1. இரத்தமும் சதையுமான சொல்

புழுதி படிந்து கந்தலாகி இத்துக்கிடந்த

மேலாடை இடது பையிலிருந்து

சொல்லொன்றை உருவி மூடிதிறந்து

ஊற்றப்படுகின்றன எழுத்துக்கள்

விரவியிருக்கும் சொற்கள்

பாம்பு போல் நெளிந்தும்

மலமுருட்டி வண்டு போல் ஊறிக்கொண்டும்

கொசுக்கள், மூட்டைப் பூச்சிகள் போல்

இரவின் உதிரத்தை உறிஞ்சிக்குடித்தும்

அந்தரத்தில் திரிகின்றன

இச்சொற்களின் கழுத்தை நெறிக்க

கால்களை ஒடிக்க, கைகளை முறிக்க

நா வை அறுக்க, கண்களைத் தோண்ட

ஆன்மாவைக் கொல்ல,

மூளையை நுங்குபோல் கட்டை விரலால்

நோண்டி உறிஞ்ச பறந்த வண்ணமிருக்கின்றன

வர்ணத்துப் பூச்சிகள்

சொற்கள் ஒவ்வொன்றும்

துண்டாடப் படும் போதெல்லாம்

சிந்தும் ஒவ்வொரு இரத்தத் துளியிலும்

எண்ணிலடங்கா சொற்கள் உயிர்த்தெழுகின்றன

பிரபஞ்சத்தின் முதல் முனைக்கும்

கடைசி பகுதிக்கும் இடைப்பட்ட

வெற்றிடத்தை நிரப்பி ஆகாயத்துக்கு வெளியே

எட்டிப்பார்க்கிறது

நெடுஞ்சாலையில்

இன்றொரு சொல் கையில்

கண்களுக்குப் புலப்படாத அதி நவீன ஆயுதத்தோடு

கடந்து போனது.

2. ஆலில் இறங்கும் தொப்புள்கொடி

ஆல்பொந்தின் கருவறையிலிருந்து

பறவை பிறந்து ஆகாசத்தில் கனவு விதைத்தது

சிறகில் இறகு முளைக்க முளைக்க

கனவுகளின் எண்ணிக்கையும்                 

பெருகிக் கொண்டே போனது

தீராபசிக்கு பழங்களையும்

இளைப்பாற நிழலையும்

குடியிருக்க கிளையையும்

தனது மூச்சுக்காற்றையும் வடிகட்டி

மறு சுழற்சி செய்து கொடுத்தது

வேர் நன்றிக் கடனாக சிறிதளவு

மேகத்தையும் பிய்த்து தந்தது

கிளையிலிருந்து பழுத்து உதிர்ந்த விரல்கள்

தரையில் புலம்பியபடி நகர்ந்தது

பிற கொருநாள் அப்பறவை குழந்தையாக உருபெற்று

ஊஞ்சல் ஆட அவதானித்த தருணம்

தொப்புள் கொடியை தொங்க விட்டது மரம்

விளையாடி முடித்த குழந்தை

பயணிக்க இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து

அம்மரத்தை அப்புரப்படுத்தியது

முதியோர் இல்லங்களிலும் தெருக்களிலும்

இம்மரங்களை நீங்களும் பார்க்கலாம்.

புதிய நூல்கள்

1) ஜெயந்தி சங்கர் நாவல்கள் - 5 நாவல்கள், 1014 பக்கங்கள், ரூ.999, காவ்யா, சென்னை

2) ஊமைத்துயரம் -கா.சி.தமிழ்க்குமரன், சிறுகதைகள், 128 பக்கங்கள், ரூ110. என்சிபிஎச், சென்னை.

3) ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு) - பிஎனெஸ் பாண்டியன், 256 பக்கங்கள், ரூ.200.

4) தடுப்பூசி பூச்சாண்டி - டாக்டர் வில்லியம் பி.ட்ரிபிங்க் தமிழில் : போப்பு, 126 பக்கங்கள், ரூ.100, இவை இரண்டும் வெளியீடு : வெர்சோ பெஜஸ், புதுவை. 98946 60669

5) இலக்கிய மலர்கள் - ஓ.பாலகிருஷ்ணன், கட்டுரைகள், 120 பக்கங்கள், ரூ.70, சீதா, சென்னை. 9790706548

6) அரபிக் கடலின் ஓரத்தில் - நாவல் குமாரகேசனின் நாவல், 88 பக்கங்கள், ரூ.70, அன்னை ராஜேஸ்வரி, சென்னை. 9444640986.

7) எரியும் பூந்தோட்டம் - தெலுங்கு நாவல், தமிழில் : சாந்தா தத், பக்கங்கள் 256, ரூ.145, சாகித்ய அக்காதமி, சென்னை.

8) ஆரண்ய காண்டம் - கொ.மா கோதண்டம், சிறுகதைகள், மறுபதிப்பு, 134 பக்கங்கள், ரூ.130, தாமரை, சென்னை.

9) சூதாடிகளும் தெய்வங்களும் - தமிழில் : சா.தேவதாஸ், 232 பக்கங்கள், ரூ.220, பன்முகம், தேனி. 94878 45666.

10) ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி, 206 பக்கங்கள், ரூ.130, விஜயா, கோவை.

11) குறி, கூடு -பொள்ளாச்சி வாமனின் இரு சிறுகதைத் தொகுப்புகள், ரூ.120, ஒவ்வொன்றும், கபிலன், புதுவை. 94866 85702.

12) வாழ்க்கைக்காடு -சாந்தா தத், சிறுகதைகள், 128 பக்கங்கள், ரூ.80, திண்ணை, சென்னை. 98403 17921.

13) அவள் பயணத்தில் இருக்கிறாள் - மலையாளச் சிறுகதைகள், தமிழில் : சிதம்பரம் ரவிச்சந்திரன், 126 பக்கங்கள், ரூ.100, புதுப்புனல், சென்னை. 9884427997.

14) செவ்விலக்கிய மாண்புகள் - அன்புசிவா, சரளாதேவி கட்டுரைகள், 144 பக்கங்கள், ரூ.200, ஓவியா பதிப்பகம், கோவை. 98424 95241.

15) நீலநிறப்பறவைகள் - பானுமதி பாஸ்கோ நாவல், 160 பக்கங்கள், ரூ.130, உயிரெழுத்து- நெய்தல் வெளி, 93675 10043.

16) நேர் பக்கம் - அழகிய சிங்கர், விருட்சம், கட்டுரைகள். 148 பக்கங்கள், ரூ.120.

Pin It