ஒரு மொழிபெயர்ப்பு நூலைத் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்வதில் நிறைய தயக்கங்கள் ஏற்படுகின்றன. முதலாவதாக, மூல நூலைப் படித்திருக்க வேண்டியது அவசியமா, இல்லையா? இத்தாலிய எழுத்தாளர் “ப்ரைமோ லெவி” “தன்னுடைய எழுத்தாக்கங்களின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி விமர்சிப்பவர்கள்” பெரும்பாலும் “it reads good“ என்று மாத்திரம் கூறி நிறுத்திக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டிருப்பது தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. “இலக்கு” வாசகர்களையும் (target readers) கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். மொழிபெயர்ப்பில் பல வகைகள் உண்டு. வரிக்கு வரி மொழிபெயர்த்தல், தரப்பட்டுள்ளதன் சாரத்தை இலக்கு மொழியில் கொண்டு வருதல், இவ்வாறாய். எத்தனை துல்லியமாய் மொழிபெயர்த்தாலும் மூலத்தின் “தொனி”யையும் “பாவ”த்தையும், உள்ளடக்கத்தையும், வரியிடை வரிகளையும், கால தேச வர்த்தமானங்களையும் முழுமொத்தமாக இலக்கு மொழியில் மொழிபெயர்த்துவிட இயலாது என்ற கருத்து பரவலாக உள்ளது. அதேபோல் வேறொரு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர், ஆங்கிலத்திலிருந்து நம் மொழிக்கு வரும்போது இழப்புகள் இரட்டிப்பாகின்றன என்ற கூற்றும் உண்மையானதே.

இந்நிலையில், ஒரு மொழிபெயர்ப்பு நூலைப்பற்றிய மதிப்புரை எவ்வாறு அமைய வேண்டும்? ஒரு மொழிபெயர்ப்பு நூலின் மதிப்புரையில் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விஷயம் எது? மூலநூலின் உள்ளடக்கமா? அல்லது அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் விதமா? உள்ளடக்கத்தின் மொழிபெயர்ப்புச் சீர்மையைச் சரிபார்க்க மூலநூலை வாசித்திருப்பது அவசியம் என்றே படுகிறது. ஆனால், முன்னூறு பக்க மூலநூலின் மொழிபெயர்ப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணக் கிடைக்கும் மொழிபெயர்ப்புப் பிழைகளை, விடுபடல்களை பூதாகாரமாக்கிக் காட்டுவது சரியா? அங்கொன்றும் இங்கொன்றும் என்றால் சரி.

வரிக்கு வரி பொருட்குற்றமிருந்தால்...? எப்படியிருந்தாலும், ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பினைத் திறனாய்வு செய்ய அதன் மூலத்தை வாசித்திருப்பது அவசியம் என்றே தோன்றுகிறது. அதை வாசிக்க வழியில்லாத நிலையில் மதிப்புரை தரலாமா? கூடாதா? தரலாம் என்றால் அதற்கு என்ன அணுகுமுறைகள்? “வாசிக்கும்போது நம் மொழியில் சரளமாகப் படிக்க முடிகிறதா? முன்வைக்கப்பட்டுள்ள விஷயங்களைக் கோர்வையாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறதா?” என்பதாய் ஒன்றிரண்டு உடனடியாய் நினைவுக்கு வருகின்றன.

Decolonising the Mind: The Politics of Language in African Literature என்ற நூல் உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க (கென்ய) எழுத்தாளர் “கூகி வா தியாங்கோஃவால் எழுதப்பட்டது. 1977இல் “இரத்த இதழ்கள்” என்ற தலைப்பிட்ட இவரது படைப்பு வெளியான பிறகு ஆங்கில மொழியில் படைப்பாக்கங்கள் எழுதுவதை நிறுத்திக்கொண்ட “கூகி” அதற்குப் பிறகு தனது தாய்மொழியான கிகூயூ மற்றும் ஸ்வாஹிக மொழிகளிலேயே எழுதுவது என்று தீர்மானமாய் இயங்கி வருபவர். அத்தகைய தீர்மானங்களை அவர் மேற்கொள்ளக் காரணமாய் இருந்தவைகள்பற்றி இந்நூகல் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

“ஆப்பிரிக்க யதார்த்தம் குறித்த ஆய்வுகள் பல காலமாக இனக்குழுக்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும், “இத்தவறான விளக்கமுறை” தொடர்ந்து பிரபலமாக்கப்பட்டு வருவதன் காரணம் “ஆப்பிரிக்காவின் சிக்கல்களுக்கு அடிவேர் ஏகாதிபத்தியம் என்பதை மக்கள் உணரவிடாமல் தடுப்பதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கும் அக்கறையும் முனைப்புமே” என்றும் தனது முன்னுரையில் குறிப்பிடும் கூகி, “மொழிவழி, அதாவது காலனிய ஆதிக்கத்தின் கீழ் வரும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நாடுகளின் மொழியைப் பரப்பி, அவ்வப்பகுதிகளில் புழங்கிவரும் மொழிகளை மதிப்பழிப்பதன் மூலம் எப்படியெல்லாம் மக்கள் காலனியச் சிந்தனைகளின் அடிமைகளாக் கப்பட்டு, பல வகையிலும் சுரண்டப்படுகிறார்கள்” என்பதை, மிகையுணர்ச்சிக் கூற்றுகளோ முழக்கங்களோ இல்லாமல் ஆய்வுபூர்வமாக நூல் முழுவதும் அகல்விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

1962இல் மெகரெரே பல்கலைக் கழகக் கல்லூரியில் (கம்பாலா, உகாண்டா) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார் கூகி. “ஆங்கிலத்தில் எழுதும் ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடு” என்ற அக் கூட்டத்தின் தலைப்பே ஆப்பிரிக்க மொழி எழுத்தாளர்களைப் புறந்தள்ளிய விதம் கூகியின் மனத்தில் “மொழிவழி நடந்தேறும் காலனிய ஆதிக்கம்” குறித்த சிந்தனைகளைக் கிளர்த்துகிறது. இரண்டே இரண்டு சிறுகதைகளை வெளியிட்டிருந்த தான் ஆங்கிலத்தில் எழுதிய காரணத்தால் அந்த சிறப்பு மிக்க மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்ததையும், ஆனால் கிஸ்வாஹிக மொழியில், யொரூபா மொழியில் மிகச்சிறப்பாக எழுதிவரும் படைப்பாளிகளுக்கு அந்த அரங்கில் இடமில்லாமல் போனதையும் எண்ணிப் பார்க்கும் கூகி அதன் தொடர்ச்சியாக “காலனி ஆதிக்கம் எவ்வாறு ஆப்பிரிக்கர்களுடைய மொழிகளைக் குறித்த கேவலவுணர்வை அவர்களிடமே தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது” என்பதையெல்லாம் ஆழ்ந்து அவதானிக்கத் தொடங்குகிறார்.

“என்னைப் பொறுத்தவரை ஆன்மாவை ஈர்த்துக் கைது செய்வதில் மொழி மிக முக்கிய ஊடகம் ஆகும். துப்பாக்கி ரவை உடலை வருத்திப் பணிய வைக்கும் சாதனம். மொழி, ஆன்மிக அடிமைப் படுத்தலுக்கு வழி வகுக்கும்,” என்று குறிப்பிடும் கூகி, காலனிய ஆதிக்கத்திற்கு முந்தி தனது பெரிய குடும்பத்தில் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டு வந்த கதைகளின் தன்மைகள் 1952இல் கென்யாவில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டு, பள்ளிகளைக் காலனிய ஆட்சி கைப்பற்றியதும், எவ்விதம் உள்ளார்ந்த அளவில் மாற்றப்பட்டன, மதிப்பழிக்கப்பட்டன என்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறார். முறைசார் கல்விமொழி ஆங்கிலமாக்கப்பட்ட பின் பள்ளி வட்டாரத்தில் கிகூயூ மொழியில் பேசிப் பிடிபடுவது அதிமோசமான, அவமானம் நிறைந்த அனுபவமாக மாறியதை அவர் விவரிக்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது.

கூகி தனது நூலில் விவரிக்கும் மொழிசார் அத்தனை அரசியலும், அடக்குமுறைகளும் வெவ்வேறு வழிகளில் இன்று பல நாடுகளிலும் நடந்து வருவதுதான். சமகாலச் சிக்கல் ஒன்றை இத்தனை தெளிவாக கூகி எடுத்துரைப்பதன் வழியாக “மொழிப்பற்று, மொழிசார் அரசியல்” முதலியவற்றையெல்லாம் முன்னெடுத்துச் செல்வோர் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எத்தகையனவாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சுட்டுகிறார். அவர் முன்வைக்கும் வாதங்களில் மொழிசார், மக்கள்சார் ஆழ்ந்த பற்று வெளிப்படுகிறது.

ஆப்பிரிக்காவில், கென்யாவில் மொழிவழியான காலனியாதிக்கத்தை எதிர்த்துப் பாமர மக்களும் அறிஞர்களும் ஒன்றிணைந்து நடத்திய பல இயக்கங்கள், போராட்டங்களை இந்த நூல் நமக்கு விளக்கமாக அறிமுகப்படுத்துகிறது. நூலின் இரண்டாவது அத்தியாயமாக இடம் பெறும் “ஆப்பிரிக்க அரங்க மொழி”யில் 1976இல் தனது கிராமமான காமிரீத்துவைச் சேர்ந்த ஒரு மூதாட்டியின் தூண்டுதலால் அங்கு பாழடைந்து கிடந்த மனமகிழ் மன்றம் போன்ற இடமொன்றை காமிரீத்து சமூகக் கல்வி- பண்பாட்டு மையமாக்கி, ஒட்டுமொத்த கிராம மக்களும் பங்கேற்கும்படியாக நாடக உருவாக்கத்தை அமைத்து, அதன் மூலம் மக்களிடையே நாடு, மொழிசார் எழுச்சியுணர்வை அவரும் ஒத்த சிந்தனையுடைய பிறரும் உருவாக்கியது பற்றி விவரிக்கும் பாணி சுவாரசியமாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. 1982, மார்ச்11 அன்று காமிரீத்து மையம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது.

மார்ச் 12ஆம் நாள் மூன்று லாரிகளில் காவல்துறையினர் வந்து, காமிரீத்து சமூகக் கல்வி, பண்பாட்டு மையத்தின் திறந்தவெளி அரங்கைத் தரைமட்டமாக்குகின்றனர். கூகி சிறையில் தள்ளப்படுகிறார். வேறு பலரும் விசாரணையின்றி சிறைக்காவலில் வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். சிறையில் அமர்ந்தபடி கூகி இலக்கியத்துறையில் தனது பணி பற்றி ஆழ்ந்து யோசிக்கிறார். நவகாலனிய அரசு, எழுத்தாளரைக் கைது செய்வதன் நோக்கம், அவருக்குத் தண்டனை வழங்குவதோடு அவரை மக்களிடமிருந்து தனிமைப் படுத்துவதுமாகும். இந்தச் சதித்திட்டத்தை முறியடிக்கும் முகமாய் கூகி, சிறையில் மலம் துடைக்கும் தாளில் கிகூயூ மொழியில் எழுதிய புதினமே “Devil on the Cross.” 1980 ஏப்ரலில் வெளிவந்த இந்தப் படைப்பு 1980 டிசம்பருக்குள் 15,000 படிகள் விற்பனையாகியிருந்தன! தங்கள் மொழியில் எழுதப்பட்ட படைப்பாதலால் மக்கள் அதைப் பலரும் அறியச் செய்யும் முயற்சிகளைத் தாங்களே மனமுவந்து மேற்கொண்டனர் என்கிறார் கூகி.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான இந்தப் படைப்பு கூகிக்குப் புகழோடுகூட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும் வரவாக்கியது. இந்தப் படைப்பு ஆங்கிலம், ஸ்வீடிஷ், நார்வேஜியன், ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் இந்தப் படைப்பு அமரந்தா-சிங்கராயர் மொழிபெயர்ப்பில் “சிலுவையில் தொங்கும் சாத்தான்” என்னும் தலைப்பிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாமரைச்செல்வி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க மொழிகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் தொடர்புகளே உண்மையான ஆப்பிரிக்க நாவலுக்கு அடித்தளம் என்று குறிப்பிடும் கூகி “ஆப்பிரிக்கா முழுமைக்குமான உண்மையான ஆப்பிரிக்க உணர்வு எழுத்துக் கலைகளில் வெளிப்பட இவை அடித்தளமாக அமையும், மொழிபெயர்ப்புக் கலைவளர்ச்சிக்கும் இது கூடுதல் பலனை ஏற்படுத்தும்” என்றும், “எமது மொழியை மீள்கண்டுபிடிப்புச் செய்து, மீட்டுருவாக்குவதற்கான அறைகூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகரச் சொல்லாடல்களுடனான, புதுப்பிக்கப்பட்ட மீள்தொடர்புக்கான அறைகூவல் ஆகும்” என்றும் புலப்படுத்துகிறார்.

இந்த நூலை மொழிபெயர்த்திருக்கும் அ.மங்கை தமிழ் இலக்கிய, சமூக தளங்களில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாகக் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர். “ஆங்கில இலக்கியத்தைக் கல்லூரி மட்டத்தில் கற்பித்தல் குறித்த அவரது முனைவர் பட்ட ஆய்வுக்காலத்தில் அறிமுகமான இந்த நூல் தன்னை ஈர்த்த விதம் குறித்தும், ஈர்த்ததற்கான காரணங்கள் குறித்தும் “பின்னுரையாகச் சில சொற்களில்” குறிப்பிட்டுள்ளார் அவர். “மொழிபெயர்ப்பின் அரசியல்” குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளும் கவனம் கோருபவை. 1997-98இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கூகியின் மாணவியாக அவரிடம் ஆப்பிரிக்க அரங்கம் குறித்து கற்கும் வாய்ப்பும் அ.மங்கைக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய ஓவியத் தோழி அலெக்சாண்ட்ரா நிக்கல்ஸ் வரைந்திருக்கும் கூகியின் கோட்டுருவமும் அவரது சமீபத்திய சிற்பத்தின் நிழற்படம் தாங்கிய மேலட்டையும் சிறப்பாக அமைந்துள்ளன.

அ.மங்கையின் உள்வாங்குதிறன் தங்குதடையற்ற, நெருடலற்ற மொழிபெயர்ப்பை சாத்தியமாக்கிறது. தோழர் மகரந்தன் அவர்கள் மூலநூலை முழுமையாக மொழிபெயர்த்துத் தரும்படி வலியுறுத்தியதாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டுள்ள போதும் மூல நூலை வாசித்திருக்கும் சிலர் அது இன்னமும் அதிக பக்கங்களைக் கொண்டது என்றார்கள். நான் மூலநூலை வாசித்ததில்லையாதலால் எனக்குத் தீர்மானமாகச் சொல்ல இயலவில்லை. நூலின் தலைப்பில் இடம் பெறும் “ஓர்மை” என்ற, அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத சொல் தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும், “பொருள் சுட்டி” என்ற பகுதியைக்கூடத் தருமளவு மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாசிரியரும் இதுகாறும் தமிழில் வெளிவந்திருக்கும் கூகியின் நூல்கள் பற்றிய சிறு குறிப்பைத் தந்திருந்தால் வாசகர்களுக்கு உதவியாக அமைந்திருக்கும். தன்னுடைய புதினம் “சிலுவையில் தொங்கும் சாத்தான்” (ஈங்ஸ்ண்ப் ர்ய் ற்ட்ங் இழ்ர்ள்ள்) தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாக கூகி, மூலநூலில் மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் “தமிழ் மொ.பெ.” என்று மட்டுமே மொட்டையாக தமிழ் மொழிபெயர்ப்பில் விடப்பட்டிருப்பது நெருடுகிறது.

“ஒரு மொழிபெயர்ப்பு அது பெயர்க்கப்படும் மொழி இயங்கும் தளத்தில் சில கவனங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் “நவகாலனிய ஓர்மை” நுண்ணிய முறையில் செயல்படும் நம் வாழ்தளத்தில் இந்த நூல் நம்மைத் துருவிப் பார்க்க வைக்கிறது” என்று அ.மங்கை குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை.

(குறிப்பு: “ஓர்மை” என்னும் சொல் பள்ளிப் படிப்பற்ற தமிழ்நாட்டுச் சிற்றூர் மக்களிடமும் ஈழத் தமிழ்ச் சமூகங்களிலும் வெகு இயல்பாகப் புழங்கப்படுகிறது. நாம் பெறும் “மேலான கல்வி”, தூய்மையாக்கம் என்னும் பெயரில் தமிழின் செஞ்சொற்கள் பலவற்றை நம் ஓர்மையிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டது. -இதழாசிரியர்.)


கவிதையில் கையாளப்படுகிற எதார்த்தமான மொழியின் பின் கதவுகள் எப்பொழுதும் வர்க்கம் சார்ந்த மொழியுடனோ, இனத்தின் மொழியுடனோ தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறதென்பதை கவிதையின் வெளிப்பாடுகள் நமக்கு உணர்த்திவிடுகின்றன.

கவிதைகளில் புதிர்த்தன்மையும் பூடகமான சொல்லமைப்பும் கொண்டு இன்றைய நவீன கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் சமூகத்தின் மீதான அக்கறையையும் தார்மீக கோபத்தையும் பதிவு செய்ய மறுத்து விடுகின்றன.

அதற்கு மாறாக, கவிஞர் யாழினி முனுசாமியின் கவிதை மொழியும், கவிதைக்குரலும் அவர் சார்ந்திருக்கிற வாழ்க்கையின் வெளிப்பாடாக வந்திருக்கின்றன. அவருடைய கவிதைககள் சமூகத்தின் மீதான அக்கறையையும் அவர் பார்த்த/சார்ந்த அடித்தட்டு மக்களின் வலிகளையும் பிரச்சினைகளையும் குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

கவிஞனின் கவிதைகளில் ஒன்று இப்படிப் பேசுகிறது.

பச்சைமுடி செழித்த மலை
கல்குவாரி முதலைகளால்
மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு
ஊனமாய்க் காட்சியளிக்கிறது.
. . . . . . . . . . . . . . . . . . . . . .
எரிமலைகளை
யாரும் நெருங்குவதில்லை

இந்தச் சமூகத்தில் நிலையாகவும், பெருங்கூட்டமாகவும் இருந்து கொண்டிருக்கிற அடித்தட்டு மக்களின் உழைப்பு மெல்லமெல்ல அதிகார ஆளுமையினால் சுரண்டப்படுவதும், அதனால் அந்தப் பெரும்பான்மையான மக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நிலையிலே காட்சியளிப்பதும் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகள்தாம்.

தாங்கள் பெருங்கூட்டமென்றோ, தங்களால் எளிதில் பலவீனப்படுத்த முடியாத மாபெரும் வலிமையாக மாறிவிடமுடியுமென்றோ புரியாமலிருக்கிற மனிதர்களுக்கு கவிஞர் சொல்வதாகவும் நாம் இதைப் புரிந்துகொள்ளலாம்.

புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுவார் “ஆடுகளைத்தான் பலியிடுவார்கள், சிங்கங்களையல்ல. மக்களே, நீங்கள் சிங்கங்களாக இருங்கள்” என்று. அவரின் இச்சொற்கள் நசுக்கப்படுகிற, ஒடுக்கப்படுகிற, கீழ்நிலையிலுள்ள மக்களைப் பார்த்துத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்கள் வெறும் கற்பாறைகளாக மட்டும் இருந்து விடக்கூடாது. அவர்களை உடைத்தெடுக்கிற உளிகள் எல்லா நிலைகளிலும், எல்லா வடிவங்களிலும் பரவிக்கிடப்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் தங்கள் வலிமையையும், உறுதியையும் எரிமலையின் கோபத்தைப்போல வைத்திருக்க வேண்டும், யாரும் அவ்வளவு எளிதாக நெருங்க முடியாதபடி.

கவிதையின் பிரதேசம் என்பது கவிஞன் பயணப்படக் கூடிய வெறும் சொற்களின் தொடர்வண்டி மட்டுமல்ல. அதில் பயணம் செய்திருக்கிற அனுபவங்களின் உள்ளடக்கத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிற இடங்கள்தான்.

இதன்படி பார்த்தால் கவிஞனின் கவிதைப் பிரதேசமாக இத்தொகுப்பில் காணக்கிடைப்பது காதல் உணர்வுகளும், பெண்களுக்கெதிரான உறவு ரீதியான சுரண்டல்களும், நட்பின் துரோகமும் எதிர்பார்ப்பின் ஏமாற்றமும்தான்.

காதல், கவிஞனை எழுத வைக்கிறபோது அது தனக்கான மொழியைத் தெர்ந்தெடுக்கிற விதத்தில் அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது. நவீன கவிதைகளிலும், வெளிப்படையாகப் பேசுகிற கவிதையிலும், சமூகம் சார்ந்து சொல்லப்படுகிற கவிதைகளிலும் அன்பு, பாசம், காதல் குறித்தான கவிதை மொழி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்குக் காதலும் காரணமாக இருந்து வருகிறது.

“உன்அசைவுகளில் நிரம்பியிருக்கிறது
எனக்கான மகிழ்ச்சி...

என்கிறபோது கவிஞனின் கவிதை மனம் அனிச்சையாய்த் தொடுகிற உணர்வுகளில் கரைந்து போகிறது. அதன் பொருட்டு எழுகிற உணர்வுகள் மெல்கய வார்த்தைகளின் மீது பயணம் செய்கிறது. காதலும் பாசமும் அன்பும் உடல்களுக்கிடையே, உள்ளங்களுக்கிடையே ஏதோவொன்றைக் கடத்திக் கொண்டுதானிருக்கின்றன. மழலையின் வலிகளை உள்வாங்கிக் கொள்கிற தாயின், தந்தையின் மனம் வலிப்பதற்கு அதுதான் காரணமாக இருக்கிறது.

கவிஞர் யாழினி முனுசாமியின் இன்னொரு கவிதை குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. பாட்டியைக் கொடுமைக்காரி என்ற அம்மா தன்னுடைய மருமகளின் பார்வையில் தானும் அதுபோல் உருமாறிக் கொண்டு வருவதை உணராமலிருப்பதைக் கவிதை பதிவு செய்கிறது (பக்கம் 32). வாழ்க்கையின் இருப்பு என்பதே அதுதான். அவரவர்கள் அவரவர் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் போராடிக் கொண்டுதானிருப்பார்கள். இது வெறும் குடும்பம் சார்ந்த பிரச்சனையில்லை. சமூக, கலாச்சார, சம்பிரதாயம் சார்ந்த பிரச்சனையாகவே கருத வேண்டும். இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள நினைக்கிற அம்மாவோ, இடத்தை விட்டுக் கொடுக்காத அண்ணியோ மூதாதையர்கள் வாழ்ந்து விட்டுப் போன, வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கைப் பிரதிகளின் வெறும் நகல்கள்தான். இவர்கள் மாறினால் மட்டும் பிரச்சனை தீர்வு கண்டு விடாது. இதற்கான தீர்வு குடும்பத்திற்கு வெளியே இருக்கிறது. ஆணுக்கும் அவனைச் சார்ந்த எல்லா ஆளுமைகளுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள்தான் ஒன்றிணைந்து கண்டாக வேண்டும் இதற்கான தீர்வை.

கவிஞனின் கவிதையில் ஒன்று வட்டி கட்டும் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது (பக்கம்50). பொதுவாக திருமணங்கள் தமிழனின் அடையாளங்களாக இருந்து ஆடம்பரமாக மாறி வெகுகாலமாகி விட்டது. குடும்ப உறவுகளின் அங்கீகாரத்திற்காக, ஊர் மக்களின் சாட்சிக்காக என்றிருந்த திருமணம் இப்பொழுது வெறும் கௌரவத்திற்காகவென்று பரிணாமித்திருக்கிறது. ஐந்து பைசா வட்டிக்கு வாங்கி ஊர் மெச்ச நடந்த திருமணம் பின்னாளில் திணறுகிறது வட்டிகட்ட முடியாமல். பெரும்பாலான திருமணங்கள் இத்தகைய விபத்துகளிலிருந்து தப்புவதில்லை. திருமண வாழ்க்கையை கழித்தலிலிருந்து தொடங்குவது நலமானதல்ல. இதற்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணங்கள் இருப்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்.

“கவிதை ஏன் எழுதப்பட வேண்டும், அதற்கான வினைகளின் விளைவும் எதிர்வினைகளின் விளைவும் எந்த மாற்றத்தை முன்வைக்க நினைக்கிறது, அது சாத்தியமாக்கக்கூடிய கூறுகள் இந்தச் சமுதாயத்தில் உயிர்ப்புடனிருக்கின்றனவா” என்று கவிஞர்களும், வாசகர்களும் சிந்திóக்க வேண்டும்.

கவிஞர்கள் பதிவு செய்கிற அறச்சீற்றத்தை வெறும்பதிவுகளாகப் பார்த்துவிட்டு வாசலின் கடந்து போய்விடுகிறான் என்றால் அது ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? இந்தக் கேள்விக்கு உடனடியாக விடை சொல்லிவிட முடியாது. இங்கே கேள்வி எழுப்புகிறவர்களுக்கும் சிந்திப்பவர்களுக்கும் அதைச் செயல்படுத்துகிறவர்களுக்குமிடையே நீண்ட இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளி காலப்போக்கில் கரையுமெனில் இந்தக் கேள்விக்குத் தேவையில்லாமல் போகும். அதுவரைக்கும் என்ன செய்ய முடியும்? எழுதப்படுகிற கவிஞனின் வார்த்தைகளை மௌனமாக கவிதைக் குழிகளில் புதைத்துவிட்டு அப்படியே இருந்துவிட முடியுமா?

இது குறித்துப் பேச வேண்டும். பேசுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். இன்னொருவரை எதிர்பார்க்காமல் நாமே உருவாக்க வேண்டும். சூழல்களை இயற்கையோ, சட்டங்களோ, சமூகமோ உருவாக்கிக் கொண்டுதானிருக்கிறது. மனிதன்தான் அதை மானுடத்திற்குத் தேவையான மருந்தாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்கான பொறுப்பு கவிஞனுக்கும் கவிதைக்கும் அதிகமாக இருக்கிறது. அந்தப் பொறுப்பைக் கவிஞர் யாழினி முனுசாமியின் கவிதைகள் நிறைவேற்றும் என நம்புகின்றேன்.

மக்கள் தாராள மனசுள்ளவர்களாகவும், இருப்பதைக் கொடுப்பவர்களாகவும் தானிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தாராள மனசும் இருப்பும் கடவுளின் உண்டியலிடம் சட்டென்று கவிழ்ந்து விடுகிற அளவுக்கு சக மனிதனிடம் நெகிழ்ந்து விடுவதில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனால்தான் கட்டாந்தரையில், மரத்தடியில், நடைபாதையோரங்களில் குடியேறும் கடவுளால் வெகுசீக்கிரமாக வீடோ கோபுரமோ கட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் நிஜத்தில் நடைபாதைவாசிகளின் நிலைமையோ அப்படியேதான் இருக்கிறது.

இரயில் பெட்டிகளில் தினமும் பாட்டுப்பாடி பிச்சை எடுப்பவரின் வாழ்க்கையைப் பார்க்கிறார் கவிஞர். அந்த இரயிலைப் போலவே அவருடைய வாழ்க்கையும் தொடர்ந்து ஒரே நிலைமையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய தட்டில்,

“ஒருநாளும் கண்டதில்லை நான்
யாரும் ஒரு ரூபாய் போட்டு”

என்கிறார் கவிஞர். ஒரு ரூபாய்கூட போடுவதற்கு வக்கற்றுத்தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போலும்.

இந்தக் காட்சியைப் பதிவு செய்கிற கவிஞர் மீண்டும் சொல்கிறார்:

“விழியிழந்த கலைஞன்
குழலிசைத்து யாசித்துக் கடக்கையில்
புத்தகத்தைப் படிப்பதாய் பாவனை செய்கிறேன்”

பாவனை செய்யும் மனிதர்களாலேயே நிரம்பி வழிகின்றன வாழ்க்கையின் தெருக்கள்.

இன்னொரு கவிதையில், எதிரி போர் தொடுக்கும்போது ஒளிந்துகொள்ளும் மனிதர்களையும், எதிரி தரும் பொருள்களைப் பெற்றுக்கொண்டு தன்னை வளப்படுத்திக்கொள்கிற மனிதர்களின் செய்கையையும் பதிவு செய்கிறார் கவிஞர்:

“பிறகு பேசுங்கள்
நீயும் நானும் சகோதரன்
ஒரே இனம்
ஒரே நிறம்”

கவிஞர் சொல்கிற ஒளிந்துகொள்கிற மனிதர்கள் புராண காலத்திலிருந்தே காணக் கிடைக்கிறார்கள். இராவணன் யுத்த களத்திற்குத் தயாராகும்போது விபீஷணனுடைய செய்கை சகோதரனைக் காட்டிக்கொடுத்ததற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட நயவஞ்சகம் படைத்த மனிதர்களைச் சாடியும் விமர்சித்தும் கவிதையைக் கொண்டு போகிறார்.

கிராமங்கள்தாம் தேசத்தின் உயிர்நாடியாக இருக்கின்றன என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நிலத்திலும் நெஞ்சிலும் ஈரம் வைத்திருக்கிற மனிதர்கள் மூதாதையர்களின் பண்பாட்டுச் சங்கிலிகளை இன்னும் அறுபடாமல் காப்பாற்றி வருகிறவர்கள். ஆயினும் அக்கிராமங்கள்தாம் மனித சமூகத்துக்குத் தேவையில்லாத சாதிய கட்டமைப்புகளையும் அவை தொடர்பான அடக்குமுறைகளையும் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பவை. அதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் நம்மிடையே பல்லிளிக்கின்றன. இதனூடாகக் கவிஞர் சொல்கிறார்:

“ஊருக்கு வெளியே
எங்களை ஒதுக்கிவைத்திருக்கும்
உங்கள் கிராமங்களை விட
அன்பானதாய் இருக்கிறது இந்நகரம்”

திண்ணையற்ற வீடுகளும், தெரிந்தும் வழி சொல்ல மனங்கொள்ளாத மனிதர்களும் நிறைந்து வழிகிற, காற்றழிந்துபோன நகரங்கள் அன்பானவையாய் இருக்கின்றனவென்பதில் ஒன்று புரிகிறது. சொர்க்கத்தில் அடிமைகளாய் வாழ்வதைவிட நரகத்தில் சுதந்திரமாய் வாழ்வது சாலச்சிறந்ததாக இருக்கிறது. அதுவே நிதர்சனமாகவும் இருக்கிறது.

இவ்வாறு பலதரப்பட்ட பார்வைகள், கவிதைப் பிரதேசங்கள், பயணங்கள் என்று கவிதை பயணிக்கிற சொற்களின் பாதைகளில் கவிஞர் தன் இலக்காக எதைச் சென்றடைய வேண்டுமென்று நினைக்கிறாரோ, அதைச் சரியாகச் சென்றடைகிறார் என்றே கருதுகிறேன்.

இழந்தவற்றைப் பற்றி ஒப்பாரி வைக்காமல், புதிதாகப் பிறக்கின்ற துளிர்கள் மீது நம்பிக்கை கொள்கிற இந்தக் கவிஞனின் மனசு அப்படியே இருக்கட்டும். அந்த நம்பிக்கைகள் இன்னும் வளமான கவிதைகளைக் கவிஞருக்குத் தருமென நம்புவோம்.

Pin It