என்னோடும் இதழோடும் ஏதோ ஒருவகையில் தொடர்பு வைத்திருந்தவர்கள் மறைந்த வே. ராகவன் என்னும் ராயன், சிட்டி பெ.கோ. சுந்தரராஜன், சுரதா, கா. காளிமுத்து ஆகியோர். அவர்களை நினைவுகூர எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் மேலாக

வல்லிக்கண்ணன்

சகோதரர் வல்லிக்கண்ணனின் மறைவு இட்டு நிரப்பமுடியாத வெற்றிடமாகவே எஞ்சுகிறது. வாழ்நாள் முழுதும் சிறு பத்திரிகைகளிலேயே எழுதி, சிறு பத்திரிகையாளர்களை ஊக்குவித்து, புதிய எழுத்தாளர்களை வாழ்த்தித் தன் வாழ்நாள் முழுதும் புரிந்துவந்த ஒப்பற்ற சேவையைத் தமிழுலகம் இழந்துவிட்டது. அப்பணிகளை சகோதரர்கள் தி.க.சி.யும் வல்லிக்கண்ணனும் இரட்டையர்களாகச் செய்துவந்தனர். இன்று தி.க.சி. தன் உயிருக்குயிரான தோழரை இழந்துவிட்டார். வல்லிக்கண்ணன் பற்றற்ற துறவியாய் வாழ்ந்தார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் அவர் தம் நண்பர்களிடம்- குறிப்பாக தி.க.சி. அவர்களிடம் வைத்திருந்த பற்றுக்கு நானே சாட்சி. தி.க.சி. அவர்களைப் பற்றி தவிர்க்க முடியாமல் நான் விமர்சிக்க நிர்பந்திக்கப்பட்ட போது, வ.க. அவர்கள் அதைக் கட்டோடு ரசிக்கவில்லை. ஏறக்குறைய அவர் தன் நடுநிலைத் தன்மையையே சற்றுத் தள்ளிவைத்து என்னைக் கொஞ்சம் அந்நியமாகப் பார்த்துவிட்டார்.

அதற்கப்பால் அவரை நான் சந்திக்கவில்லை என்பதற்கு அவரது தீவிரமான அந்த நிலைபாடுதான் காரணம்! "என் இதழை அவருக்கு அனுப்புவது தேவையில்லை என்று நான் ஒரு நாள் நினைத்தாலும் நினைக்கலாம். அதனால் அனுப்புவதை நிறுத்திக் கொள்ளலாம்’ என்று எழுதினார். அதன் பிறகும் நான் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தபோது சந்தா அனுப்பினார். நான் உடைந்து போனேன். தி.க.சி. ஒருபோதும் அப்படியொரு கடுமையைக் காட்டவில்லை. நான் அவருக்கு இதழ் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். இப்போது நினைத்துக் பார்க்கிறேன். அவர் தன்னைவிட மேலாகத் தன் நண்பரை நேசித்தார் என்பதாகத்தான் நான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். என்.ஆர். தாசன் அவர்கள் மறைவுக்கு ஒரு நினைவு மலர் போட்டேன். அப்போது வல்லிக்கண்ணன்தான் பல தகவல்களை எனக்குத் கொடுத்து உதவினார். இன்று நான் அவரைப் பற்றி எழுத விரும்புகிறேன். யார் அவரைப்போல் தகவல்கள் கொடுத்துதவுவார்? எத்தனை மகத்தான இழப்பு!

வே.ராகவன்

பிறர் மறைவினும் ராகவன் மறைவுதான் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அவருக்கு மரணிக்கும் வயதல்ல. நான் திரவொற்றியூருக்குக் குடி வந்தபோது ஏதோ வனாந்திரத்தில் தன்னந்தனியாக வந்து சிக்கிக் கொண்டதாக உணர்ந்தேன். அப்போது கனல்மைந்தனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் நண்பர் ராகவன். அவருக்கிருந்த நூல்கள் சேமிக்கும் பழக்கம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதைப் பார்த்தபோது இவருக்குக் குடும்பத்தில் ஏதேனும் மனச்சடைவு ஏற்படும் எனில் அது இப்பழக்கம் காரணமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அந்த அளவுக்கு அவருடைய வருமானத்தை உறிஞ்சுவதாயிருந்தது. ஆயிரக்கணக்கான நூல்கள் - மார்க்சிய நூல்கள் - ஆங்கில நூல்கள் (தமிழ் நூல்களும்) அவரிடம் சேமிக்கப்பட்டிருந்தன.

என் பிரமிப்புக்கு மற்றொரு காரணம் அத்தனை நூல்களின் சாரங்களையும் அவர் அறிந்தவராயிருந்தார் என்பதுதான். அவர் எழுதிய ரோசாலக்சம்பர்க் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடித்ததும் எனக்கொரு அதிசயம் வெளிப்பட்டது. ரோசாலக்சம்பர்க் ஆணா, பெண்ணா என்று வகைப்படுத்தும்படியான பால் சுட்டுச் சொல்லே இல்லாமல் எழுதப்பட்ட நூல் அது. அதைச் சொன்னபோது அவரும்கூட அதிசயப்பட்டார். மார்க்சியத் தத்துவங்களில் அத்தனை ஈடுபாடு கொண்டவர். அவருடைய வருமானத்தில் பெரும் பகுதியைப் புத்தகங்கள் வாங்குவதில், பின்னால் "நேர்” என்னும் ஓர் அரிய இதழை நடத்துவதில், விழுதுகள் பதிப்பகம் மூலம் நூல்கள் - அதிலும் மொழிபெயர்ப்பு நூல்கள் கொண்டு வருவதிலும் செலவிட்டவர். அவர் வீடுகட்டியபோது தன் நூல்களுக்காகவே ஒரு தளத்தைக் கட்டிப் பேணியவர். கடைசியில் அவர் தன்னைப் பேணிக்கொள்ளத் தவறிவிட்டார்.

சிட்டி. பெ.கோ.சுந்தரராஜன்

பேராசிரயர் வீ. அரசு அவர்களின் உதவியால் "வ.ரா.வுக்கு வந்த கடிதங்கள்” பலவற்றைக் கவிதாசரணில் வெளியிட்டு வந்தபோது அவற்றைத் தொகுப்பு நூலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னைத் தொடர்பு கொண்டவர் இம்மூத்த எழுத்தாளர். சென்னைக்குக் குடி வந்தபின் எனது "தெய்வம் தெளிமின்” நூலைக் கேட்டுப் பெற்று அதற்கு உடனடியாக ஒரு விமர்சனமும் எழுதி அனுப்பினார். கூடவே கடலோடி ராசையா எழுதிய அவரது வாழ்க்கை வரலாறான "சாதாரண மனிதன்” என்னும் நூலையும், கவிதாசரணுக்குச் சந்தாவையும் அனுப்பி வைத்தார். அவருடைய வயதில் அவருக்கிருந்த இலக்கிய ஆர்வம் மிகுந்த அசாத்தியமானது. அவருடைய "சாதாரண மணிதன்” நூலைப் படித்தபோது, என் கல்லூரி காலத்தில் ரஷ்ய, ஆங்கில இலக்கிய கர்த்தாக்களின் வாழ்வனுபவங்களைப் படித்து மகிழ்ந்தது போன்ற ஒரு சித்திரம் வந்து என்னைப் பரவசப்படுத்தியது.

அவரைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதைப் பின்னால் கைவிட்டுவிட்டேன். அவர் காஞ்சி சந்திரசேகரேந்திரரின் பக்தர். ஜகத்குரு என்று போற்றப்பட்ட சந்திரசேகரேந்திரர் குறிப்பாகத் தன் மனிதர்கள் பணியில் அமரவும், இடமாற்றம் பெறவும், வாழ்வியல் நலன் பெறவும் என்பதான உதவிகள் செய்து கொண்டிருந்தவர்தாம் என்பதை அறிய எனக்குச் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக சிட்டி அவர்கள் தெலுங்கர் என்பதால் தெலுங்கரான சந்திரசேகரேந்திரருக்கு அவர் மேல் தனி ஈடுபாடு என்பது விளங்கியது. இவை யாவும் என்னைப் பாதித்த விஷயங்களாய் இருந்தன. இவை பற்றிய கேள்விகளைத் தவிர்க்கவே, அவரது நட்பையும் எழுத்தில் அவருக்கிருந்த குறையாத ஈடுபாட்டையும் எட்ட இருந்தே ரசித்து மகிழ்ந்தேன்.

சுரதா

"தச்சன் தன் கருவிகளை வைத்துக்கொண்டு மரச்சாமான்களை நேர்த்தியாகச் செய்வதுபோலத்தான் கவிஞன் கவி எழுதுவதும்” என்று தியாகராயர் கல்லூரியல் அவர் பேசியபோது அவரை முதன் முதலாகப் பார்த்தது. பிறகு இதழ் தொடங்கியதும் அவரோடு நெருங்கிப் பழக முடிந்தது. அவருடைய வினா விடைகள் நூலைக் கொடுத்து விமர்சனம் எழுதச் சொன்னார். அதை அவர் எப்படி எடுத்துகொண்டார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் புதுப்புது விஷயங்களைப் பேசுவார். அவருடைய உவமைகள் போல் அப்புது விஷயங்களும் அரியனவாகவே இருக்கும். அவரிடம் தூக்கலாக இருந்த "யாரைப் பார்த்தாலும் உடனே அவரது சாதியைச் கேட்பது” என்னும் பழக்கம் என்னை அலைக்கழித்த ஒரு விஷயம். ஒவ்வொரு சாதிக்காரனுக்கும் தனித்தனியே சாதிப்புத்தி இருக்கும் என்று நம்பி வாழ்ந்தவர். எனக்கு அவரைப் பார்க்கும்போது திராவிடக் கட்சிகளின் சமூகப் பார்வையில் திரண்ட பிம்பமாகவே மதிப்பிடத் தோன்றியது.

P.L. பொன்னுசாமி என்னும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அவருடைய ஆங்கிலப் புலமைக்காக வி.ஜி.பி.இல் பணியமர்த்தி யிருந்தனர். அவர் திருச்சி தேசியக் கல்லூரியில் எனக்கு ஈராண்டு மூத்த மாணவர். ஷேக்ஸ்பியரை மூச்சுவிடாமல் நடிப்போடு ஒப்பிப்பதை அப்போதே கண்டு நான் பிரமித்ததுண்டு. அவர் தகத் மாணவர். அதன் காரணமாகவே அவரைச் சுற்றியும் ஒரு பொறாமை எரிந்து கொண்டிருந்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது அவர்பாட்டுக்குத் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தவர். அவரைப் பற்றி சுரதாவும்கூட அதே தொனியில் பேசியதைக் கேட்க எனக்கு மிகுந்த சங்கடம் ஏற்பட்டது. "P.L. பொன்னுசாமி என் சக மாணவர்” என்று அந்தப் பேச்சை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி அழுத்தம் கொடுத்துச் சொன்னேன். "நீயும் அவன் சாதிதானா?” என்றார். நான் சில கணங்களுக்குப் பின் நீண்ட சிரிப்பைச் சிந்தினேன்.

அது அவரைத் துணுக்குறச் செய்தது. நான் சிரித்தாலும், இதேபோல சாதி கேட்ட ஒரு பிரச்சினையில் தினகரன் என்னும் ஓர் இளைஞர் "நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாய்யா - மனுசனுக்குக் கொஞ்சமாவது நாகரிகம் வேண்டாம்?......” என்று நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அதே இடத்தில் (அது அமுதபாரதியின் அறை) திட்டித் தீர்த்த காட்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். சிரிப்பை நிறுத்தி அவர் முகத்தைப் பார்த்தபோது "என் கடைசி ஊர்வலம் செல்லும்போது நான் எழுதிய இரண்டு பாடல்கள் ஒலிக்க வேண்டும்” என்று அவர் சொன்ன பதிலும்,

நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்னும் பாடலும் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

கா. காளிமுத்து

காளிமுத்து அவர்கள் தனக்காக நூல் சேகரித்து கொடுப்பவரை அனுப்பி "கவிதாசரண்” மொத்த இதழ்களையும் வாங்கிக்கொண்டு போனார். அவருடைய தமிழார்வம்தான் அதைச் செய்யவைத்தது என்று நினைக்கிறேன். அவரது தமிழைக் கேட்கும்போது எனக்கு கண்ணதாசன் கவிதை அழகும் சுரதாவின் உவமை அழகும் இன்னும் கூடுதலான சொந்தங்களுடனும் எளிமையுடனும் பெருகியோடுவதுபோல் தோன்றும். திராவிடக் கட்சிகள் அவரைப் போன்ற எத்தனையோ அரிய வைரங்களைக் கோலப் பொடி மாதிரி நுணுக்கி அரைத்து முற்றத்திலும் மோரியிலும் (கன்னடத்தில் சாக்கடை) தூற்றி விட்டுவிட்டது.

Pin It