அந்த இரட்டைச்சக்கர வாகனம் அவளை இறக்கி விட்டுப் போனது.

அவள் 1 வெகு பரபரப்புடன், கழுத்தில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்து விட்டு வீட்டுகுள் நுழைந்தாள். அவள் 2 கோபப்பார்வையுடன் பார்த்தாள்.

அவள் 1 உடம்பை ஒடுங்கிக் கொண்டு நின்றாள். அவள் கால்கள் உட்கார எத்தனித்து இயல்பாக்கிக் கொண்டது. உடம்பின் வலியை அவள் முகம் தேக்கிக் கொண்டிருந்தது.

“அவன் யாரு ..உன்னை டிராப் பண்ணினவன்”

“ஆபீஸ்லே கூட வேலை செய்யறவர்”

“என்ன பெரிய மரியாதை வேண்டிக்கெடக்கு”

“எவ்வளவு வருசமாத் தெரியும்”

”மூணுவருசமாத்தா. அந்த ஆபீஸ் போனப்பறம்“

“அவன் கூட உறவு வெச்சிருக்கியா.. படுத்திருக்கியா”

“இல்லெ.”

”உண்மையைச் சொல்லு.”

“இல்லெ”

“ரெண்டு பேர்த்துக்கும் எடையிலான நெருக்கத்தைப் பாக்கறப்போ நல்ல

பழக்கம் இருக்குமுன்னு தோணுது”

“அப்பிடியெல்லா இல்லே.”

“பொய் சொல்றே. பொய் சொல்றவங்களெக் கண்டா எனக்குப் புடிக்காது.

நீ வெளியே போ”

“வெளியே போன்னா எங்க போவேன் இந்த ராத்திரியிலே.”

“எங்காச்சும் போ. கோமிலே உன் பிரண்ட்ஸ் இல்லையா. ஹாஸ்டல்லே

உங்க பிரண்ட்ஸ் இல்லையா. இல்லை இப்போ நீ எவன் கூட வந்தியோ

அவன் இருக்கற எடத்துக்குப் போ.”

“அதெப்படி போக முடியும்?”

“அவன் கூட உறவு வெச்சிருக்கியா ... படுத்திருக்கியே.

போக வேண்டியதுதானே. எத்தனை தரம் படுத்திருக்கே. உண்மையைச் சொல்லு.

பொய் சொன்னா புடிக்காது எனக்கு.”

“நாலு தரம். உங்க கூட வந்தப்புறம் அது மாதிரி இல்லெ..”

“என்னாச்சு..”

“புடிக்காமெப் போச்சு. “

“அப்போ.. நான் உனக்கு புடிக்காமெப் போயிட்டா, கசந்து போயிட்டா

வேறொருத்தன் கிட்டையோ, வேறொருத்திகிட்டையோ போயிருவே..

இல்லையா.. அப்பிடித்தானெ.”

“அப்பிடியெல்லா இல்லெ. உஙக கிட்ட வந்தப்புறம் வேற எந்தப்

பழக்கமும் இல்லெ.”

“உட்காராதே.. எந்திரி. பொய் பேசற நீ எங்கூட இருக்க்க் கூடாது.”

“ரொம்ப கால் வலிக்குது. அதுதா உட்கார்ரன். இனி யார்கிட்டையும்

தொடர்பு இருக்காது.”

“இல்லே நீ போயிரு.. நீ பொய் சொல்றே.”

“இல்லே. பொய் ஒன்னும் இல்லே. நம்புங்க.”

அவள் நெருங்கி வந்து கட்டிப்பிடித்துத் தோளில் சாய்ந்தாள். அவள்2 அவளை சற்றே தள்ளி விட்டாள். அவள் 1 சற்றே முன் நகர்ந்து போனவள் மீண்டும் அவள் தோளைப்பிடித்தாள். பின்புறத்தை கட்டிக் கொண்டாள்.

அவள் 2 சுவரைப் பார்த்தபடி நின்றாள். அணைப்பு இதம் தருவது போல் நின்றார்கள். வாசலுக்கு வெளியே புடுபுடுத்து ஓடிய வாகனங்களின் அபரிமிதமான சப்தம் அவர்களைப் பிரிக்க முடியவில்லை.

Pin It