கடினக்கம்பிகள் புடைசூழ
சப்பாத்தி மடல்கள் தரைவிரிக்க
சொட்டும் குருதியொடு
சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது
அழகிய பொன்னிறப் பறவையொன்று.

பழைய இராட்சதப்பையை
கழுத்தில் தொங்கவிட்டபடி
தவமிருக்கும்
வாசஸ்தலங்களில் விரதமொடு
தீர்க்காயுள் வேண்டியதன்
இணைப்பறவை.

தார்ச்சாலையில்-தகிக்கும் வெய்யிலில்
உயிர்த்தளர
ஒற்றை கூஜாவோடு வரும்
எனதினிய மகள்
உன்னைப் போலொருவனை நோக்கி

இருந்தும்
கருணைக் காட்டுகிறார்கள் கடவுள்கள்
எப்போதும் என்னைப்போல்
கழுவிலேற்றவே.

2.

சுடச்சுட பெய்யும் மழையாய்
எனக்கானத்தேவை எதுவாயினும்
உன் காலடி சப்தத்தில்
கூட்டித் தள்ளப்படும் மூளையில்.

பட்டாம்பூச்சியின் லாவகமாய்
தொரட்டுமுள் வாழ்க்கை
கன்னித்திரைக் கிழிசலில்
நம்பிக்கைக்குரிய பாத்திரமாயிற்று.

ஏற்றுக்கொள்ளும் பாரமாய் இரவுகள்
வித்தைக்காரனின் அசைவிற்கேற்ப
ஆடி அடங்கிக்கிடக்கும்
பெட்டிப் பாம்பாய்
உடலோடு மனசும்.

வெறுமனான பார்வைக்கு
நீள்கரத்தின் ஆசுவாசம்
அரளிப்பூவையும் எஞ்சிநிற்கும்
பெரும் வெப்பமாய்.

ஆயினும் அலைகள் பழக்கமாயிற்று
நுரையாகி உறைந்து போவதற்கும்
ஊடாக மடிந்து மீள்வதற்கும்.

3.

பரிச்சயமாய் என்னோடு கைகலக்கும்
உன் மீட்சியின் சிறகுகள்
இப்போதெல்லாம் எனைத் துண்டிக்கவே
முனைப்பாய் இருக்கின்றன.

உன் தொடுதல்
என்னை துக்கங்காப்பதுவாய்

உன் தழுவல்
என்னை வருடிக் கொடுப்பதுவாய்

நீ வேண்டுமானால் சிலாகித்துக் கொள்ளலாம்

புரிந்துகொள்
கால்தொட்டுப் போகும்
அலையின் நொடியில் நிகழ்ந்துவிடும்
உன் சாகசங்கள்
எப்போதுமே எனக்கு
அந்நியம்தான்.
Pin It