கீற்றில் தேட...

ஒவ்வொரு தடவையும்
ஒரு அழகோடு மின்னுகிறது மின்னல்
ஒவ்வொரு தடவையும்
ஒரு அழகோடு பாய்கிறது நதி
ஒரு தடவைபோல இல்லை
இன்னொரு தடவை பெண்
இந்தத் தடவை
இந்தக் கவிதை வேறு மாதிரி


அங்கிட்டும்
போகவிட மாட்டேன்றீக
இங்கிட்டும்
போகவிட மாட்டேன்றீக
எங்கிட்டுதான்
போறது நான்?


வழமைபோல செண்பகாடவியில் அருவி
விழுந்து கொண்டிருந்தது
குற்றலைநாதர் கோயிலில் ஆறுகால பூசை
குறைவில்லாமல் நடந்து கொண்டிருந்தது
பிராந்திக்கடையில் எப்பொழுதும்
போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது
தென்காசி தென்காசி என்று கூவியழைத்து
வேன்காரர்கள் ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்
குரங்குகள்தான் பாவம் யார் என்ன
கொண்டுவருவார்களென்று பார்த்துக்கொண்டேயிருந்தன.


வெள்ளிவீதியார் என்பது
வெறும் பெயரல்ல
ஆண்டாளென்றால்
திமிறும் காமம்
காரைக்காலம்மையாரெனில்
கட்டற்ற ஈடுபாடு
மாலதி மைத்ரியும் சல்மாவும் சுகிர்தராணியும்
மாடர்ன் பெண்கவிகளப்பா
(குட்டி ரேவதியும் கூடத்தான்)
சுனையிலேது சுழிகள்
ஆழ்நதியில்தாம் நிறைய


காற்று வந்து
தொட்டுச்சென்றது
கவிதை எழுத ஞாபகப்படுத்தி
காற்றின் காதல்
மனுஷனுக்கு இல்லை
காற்றோடு காற்றாக கலந்து போகாது
விக்ரமாதித்யன் வரிகள்