1. வெள்ளைச்சுவரில்
கரிக்கட்டையால் வரைந்த மரங்களை அழித்தபோது
கலைந்த பறவைகள்
எனது சொப்பனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டன
கனவில் பெய்த மழையில்
நனையாமல் வந்த நான்
தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்தபோது
இசக்கியம்மையின் கதைப்பாடலை
பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தன
மண் ரேடியோ குத்தவைத்திருக்கும் புளியமரம்
சிரட்டைகளையும் நுங்குவண்டிகளையும்
தொலைத்த நான்
கதைகளையும் விளையாட்டுகளையும்
போட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியைத் தேடியபோது
அம்மா சொன்னாள்
"காக்கா" கொண்டு போச்சு
2. நாகலிங்க பூவிற்குள் பூலிங்கமும்
பூலிங்கத்திற்குள் நாகலிங்கமும்
வரைந்து கொண்டிருந்த பரமனை
பூப்பந்து முலையது செருக்கு முலையாகி
எழுந்து தாக்கியது
மேலும்
சந்ராயோகத்தில்
சரமழை உதிர்த்து பூங்கிணர் திறக்க
காதளவு கண்ணுடையாளும்
உளிமுனைக் கூத்தாடியும்
கோலங்கள் பல செய்து
புணர்ந்து தீர்த்தனர்
கீற்றில் தேட...
புது எழுத்து - ஜனவரி 2007
என்.டி. ராஜ்குமார் கவிதைகள்
- விவரங்கள்
- என்.டி.ராஜ்குமார்
- பிரிவு: புது எழுத்து - ஜனவரி 2007