(குஷ்புவுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கியவுடன் ‘மாற்றுக்குரல்கள்’ சார்பாக ஒரு துண்டறிக்கை வெளியிட்டோம். தமிழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அவ்வறிக்கை உங்களின் பார்வைக்கு)

தமிழ்நடிகை குஷ்புவை பிரதான எதிரியாக நிறுத்தி இங்கே ஒரு கலாச்சார வன்முறை அரங்கேறுகிறது. அடித்தளப் பெண்களைத் திரட்டி விளக்குமாறு, செருப்பு சகிதம் ஊர்தோறும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில், மதுரையில், திருச்சியில் என அவர் மீது வழக்குகள் போடப்படுகின்றன.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தல் நடத்த இயலாமை, தனியார் துறையில் இடஒதுக்கீடு, சுயநிதிக்கல்லூரி, நிலத்தடி நீரை கொக்கோ கோலாகாரனுக்கு விற்கும் அநீதிகள் என அடித்தள மக்களை அன்றாடம் பாதிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க குஷ்புவை எதிர்த்த இவர்கள் களமிறங்கி இருப்பதேன்? வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கங் கெட்டவர்கள் என சங்கராச்சாரி சொன்னபோது இன்று செருப்பு, துடைப்பக்கட்டைகளுடன் புறப்பட்டுள்ள படைகள் அன்று எங்கே போயின? அப்படி என்னச் சொல்லிவிட்டார் குஷ்பு? மாறிவரும் சமூகச் சூழலில் பெண்களின் பாலியல் நிலையும் மாறிவருவது குறித்து தொடர்ச்சியாகப் பல சமூகவியல் ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன. சமூகவியலாளர்களும் மனோதத்துவவியலாளர்களும். இது குறித்து கருத்துக்கள் சொல்லி உள்ளனர். சென்ற மாதத்தில் மட்டும் இரண்டு பத்திரிகைகளில் (அவுட்லுக், இந்தியா டுடே) இது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. சீஃபோர் என்கிற ஆய்வு நிறுவனம் உரிய முறையியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி நமது தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் உள்ள திருமணமான பெண்களில் நாற்பத்திரண்டு சதம் பேர் கணவனைத்தவிர வேறு ஆடவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு விரும்புவது வெளியாகி உள்ளது.

புதிய சமூகச் சூழலில் பெண்களின் திருமண வயது மிகவும் தள்ளிப்போகிறது. Call Center, கணிணித் தொழில்நுட்பம் போன்ற வேலைகள், ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பு முதலியவை அதிகரிக்கின்றன. விவாகாரத்துக்கள் அதிகமாகின்றன. தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தன்மையைத் தவிர வேறுபல அம்சங்களிலும் பெண்களின் சமூகப் பாத்திரங்கள் மாறியுள்ளன. தொழில் நிறுவனர்களாகவும், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் “எக்ஸிகியூட்டிவ்’’களாகவும் அவர்கள் மாறி வருகின்றனர். பெண்களின் சமூக ஆளுமைகளும், தனித்துவங்களும் பெரிதும் வளர்ந்துள்ளன. இந்தப் பின்னணியில் அவர்களின் பாலியல் விருப்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குள்ளான குஷ்புவின் கட்டுரையை முழுமையாக வெளியிட்டுள்ளோம். ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப் போன்று மிகுந்த பொறுப்புடன் அவர் ஒவ்வொரு வரியையும் கூறியுள்ளார். அவரது கருத்துக்களுடன் நூறு சதவீதம் நாங்கள் உடன்படுகிறோம். பாலியல் கல்வி, பாதுகாப்பான பாலுறவு, தாம்பத்ய ஜனநாயகம், பாலுறவு ஜனநாயகம் எனப் பல தளங்களில் கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார். இதில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் எந்தக் கருத்தும் கிடையாது. தவிரவும் அதே இதழில் கவிஞர் சுகிர்தராணியும் கிட்டத்தட்ட இதே போன்றக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குஷ்பு மட்டும் தனிமைப் படுத்தப்பட்டுத் தாக்கப்படுவதேன்?

தங்கர் பச்சான் பெண்களை இழிவு செய்து பேசியதற்கு எதிராக சகநடிகைகள் நடத்திய போராட்டத்தின் எதிர்வினையாகவே இது அமைகிறது. ‘ஒரு ஆம்பளைய மன்னிப்புக் கேட்கவச்சிங்களா’ என்கிற ஆணாதிக்கத் திமிரே இந்தப் போராட்டத்தில் வெளிப்படுகிறது. இது பெரியார் பிறந்த மண். ‘திருமணமான பெண்கள் கணவரைத் தவிர வேறு ஆடவருடன் உறவு வைத்துக்கொள்ளுதல் தவறாக கருதக்கூடாது’ எனச் சட்டமியற்ற வேண்டுமெனப் பொது மாநாட்டில் தீர்மானம் போட்டவர் அவர். ‘ஆண்கள் இரண்டு மனைவியரை வைத்துக் கொண்டால் பெண்கள் நான்கு ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள வேண்டும்’ என மேடைகளில் முழங்கியவர் அவர். இந்தச் சூழலில் இங்கு ஒரு சிவசேனைக் கலாச்சாரம் உருவாவது வருந்தத்தக்கது. பால்தாக்கரேயின் இடத்திற்கு நமது தலைவர்கள் போட்டியிடுவது வேதனைக்குரியது. குஷ்புவை மும்பைக்கு போ எனச் சொல்லும் இவர்கள் இந்தக் கலாச்சார வன்முறைச் செயல்பாடுகளை மும்பையிலிருந்து இறக்குமதி செய்திருப்பது வேடிக்கையானது.

வெகுஜன சினிமாவில் ஆயிரம் விமர்சனங்கள் நமக்கிருந்த போதும் அதன்மூலம் ஒரு ஜனநாயகப் பண்பாடு நிலைப் பெற்றிருப்பதை நாம் கவனம் கொள்ள வேண்டும். மதம், மொழி, இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கலைகளையும், கலைஞர்களையும் ரசிக்கும் மனப்பாங்கு வேர்கொண்டுள்ளது. நம்மூர் வஹிதா ரஹ்மான், ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வடநாட்டில் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முஸ்லிம் நடிகர்களை ஆதரிக்க வேண்டாம் என இந்துத்துவவாதிகள்தான் முதன்முதலில் குரல் கொடுத்தனர். அடுத்தப்படியாக நமது உள்ளூர் கலாச்சார போலிஸ்கள் இன்று தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டு நடிகைகளை வெளியேற்றுவோம் என முழக்கம் வைக்கின்றனர். தமிழர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வாழும் குஷ்புவை ‘அந்நியர்’ எனச் சொல்வதற்கும், சோனியா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ‘அந்நியர்’ எனச் சொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

கலாச்சாரப் போலிஸ்கள் பொதுவாகச் சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு ஒரு அளவுண்டு என்பதுதான். இதே போலிஸ் மொழி இன்று குஷ்புவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதையும் தோழர்கள் கவனிக்க வேண்டும்.
பொடாவையும், தடாவையும் கொண்டு வரும்போது இந்திய உள்துறை அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் பேசிய மொழியில் நமது அடித்தள இயக்கத் தலைவர்கள் இன்று மீடியாக்களில் பேசுவதைக் கவனியுங்கள். மீடியா சாம்ராஜ்யங்களுக்கிடையில் நடக்கும் போட்டியில் இன்று குஷ்பு பலியிடப்படுவதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. சன்டிவி, தமிழ் முரசு, தினகரன் முதலியவை இப்பிரச்சனையில் காட்டும் அக்கறை வணிக நோக்கமும், அரசியல் நோக்கமும் கொண்டுள்ளது.

இன்று குஷ்பு தனிமைப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நடிகர் சங்கம் கூட இதில் விலகியே நிற்கிறது. இந்நிலையில் ஒரு பெண்ணை அழ, அழ மன்னிப்புக் கேட்க செய்தது நமது கலாச்சாரப் போலிஸ்களுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் கருத்துரிமைப் போராளிகளுக்கும், பெண்ணியவாதிகளுக்கும் இது ஒரு மிகப்பெரிய தோல்வி.

இச்சூழலில் குஷ்புவுக்கு ஆதரவாகக் கருத்துக்களை மீடியாக்களில் முன்வைத்துள்ள பெண்ணுரிமையாளர்களாகிய பேரா. சரஸ்வதி, உ.வாசுகி வழக்கறிஞர் ரஜினி, சாருநிவேதிதா, லீனா மணிமேகலை, வாசந்தி, ஆனந்த் நடராஜன், கனிமொழி, பிரீதம் சக்ரவர்த்தி, ஞாநி ஆகியோரைப் பாராட்டுகிறோம். நமது சூழலில் கருத்துரிமை ஆதரவாளர்களும், பாசிச எதிர்ப்பாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த பச்சையான கலாச்சார வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

கருத்துரிமை காப்போம்!
கலாச்சார போலீஸ்களின் முயற்சியை முறியடிப்போம்!!
குஷ்புவுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவோம்!!!

Pin It