பயணங்கள் தரும் அதீத சுவையை
மிகவும் விரும்புகிறேன்
குழந்தைகள்
பொம்மைகளை
நேசிப்பதைப் போல.
பயணங்களில்
பல மனிதர்களைப் பார்க்கிறேன்
குரல்களின் வாயிலாக
உரையாடலின் வாயிலாக
அவர்களோடு தொடர்ந்து
பயணிக்கிறேன்.
மொழி புரியாத நகரங்களில்
பயணிப்பது
சுவாரஸ்யமானது.
வழி தெரியாமல்
இலக்கற்றுப் பயணிப்பதும்கூட.
செல்ஃபோன்கள் அற்றுப்
பயணித்தல்
வரம்.
தோழியின் தோள் சாய்ந்தபடி
கதை பேசி நகரும் பயணங்கள்
அடைமழையில் பருகும் தேநீர் போன்று
இதமானவை.
மழைக்காலப் பயணங்களுக்குத்
தனி சுவை உண்டு.
ஒளியற்ற ஒளியில்
இந்த உலகின் பேரழகைத் தரிசிக்கும்
அற்புத வாய்ப்பைத் தருகின்றன
இரவு நேரப் பயணங்கள்.
மின்னித் திரியும் நட்சத்திரங்களுடனும்
மேகம் தவழும் நிலவுடனும்
பயணித்த இரவுகள்
யோசனைகளைக் கிளர்த்தியபடியே
இருக்கும்
ஞானியின் முதிர்ந்த சொற்களைப் போல.
யாருமற்றுத் தனித்திருக்கவும்
சில சமயங்களில்
தொலைந்துபோகவுமான
சாத்தியங்களைப்
பயணங்களே தருகின்றன.