக் குறிப்பிலிருந்து எதனையும் என்னால் படிக்க முடியவில்லை. முதுமையான இவரும் கவிதாசரண் வாசகர் போலும் என்றெண்ணி மகிழ்ந்தேன். தோழர் ஒருவரின் முயற்சியில் இதழ்கள் பெற்றுப் பயனடைகிறோம் என்று பதிலுரைத்தேன். ''ஒரு காலகட்டத்தில் சிறப்பாக இருந்த கவிதாசரண் நாளடைவில் தரம் குறைந்து விட்டது, அதன் ஆசிரியர் ஒடுக்கப்பட்டவர். அவர் ஒரு தலித்” என்றார். வியப்படைந்த நான் தொடர்ச்சியினைக் கேட்க ஆர்வமானேன். ''தான் சார்ந்த தலித் சமூகத்தைப் பற்றி எழுதுவதால்தான் கவிதாசரணின் தரம் குறைந்து சரியாக விற்பனையாகாத நிலைக்கு வந்து விட்டது” என்றார். பார்ப்பன மஞ்சள் கலாச்சார இதழ்களை வரிசைப்படுத்தி, அதனோடு ஒப்பிடுகையில் கவிதாசரண் விற்பனை ஆவது மிகவும் சிரமம் என்றார். ஆகையால் கவிதாசரண் விற்பதையே நிறுத்திவிட்டேன் என்றார்.

அவரின் நோக்கம், கொள்கை, முயற்சியினை அறிந்துகொண்டதும் மனிதப் புரிதலில்லாதவரிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று முடிவெடுத்தேன். ''அயர்வாக இருக்கிறது. எனவே இமை மூடப் போகிறேன்”என்று நொண்டிக் காரணம் சொன்னேன். உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக வினையாற்றும் ஒருவர் கட்டாயம் ஒரு தலித்தாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்ன விதி என்று யோசிக்கலானேன்.

முகமது அவர்கள் மாமதீனத்தில் வாழ்ந்த சமயம் அது. வைகறைத் தொழுகையின்போது காற்றில் தவழ்ந்து செவியேறிய பாங்கோசை, நபித் தோழர் பிலால் அவர்களின் குரல் வளம் அல்லவா! இசுலாம் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்டது என்பதனை முசுலிம் நண்பர்கள் வழி அறிந்தது உண்டு. பிலால் அவர்கள் அடிமையாக்கப்பட்டு கொடுமையாக நடத்தப்பட்டதைக் கண்ட அண்ணலார், அவரின் விடுதலைக்கு வழிகோலியதை ஓரளவுக்கு படித்தும் இருந்த எனக்கு, பார்ப்பனியம் எங்குமுள்ளது என்ற போராளி அம்பேத்கரின் கருத்து நினைவிற்கு வந்தது. கவிதாசரண் இதழை மார்போடணைத்தபடியே உறங்கிப்போனேன்.

தாழ்த்தப்பட்டு வீழ்த்தப்பட்ட சமூகத்தினர்பால் அக்கறை கொண்டு அவர்களின் உரிமைக்காகத் தங்களது பொருளையும் ஆற்றலையும் செலவிட்டு பாடாற்றுவோர் எல்லாம் தலித்தாகத்தான் இருக்க வேண்டுமென்று ஏதும் வரையறை உள்ளதா? இழிவு எண்ணம் கொண்ட இத்தகையவர்களைக் கண்டு வெட்கப்படத்தான் வேண்டியுள்ளது. அடக்கி ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கு எழுதவும் பேசவும் சமத்துவ சிந்தனையும், மாந்தப் பற்றும், அனைவரும் சமம் என்ற சோசலிச நெறியுமே போதுமானவை. இப்புரிதல் இவர்களுக்கு ஏற்படாதவரை தமிழால் ஒன்றுபடுவோம் என்பது வெற்று முழக்கமாகவே இருக்கும். சாதி மதம் என்பதன் பேரால் தமிழர்க்குள்ளேயே குத்து வெட்டு தொடர்வதும் தவிர்க்கப்பட முடியாமலேயே நீளும். தங்களின் அறிவு கொளுத்தும் பணியினைத் தொடர்ந்து முன்னெடுங்கள். எங்களை ஒத்தவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு.

Pin It