நீண்ட நாட்களுக்குப் பின்

கண்ட நண்பனோடு

பசுமையிழந்து போன பூங்காவின்

சிதைவுற்ற சிமெண்ட் இருக்கை தேடி

அமர்ந்த இடத்தருகில்

எஞ்சியிருந்த ஒற்றைச் செடியில்

ஏதோவொரு பெயர் தெரியாப் பூச்சி

தேடிக் கொண்டிருந்தெதையோ.

கையிலிருந்த

படபடக்கும் பட்டாம்பூச்சி குறித்த

கவிதைத் தாளை காட்டினேன்

வாசிப்பதில் விருப்பமுள்ள தோழனிடம்.

பட்டாம்பூச்சியல்ல

வண்ணத்துப் பூச்சியே சரியென்றான்

கவிதைக்குள் போகாமலே நண்பன்.

அவரவர் கருத்துகளை

பரிமாறிக்கொண்ட கணத்தில்

கலைந்து போன நிசப்தத்தால்

பாதிக்கப்பட்டு

பறந்துபோளிணிவிட்டது அந்த

பெயர் தெரியாப் பூச்சி

வேறு செடி தேடி.

வார்த்தைப் பரிமாற்றங்களின்

முடிவிலெந்த முடிவுக்கும் வராது போக

திருப்பி வாங்கிக் கொண்ட கவிதையை

திரும்பிப் பார்க்கையில்

பட்டாம்பூச்சியுமில்லை

வண்ணத்துப் பூச்சியுமில்லை

கவிதையில்

வெறும் வார்த்தைகளே எஞ்சியிருந்தன.

Pin It