எல்லாருடைய வாழ்க்கையிலும், சமயத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படும். அப்படித்தான் ஏற்பட்டது “கரிசல் காட்டுக் கடுதாசி’’ என்ற எனது எழுத்தும். அதை ஒட்டி அதில் இன்னொரு அதிசயமும் நடந்தது. உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஆதிமூலம் அவர்கள் எனது அந்த எழுத்துக்கு ஓவியங்கள் எழுது முன்வந்தது. கோடுகளுக்கு அவர் உயிர் தந்தார்; நான் எழுத்துக்கு உயிர் தந்தேன். இருவரும் சேர்ந்து ஜமாய்த்தோம்.

விகடனில் பொறுப்பாசிரியராக இருந்த ஓவியர் மதன் அப்போது சொன்னார், எங்கள் இருவரையும் குறிப்பிட்டு : ஒரு ஜுகல்பந்தி மாதிரி அல்லவா பிரமாதப்படுத்திவிட்டீர்கள் என்று.

“கோபல்லபுரத்து மக்க’’ளிலும் இது தொடர்ந்தது.

நான் புதுவைக்கு வந்தபிறகும்கூட ஆதிமூலம் அவர்களை நேரில் பார்த்ததில்லை.

இடைசெவலிலிருந்து புதுவைக்குப் புறப்படும்போது, கொஞ்சம் புத்தகங்கள் சில துணிமணிகள் ஒரு பெட்டி இவைகளோடு வந்தேன். சிறிய அளவில் வெட்டிய ஒரு துத்தநாகத் தகட்டில் ஒட்டப்பட்ட ரசிகமணியின் படம் மட்டும் அந்த புத்தகங்களில் ஒன்றினுள் வைத்துக்கொண்டு வந்தேன். இங்கே வந்து பார்த்தபோது அந்தப் படத்தைக் காணவில்லை. எப்படித் தவறியது என்றும் தெரியவில்லை. சோர்ந்து போனேன்.

எனது பணியகத்தில் ரசிகமணியின் படம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எங்கே போக? ஆதிமூலத்திடம் இருக்கும் என்று நம்பினேன். எனது “கரிசல் காட்டுக் கடுதாசி’’யின் ஒரு கட்டுரைக்கு அவர் ரசிகமணியின் படத்தை கோட்டோவியத்தில் தந்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அவருடைய முகவரி எப்படிக் கிடைத்தது என்று ஞாபகமில்லை. ஒரு கடிதம் எழுதினேன் ஆதிமூலம் அவர்களுக்கு. மறுவாரத்திலேயே எனக்குப் படம் வரைந்து அனுப்பிவிட்டார்.

ஒருவரின் படத்தை உள்ளதுபோல் உள்ளபடியே வரைவது ஒருமுறை. வரையும்போது அவர்களைப் பற்றிய கருத்துக்களையும் எண்ணங்களையும் புலப்படும்படி வரைவது மற்றொரு வகை.

வரைந்து அனுப்பிய ரசிகமணியின் படத்தைக் குறிப்பிட்ட தூரத்திலிருந்தும் நெருங்கியும் பல கோணங்களிலிருந்தும் - சிற்பங்களைப் பார்ப்பது போல - பார்த்தபோது; பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறவர்களுக்கு இது ரசிகமணி படமா என்று தோன்றிவிடும்!

ரசிகமணியின் தனித்துவமான சந்தனப் பொட்டு இருந்தது. நெருங்கிப்-போய் பார்த்தால் வெண்ணீற்றுக் கீற்றில் சந்தனப்பொட்டு தெரியும்.

மதியச் சாப்பாட்டுக்கு முன்பு உடம்பைச் சுத்தம் செய்துகொண்டபின் வந்து உட்காரும்போது நெற்றியில் ஒரு மெல்லிய திருநீற்றுக் கீற்றுக்கோட்டை நான் பார்த்த ஞாபகம். வகிடு எடுத்துச் சீவுவது போல் இருக்கும்; வகிடு தெரியாது. தலை சீவுகிறது போல் தெரியும், சீவியது தெரியாது. முடி மடங்கச் சீவுவது அழகல்லை என்பதுபோல் இருக்கும் அந்த சீவுமானம். மூக்காந்தண்டில் யாரோ ஒரு குத்துவிட்டது போலொரு பள்ளம்! இதுவும் ஒரு அர்த்தம் உள்ளதுதான். பண்டிதர்களிடம் காலமெல்லாம் வாங்கிய அவமானப் பேச்சுக்கள்.

இவ்வளவையும் தாங்கிக் கொண்ட ஒரு, கண்வழிப் புன்னகை; ‘இப்பிடி இருக்கு பாத்துக்கிடுங்க’ என்பதுபோல!

அக்காலத்திய பட்டதாரிப் படிப்பாளிகள் மிகவிரும்பி அணிந்துகொள்ளும் கோட்டின் ஒருபக்கக் காலரை அடையாளப்படுத்தும் கோடுகள்.

பின் கழுத்தை ஒட்டி தோளில் இறங்கும் மடித்துப் போட்டுக்கொண்ட துண்டு; இதுகளெல்லாம் வைரத்தில் தெரியும் நீரோட்டம் போல கவனிப்பவர்களுக்கே தெரியும்.

ரசிகமணியை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா என்று ஆதிமூலத்திடம் ஒருமுறை கேட்டேன். படங்களில் பார்த்ததுதான் என்றார்.

பேனா பிடிக்கும்போது சில விசயங்கள் நம்மை அறியாமலேயே தானே வந்துவிழும், சாமிகொண்டாடிகளின் வாக்குப் போல. தூரிகை பிடிக்கும்போதும் அப்படி வரும் போல, அருள்.

காணாமலே ஆறும் தெரியும்

அழகரும் தெரிவார்

பின்னொரு சமயம் ஆதிமூலம் அவர்களிடம் :

“கோபல்லபுரத்து மக்க’’ளுக்காக வரைந்த படங்களில் எனது முன்னோர்களின் ஜாடைகள் அப்படியே வந்திருக்கிறதே; எப்படி? கேட்டேன்.

“நான் எனது முன்னோர்களை நினைத்தே வரைந்தேன். அவர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களே’’ என்றார்.

தோழர் ஜீவா என்னிடம் பலமாதிரியான பேச்சுக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது “நாஞ்சில் நாட்டுக்காரனுக்கே என்று உள்ள ஒரு முகஜாடை இருக்கு என்கிறதை கவனித்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார். உண்மைதான் (முகத்தில் மட்டுமா ஜாடை மொழிவதிலும் கூடத்தான்)

இன்னொரு நாள் ஆதிமூலம் அவர்களிடம், எழுத்தாளர்கள் முக்கியமாகப் பிரபல ருஷ்ய எழுத்தாளர்கள் தங்களுடைய பால்ய காலத்து வாழ்க்கையை (“சைல்டுஹ§ட்’’) தனியாகவே எழுதிப் பதிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் அதுபோல் ஏன் கோட்டுச் சித்திரங்கள் வரைந்து ஒரு ஆல்பமாகத் தரக்கூடாது? என்று கேட்டேன்.

நல்ல யோசனைதான்; ஆனால் நான் கோட்டுச் சித்திரமுறையைக் கைவிட்டு வேறுமுறைக்கு வந்துவிட்டேன். இனி அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்.

ஓவியர்கள் தங்கள் பாணியை இப்படி மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

காலச்சுவடு கண்ணன் இங்கே என் வீட்டுக்கு வந்திருந்தபோது, என்னிடம், உங்கள் எழுத்துக்களுக்கு ஆதிமூலம் வரைந்த படங்களை மட்டும் ஒரு ஆல்பம் போல ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாமே என்றார்.

அதன் அசல் ஓவியங்கள் ஆனந்தவிகடன் காரியாலயத்தில் கிடைக்குமா என்று விசாரித்ததில், உ.வே.சாமிநாதய்யர் படத்தை மட்டும் விட்டுவிட்டு பாக்கிப் படங்களைத் தள்ளுபடி செய்துவிட்டதால் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

என்னிடமிருந்த ஜூனியர், ஆனந்த விகடன்களை பயிண்டு வால்யூம்களை வைத்து அதில் கிடைத்த ஆதிமூலம் அவர்கள் வரைந்த படங்களைத்தான் சிரமப்பட்டு (இந்த சிரமத்தில் மீரா. கதிருக்கு மிகுந்த பங்குண்டு) இந்த நூலை “அன்னம்’’ கொண்டு வந்திருக்கிறது. ஒருபக்கம் படமும், அடுத்த பக்கத்தில் அந்தப் படத்துக்கான விசயமும் என்று சிரமப்பட்டு அமைத்தவர் புதுவை இளவேனில் அவர்கள்.

தமிழில் இப்படி ஓரு ஓவியரையும் எழுத்தாளரையும் புதிய முறையில் கொண்டு வருவது இதுவே முதல். ஆதிமூலம் அவர்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சிதான்.

புதுவை இளவேனிலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
_ கி.ரா.

கிடைக்குமிடம் :
உயிர்க்கோடுகள்
அகரம்
1, நிர்மலா நகர்
தஞ்சாவூர் _ 613 007.
பக். 120 விலை 250.00

Pin It