(சமீரா மக்மல்ஃப் - (Two Legged Horse: Iron 2008) சமீரா ஈரான் இயக்குனர் மக்மல்ஃப்ன் மகள். கொடிய சட்டங்களால் சூழப்பட்டிருந்த பள்ளியை வெறுத்து ஒதுக்கி திரைப்படத்துறையை தன் உயிர்மூச்சாக்கியவர். தனது பதினெட்டு வயதிலேயே ஆப்பிஸ், அட் பைவ் இன் தி ஆஃப்டர்னூன் போன்ற படங்களை எடுத்தவர். ப்ளாக் போர்ட்ஸ் எனும் இவரது படம் ஈரானின் பள்ளி ஆசிரியர்களின் வறுமையையும் அங்குள்ள வழிதவறிப்போன குழந்தைகளின் வாழ்வையும் நம்முன் வைக்கிறது. அடிமையைக் குதிரையாக்கி அவன்மீது பயணிக்கும் அதிகாரப் பேய்களைப் பற்றி தற்போது (2008) இவர் இயக்கிய டூ லெக் ஹோர்ஸ் பல திரைப்பட விழாக்களை அலங்கரித்திருக்கிறது.

 

பெண் சிலசமயம்

தன்னைப் பிணைத்திருக்கும்

மதச் சங்கிலியை அவிழ்த்தெறிந்து

நிஜ உலகின் மீது

நெருப்பாய் குதிக்கிறாள்

என் சமீரா

நீ அப்படிப்பட்டவள்

 

பர்தாவுக்கும்

படமெடுக்கத்தெரியுமென

உலகுக்குக்காட்டியவள்

கையெறி குண்டுகளால்

தகர்த்தெறிய முடியாத

தன்னம்பிக்கை கொண்டவள்

பொய்வெறி மனிதர்களின்

முகமூடியைக்கிழிக்க

பிறந்து வந்தவள்

 

உலக சினிமாவை

மனித சினிமாவாக்கியவள்

ஒவ்வொரு காட்சியிலும்

அடிமையின் குரலை

ஆணிதரமாய்

பதிவுசெய்தவள்

 

சட்டத்தால் சூழப்பட்ட

பள்ளியைத் துறந்து

சட்டையில்லாத மனிதனின்

சினிமா எடுத்தவள்!

 

கறுப்பு உடையணிந்து

வெள்ளைச் சினிமா

எடுத்தவள்

 

காலச் சங்கிலி தந்த தழும்புகளை

காலத்தைக் கொண்டே

ஆற்றியவள்

காலமாகவே

மாறியவள்!

 

அதிகாரக் குதிரையின்

இரு கால்களையும்

வெட்டியெறிந்தவள்

 

மனதின் கரும்பலகையில்

மனிதத்தின் பெயரை

எழுதிவைக்காமல்

செதுக்கி வைத்தவள்

 

பெண்தேசம் மிரட்சிக்கானதல்ல

புரட்சிக்கென்று சொன்ன

கறுப்பு தேவதை!

Pin It